இரத்தம் உரைந்து போகும் சூழ்நிலையும் உதவிக் கரம் நீட்டும் வைட் ஹெல்மட் அமைப்பினர்

ஆக்கம்: பூவை அன்ஸாரி

இவர்களைப்பற்றி முன்பும் எழுதியிருக்கின்றேன்,இப்பொழுதும் எழுதுவதில் ஆறுதல் அடைகின்றேன்,இனி எப்பொழுதும் இவர்களைப்பற்றி பேசவும், எழுதவும் வாய்ப்பு கிடைத்தால், அதையும் செய்வேன்.

சிரியா – எம் கண் முன்னே பற்றி எரியும் அரபு தேசம். பஷார் அல்-அஸ்ஸாத் என்ற கொடுங்கோல் ஆட்சியாளன் தன் மண்ணின் மைந்தர்களை அன்றாடம் நசுக்கும் காட்சிகளை நாம் வாழும் இந்த நாகரிக உலகில் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். 2011 ஆம் ஆண்டு மத்திய கிழக்கின் துனிஷியா, எகிப்து போன்ற நாடுகளில் தொடராக ஏற்பட்ட புரட்சி, சிரியா மண்ணையும் பற்றிக்கொண்டது. வீதிகளில் மாற்றத்தை வேண்டி கோஷமிட்ட மக்களை கருணையே இல்லாமல் படுகொலை செய்த பாவிகள், இன்றும் அதனை தொடர்கின்றனர். இரு பெரும் வல்லரசுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அங்கு அமைதி நிலவாமல் இருக்க தடை கற்களாக நிற்கின்றனர். போர் தொடங்கிய நாள் முதல் இதுநாள் வரை நான்கு லட்சம் (4,00,000) மக்கள் மண்ணறைக்கு சென்றுள்ளனர். நாட்டின் பாதி மக்கள்தொகைக்கு மேல் அண்டை நாடுகளில் அகதிகளாகியுள்ளனர். அவர்களது இருப்பிடங்கள், நிலங்கள், வியாபார தளங்கள் என அனைத்துமே அழிக்கப்பட்டு, நில நீர் மாசுபட்டு, உணவின்றி, நீரின்றி, வாழ இடமின்றி கடும் குளிரில் போர்வைக்கூட இல்லாமல் மரணித்த குழந்தைகள் ஏராளம்,கணவனை இழந்த இளம் விதவைகள் ஏராளம்,கை கால்களை இழந்தவர்கள் என அவர்கள் வாழும் பகுதிகளை, சூழல்களை காணொளிகள் மூலமும், குறும்படங்கள் மூலமும் காணும்போது என் உயிர் மரணித்து பிறந்தது போன்று இருந்தது.

ஒரு காலத்தில் ஷாம் தேசத்தின் (SYRIA) பெருமை அந்நாட்டின் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும், கல்வி ஞானத்திற்கும் பெயர் போனதாக இருந்தது. மதினாவில் இருந்த இஸ்லாமிய பேரரசு ஷாம் தேசத்திற்கு மாறிய வரலாறுகள் நம்மிடம் உண்டு. ஆனால், இன்று அந்த தேசம் போரினால் புதைக்கப்பட்டு விடுமோ ? என்று என்னும் அளவிற்கு அழிவின் விழிம்பில் தத்தளிக்கிறது.

சிரியா தேசத்தின் கொடுமைகளை வரிகளாக படிப்பதற்கே நம் உள்ளம் தயாரில்லை என்றால் – அக்கொடுமைகள் காட்சிப்படுத்தப்பட்ட ஊடகங்களில் பார்த்தல் எப்படி இருக்கும் ?

ஆம் தோழர்களே, நெஞ்சை பதறவைக்கும் குறும்படம் (DOCUMENTARY) காணும் வாய்ப்பு கிடைத்தது. கண்களிலிருந்து கண்ணீர் சிந்தாமல் ஒரு காட்சியும் நகரவில்லை.

இறைவா! எண்கள் கண்முன்னே இப்படியொரு கொடூரமா ? உலகெங்கிலும் நீதியை நிலை நிறுத்துகின்றோம் என்று மார்தட்டும் ஐநா சபை கூட இன்று தரத்தால் சைனா (china ) சபையாக மாறிவிட்டதே.

ஒவ்வொரு நொடி பொழுதும் சிரியா அரசின் தாக்குதல்களை எதிர்பார்த்து, மூச்சை பிடித்துக்கொண்டு வாழும் மக்கள்.

தங்கள் மீது விழும் குண்டுகள் ரசாயன குண்டுகளா அல்லது பாஸ்பரஸ் குண்டுகளா என்று கூட அறியாமல் வாழ வழியின்றி நிற்கும் குழந்தைகள்.

சிதறிய கட்டிடங்களில், சிக்கிய குழந்தைகள் என குறும்படம் நெடுகிலும் தாக்குதல்கள் ஏற்படுத்திய கோரக்காட்சிகள்.

சவால் விட்டு சொல்வேன்… நாம் யாரும் ஒரே நேரத்தில் அந்த குறும்படத்தை முழுவதுமாக பார்க்க சக்தியே பெற மாட்டோம்.

ஒரு காட்சி இப்படி வருகின்றது:

வான்வழி தாக்குதலை நடத்த இராணுவ விமானங்கள் ஒரு இடத்தில் வட்டமிடுகின்றன. அந்த இடங்களில் போராளிகள் பதுங்கியிருப்பதாக கூறி சக்தி வாய்ந்த குண்டுகள் சரமாரியாக பொழியப்படுகின்றன.. ஒரு கட்டிடத்தின் மேல் விழும் அந்த குண்டு சரசரவென அந்த கட்டிடத்தை தரைமட்டமாக்குகிறது. ஒரு வினாடியில் அந்த கட்டிடத்தில் வாழ்ந்த பெண்கள், குழந்தைகள் என அனைவருமே குடும்பம் குடும்பமாக இடிபாடுகளில் சிக்கி மடிகின்றனர். இதை மற்றொரு இடத்திலிருந்து கவனிக்கும் தன்னார்வல உதவிக்குழு அந்த இடத்திற்கு விரைகின்றது.

அவர்களைத்தான் WHITE HELMET என அழைக்கிறார்கள், அவர்கள்தான் அங்கு உயிருக்கு போராடும் மக்களுக்கு கை கொடுக்கும் கதாநாயகர்கள். கையில் கிடைத்த கடப்பாரை, மண்வெட்டி போன்ற சில்லறை ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைகிறார்கள். குற்றுயிரும், குலை உயிருமாக இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை அருகாமையில் இருக்கும் மக்கள் முதலில் மீட்க, இந்த ஒயிட் ஹெல்மட் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேருகிறார்கள். இடிபாடுகளை துளைத்துக்கொண்டு யாரேனும் உயிரோடு இருக்கிறார்களா என்று சல்லடை போட்டு தேடுகிறார்கள். அழுகை சத்தமோ அல்லது முனகல் சத்தமோ வருகிறதா ? என செவி கொடுத்து கேட்க, ஒரு சிறுவனின் முனகல் சத்தம் அவன் உயிரோடு இருப்பதை காட்டுகிறது. கற்களாலும், கம்பிகளாலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் அச்சிறுவனை மீட்கிறார்கள். இப்படி, இவர்கள் இதுநாள் வரைக்கும் மீட்டெடுத்த பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ஏராளம், ஏராளம். இவை அனைத்தையும் காட்சி ஊடகத்தின் மூலம் இந்த உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அதனை டாக்குமென்டரியாக பதிவு செய்த பெருமை காலித் காத்திப் என்ற 21 வயது இளைஞனை சாரும்.

ஒயிட் ஹெல்மட் வீரர்களின் மீட்ப்புப்பணிகள் மற்றும் தைரியத்தை 40 நிமிட டாக்குமென்டரியாக இவன் பதிவு செய்த காட்சிகள் இன்று ஆஸ்கர் வரை சென்றுள்ளது. காலித் அவர்களை கவுரவிக்கும் வகையில் ஆஸ்கர் குழு அவரை அமேரிக்கா வர அழைப்பிதழ் மற்றும் விசா வழங்கியிருக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் சமீபத்திய விசா வழங்குவது சம்மந்தமான அறிவிப்பினால் விமான நிலையத்தில் காலித் மற்றும் அவரது நண்பர் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.  இதனை எந்த கார்ப்பரேட் ஊடகமும் பேசாது.ஹ்ம்… போரில் ஏற்பட்ட இழப்புகளை கூட ஒற்றை வரியில் செய்தியாக வாசிக்கும் இவர்களா ? உண்மைக்காக துணை நிற்க போகிறார்கள்.

காலித் மற்றும் அவரது நண்பர் ராயித் அல் சாலேஹ் ஆகியோருக்கான விசா அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்ததும் – துருக்கி விமான நிலையத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். காலித் அவர்களை தொடர்புகொள்ள அல்-ஜஸீரா போன்ற ஊடகங்கள் அலைபேசியில், மின்னஞ்சல் மூலமும் முயற்சித்தும் பலனில்லை. இந்த சூழலில் காலித் அவர்களின் நண்பரான ராயித் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்:

“மீட்ப்புப்பணிகளின் முக்கியத்தை முதன்மைப்படுத்தி பணிகள் செய்ய வேண்டியிருப்பதினால் ஆஸ்கர் விருது விழாவில் எங்களால் கலந்து கொள்ள முடியாது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன். பாராட்டுவதற்கு கைகள் தயாராக இருந்தும், தனது பணியே மிகவும் சிறந்தது என கூறியிருக்கிறாரே… இதுவல்லவா கடமை உணர்வு. சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதிலும், அவர்களுக்கு உதவிகள் புரிவதிலும் எங்களது பணிகள் தொடரும்” என்று பதிவிட்டிருப்பதின் மூலம் அவர்களின் அர்ப்பணிப்பு ஆஸ்கரை விட பன்மடங்கு பெரியது என்பதனை புரிந்து கொள்வோம்.

அதோடு மட்டுமில்லாமல், தங்களது பணியின் சுலோகமாக பின்வரும் குரானிய வசனத்தை அவர்கள் அமைத்திருப்பது எனது கண்களை குளமாக்கியது.

(وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا)

ஒரு உயிரை காப்பாற்றுபவர், ஒட்டுமொத்த மனித இனத்தையே காப்பாற்றியவரை போன்றவராவார்.

இறைவா! உனக்காகவே உயிரை கொடுத்து போராடும் இந்த மக்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை கொடுப்பாயாக.

இது மக்களின் போராட்டம். ஒரு நாளும் அது காற்றில் வீசும் புழுதிகளால் மறைந்து விடாது. சிரியா தேசம் கல்நெஞ்சம் படைத்த கயவர்களின் கைகளிலிருந்து விடுதலை பெரும் வரை தொடரட்டும் எமது பிரார்த்தனைகள்.

ஆக்கம்: பூவை அன்ஸாரி

One Response to “இரத்தம் உரைந்து போகும் சூழ்நிலையும் உதவிக் கரம் நீட்டும் வைட் ஹெல்மட் அமைப்பினர்”

  1. Poovai Ansary says:

    Here is the trailer which will keep you crying of the above article.
    https://www.youtube.com/watch?v=3wj4ncIEDxw