தவ்ஹீத் பிரச்சாரமும் ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்களது தஃவாக்கள நிலையும்-1

Post by mujahidsrilanki 6 November 2011 கட்டுரைகள், விமரிசனங்கள்

‘தவ்ஹீத் சொல்லப்பட வேண்டும் ஷிர்க், பித்அத்கள் எதிர்க்கப்பட வேண்டும் ஆயினும் இவற்றை விட முதன்மைப் படுத்தப்பட வேண்டியது இஸ்லாமிய ஆட்சியும், அதற்கான திட்டங்களும், வழிவகைகளும்தான்’ என்று பிரசாரம் செய்து வருகின்ற இரு இயக்கங்களான ஜமாஅத்தே இஸ்லாமி, டீ,ஏ என்றழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லிமூன் ஆகிய இயக்கங்கள் தஃவாக் களத்தில் என்ன செய்தன? தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன? தவ்ஹீத் பிரசாரம் பற்றிய இவ்வியக்கங்களின் பாhர்வை என்ன? தவ்ஹீத் பிரசாரம் புரியும் அமைப்புக்களையும், தனிமனிதர்களையும் இவர்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள்? போன்றவற்றை இதனூடே அலச விளைகின்றோம்.

தவ்ஹீத் பிரசார வரலாறு ஒரு சுருக்க அறிமுகம்

தவ்ஹீத் பிரசாரத்தின் கடந்த கால, நிகழ்கால வரலாற்றை மேலோட்டமாய் பர்த்து விட்டு மேற்படி விடயத்துக்குள் நுழைவது பொருத்தமானது என்பதால் அது தொடர்பில் சில அம்சங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் ஆரம்பிக்கப்பட்ட தவ்ஹீத் பிரசாரம் 1948ல் தான் இலங்கையில் அமைப்பு ரீதியாக அப்துல் ஹமீத் பக்ரீ (ரஹ்) அவர்களால் உத்வேகம் பெற்றது. மகான்களின் பெயரால், மத்ஹபுகளின் பெயரால், நபிகளாரின் பெயரால், இஸ்லாத்தின் பெயரால் அன்று நிலை கொண்டிருந்த ஷிர்க், பித்அத்கள் அனைத்தும் எதிர்கப்பட்டன. தம்மால் முடிந்த போது ஆங்காங்கே காணப்பட்ட சில கப்ர்கள் தகர்க்கப்பட்டன. அதன் விளைவாக தவ்ஹீத் பிரசார மையங்களாகக் காணப்பட்ட ஓலைகளால் ஆன சில பள்ளிவாயில்கள் எரிக்கப்பட்டன. இவ்வாறான இன்னல்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தில் மார்க்கம் எனும் பேரில் காணப்பட வழிகேடுகள், பிரமதக் கலாசாரங்கள், மூடநம்பிக்கைகள் அனைத்திற்கும் எதிராகவே இப்பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது. இவ்வாறு இப்பிரசாரத்தை அன்று முதல் இன்று வரை முன்னெடுக்கும் ஒர் அமைப்புத்தான் பரகஹதெனியவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஜம்இய்யத்து அன்ஸாரிஸ்ஸுன்னத்தில் முஹம்மதிய்யவாகும்.  பலத்த சிரமங்களுக்கிடையில் தேசிய ரீதியில் ஆரம்ப காலங்ளில் தவ்ஹீத் பிரசாரத்தைக் கொண்டு சென்றதில் இந்த ஜம்இய்யாவின் பணி அளப்பரியது. இதன் போது வன்முறைகளோ, அடிதடிகளோ, கொலை முயற்சிகளோ எதுவும் பிரயோகிக்கப்படவில்லை. இன்று வரை இந்த இலட்சணங்கள் அன்றிருந்தவாறே காணப்படுகின்றன. இதைக் கடைபிடிப்பதில் தவ்ஹீத் சகோதரர்கள் தாராளத் தன்மையோடு இன்றைக்கும் நடந்து கொள்வது அல்லாஹ் செய்த மிகப்பெரும் அருளெனலாம். ‘அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் பின்பற்றுங்கள்’ என்பதே தவ்ஹீத் பிரசாரத்தின் உயிர்நாடியாகவிருந்தது.

     இவ்வாறு உயர்ந்த இலக்கிற்காக மக்களிடம் முறையாக முன்வைக்கப்பட்ட இப்பிரசாரம் வன்முறைகளால் எதிர்கப்பட்டது. இவ்வடிப்டையில் நிருமானிக்கப்பட்ட பள்ளிவாயில்கள் எரிக்கப்பட்டன. உடைக்கப்பட்டன. தமது கொள்கையைப் பிறரிடம் திணிக்காது நபிவழிப் படி தொழுகையில் விரலசைத்த சகோதரர்களின் விரல்கள் உடைக்கப்பட்டன. இது அற்பமான ஸுன்னத்தா அளப்பெரியதா இது தேவைதானா என்ற கொச்சை ஆய்வுகளுக்கு அப்பால் நின்று கருத்துரிமை என்ற இடத்தில் இருந்து நோக்கினால் இது மிகப் பெரும் அநீதி என்பதை உணரலாம். இதற்கான வழக்குகள் இன்றுவரை நடைபெறுகின்றன. அல்லாஹ்வின் அருளால் இன்று இலங்கையின் நாலா பக்கங்களிலும் தௌஹீத் பிரசாரம் வேரூன்றிவிட்டதால் அதை முன்னெடுப்பதற்காகவென்று பல்வேறு அமைப்புக்கள் உருவாகி அழைப்புப் பணியை தம்மால் முடிந்தளவில் கொண்டு செல்கின்றன. முஸ்லிம்களை மட்டும் இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பிரசாரப் பணியில் பிர மதத் தோழர்கள் மையப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தவ்ஹீத் பிரசார அமைப்புகளின் முன்னெடுப்புக்கள்

அழைப்புப் பணிக்கப்பால் தேசிய ரீதியில் பல்வேறுபட்ட சமூகப் பணிகள் தவ்ஹீத் இயக்கங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அனர்த்தங்கள், அழிவுகளால் பாதிப்புற்றமக்களுக்கு மனிதாபிமானப் பணிகள் செய்வதில் தவ்ஹீத் அமைப்புக்களின் வகிபாகம் தவிர்க்க முடியாதவொன்றாகக் காணப்படுகின்றது.

இப்பேற்பட்ட  பணிகளைப் புரியும் தவ்ஹீத் அமைப்புக்கள் தமது பிரசாரப் போக்கில் ஏனைய அமைப்புக்களிலிருந்தும் பிரிந்து நிற்பதற்கு அடையாளமாகவுள்ள பிரதான அம்சம் யாதெனில்,  தாம் எங்கு பிராசாரம் செய்தாலும் அங்கு காணப்படும் இஸ்லாத்துக்கு முரணாண விடயங்களை முதலில் சுட்டிக்காட்டுவதாகும். இதன் போது தமக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றி ஒருக்காலும் அவை கவலைப்படுவதில்லை. ‘தம் அமைப்பிற்கு ஆள் குறைந்து விடும், கிடைத்த சந்தர்ப்பம் நழுவி விடும்’ என்றெல்லாம் ஒரு போதும் அவை பிரசாரப் பணியில் வளைவு, நெலிவை ஏற்படுத்துவதில்லை.

    உதாரணமாகச் சொல்வதாயின், ஓரிடத்தில் அவ்லியா கௌரவிப்பு என்ற பேரில கப்ர் வணக்கம் நடைபெறுகின்றதென்றால் அவ்விடத்தில் தமக்கு மார்க்கத்தைச் சொல்லும் சந்தர்ப்பம் கிடைக்கின்றதென்றால் நிரந்தர நரகில் தள்ளும் பெரும் பாவமான அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கப்ர் வணக்கத்தைச் சுட்டிக்காட்டாமல் நற்பண்புகள் பற்றியும், ஒற்றுமை பற்றியும் தவ்ஹீத் அமைப்புக்கள் அவ்விடத்தில் பேசமாட்டாது. மாறாக கப்ர் வணக்கத்தைப் பற்றியே அவ்விடத்தில் அவை பேசும். இதனால் தவ்ஹீத் பிரசாரத்துக்கு பெரும் எதிர்ப்புக்கள் கிளம்பின. ‘காதியானியாவாக இருந்தாலும் சரியே, ஷீஆவாகவிருந்தாலும் சரியே, கப்ர் வணங்கியானாலும் சரியே, எதுவானாலும் சரியே, அவற்றையெல்லாம் விட்டு விட்டு எல்லோரையும் முஸ்லிம்களாய் பார்ப்போம்’ என்ற கருத்தை தவ்ஹீத் அமைப்புக்கள் ஒருபோதும் பிரசாரம் செய்யவில்லை. ஏற்பதுமில்லை. எதையும் தெளிவாக முன்வைக்கும் இப்பிரசாரப் போக்கினால் தவ்ஹீத் அமைப்புக்கள் பெரும் சிக்கல்களைச் சந்தித்தாலும் அவற்றின் பிரசாரப் பணியில் நபிமார்கள் இணைவைப்பிற்கு எதிராகப் பிரசாரம் செய்யும்போது ஏற்பட்டதைப் போல எங்கும் எதிர்ப்புக்கள் எழுந்தன. இருந்தாலும் இவற்றுக்கு மத்தியில்தான் சுமார் 50 வருடங்களாக மற்றைய அமைப்புக்களைப் போன்று தலைமைத்துவமோ, அங்கத்துவர்களை திருப்திப்படுத்தும் திட்டங்களோ இல்லாமல் இலங்கையில் மிகப் பெரும் வளர்ச்சியை தௌஹீத் கொள்கை எட்டியுள்ளது. தேசியளவில் எந்தப் பகுதியிலும் இன்று தவ்ஹீத் பேசும் சகோதரர்கள் இருக்கின்றார்கள் என்பது அல்லாஹ் சத்தியத்துக்கு வழங்கிய வெற்றியின் வெளிப்பாடு எனலாம். ஆயிரம் திட்டங்களோடும், ஊழியர்களோடும், தலைமைகளோடும் பழங்காலமாக இலங்கையில் இயங்கி வரும் ஏனைய இயக்கங்கள் இத்தகைய வளர்ச்சியைக் காணாவில்லையென்பதும் கவனிக்கத்தக்கதாகும். அதற்காகத் தவ்ஹீத் பேசுபவர்கள் எல்லோரும் புனிதர்கள், சுவர்க்க வாசிகள் என்று கூறுவதாக விளங்கக் கூடாது. தவ்ஹீத் பேசுபவர்களிடம் பல் வேறு தவறுகள் மார்க்கத்தின் பெயராலும், ஏனைய அம்சங்களின் பேராலும் ஏற்பட்டுள்ளன. அவற்றைச் சுட்டிக் காட்டி வெளிப்படையாகவே  உபதேசங்கள் அவ்வப்போது இடம் பெறுகின்றன. இம்மாதிரியில்தான் இலங்கைத் தவ்ஹீத் அமைப்புக்களின் நிலை காணப்படுகின்றது.

தவ்ஹீத் பிரச்சார அமைப்புக்களை நோக்கிய விமரிசனங்களும் விளக்கங்களும்

இவ்வாறு பிரசாரம் செய்யும் இவ்வமைப்புக்களைப் பார்த்து இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசும் இயக்கங்களான டீ,ஏ என்றழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லிமூன், ஜமாஅத்தே இஸ்லாமி ஆகியன பல்வேறுபட்ட விமரிசனங்களை செய்துவருகின்றன.

அவற்றில் ஒன்று:

 ‘விரலாட்டுவதும், தொழுகையில் நெஞ்சில் கைவைத்து தக்பீர் கட்டுவதும், கப்ருடைப்பதும்தான் இவர்களுக்கு என்றைக்கும்…….. ஈராக்கைப் பார்க்க வேண்டாமா?…… பலஸ்தீனைப் பார்க்க வேண்டாமா……? கஷ்மீரிலும், செச்னியாவிலும் நடப்பதை அறிய வேண்டாமா…..? அங்கே எத்தனை குழந்தைகள் கொல்லப் படுகின்றார்கள் என்று தெரியுமா……? இன்னும் என்னென்ன கொடுமைகள் அங்கே நடைபெறுகின்றன என்று தெரியுமா…………….?’
என்பதுதான். ஏதோ இவர்களுக்கு மட்டும்தான் இவைகளெல்லாம் தெரியும் போலவும், தவ்ஹீத் அமைப்புக்களுக்கு இவை பற்றி எதுவுமே தெரியாது போலவும் இவ்வியக்கங்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றன. தவ்ஹீத் பேசும் நாங்கள் சர்வதேச ரீதியில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றித் தெரிந்துள்ளோம். அல்லலுறும் நம் சொந்தங்களுக்காய் மறைமுகமாய் நம்மால் முடிந்தளவில் உதவுகிறோம். பிராத்திக்கின்றோம். இவை அவர்களுக்காய் நாம் செய்பவை. இவற்றை நாம் எவருக்கும் விளம்பரம் செய்வதில்லை. ஆனால் நாம் பலஸ்தீனையும், ஈராக்கையும்………….வைத்துப் பிழைப்பு நடாத்துவதில்லை. பாடல் வெளியிடுவதில்லை. சினிமா எடுப்பதில்லை. இவற்றுக்கு செலவாகும் பணத்தையெல்லாம் சேர்த்து பாதிப்புற்ற மக்களுக்கு அனுப்புகின்றோம் இவைதான் நாம் செய்பவை. ஆனால் இவ்வியக்கத்தவர்கள் தவ்ஹீத் பேசும் நாம் நமது பிரசாரத்தினால் முஸ்லிம்களுக்குள் பிளவேற்படுத்துவதாகவும், பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதாகவும் தவறான கருத்துக்களை மக்களிடையே விதைக்கின்றனர். இது நமைப் பற்றிய அவர்களின் ஒரு வகையான பார்வையாகும்.

பின்வரும் வகையிலும் விமரிசிக்கின்றனர்:

‘தவ்ஹீத் பேசுபவர்களுக்கு விரலாட்டுவதும், தொழுகையின் போது நெஞ்சில் கைவைத்து தக்பீர் கட்டுவதும், கப்ருடைப்பதும்தான் தெரியும், இயக்கங்களை அணுசரித்துப் போகத் தெரியாது. அணுகுமுறை சரியில்லை……’ என்ற கருத்து பொதுவாக இந்த இயக்கத்தவர்களிடம் காணப்படுகின்றது. ‘நீங்களும், நாங்களும் ஒன்றுதான்…….’ என்று சமாளிப்பதற்காக சில வார்த்தைகளை அவர்கள் நம்மிடம் கூறினாலும் உத்தியோகபூர்வமாகத் தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் போது இவ்வாறுதான் கூறுவார்கள். தவ்ஹீத் பேசும் இரு அமைப்புக்களிடையில், நபர்களுக்கிடையில், குழுக்களுக்கிடையில் ஏதாவது மார்க்கப் பிரச்சிணை ஏற்படுமாயின் அவர்களில் தமது கருத்துக்கு சார்பானவர்களிடம் சென்று ‘பாருங்கள் இவர்களுக்கு இன்னும் இது விளங்கவில்லையே’ என்று தவ்ஹீத் பேசும் மற்றத் தரப்பைப் போட்டுக் கொடுக்கும் வழக்கமும் இவர்களிடமுண்டு. உதாரணமாகச் சொல்வதாயின், உள்நாட்டுப் பிறையா? வெளிநாட்டுப் பிறையா? என்ற சர்ச்சசையில் உள்நாட்டுப் பிறைக்கு சார்பான தவ்ஹீத் சகோதரர்களை ஆதரித்தும், சர்வதேசப் பிறையைப் பின்பற்றும் தவ்ஹீத் சகோதரர்களை எதிர்த்தும் இவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதைக் குறிப்பிடலாம். தவ்ஹீத் சகோதரர்களில் ஒரு சாரார் தமக்குப் பின்புலமாயுள்ளனர் என நினைத்துக் கொண்டு சர்வதேசப் பிறையை ஆதரிக்கின்ற தவ்ஹீத் சகோதரர்களை கிண்டல் செய்யும் தொணியில் ‘அமாவாசையில் பிறை பார்க்கிறார்கள்’ என்றெல்லாம் விமரிசிக்கின்றனர். இது இக்லாஸோடு செய்யப்படும் விமரிசனமன்று, மாற்றமாக தவ்ஹீத் சகோதரர்களைக் கேலி செய்யும் நோக்கோடு வெளிப்படுத்தப் படுபவையே. தவ்ஹீத் சகோதரர்களிடம் காணப்படும் சில கருத்து வேறுபாடுகளை வைத்துக் கொண்டு தாம் நினைத்தவாறெல்லாம் தவ்ஹீத் சகோதரர்களை இவர்கள் விமர்சனம் செய்கின்றனர். ‘ஸலபிகள், கலபிகள், குறாபிகள் என்றெல்லாம் பிரிக்கக் கூடாது எல்லோரையும் முஸ்லிம்களாகவே பார்க்க வேண்டும்’ என்று கூறி, தவ்ஹீத் சகோதரர்களிடம்தான் இவ்வாறான பாகுபாடுகள் காணப்படுவதாக இவர்கள் ஒரு சஞ்சிகையில் எழுதினர். அப்படியாயின், ‘ஸலபிகள், கலபிகள், குறாபிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, டீஏ, தப்லீக் ஜமாஅத் என்றெல்லாம் பிரிக்கக் கூடாது எல்லோரையும் முஸ்லிம்களாகவே பார்க்க வேண்டும்’ என்று சொல்வது பொருத்தமாகவிருக்கும் என்று அதற்கு பதில் கூறலாம். ஸலபிகள், கலபிகள், குறாபிகள் எனப்பிரிப்பது பிரிவினையாயின், ஜமாஅத்தே இஸ்லாமி, டீஏ, தப்லீக் ஜமாஅத் என வகுப்பதும் பிரிவினைதான். ஆகவே இந்த அனைத்து அமைப்புக்களையும் பிரிவினையாகக் குறைகண்டு அதன் பின்பு ‘ஸலபிகள், கலபிகள், குறாபிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, டீஏ, தப்லீக் ஜமாஅத் என்றெல்லாம் பிரிக்கக் கூடாது எல்லோரையும் முஸ்லிம்களாகவே பார்க்க வேண்டும்’என்று கூறினால்தான் ஒரு வாதத்துக்கேனும் இந்த ஒற்றுமைக் கோஷத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்பதை இவர்கள் உணர வேண்டும்.

இவர்களால் முன்வைக்கப்படும் இன்னொரு விமரிசனம்:

 ‘தவ்ஹீத் பேசுபவர்களுக்கென்று தலைமைத்துவமில்லை, திட்டமிடல் இல்லை, பண்பாடில்லை, இலக்கொன்றில்லை……. ஆனால் நமக்கென்று தலைமையுள்ளதுளூ படித்தரங்களுள்ளன. கிளைகள் காணப்படுகின்றனள. அங்கத்தவர்களிடையே முறையான பிணைப்புக்காணப்படுகின்றது…………’ போன்ற வார்த்தைகளால் நம்மைப் பார்த்து குறைகூறுகின்றார்கள். இவ்வாறு கூறி நம்மில் சிலரையும் அவர்கள் வென்றெடுத்துள்ளார்கள். நாளை மறுமையில் அல்லாஹ் நம் எல்லோரையும் எழுப்பி, ‘ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் எங்கே?, சரி, நீங்கள் ஒரு தலைமைத்துவத்திலிருந்தீர்கள்.’ டீஏ இயக்கத்தவர்களெல்லாம் வாருங்கள். நீங்களும் ஒரு தலைமைத்துவத்தில்தான் இருந்தீர்கள்.’ ‘தவ்ஹீத் கருத்திலுள்ளவர்களெல்லாம் வாருங்கள், நீங்கள் மட்டும் ஏன் ஒரு தலைமையில் இயங்கவில்லை. பிரிந்து கிடந்தீர்கள்’ என்று விசாரிப்பானா?, அனைத்து அமைப்புக்களையும் பார்த்து ‘எல்லோரும் ஒரே தலைமையின் கீழ் இயங்காமல் ஏன் பிரிந்து இருந்தீர்கள்?’ என்று விசாரிப்பானா? ஜமாஅத்தே இஸ்லாமி என்று சொல்லி அதற்கொரு தலைமையிருந்து அதற்குக் கட்டுப்பட்டால் போதும் அதுதான் தலைமை…….. என்ற மாதிரியல்லவா இவர்களின் கருத்து இருக்கின்றது.

ஆகவே தலைமைத்துவம் என்பது இவர்கள் சொல்வதைப் போன்றன்று. அது விசாலமான ஓர் அத்தியாயமாகும். நபியவர்களின் தலைமைத்துவத்திற்குப் பின்னால் அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடுத்த தலைமைத்துவம் வரும் வரையில் தவ்ஹீத் அமைப்பு இப்படித்தான் இருக்கும். தவ்ஹீதைப் பிரசாரம் செய்ய பல அமைப்புக்கள் காணப்படலாம். அவை தேசத்துக்குத் தேசம் வேறுபடலாம். ஆனால் அவை தவ்ஹீதுக்கு உரிமையாளர் கிடையாது. எனவே தவ்ஹீதுக்கு அங்கத்துவப் படிவமும் கிடையாது. யாரெல்லாம் தவ்ஹீத் கருத்தை மனதாற ஏற்கின்றார்களோ மறுகனமே அவர்கள் தவ்ஹீத்வாதிகளாக மாறிவிடுவார்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களின் இன்னொரு விமரிசனம்:

‘ஊரூராய்ப் போனார்கள் உம்மத்தை இரண்டாக்கி விட்டார்கள்’ என்று நம்மைக் குறை சொல்கின்றார்கள். தவ்ஹீத் சகோதரர்கள் யாரும் எங்கேயும் இன்னொருவரிடம் தமது கருத்துக்களைத் திணிக்கவில்லை. யாருக்கும் தமது கருத்தைப் பின்பற்றும் உரிமையுண்டு என்பதால் தமது கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள் இதனால் அவர்கள் அடிக்கப்படுகிறார்கள். இங்கு தவறு எத்தரப்பால் ஏற்படுகின்றது என்பதை யாரும் தெரிந்து கொள்வர். இதை வைத்துத்தான் நம்மை ‘குழப்பவாதிகள்’ என்று இவர்கள் கூறுகின்றனர்.

தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களால் தவ்ஹீத் சகோதரர்கள் தாக்கப்பட்டால் ‘தாக்கியவர்கள் அசல்களல்ல, நகல்களே’ என்று அதற்கு விளக்கம் சொல்வதைப் பார்க்கலாம். அப்படியென்றால் தவ்ஹீத் அமைப்பில் இவ்வாறு நகல்கள் இல்லையா?, இருந்தால் ஏன் அவர்கள் இவ்வாறு அடிப்பதில்லை??.இவ்வாறான ரௌடிக்கலாசாரத்தை டீஏ இயக்கமும் தற்போது கையிலெடுத்து விட்டது. இந்தியாவில் இது துவங்கி விட்டது. இலங்கையிலும் துவங்கப் போகின்றது.

                                                                                                                                                                                        வளரும்

3 Responses to “தவ்ஹீத் பிரச்சாரமும் ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்களது தஃவாக்கள நிலையும்-1”

 1. yoonus says:

  ஒரு அழகான கட்டுரை. இந்த கட்டுரை தொடரவேண்டும் என்று என் மனம் கூருகுகிறது. ஏன் என்றால் அவர்கள் கொடுத்த தவறான அல்லாஹ்வுடைய கலாமுக்கு பிழையான விளக்கங்கள். பலயீனமான ஹதீஸ்கள். இவைற்றைக்கு எல்லாம் ஒருபதிலகல் எழுதிக்கொண்டே இருக்கேவேண்டும்.
  நண்பர்கேள யாரெல்லாம் இந்த கட்டுரையைபார்த்து . இலேசாக இது ஒரு முட்டாள்தனமான கட்டுரை இதை ஏற்றுக்கொள்ளஎலாது ஆங்கிலத்தில் சிலவார்தைகளை போடாமல் முடிந்தால் மௌலவி வைத்த ஒவ்வொரு விளக்குத்டுக்கும் மரியாதியாய் பதில் எழுதவும் என்று நான் என்கருத்தைவைக்கின்றேன்

 2. naseerismail says:

  சகோதரர் முஜாஹிட் அவர்களே அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும் இக் கட்டுரை மிகச் சிறப்பாக இருக்கிறது உண்மையில் சத்தியத்தில் உறுதியாக இருந்து அதற்காக பாடுபட்டு தவ்ஹீதில் வாழ்ந்து தூய இஸ்லாத்தில் அல்லாஹ் நம்மை மரணிக்கச் செய்ய வேண்டும் உங்கள் பணிதொடர வேண்டும் அல்லாஹ் இருக்கிறன் சத்தியம் மேலோங்க உங்களுடன் இருப்போம்.

 3. Sheza says:

  /////நபியவர்களின் தலைமைத்துவத்திற்குப் பின்னால் அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடுத்த தலைமைத்துவம் வரும் வரையில் தவ்ஹீத் அமைப்பு இப்படித்தான் இருக்கும்./////

  Awarhal mun ariwippu seidha thalamaithuwathai wilakkapadathinal iwarhaludan waadhida ilahuwaahe irukkum.
  Jazakallahu khairan!