Wednesday, April 24, 2024

வித்ரு குனூத் ஹதீஸ் பற்றிய கட்டுரை விமரிசனம் ஓர் விளக்கம்

எனது மெயிலுக்கு  சகோதரர் ஒருவர் குனூத் கட்டுரை பற்றிய ஒரு மறுப்பை போவாட் செய்திருந்தார்.குனூத் சம்பந்தமான எனது கட்டுரைக்கு சகோதரர் மௌலவி அப்துந்நாஸர் அவர்கள் எழுதிய மறுப்பே அந்த மெயிலில் இருந்தது. அந்தக் கட்டுரைக்கு பதிலளிக்கும் முன்னர் எனது கட்டுரையைச் சுருக்கமாகத் தருகிறேன்:

‘நபியவர்களின் வித்ர் தொழுகை பற்றிய புகாரி முஸ்லிமில் இடம்பெறும் அழகான அறிவிப்புக்களான ஆயிசா, ஸைத், ஸஃத் இப்னு ஹிசாம் போன்றோரின் எந்த அறிவிப்பிலும் குனூத் பற்றிய எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. சில பலஹீனமான ஹதீஸ்கள்தான் வித்ர் குனூத்திற்கு ஆதாரமாக உள்ளன. வித்ரில் குனூத்திற்கு ஆதாரமாக 6 ஹதீஸ்கள் முன்வைக்கப்படுகின்றன. அவைகளில் 5 ஆதாரங்கள் பலவீனமானவை. 6 வது ஹதீஸின் அடிப்படை பலமானது. ஆனால் ‘குனூத்’ என்ற வார்த்தையோடு இடம் பெறும் அதன் அறிவிப்புக்கள் பலஹீனமானவை. அந்த விபரம் பின்வருமாறு:

‘ வித்ரில் ஓத சில வார்த்தைகளை நபியவர்கள் கற்றுத் தந்தார்கள். ‘அல்லுஹும்மஹ்தினீ பீமன் ஹதய்த வ ஆபினீ பீமன் ஆபைத…………’அறிவிப்பவர்: ஹஸன் ரலியல்லாஹ் அன்ஹ். ஆதாரம்: திர்மிதீ 464 இன்னும் பல நூற்கள்

    இந்த ஹதீஸை புரைத் இடமிருந்து அறிவிக்கும்  4வரில் மூவர் பலஹீனமானவர். 4காவது அறிவிப்பாளரான மனனத் திறன் மிகுந்தவரான சுஃபா பலமானவர். ஆனால் அவரது அறிவிப்பிலே ‘வித்ரிலே’ என்ற வார்த்தையோ ‘குனூத்திலே’ என்ற வார்த்தையோ இடம் பெறவில்லை.’

இதுதான் எனது கட்டுரையின் சுருக்கம். இதில் மௌலவி அப்துந் நாஸர் அவர்களுக்கும் எனக்குமிடையில் 6வது ஹதீஸ் விடயத்தில் தவிர மற்ற எல்லாவற்றிலும் உடன்பாடுதான். ஆனால் அந்தக் கடைசி அம்சம்தான் இதில் மிக முக்கியமானது. அதாவது ஆறாவது அறிவிப்பில் ‘குனூத்’ என்ற வாசகத்தோடு வரும் அறிவுப்பும் பலமானதே என்பது அவரின் நிலைப்பாடு. இல்லை என்பது எனது நிலைப்பாடு. இந்த சுருக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு விடயத்திற்கு வருவோம்.

மௌலவி அப்துந் நாஸர் அவர்களின் மறுப்புக்கள் இரண்டு விடயங்களை அடிப்பைடயாகக் கொண்டுள்ளது. அதற்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

  1. இந்த ஹதீஸை புரைத் இடமிருந்து அறிவிக்கும் 4வரில் மூவர் பலஹீனமானவர் என்ற வாதத்தை முழுமையாக ஏற்க முடியாது. காரணம் அதில் இருவர் தான் பலஹீனமானவர்கள். யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பலமானவர்.
  2. 4காவது அறிவிப்பாளரான சுஃபாவின் அறிவிப்பிலே ‘வித்ரிலே’ என்ற வார்த்தையோ ‘குனூத்திலே’ என்ற வார்த்தையோ இடம் பெறவில்லை என்பதையும் ஏற்க முடியாது. சுஃபாவின் வழியாக தபரானியில் இடம் பெறும் அறிவிப்பிலே ‘வித்ரிலே’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இவ்விமரிசனங்கள் பற்றிய எனது பார்வை:

1-யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பலமானவரா?

யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பலமானவர் என நிறுவ முற்படும் அப்துந் நாஸர் மௌலவி அவர்கள் யூனுஸ் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்களை சரியாக அணுகத் தவறிவிட்டார். என்றே கூற வேண்டும். யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகை சில அறிஞர்கள் பலப்படுத்தியும் சில அறிஞர்கள் பலஹீனப்படுத்தியுமுள்ளனர்.

   மௌலவி அப்துந் நாஸர் அவர்கள் யூனுஸை பலப்படுத்திய அறிஞர்கள் பட்டியலிலும் பலஹீனப்படுத்தியவர் பட்டியலிலும் இமாம் அபூ ஹாதிமை சேர்த்துள்ளார். இது கவனக் குறைவால் நேர்ந்ததே. யூனுஸைப் பற்றி உண்மையாளர் என ஒரு இடத்திலும் ஆதாரமற்றவர் என இன்னொரு இடத்திலும் சொல்லியிருந்தால் அவ்வாறு இரு பட்டியலிலும் சேர்ப்பது ஞாயமானது. ஆனால் அவ்வாறு இல்லை.. அபூ ஹாதிம் அவரைப் பற்றிக் கூறியது பின்வருமாறு: ‘உண்மையாளர் ஆனால் இவரை ஆதாரமாகக்கொள் முடியாது           (ஜரஹ் வத் தஃதீல்: 1024)

அடுத்து யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகை சில அறிஞர்கள் பலப்படுத்தியும் சில அறிஞர்கள் பலஹீனப்படுத்தியுமுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ளும் மௌலவி அவர்கள்  “பலஹீனப்படுத்திய அறிஞர்கள் அவர் அவரது தந்தை வழியாக அறிவுக்கும் அறிவிப்புக்களில்தான் பலஹீனப்படுத்தியுள்ளனர். இந்த அறிவுப்பு அவர் அவரது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்பு அல்ல. என பலஹீனப்படுத்தலுக்கான காரணத்தை விளக்குகிறார். ஆனால் இது  தவறான வாதம் என்பதை தொடர்ந்து வாசிக்கும் போது புரிந்துகொள்வீர்கள்.

  யூனுஸ் இன்னு அபீ இஸ்ஹாக் கூடுதலாக அவரது தந்தை வழியாக அறிவிப்புச் செய்துள்ளார். அதே நேரம் இன்னும் பலர் வழியாக அதை விடக் குறைந்த அளவில் அறிவுப்புக்கள் செய்துள்ளார். அவரது மனன பலஹீனத்தின் காரணமாக அவரது அறிவிப்புக்கள் பெறுமதியிழந்தன. ஆனால் அவரது தந்தை அபூ இஸ்ஹாக் மிக முக்கிய அறிஞரும் ஹதீஸ்களை அறிவுப்புச் செய்தவர்களிலும் ஒருவர். அதனால் அவர் வழியாக அதிகமாக யாரெல்லாம் அறிவித்துள்ளார்களோ அவர்களுள் எவரது அறிவிப்பு ஏற்கத்தக்கது எவரது அறிவிப்பு சிறந்தது என்ற ஒப்பீட்டு முடிவுகளை ஹதீஸ் அறிவிப்பு விமரிசன நூல்களில் காணலாம். இந்த அடிப்படையில்  அபூ இஸ்ஹாக் வழியாக யூனுஸ் அதிக அறிவிப்புக்கள் செய்துள்ளதனால் அபூ இஸ்ஹாக் வழியாக அவர் அறிவிக்கும் அறிவிப்புக்கள் பற்றி சிலர் விமரிசித்துள்ளனர். அதற்காக அந்த விடயத்தில் மட்டும்தான் யூனுஸ் பலஹீனமானவர், மற்ற அறிவிப்புக்களில் பலமானவர் என்ற முடிவெடுப்பதற்கு எந்த ஞாயமும் இல்லை. ஆம் அவரின் ஏனைய அறிவிப்புக்கள் பற்றி எந்த விமரிசனமும் இல்லையென்றால் அந்த வாதம் ஏற்புடையதுதான். பல அறிஞர்கள் அவரின் ஏனைய அறிவிப்புக்களை விமரிசித்து உள்ளனர். அடுத்து அபூ இஸ்ஹாக் வழியான அறிவிப்புக்களில் மாத்திரம்தான் இவரது மனனம் பலஹீனம் என்பதற்கு தனிக் காரணம் வேண்டும். அந்தக் காரணம் இங்கு இல்லை. அவர் அபூ இஸ்ஹாகின் அறிவிப்புக்களை நூலில் பார்த்து அறிவித்துள்ளார் என்று கூறியும் ஏற்க முடியாது என இமாம் அஹ்மத் குறிப்பிட்டுள்ளார். காரணம் மனனக் குறைபாடு. யூனுஸ் எந்த அறிவிப்பைப் பார்த்து அறிவித்தார் எதனைப் பார்க்காமல் அறிவித்தார் என்ற விபரம் இல்லை. மனன பலஹீனம் உள்ளவர்கள் நூலில் இருந்து பார்த்து அறிவித்தது உறுதியானால் ஏற்கலாம் என்பது ஹதீஸ்கலையின் நிலைப்பாடு. அப்படியிருந்தும் இமாம் அஹ்மத் இவரது அறிவிப்புக்களை ஏற்க முடியாது என்ற சொல்லக் காரணம். எவை பார்த்தவை எவை பார்க்காமல் அறிவிக்கப்பட்டவை என்ற விபரம் இல்லை என்பதுதான். அப்படியாயின் பார்க்கமால் அறிவிக்கும் இவரது அறிவிப்புக்கள் பலஹீனமானவை. இவரது மனன பலஹீனமே அபூ இஸ்ஹாகின் வழியாக அறிவிக்கப்படும் அறிவிப்புக்களை ஏற்க முடியாது என்பதற்கு காரணமாக அமைகிறது. எனவே இமாம் அஹ்மத் அவர்கள் யூனுஸ் அவரது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புக்களை மாத்திரம்தான் பலஹீனப்படுத்துகிறார் என்பது தவறானது. இமாம் அஹ்மத் அவரைப் பொதுவாக பலஹீனமானவர் என்று சொல்லும் கூற்றுக்கள் இல்லாது விட்டால்தான் இந்த விளக்கம் தேவைப்படும். ஆனால் இமாம் அஹ்மத் இவரை பொதுவாகவும் பலஹீனப்படுத்தியுள்ளார். பின்வரும் இமாம் அஹ்மதின் கூற்றுக்களை நடு நிலையாக அவதானியுங்கள்.

العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (2/ 519)
3424 – يُونُس بْن أَبِي إِسْحَاق قَالَ حَدِيثه حَدِيث مُضْطَرب

எனது தந்தையிடம் யூனுஸ் இப்னு இஸ்ஹாக் பற்றிக் கேட்டேன். அதற்கவர் அவரது அறிவிப்புக்கள் குழப்பமுள்ளவைஎன பதிலளித்தார்கள்.

தனது தந்தையான அஹ்மதிடம் அறிவிப்பாளர்களின் நிலைப்பாடுகள் பற்றியும் அறிவிப்புக்கள் பற்றியும் கேற்கும் நூல்.  அதில்தான் மேற் சொன்ன கூற்று இடம்பெறுகிறது. இப்படித் தெளிவான பொதுவான தீர்ப்பை, இமாம் அவர்கள் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புக்களைப் பற்றி விமரிசிக்கும் பிரத்தியேக விமரிசனமும் ஒன்றையே குறிக்கிறது என்று சொல்ல வேண்டுமாயின் அதற்கு ஆதாரம் தேவை. வெறுமனே அவர் இதைத்தான் நாடுகிறார் எனச் சொல்ல முடியாது. அல்லது அவர் இதைத்தான் நாடினார் என அவரிடமுந்து இந்த செய்திகளை அறிவிப்பவர்கள் சொல்ல வேண்டும். இல்லாமல் வெறும் வாதங்களை ஒரு போதும் ஏற்க முடியாது. இமாம் அஹ்மதின் மகன் வழியாக பதிவு செய்யப்பட்ட இன்னொரு கூற்றைப் பாருங்கள்.

الكامل في ضعفاء الرجال (8 /526 ) سألت أبي عن عِيسَى بْن يُونُس فَقَالَ عن مثل عِيسَى يسأل قلت فأبوه قَالَ كذا وكذا

எனது தந்தையிடம் யூனுஸ் இப்னு இஸ்ஹாக் பற்றிக் கேட்டேன். அதற்கவர் இவ்வாறு இவ்வாறுஎன பதிலளித்தார்கள். “ இந்த வார்த்தை இமாம் அஹ்மத் அவர்கள் ஒருவரை பலஹீனமானவர் என்பதை குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை. எனவே இமாம் அஹ்மத் அவர்களையும் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக்கை பலஹீனப்படுத்தியவர்கள் என்றே கருத வேண்டும்.

சிலர் ஒரு அறிவிப்பாளரை பலமானவர் என்று சொல்ல சிலர் பலஹீனப்படுத்தினால் பலஹீனம் காரணத்தோடு இருந்தால் பலஹீனப்படுத்தும் விமரிசனத்தையே முற்படுத்த வேண்டும் என்பதில் நிச்சயமாக மௌலவி அப்துந் நாஸர் அவர்கள் முரண்படமாட்டார்கள் இன்ஷா அல்லாஹ். எனவே இங்கே இமாம் அஹ்மத் அவர்களின் சில விமரிசனம் காரணத்தைக் குறிக்கும் வார்த்தையோடு தெளிவாகவும் வந்துள்ளதை அவதானித்தோம். இமாம் அஹ்மத் இவரை தந்தையின் அறிவிப்பில்தான் பலஹீனப்படுத்தியுள்ளார் என்ற விமரிசனத்திற்கான பதில் இது. ஆனால் மௌலவி அவர்கள் ஏனைய அறிஞர்கள் இவரை பலஹீனப்படுத்தியுள்ளார்களே அதற்கு பதில் சொல்லவில்லை. இப்பொழுது இவரது மனன பலஹீனத்தை குறித்து பிற அறிஞர்கள் செய்த விமரிசனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

سؤالات البرذعي لأبي زرعة الرازي ومعه كتاب أسامي الضعفاء له – ص 79
18- وذكر له يونس بن أبي إسحاق ، فقال : لا ينتهي يونس ، حتى يقول : سمعت البراء .قال لي أبو زُرْعَة : فانظر كيف يرد أمره

இமாம் அபூ ஸுர்ஆ யூனுஸ் பற்றிக் கேற்கப்பட்ட போது நபித்தோழர் பராஃ இடம் கேட்டேன் என்று ஒரு நாள் சொல்லும் வரைக்கும் (அவரது தவறுகள்) தொடரும்.’ ‘எவ்வாறு அவரது அறிவிப்புக்கள் (இளகுவாக) நிராகரிக்கப்படுகிறது என்று அவதானியுங்கள்என ஒரு முறை எனக்குக் கூறினார். அறிவிப்பவர்: அவரது மாணவர் பர்தஈ

ஒருவர் தான் கேட்காத ஒருவரிடத்தில் கேட்டதாக சொன்னால் அவர் பொய்யர் என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வாறு உள்ளவர்களளை ஹதீஸ்கலையில் திருடுபவர் என விமரிசிப்பார்கள். ஆனால் யூனுஸை யாரும் பொய்யர் என்று விமரிசிக்கவில்லை. காரணம் என்ன? எனத் தெரிந்து கொள்ளும் முன்னர் இது போன்ற இன்னொரு விமரிசனத்தைப் பார்த்துவிடுவோம்.

الضعفاء الكبير للعقيلي (4/457):
2088 – يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: قَالَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ: قَدِمْتُ مِنَ الْكُوفَةِ فَقَالَ لِي شُعْبَةُ مَنْ لَقِيتَ؟ قَالَ: لَقِيتُ فُلَانًا , وَفُلَانًا , وَلَقِيتُ يُونُسَ بْنَ أَبِي إِسْحَاقَ , قَالَ: مَا حَدَّثَكَ؟ فَأَخْبَرْتُهُ , فَسَكَتَ سَاعَةً , وَقُلْتُ لَهُ , قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مَاعِزٍ قَالَ: فَلَمْ يَقُلْ لَكَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ

ஸல்ம் இப்னு குதைபா கூறுகிறார் : கூபாவிலிருந்த ஊர் திரும்பியபோது சுஃபா(குனுத் என்ற வார்த்தையின்றி அறிவிக்கும் அறிவிப்பாளர்) என்னிடம் கேட்டார் : யாரையெல்லாம் சந்தித்தீர்கள்அதற்கு நான் இன்னார் இன்னாரை சந்தித்தேன். யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகையும் சந்தித்தேன்என்று கூறினேன். யூனுஸ் எவைகளை உமக்கு அறிவித்தார் என சுஃபா கேட்டார். நான் சிலவற்றைச் சொன்னேன். சற்று நேரம் அமைதியாக இருந்தார். தொடர்ந்து நான் யூனுஸ் எனக்குச் சொன்னார் அவருக்கு பக்ர் இப்னு மாஇஸ் அறிவுப்புச் செய்ததாகஎனச் சொன்ன போது. நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவருக்கு அறிவிப்புச் செய்ததாகச் சொல்வில்லையா!!!!!!எனக் கேட்டார்.

அதாவது நபித்தோழர்கள் வழியாக எந்த அறிவிப்பும் இல்லாத அதற்கான வாய்ப்பும் கிடைக்காத கூபாவைச் சேர்ந்த சிறிய தாபிஈதான் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக். அங்கே வாழ்ந்த நபித்தோழர்களில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு இவர் பிறப்பதற்கு முன்னரே மதீனாவில் அல்லது கூபாவில் மரணித்துவிட்டார். ஆனால் இவரது மனன பலஹீனம் அறிவிக்கின்ற பொழுது பேணுதல் காட்டாமையால் எனக்கு அறிவிப்புச் செய்தார் எனக்கு அறிவிப்புச் செய்தார் என தான் நேரடியாகக் கேட்காத செய்திகளையெல்லாம் சொல்கின்ற வழமை அவரிடம் இருந்ததால்தான் நபித்தோழர் பராஃ இடம் கேட்டேன் என்று ஒரு நாள் சொல்லும் வரைக்கும் (அவரது தவறுகள்) தொடரும்.என அபூ ஸுர்ஆ அவர்களும் . நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவருக்கு அறிவிப்புச் செய்ததாகச் சொல்வில்லையா!!!!!!என சுஃபா அவர்களும் அவரது பலஹீனத்தை உணர்த்தும் வகையில் கேட்பதைப் பார்க்கிறோம். தந்தை வழியல்லாத அறிவிப்புக்களிலும் இவரது மனன பலஹீனம் இருப்பதை இவைகள் தெளிவாகச் சொல்லவில்லையா.

 இது மாத்திரமல்ல மனன பலஹீனத்தின் காரணமாக அறவிப்பாளர்களை விட்டு அறிவித்தல் மாற்றியறிவித்தல் என பல தவறுகள் இவர் விடயத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலே நான் குறிப்பிட்ட கூபா சென்று வந்த அறிவிப்பாளரான ஸல்ம் யூனுஸ் வழியாக அறிவிக்கும் ஓர் அறிவிப்பில் ஒரு பொய்யரையே விட்டு அறிவிக்கிறார்.எனவே இது போன்ற இன்னும் எனது உற்சாகம் எனக்கு இடம் தராததால் நான் குறிப்பிடாத பல காரணங்களால் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பலஹீனமானவர் என்ற முடிவையே சரிகாண முடிகிறது

2.அடுத்து குனூத் என்ற வார்த்தையுடன் சுஃபா வழியாக தபரானியிலே பதியப்பட்டுள்ள அறிவிப்பு

புரைத் இப்னு அபீ மர்யம் வழியாக அறிவிக்கும் 4வரில் மூவர் பலஹீனமானவர் என்பதையும் அதில் செய்யப்பட் விமரிசனத்தையும் அதற்கான பதிலையும் மேலே கண்டோம். 4காவது அறிவிப்பாளரான சுஃபா குனூத் என்ற வார்த்தையையோ வித்ர் என்ற வார்த்தையையோ உபயோகிக்கவில்லை என்றும் இவர் பலமானவர் என்பதால் இவரது இந்த அறிவிப்பே ஏற்கத்தக்கது. என்றும் சொல்லியிருந்தோம். சுஃபாவுடைய அறிவிப்புக் கிடைத்த இமாம் இப்னு குஸைமாவின் கூற்றையும் அதற்குத் துணையாகக் கூறியிருந்தோம். ஆனால் இல்லை சுஃபா ஒரு அறிவிப்பில் அப்படிச் சொல்லியுள்ளார் என மௌலவி அப்துந் நாஸர் அவர்கள் ஒரு ஆதாரத்தை முன் வைத்துள்ளார்கள். அது பற்றி சற்று விரிவாகக் காண்போம்.

சுஃபா வழியாக வரும் ஒரு அறிவிப்பில் வித்ரிலே என்ற வாசகம் இடம் பெறுவது நான் எனது கட்டுரையை எழுதும் முன்னரே இலங்கைக்கு மௌலவி அவர்கள் வந்தபோது சுட்டிக்காட்டினார். அந்த அறிவிப்பைப் பற்றிய ஒரு நிலைப்பாட்டுனேதான் நான் எனது கட்டுரையை எழுதினேன். சுஃபாவை பொறுத்த வரை மனனத்தில் மிக பலமானவர். அவரின் சில அறிவிப்புக்களில் தவறுகள் நேர்ந்திருந்தாலும் அவைகளில் பெறும்பாலானவை அறிவிப்பாளர்கள் விடயத்திலேதான் நடந்துள்ளன. ஹதீஸின் வார்த்தைகளில் தவறுகள் மிக அரிது. கூட்டிக் குறைத்து அறிவிக்கும் வழமையும் அவரிடத்தில் மிக அரிது. இந்த ஹதீஸில் சுஃபா வழியான அறிவிப்பில் குனூத் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தால் வித்ரில் குனூத் என்ற வணக்கம் ஸுன்னத் என்றாகிவிடும். இல்லையென்றால் பித்அத் என்றாகிவிடும். ஒன்றுக்கொன்று முரண்பட்ட முடிவுகள் உண்டாகும். ஆனால் சுஃபா  குனூத் என்ற வார்த்தையையும் பயன்படுத்தவில்லை வித்ர் என்ற வார்த்தையையும் பயன்படுத்தவில்லை என்பதே சரியானதாகும். தொடர்ந்து வாசியுங்கள்.

சுஃபா வழியாக வித்ரில் என்ற வார்த்தையேயின்றி

  1. யஹ்யா இப்னு ஸஈத் அல்கத்தான்
    2. அபூதாவுத் அத்தயாலிஸி
    3. குந்தர்
    4. ஹஜ்ஜாஜ் அல் அஃவர்
    5. யஸீத் இப்னு ஸுரைஃ
    6. உஸ்மான் அல் அபதீ
    7. முஅம்மல் இப்னு இஸ்மாஈல்
    8. அப்துல் மலிக் இப்னு அம்ர்
    9. அப்துல்லாஹ் இப்னு இத்ரீஸ்

போன்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கெல்லாம் மாற்றமாக அம்ர் இப்னு மர்ஸூக் வித்ரிலே என்ற அதிகப்படியான வார்த்தையோடு அறிவிக்கிறார். குறிப்பாக அம்ர் இப்னு மர்ஸூக் பலமானவராயினும் இது போன்ற வார்த்தைத் தவறுகள் சில இவரது அறிவிப்புக்களில் நிரூபிக்கப்பட்டுமுள்ளன. இதனால்தான் இமாம் இப்னு குஸைமா சுஃபா வழியாக வித்ரிலே என்ற இந்த வார்த்தை இடம்பெறவில்லை என தெளிவாகக் கூறுகிறார். எனவே வித்ரிலே என்ற வார்த்தை ஆதாரமற்றது என்பது நிரூபணமாகிறது.

   அடுத்து இந்த ஹதீஸில் சுஃபா வித்ரிலே என்ற வார்த்தையை அறிவித்துள்ளார்கள் என்று வைத்துக் கொண்டாலும் வித்ரு குனூத்திற்கு இதில் எந்த ஆதாரமும் இல்லையே. வித்ரிலே ஓத ஒரு துஆவை நபியவர்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்றுதான் புரிய முடியுமே தவிர குனூத்திற்கு எந்த ஆதாரமும் கிடையாது. வித்ரில் குனூத்தில் ஓதக் கற்றுத் தந்தார்கள் என்றோ அல்லது அதற்கு ஒத்த வார்த்தைகளே இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை. ‘வித்ரிலே’ என்ற வார்த்தை மட்டுமே உள்ளது. இது எவ்வாறு வித்ரு குனூத்திற்கு ஆதாரமாகும். ஆக இந்த ஹதீஸில் இடம்பெறும் ‘வித்ரிலே’ என்ற வார்த்தை பலமென்று வைத்துக் கொண்டாலும் ஒருக்காலும் வித்ரு குனூதிற்கு இதில் ஆதாரம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts