Friday, March 29, 2024

அல்பானி குர்ஆனிற்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்தாரா?

ததஜவின் இந்த வருட டிசம்பர் மாத ஏகத்துவம் இதழில் புகாரி முஸ்லிமின் ஹதீஸை குர்ஆனுக்கு அல்லது நிதர்சனத்திற்கு அல்லது சிந்தனைக்கு முரண்பட்டால் நிராகரிக்க வேண்டும் என்ற தமதுகொள்கையில்தான் அல்பானியவர்களும் இருக்கிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு செய்தியைப் பதிந்திருந்தார்கள். அவர்கள் ஒன்றில் அல்பானியின் ‌விமரிசனத்தின் பின்புலம் தெரியாமல் அதனை எழுதியிருக்கிறார்கள் அல்லது தெரிந்தும் கருத்துத் திணிப்பை உருவாக்க அந்தக் கட்டுரையைப் பதிந்திருக்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. அல்பானியின் போக்கை விளங்கிக்கொள்ள  2003 ஏப்ரல் ஏகத்துவத்திலிருந்து உதாரணத்தை இறுதியில் தருகிறேன் இன்ஷா அல்லாஹ்.

 ஸஹீஹுல் புகாரியிலும் முஸ்லிமிலும் பலஹீனமான ஹதீஸ்கள் இருக்கின்றனவா? என்பது அந்த இரண்டு நுல்களும் தொகுக்கப்பட்ட நாளிலிருந்து ஹதீஸ்துறை அறிஞர்களுக்கு மத்தியில் இருந்து வருகிறது. இது அறிவிப்பாளர்களை மையமாக வைத்து அறிவிப்பிலும் அறிவிப்பாளர் வரிசையிலும் எழுந்த விமரிசனமே அன்றி ‌‌வேறு வடிவம் இதற்கு இருக்கவில்லை. அந்த முரண்பாடு இரண்டு வகையில் இருந்தது.

1-புகாரி முஸ்லிம் இருவரும் தம் இரு நூலிற்கும் பிரத்தியேகமாக ஏற்படுத்திக்கொண்ட நிபந்தனைகளின் தரத்தில் அவர்கள் பதிவு செய்த எல்லா ஹதீஸ்களும் இருக்கின்றனவா? இல்லை சாதரண தரத்தில் இருக்கின்றனவா?

சில ஆரம்ப கால   அறிஞர்கள் புகாரி முஸ்லிமை  விமரிசிக்கும் வகையில் நூற்களை   எழுதியிருக்கிறார்கள். அவை  அனைத்தும்     மேற் குறிப்பிடப்பட்ட கோணத்திலேயே     எழுதப்பட்டுள்ளன.      அந்த அறிஞர்களின் நூற்கள் புகாரி முஸ்லிமின் ஹதீஸ்களை பலஹீனப்படுத்த எழுதப்படவில்லை. அவர்களின் பிரத்தியேக நிபந்தனைகளின் தரத்தை   சில ஹதீஸ்கள் அடையவில்லை என்பதை வாதிக்கவே எழுதப்பட்டன. விதிவிலக்காக ஓரிரு இடங்களில் தவிர இந்தக் கோணத்திலிருந்து அந்த நூற்கள் தவறவில்லை.

2-சில பலஹீனமான அறிவிப்பாளர்கள் வழியாக வந்த பலவீனமான செய்திகளை புகாரி முஸ்லிம் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். எல்லாமே பலமான ஹதீஸ்கள் அல்ல சில பலஹீனமான ஹதீஸ்களும் உள்ளன.

இவ்வாறு இரண்டு கோணங்களில் விமரிசிக்கப்பட்டன.  ஹதீஸ்துறை அறிஞர்கள் வழிமுறையில் வந்த தற்காலத்தின் மிகப்பெரிய முஹத்திஸாக இருந்து மரணித்த நாஸிருத்தீன் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் புகாரி முஸ்லிமில்  பலஹீனமான ஹதீஸ்கள் எதுவும் இல்லை என்ற அறிஞர்களின் நிலைப்பாட்டை சரிகாணவில்லை. பலஹீனமான ஹதீஸ்களும் உண்டு என்ற நிலைப்பாட்டையே சரிகண்டார். இது புதிய நிலைப்பாடு கிடையாது. இதற்கு அல்பானியின் உரைகளுக்குப் போகத் தேவையில்லை. அவர்களுக்கு இது சம்பந்தமான தனியான நுற்களே இருக்கின்றன. இன்னும் அவர் எழுதிய அனைத்து நுற்களும் இதற்கு சாட்சி.

அறிஞர்களுக்கு   மத்தியில் புகாரி முஸ்லிமின் தரம்பற்றி    தொன்றுதொட்டு இருக்கும் இந்த முரண்பாட்டிற்கும்  புகாரி முஸ்லிமில் வரும் ஹதீஸ்கள்  நிதர்சன உண்மைகளுக்கு முரண்படுகின்றன விஞ்ஞான உண்மைக்கு முரண்படுகிறன்றன. புத்திக்கு முரண்படுகின்றன குர்ஆனுக்கு முரண்படுகின்றன என்று கூறி சகட்டு மேனிக்கு ஹதீஸ்களை நிரகரிக்கும் போக்கிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அல்பானியவர்கள் இப்படி சகட்டுமேனிக்கு ஹதீஸ்களை நிராகரிப்பவர்களுக்கெதிராக சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார் என்பதுவே நிதர்சனம்.  இக்வானிய அறிஞர்களான கர்ளாவி கஸ்ஸாலி போன்றவர்கள் ஹதீஸ்களை தட்டும் போக்கை கையாண்டவர்கள். அவர்களுக்கெதிராக கடுமையாக விமரிசித்து பல பக்கம் எழுதிய அறிஞர்களில் முன்னணியில் இருக்கும் அறிஞரே அல்பானியவர்கள். தனது நூலான ஸஹீஹாவில் அல்பானியவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்

” جهل بعض الناشئين الذي يتعصبون لـ ” صحيح البخاري “، وكذا لـ ” صحيح مسلم ” تعصبا أعمى، ويقطعون بأن كل ما فيهما صحيح ! ويقابل هؤلاء بعض الكتاب الذين لا يقيمون لـ ” الصحيحين ” وزنا، فيردون من أحاديثهما ما لا يوافق عقولهم وأهواءهم، مثل (السقاف) … وغيرهم. وقد رددت على هؤلاء وهؤلاء في غير ما موضع ” انتهى من ” سلسلة الأحاديث الصحيحة ”

“சிலர் புகாரி முஸ்லிமில் உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் ஒன்று விடாமல் ஸஹீஹானது என்று குருட்டுத்தனமானக  பிடிவாதம் பிடிக்கும் அதே வேளை இவர்களுக்கு நேரெதிராக இருஸஹீஹான கிரந்தங்களுக்கு எந்தப் பெறுமதியும் வழங்காமல் தங்கள் சிந்தனைகளுக்கும் எண்ண ஓட்டங்களுக்கும்    ஒத்துவராத ஹதீஸ்களை  நிராகரிக்கும் போக்குக்கொண்ட ஸக்காப் போன்றவர்கள் இன்னானொரு புறம் நிற்கும் இந்த அறியாமை.  நான் பல இடங்களில் இவர்களுக்கும் அவர்களுக்கும் எதிராக மறுப்புக்களைப் பதிந்துள்ளேன்.(ஸில்ஸிலதுல் அஹாதீஸுஸ் ஸஹீஹா)

இங்கே அல்பானி குறிப்பிடும் இரண்டாவது குழுவினர் யார். அரபுலகில் இக்வானிய அறிஞர்களான கர்ளாவி கஸ்ஸாலி அதுபோன்று ஸக்காப் போன்றவர்கள் புத்திக்கு முரண்படுகிறது குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஹதீஸ்களை நிராகரித்தவர்கள். அவர்களில் ஒத்தபோக்கை தமிழுலகில் ததஜவினரே கொண்டிருக்கின்றனர். அல்பானியின் நூற்றுக்கணக்கான மறுப்புரைகள் இவர்களுக்கெதிராக உள்ளன.

புகாரி முஸ்லிமில் வரும் ஹதீஸில் இடம் பெறக் கூடிய அறிவிப்பாளர் பலஹீனமானவர் என்று நிரூபணமாகிவிட்டால் அந்த செய்திக்கு வேறு அறிவிப்பாளர் வரிசை இல்‌லையென்றால் அதனை ஆதாரமாகக்கொள்ளக் கூடாது. இதைத்தான் எல்லாத் தவ்ஹீத் பிரச்சார அமைப்பையும் போன்று ததஜவும் கடைபிடித்து வந்தது. ஆனால் புதிதாக அறிவிப்பாளர் வரிசையகை் கடந்து போய் முரண்படும் ஹதீஸ்கள் என்ற போக்கை உருவாக்கியுள்ளனர்.

கீழே இடம்பெறும் 2003 ஏகத்துவ இதழில் புகாரி முஸ்லிமில் வரும் கண்ணேரு ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை சரியென்பதால் ஸஹீஹ் என்று திடமாகக் கூறிவிட்டு விளக்கம் அளிக்கிறார்கள்.

அதே இதழில் அதே கேள்வி பதில் பகுதியில் நின்றுகொண்டு நீரருந்தினால் வாந்தியெடுக்கட்டும் என்ற முஸ்லிமில் இடம்பெறும் ஹதீ‌ஸை பலஹீனமான அறிவிப்பாளர் இடம்பெறுவதால் பலஹீனம் என்கின்றனர்.

இதுதான் சரியான வழி முறை. அல்பானி அவர்களும் இதே ஹதீஸை பலஹீனம் என்கிறார். எனவே கண்ணேறு ஹதீஸை இன்று ததஜ நிராகரிப்பது யார் கொண்டு வந்த மாற்றம்.!!

தயவு செய்து இந்த வழிகெட்ட கொள்கைக்கு எதிராக வாழ்ந்த அறிஞர்களை அதே வழிகேட்டை ஆதரித்தது போன்ற கருத்தைச் சித்தரிக்காதீர்.

குறிப்பு

 அந்தக் கட்டுரையில் சில மொழிபெயர்ப்புத் தவறுகள் நடந்துள்ளன. உதாரணத்திற்கு ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறேன்.

இந்தத் தொடரின் முதல் அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மீது எந்தக் குறையும் கிடையாது.

அல்பானி இப்னு அப்பாஸையும் தரம்பார்த்து குறையற்றவர் என்று தீர்ப்பு வழங்கியது போன்று இந்த மொழிபெயர்ப்பு உள்ளது. இது போன்ற தவறுகள் அவசரத்தின் காரணமாக அனைவருக்கும் ஏற்படும்.

“இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை ஹதீஸை அறிவிப்பவர் வரை அதாவது இப்னு அப்பாஸ் வரை குறையற்றது . எனவே அறிவிப்பாளர்களை விமரிசக்க இயலாதளவு ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசைகொண்டது.’

இதுதான் சரியான மொழிபெயர்ப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts