Thursday, April 25, 2024

ஒரு ஹதீஸின் தரத்தை தீர்மானிப்பதில் தவ்ஹீத் உலமாக்களுக்கிடையில் கருத்துவேறுபாடு ஏற்படுவது ஏன்?

ஒரு ஹதீஸின் தரத்தை தீர்மானிப்பதில் தவ்ஹீத் உலமாக்களுக்கிடையில் கருத்துவேறுபாடு ஏற்படுவது ஏன்?

பொதுவாக எதிலும் ஆர்வமும் தேவையும் இருந்து முயற்சி செய்பவருக்கே இந்த பதில் உதவும். மாறாக என்ன எதிலுமே கருத்து முரண்பாடா? என வீணாக கேள்வி மட்டும் கேட்டுவிட்டு அது பற்றிய ஆர்வமோ தேவையோ இல்லாதவருக்கு இந்த பதிலில் திருப்தியிருக்காது. உலகத்தில் எந்த நல்ல முடிவும் ஆர்வத்திலும் அதற்கான முயற்சியிலும்தான் தங்கியிருக்கிறது.

எந்த ஒருவிடயத்தைப் புரிந்துகொள்வதற்கும் 3 விடயங்கள் அவசியம்

1.மொழி

2.குறிப்பிட்ட விடயம் பற்றிய அடிப்படைத் தகவல்கள்

3.சரியான சிந்தனை.

இவைகளில் ஹதீஸின் தரத்தைத் தீர்மானிப்பதில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளில் ஒரு முடிவைச் சரிகாண்பதற்கு பொது மக்களுக்கு 1ம் விடயமும் 2ம் விடயமும் பிரச்சனையாக அமையும் காரணம் ஹதீஸ{ம் ஹதீஸின் அறிவிப்பாளர் தகவல்களும் அரபி மொழியில்தான் இருக்கும். அது போல் அதன் தரம் பற்றிய தகவல்களை தமக்குறிய மொழியில் முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியாமை. ஒரு ஹதீஸின் தரத்தைப் பார்த்துச்  சொல்பவர்கள் பெரும்பாலும் எதனால் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்று மக்களுக்குச் சொல்வதில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அரபு மொழி தெரிந்த பலர் ஒரு ஹதீஸின் தரத்தை ஏன் இவ்வாறு அறிஞர்கள் தீர்மானித்தார்கள் என்று அது பற்றிய அடிப்படை விடயங்களைக் கூட அறிந்துகொள்ள முற்படுவதில்லை. இதனால் அவைகளை அவர்களால் விளங்கப்படுத்த முடிவதில்லை. இதனால் பொது மக்களுக்கு “இந்த ஹதீஸ் பலமானது” அல்லது “இந்த ஹதீஸ் பலமற்றது” என்ற தகவல்கள் மாத்திரமே கிடைக்கின்றன. மேலதிகமாக எதுவும் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கு மொழிப் பிரச்சனையோடு ஹதீஸின் தரம் ஏன் பலம் என்றோ பலவீனம் என்றோ முடிவு எடுக்கப்பட்டது என்ற அது பற்றிய அடிப்படைத் தகவல்கள் கூட கிடைக்காமல் போய்விடுகிறது. இதுவே என்ன முடிவெடுப்பது என்பதில் தாம் அறிவில் நம்பிக்கை வைத்திருக்கும் உலமாக்களை  சார்ந்திருக்க வேண்டியதற்கான காரணம்

இது தவ்ஹீத் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் அமைப்புக்களுக்கு மத்தியில் மாத்திரமல்ல தவ்ஹீத் கொள்கைக்கு வெளியில் உள்ள பிரிவுகள் அனைத்தினதும் பிரச்சினைதான் ஆனாலும் அவர்களுக்கு மத்தியில் இது பெரிய ஒரு அம்சமாகத் தோன்றாதமைக்குக் காரணம் நபியவர்களின் வழிமுறையைத்தான் நாம் பின்பற்றுவோம் என்ற உறுதி அவர்களிடத்தில் இல்லாமையே. ஹதீஸ்கள் பலமோ பலஹீனமோ அது நமக்குப் பிரச்சினையில்லை சமூகத்துடன் ஒத்துப் போகிறதா இல்லையா என்பதே முக்கியம் என்ற தவறான எடுகோளே அவர்களிடம் ஹதீஸின் தரம் பற்றிய பிரச்சினைகள் எழாமைக்கான காரணம். இதைத்தான் செய்வேன் என்ற கொள்கைப் பிடிப்புள்ளவனுக்கே பல விடயங்கள் சிக்கலாக வரும் எதையும் செய்வேன் என்பது ஒரு கொள்கையுமல்ல இதைத்தான் செய்வேன் என்று சொல்பவர்களோடு தவிர வேறெவர்களும் அவர்களுக்குப் பிரச்சனையுமல்ல.

எனவே இப்படியான சூழ்நிலையில் தரம் பற்றிய கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ள ஹதீஸில் ஒரு பொதுமகன் தீர்மானத்திற்கு வரமுடியுமா என்றால் நிச்சயமாக வரலாம் அவரது முயற்சிக்குப் பின்னால் அவரெடுக்கும் முடிவுக்கு ஒரு கூலியோ இரண்டோ கிடைக்கும். ஆனால் அவர் முதலில் ஹதீஸின் தரம் பற்றி இரு சாராரும் பேசும் அடிப்படைத் தகவல்களைக் கேட்டு எடுக்க வேண்டும். பெரும்பாலும் இதில் ஹதீஸ் துறையில் ஈடுபடுவர்களே இதனை புரிந்துகொள்ளும் வகையிலும் முழுமையாகவும் தகவல் தர முடியும். இந்தத் தகவலைத் தேடுவதில் தொகுப்பதில் ஒருவர் காட்டும் சிரத்தையே அவரது முடிவில் ஒரு திடத்தைக் கொண்டு  வரும்.

இரண்டாவது, கிடைத்த தகவல்களை நமது சிந்தனைக்குற்படுத்தி ஒப்பீட்டு ஆய்வு செய்வது. இந்த ஒப்பீட்டு ஆய்வுதான் ஹதீஸ்கலை. இதற்கான குறிப்பிட்ட ஹதீஸ் பற்றிய விதிகளை நீங்களே கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் ஒருவர் ஒரு வருடம் பல ஹதீஸ்களை இது போன்று ஒப்பீடு செய்வாரனால் சில  ஹதீஸ்கலைப் பொது விதிகளை இளகுவில் அவர் அறிந்துகொள்வார். ஆனால் எதையும் படிக்க முன் நிரகாகரிக்கின்ற பழக்கம் இருக்கக் கூடாது. இவரால் ஒரு புதிய முரண்பாட்டை உருவாக்க முடியுமே தவிர இரு முடிவில் சிறந்ததை அல்லது சரியானதைத் தேர்ந்தெடுக்க முடியாது. ஆதலால் எங்கள் சிந்தனையைக் கொஞ்சம் நாம் பெற்றிருக்கும் தகவல்களில் உபயோகித்தால் நிச்சயமாக நாம் எமது அறிவு சரிகாணும் முடிவுக்கு வரலாம்.

எமக்கு மத்தியில் ஹதீஸ் பற்றிய எந்தத் தரப் பிரச்சனையும் இல்லை என்ற வழி தவறிய இயக்கங்களின் வாதங்களுக்கு எந்தப் பெறுமதியும் இல்லை. காரணம் பலவீனமும் ஆதாரம் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு வர வாய்ப்பில்லை. நபியவர்களின் செய்திகளில் பிறரின் செய்திகள் அது நபித் தோழர்களின் செய்தியாக இருந்தாலும் கலக்கக் கூடாது என்று நினைக்கும் தவ்ஹீத் பிரச்சார இயக்கங்களுக்குத்தான் இது சம்பந்தமான சிக்கல்கள் எழும் என்பதை இந்த வாதத்தை எழுப்புவேர் புரிந்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts