Friday, March 29, 2024

சமூக சீர்திருத்தத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பிற்கே முதற் பங்கு

இந்தக் கட்டுரை ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது தொடர் உரையின் எழுத்து வடிவமாகும். சமூகத்திலே பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள் சிர்க்கான நடவடிக்கைகள் போன்றவற்றை விளக்குவதே அந்த உரையின் நோக்கமாக இருந்தது. அந்த உரையின் ஆரம்பத்தில் தௌஹீத் பிரச்சாரத்தின் போது மாற்றுக் கருத்துள்ள சகோதரர்களால் முன்வைக்கப்படும் நமக்கெதிரான சில வாதங்களுக்கு பதில் சொல்லப்பட்டது. அப்பகுதியை பகுதி பகுதியாக இங்கு பதிவு செய்கிறேன் இன்சா அல்லாஹ்.

இணைவைப்புக்குப்பிரதானமான காரணியாக விளங்கக் கூடியதும், ஓரிறைக் கொள்கையை உலகிலே உரக்கச் சொல்லும் இஸ்லாமிய மார்க்கத்தில் இணை வைப்பு உருவாகுவதற்கு அடிப்படையானதுமான சூனியம், ஜின் வைத்தியம், கண்ணேறு போன்றன தொடர்பில் இஸ்லாம் என்ன கூறுகின்றது? அவற்றின் உண்மை நிலை என்ன? ஜின் வைத்தியம் செய்பவர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள்? ஜின்களுக்கு அப்படிப்பட்ட ஆற்றல்களுண்டா? சூனியத்தினால் மனிதர்களுக்குத் தீங்கேற்படுத்துமளவுக்கு சூனியத்துக்கு ஆற்றலுண்டா? போன்ற விடயங்களைத் தெளிவாக விளங்கப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இதைத் துவங்க முன்பாக முக்கிய சில அடிப்படைகளை இத்தருணத்தில் தெளிவுபடுத்த வேண்டியது அவசிமாகின்றது. மேற்குலகு பல அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இஸ்லாத்தின் விரோதிகள் முஸ்லிம்களை அனைத்துத் துறைகளிலும் பின்தள்ளுவதற்காய் சதிகளைச் செய்து கொண்டிருக்கும் போது இவர்கள் சூனியத்தைப் பற்றியும், தாயத்து, தட்டு, தகடு பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். என்று தௌஹீதைப் பேசும் நமக்கெதிராக மாற்றுக் கருத்துடையோர் பேசி வருகின்றனர். ஆக அவர்களுக்கு பதில் கூறுமுகமாக இங்கே சில அடிப்படைகளை நாம் அவதானிப்போம்.

இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் ஒரு அழைப்பாளனுக்கு, தான் எந்த விடயத்தை மையமாக வைத்து தனது அழைப்புப் பணியை ஆரம்பிப்பது என்பதில் ஒரு தடுமாற்றம் பொதுவாக அழைப்பாளர்களிடம் காணப்படுவதை நாம் அவதானிக்கின்றோம். 150 கோடியை எட்டியுள்ள முஸ்லிம் சமூகத்திடம் பல்வேறுபட்ட சீர்கேடுகள் பல கோணங்களில் காணப்படுவதே இந்தத் தடுமாற்றம் ஏற்படக் காரணமாகின்றது. இதனால் அவரவர் தமது சூழலில் காணப்படும் ஒரு விடயத்தை மையமாகக் கொண்டு தத்தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் எனலாம்.

முஸ்லிம்களுக்கெனவிருந்த நடை, உடை, பாவனைகளைக் கொண்ட தனித்துவமான கலாசாரம் மாறிவருவதைக் காணலாம். முஸ்லிம் நாடுகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நாடுகளிலும் இதே கதிதான். மேற்கத்தேயத்தின் கலாசாரம்தான் நமது கலாசாரம் என்கின்ற நிலையில் சமகால முஸ்லிம் தலைமுறையினர் உள்ளனர். சொற்பச் சதவீதமானவர்களே தம் கலாசாரத்தைப் பின் தொடர்வதில் கரிசனைகாட்டுகின்றனர். உதாரணத்துக்குச் சொல்வதென்றால் தாடி வைப்பது இஸ்லாமிய கலாசாரமாகும். ஆனால் அது முஸ்லிம்களாலேயே ஏலனம் செய்யப்படுவதைக் காண்கின்றோம். தொப்பி அணிவது இஸ்லாமியக் கலாசாரமன்று. ஆனால் அதை அணியாதவர்கள் இஸ்லாமியக் கலாசாரத்தைப் பின்;பற்றாதவர்கள் போன்று பார்க்கப்படுவதைக் காண்கின்றோம். எனவே அனைத்தும் தலை கீழாய் மாறியிருப்பதை இவற்றிலிருந்து அறிய முடிகின்றது.

ஒவ்வொரு பருவ காலத்துக்கும் ஏற்ப புதிய வடிவங்களில், இஸ்லாத்தின் ஆடை இலட்சணங்களுக்கு நேரடியாக முரண்படும் விதத்தில் இஸ்லாத்தின் பெயரால் அபாயாக்கள் வெளிவருகின்றன. மற்றைய சமூங்களிடமிருந்து இஸ்லாமிய சமூகத்துக்குள் நுழைந்த சில விடயங்கள் மாற்றவே முடியாதளவுக்கு வேரூன்றி விட்டன எனலாம். தந்தையின் பெயரை தனது பெயருக்குப் பின்னால் எழுதுவதே இஸ்லாமிய மரபு ஆனால் அது மாற்றப்பட்டு தந்தையின் பெயரை தன் பெயருக்கு முன்னால் எழுதும் வழக்கம் வந்து விட்டது. ஒரு விடயத்தை கோடிட்டுக் காட்டுவதற்கு குறித்த செய்திக்கு மேலால் கோடிடுவது முஸ்லிம்களின் மரபாகும். பழங்கால குர்ஆன் பிரதிகளிலே இதை அவதானிக்க முடியும். ஹதீஸ்களுக்காக அட்டவணை தயாரித்த ஒரு யூதன் தனது அப்புத்தகத்திலே இதே நடை முறையையே கையாண்டிருக்கின்றான். ஆனால் இது  மாற்றப்பட்டு கீழ்கோடிடும் வழக்கம் பழக்கப்படுத்தப்பட்டு விட்டது.

இவை மார்க்கத்துக்குப் பாதிப்பில்லாதவைகளாகக் காணப்பட்டாலும் மார்க்கத்துக்குப் பாதிப்பை உண்டாக்கும் பல அம்சங்கள் பாலர் பள்ளிகள் முதற்கொண்டு பல்கலைக்கழகங்கள் வரையில் நுழைந்து விட்டன. கிராஅத் ஓதி ஆரம்பித்து, ஸலாவத்து சொல்லி முடிப்பதுதான் இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கான வரைவிலக்கணமாகி விட்டது. இதைத் தவிர வேறெந்த அடையாளங்களும் சொல்வதற்கில்லை.

பக்கத்திலுள்ள மஸ்ஜித்களில் தொழமுடியாதளவுக்கு பேண்ட் வாத்தியங்கள் முஸ்லிம் பாடசாலைகளில் இசைக்கப்படுகின்றன. இதைத் தட்டிக் கேட்டால் அதைக் குற்றம் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிட்டது. இவற்றை வைத்து நோக்கும் போது முதலில் நம் கலாசாரத்தை உயிர்ப்பிப்பதிலிருந்துதான் பிரசாரப்பணியை ஆரம்பிப்பதா? என்ற கேள்வி எழுகின்றது.

பெருளாதார ரீதியில் நோக்கும் போது இஸ்லாம் சொல்லித்தந்திருக்கும்  நடை முறைகள் உலகின் பொருளாதாரத்திட்டங்களோடு ஒப்பிடும் போது மிகச்சிறந்தவையாக அறியப்படுகின்றன. ஸகாத், சொத்துப்  பங்கீடு போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆனால் வறுமையின் உச்சத்தில் முஸ்லிம் சமூகம் இருப்பதைக் காண்கின்றோம். சோமாலியா, எத்தியோப்பியா போன்ற முஸ்லிம் நாடுகள் வறுமைக்குப் பெயர் போனவைகளாகவுள்ளன. இந்நாடுகளில் வாழும் மக்கள் உணவில்லாமையினால் எறும்புகள் சேர்த்து வைத்திருக்கும் தேங்காய் துண்டுகள் போன்றவற்றைச் சேர்த்து தம் எச்சிலோடு சேர்த்து தாமும் உண்டு தம் குழந்தைகளுக்கும் அதைக் கொடுக்கின்ற அளவுக்கு வறுமையால் வாடுகின்றனர். இஸ்லாம் கூறுகின்ற பொருளாதாரக் கொள்கைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமைதான் இதற்குக் காரணமாகும்.எனவே இங்கிருந்து பிரசாரப்பணியை ஆரம்பிப்பதா? என்ற வினா எழுகின்றது. இதைச் சரிகண்டதன் விளைவாக ஒரு சமூகத்தின் உருவாக்கத்திற்கு பொருளாதரம்தான் அடிப்படை என்ற கோட்பாட்டில் பொருளாதாரத்தைச் சீர்படு;த்துவதை மையமாகக் கொண்டு பிரசாரம் செய்யும் இயக்கங்களும் உருவாகின.

அரசியல் ரீதியாகப் பார்க்கும் போது இஸ்லாமிய நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் முஸ்லிம்களின் இருப்பு இஸ்திரமற்றதாகவே காணப்படுகின்றது. 50 வருடங்களையும் கடந்து விட்ட பலஸ்தீன் விவகாரம் இதற்கு நல்ல சான்றெனலாம். இன்று வரைக்கும் அங்கே கற்பழிப்புக்களும், படுகொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பொஸ்னியாவில் யூகோஸ்லாவிய இராணுவத்தால் 40 ஆயிரம் முஸ்லிம் பெண்கள் கூட்டுக்கற்பழிப்புக் குள்ளாக்கப்பட்டார்கள். இந்தோனிஸியா, கேச்மீர் போன்ற நாடுகளிலும் முஸ்லிம்களின் சுயஇருப்பு கேள்விக் குறியாக்கப்பட்டு விட்டது. சூடானில் காணப்படும் வளங்களைச் சூரையாடுவதற்காக அந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கிடையில் கலவரத்தை மூட்டிவிடுவதற்காக அமெரிக்கா முயற்சித்து வருகின்றது. ஈராக்கிலும் இதே நிலைதான். ஆக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளிலும் நாளுக்கு நாள் அவலக்குரல்கள் ஒளித்த வண்ணமேயுள்ளன. இதைக் கேள்வியுற்ற அரபு நாடுகளில் வாழும் முன்பள்ளி சிறார்கள் தாம் சேர்த்து வந்த உண்டியல்களை இந்த முஸ்லிம் நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவென அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தை முஸ்லிம் நாடுகளிலேயே பகிரங்கப்படுத்த முடியாத ஒரு சூழல் நிலவுகின்றது. ஆப்கானிலே இஸ்லாமிய ஆட்சியென்று தாலிபான்களால் பகிரங்கப்படுத்தப்பட்ட போது அங்கு அமெரிக்காவின் அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. குஜராத்திலே முஸ்லிம்களுக் கெதிராக நடந்தேறிய மிக மோசமான கலவரத்தையும் மறக்க முடியாது. இலங்கையிலும் முஸ்லிம்கள் கூட்டாக வாழும் பிரதேசங்களில் என்றைக்கும் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்ச சூழலே காணப்படுகின்றது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது எல்லா முஸ்லிம்களையும் பற்றிச் சிந்திப்போம். அவர்களின் பிரச்சினைகளுக்காய் குரல் கொடுப்போம் என்ற ஜிஹாதிய சிந்தனையிலிருந்து இஸ்லாமியப்பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற நியாயமான எண்ணம் எழுகின்றது.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் கொள்கை அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தின் நிலைப்பாடுகளைக் கவனிக்கின்ற போது, கொள்கை ரீதியில் பல்வேறுபட்ட பிரிவுகள் முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றன.  எவைகளெல்லாம்  இந்த சமுதாயம் செய்யக் கூடாதவைகளென  நபியவர்கள் கருதினார்களோ அவையனைத்தும் இன்று இஸ்லாமிய சமூகத்தில் ஊடுருவியிருப்பதைக் காண்கின்றோம். அஹ்லுஸ்ஸ{ன்னா வல் ஜமாஅத்தினரைக் கொல்ல வேண்டும் என்ற கொள்கையில் ஆட்சி அதிகார பலத்தோடு வளர்ந்துள்ள ஒரு கூட்டமாக சீஆக்கள் 72 கூட்டத்துள் ஒரு பிரிவினராக கணிக்கப்படுகிறார்கள். காதியானிகள், இபாழிய்யாக்கள், பஹாயியாக்கள் போன்ற பிரிவினரும் இஸ்லாத்துக்கு மாற்றமான கொள்கையிலிருந்தே வளர்ந்து கொண்டு வருகின்றார்கள். மறுபுரம் தரீக்காக்களைக் கவனிப்போமேயானால் அவற்றிலும் பல பிரிவுகள் எனவே இவையனைத்தையும் வைத்துப்பார்க்கும் போது எதுதான் சரியான கொள்கை என்று வினா எழுப்புமளவுக்கு இஸ்லாமிய சமுதாயம் மூடநம்பிக்கைகளாலும், சரியான கொள்கை பற்றிய தெளிவின்மையாலும் துண்டாடப்பட்டிருப்பதை பார்க்கின்றோம். அந்தளவுக்கு நாளுக்கு நாள் புதுப்புது கொள்கைப் பிரிவுகள் இஸ்லாமிய சமூகத்துள் தோற்றம் பெறுகின்றன.

சிக்மன்ட் பிரைட் என்ற மேல்நாட்டவரின் பெயரால் பர்வீதிய்யா என்ற பெயரில் இயக்கமொன்று இஸ்லாமிய சமூகத்துக்குள் உருவகியிருக்கின்றது. இவர்களுக்கென தனித்துவமான வணக்க முறைகளுமுள்ளன. இப்படி ஒவ்வொரு பிரதேசத்திலும் இஸ்லாத்துக்கு மாற்றமான கொள்கைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. கொள்கை ரீதியான துண்டாடல்கள் இல்லாதவர்களிடத்திலும் பலதரப்பட்ட மூடநம்பிக்கைகள் மலிந்து போயுள்ளன. பௌத்த மதகுருமாரிடத்தில் தமது கற்பை, மானத்தை இழக்கின்றளவுக்கு நமது பெண்களிடம் மூடநம்பிக்கைகள் நிறைந்து போயுள்ளன.இவற்றை வைத்துப்பார்க்கும் போது சரியான கொள்கை தெளிவைத்;தான் முதலில் இந்த சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்படுகின்றது.

அதற்காக இஸ்லாமிய சமூகத்தில் எந்த நலவுமில்லை என்று கருத முடியாது. குறிப்பிட்ட ஒரு தெகையினர் இந்த சமூகத்தில் சரியான கொள்கைத் தெளிவோடும், போக்கோடும் இருக்கின்றார்கள். ஆனாலும் பெரும்பாலானோரின் நிலையே முறைகேடாகவுள்ளது என்பதுவே இங்கே கவனிக்க வேண்டியதாகும்.

இவையெல்லாவற்றையும் அவதானித்து இந்த சமூகத்தைச் சீர்திருத்துவதற்காக சிலர் போனார்கள் அவர்களை முதலில் சீர்படுத்த வேண்டும் என்றளவுக்கு சீர்திருத்தில் சீர்கேடுகள் உண்டாகிற்று. ஒழுக்கம், பண்பாடுகளைப் படிப்பதற்காக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்கின்றனர். அங்கே பாடப்புத்தகங்களில் ஆபாசங்கள் சுகாதாரப் பாடம் என்ற பேரில் கற்பிக்கப்படுகின்றன. சுகாதாரம் பாடம் என்றால் என்ன? ஏன் அதைப் படிக்க வேண்டும்? என்பனவே நாமறிந்தவை. ஆனால் இதற்குப்பின்;னால் ஒரு வரலாறிருக்கின்றது. பாடத்திட்டங்கள் போடப்படும் போது பல விடயங்கள் கவனிக்கப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவைப் பொருத்தமட்டில் முஸ்லிம்களை மட்டும் மாற்றவேண்டும் என்று திட்டம் போடுவதில்லை. முழு உலகுமே தான் நினைப்பது போன்றிருக்க வேண்டும் என்பதுவே அமெரிக்காவின் நோக்கமாகும். இதுவே உலகமயமாக்கல் எனப்படுகின்றது. இருந்தாலும் இஸ்லாமியர்களை நேரடியாக உலகமயமாக்களுக்குள் கொண்டுவருவது கடினம் எனன்பதால் அதிக சிரத்தையுடன் வேறு வழிகள் மூலம் முஸ்லிம்களைக் குறிவைத்து உலகமயமாக்கள் கருத்துக்கள், சிந்தனைகள் அமுலுக்கு வருகின்;றன. பாடசாலைகளிலே படிப்பிக்கப்படுகின்ற சுகாதாரப்பாடத்தில் மறைவான அங்க அவயங்கள் விகாரமாக, விரசமாக அணுவணுவாகக் கற்பிக்கப்படுகின்றன. பொதுவாக பெரும்பாலான பாடசாலைகளில் பாடத்திட்டம் முழுமையாகக் கற்பிக்கப்படுவதில்லை. காலம் போதாமை போன்ற காரணங்கள் அதற்குக் காரணமாகின்றன. ஆனால் இந்தப்பாடங்களில் பரீட்சை வைத்தால் மாணவர்கள் இலகுவில் தேரிவிடுவார்கள். இந்தப்பாடங்களைப் படிப்பதற்கு மாணவர்கள் தகுதியானவர்கள்தான் என்று வைத்துக் கொள்வோம். வீட்டிலே ஒரு மோசமான பத்திரிகையிருக்கின்றது யார் அதைப்பார்க்க வேண்டும்,யார் அதைப்பார்க்கார்க்கக் கூடாது என்று உங்களுக்குத் தடை போட முடியும். ஆனால் பாடப்புத்தகங்களைப் பார்ப்பதற்கு மாணவர்களுக்குத் தடை போட முடியாது. ஒரு சிறிய வகுப்பு மாணவனுக்குப் பெரிய வகுப்புப் புத்தகத்தைப்பார்ப்பதற்கு யாரும் தடை போடுவதில்லை இதனால் எட்டாம் வகுப்பு மாணவன் படிக்கும் சுகாதாரப் புத்தகங்கள் ஐந்தாம் ஆண்டில் படிக்கும் ஒரு மாணவனின் பையிலிருக்கின்றது. ரகசிய விடயங்களை அறியவேண்டும் என்ற ஆசை, ஆதங்கம் இது போன்ற புத்தகங்களைப்பார்ப்பதற்கு ஒரு மாணவனைத் தூண்டுகின்றது. இப்பாடங்களைப் படிப்தனால் நன்மையிருக்கின்றதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க  எந்த இடத்தில் சீர்திருத்தம் இருக்கவேண்டுமோ அதே இடத்தில் ஒரு சீர்கேட்டை நமது பிள்ளைகள் படிக்கின்றனர். எவைகளெல்லாம் பார்க்கவே முடியாதவைகளோ அவற்றையெல்லாம் நம் பிள்ளைகள் பாடத்தின் பெயரால் பார்க்கின்றன. இதற்கு சில நியாயங்களைக் கூட சிலர் கூறலாம்.

வரலாற்றுப்பாடத்திலே அரைநிர்வாண  தோற்றங்களிலே காட்சி தரும் இசுருமுனி காதலர் ஜோடி என்ற ஓவியம் படிப்பிக்கப்படுகின்றது. முன்பெல்லாம் இந்த ஓவியங்கள் கறுப்பு வெள்;ளையாகவே பிரசுரிக்கப்பட்டன இப்போது நல்ல வர்ணங்களோடு பாடப்புத்தகங்களில் காணப்படுகின்றன. இவற்றைப்பார்க்கும் மாணவர்கள் இது ஆபாசமில்லை இதை விடவும் மோசமானதுவே ஆபாசம் என்று நினைப்பார்கள் போலும்.ஆனால் இதைப் பெரும்பாலான ஆசிரியர்கள் உணர்த்துவதில்லை. இதே போன்றதொரு காட்சியை வீட்டிலே ஒரு மாணவன் பார்த்தால் அதைப் பெற்றோர் அனுமதிப்பதில்லை.

அதே விடயம் பாடம் என்ற பேரில் வருகின்ற போது நாம் அனுமதிக்கின்றோம். காசியப்பன் காலத்தில் வரையப்பட்ட பார்ப்பதற்கே முடியாத அரை நிர்வாண ஓவியங்களையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். அதற்காகப் பாடத்திட்டங்களே சரியில்லை படிக்கவே கூடாதென்று கூறவில்லை. இஸ்லாமியப் பாடசாலைகளாகவிருந்தாலும் பாடத்திட்டம் வகுப்பவர்கள்.முஸ்லிம்களல்ல. எனவே நம் கலாசாரத்துக்கு முழுமையாகவே இவை உட்படாது. ஆக இவற்றைப் படிக்க முடியாது என்பது பொருளல்ல அவ்வவ் விடங்களில் மாணவர்களுக்கு இவற்றை உணர்த்திக் கற்பிக்க வேண்டும் என்பதுவே நாம் கூற விளைவதாகும். சில பாடசாலைகளில் ஆபாச சீடிக்கள் பார்த்த மாணவர்களைப்பார்த்து ஆசிரியர்கள் கூறுவது இதற்குப்பின்னர் இவ்வாறு செய்யக் கூடாதென்பதாகும். அதே மாணவன் ஆசிரியரை எதிர்த்துப் பேசினால் ஆசிரியர்கள் கூறுவது அம்;மாணவனை விலக்க வேண்டும் என்பதாகும். இரண்டுமே ஒழுக்கக் கேடென்பதில் மாற்றமில்லை. ஆனால் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஏன் சீர்திருத்தவேண்டிய பாரிய ஒழுக்கக் கேடுகளைக் கண்டு ஆசிரியர்கள் சர்வ சாதரணமாக நடந்து கொள்கின்றனர்? என்பன தொடர்பில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கின்றது. வேலியே பயிரை மேய்கின்றளவுக்குள்ள  சீர்திருத்தப்படவேண்டிய பல சீர்திருத்தங்கள் இந்த சமூகத்தில் காணப்படுகின்றன.                இவற்றை வைத்து நோக்கும் போது இங்கிருந்து அழைப்புப்பணியைத் தொடர்வதா? என்ற கேள்வியெழுகின்றது.

இளைஞர்களைப் பார்க்கும் போது அவர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. இளைஞர்களுக்கு இஸ்லாத்தை ஊட்ட வேண்டும். சல்வியை ஊட்ட வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் அவர்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுக்க நாம் நிபை;பதில்லை. இன்று இளைஞர்கள் நிறையப் படித்திருக்கின்றார்கள். ஆனால் எப்படி தொழில் செய்வது, முன்;னேறுவது என்று அவர்களுக்குத் தெரியாது. தனவந்தர்கள் மிம்பர் கட்டுவதற்கும், கட்டிடம் கட்டுவதற்கும் தயாராகவிருக்கின்றார்கள். ஆனால் அவர்களால் ஒரு இளைஞனை முன்னேற்ற வேண்டியவற்றை செய்ய முடியவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை மார்க்கமிருந்தும் ஒரு இளைஞனை மது, மாது. சினிமா போன்ற சீர்கேடுகளிலே தள்ளி விடுகின்றது. எனவே கொள்கைளை சீர்படுத்துவதா? அல்லது பெருளாதாரத்தைச் சீர்படுத்துவதா? அரசியல் போக்கினைச் சீர்படுத்துவதா? என்ற தடுமாற்றம் ஏற்படுகிறது.

இந்தளவுக்கு சமூகம் சீர்கெட்டுக் காணப்படுவது தௌஹீத் பேசும் எங்களுக்குத் தெரியாமலில்லை.  நாம் என்ன கூறுகின்றோமென்றால் சீர்திருத்தம் செய்வதென்றாலும் நம் சிந்தனைகள், உணர்வுகளின் உந்துதலினால் ஆரம்பிக்கலாகாது. ஒரு ஏழைச்சிறுவனைக் காண்கின்றோம். அவனுக்கு உதவவேண்டுமென நினைக்கின்றோம். இதற்காகவென்று ஓர் அமைப்பபை உருவாக்கி விடக் கூடாது. ஏனென்றால் இவ்வாறு அமைப்பை உருவாக்கியிருப்போரிடம் சென்று வேறோர் உதவியைக் கேட்டால் அவர்கள் தத்தமது நிருவனங்கள் எதற்காக இயங்குகின்றனவோ அதற்கு மட்டுமே தங்களால் உதவலாம் என்று கூறிவிடுகின்றனர். குர்ஆனுக்கென்று ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கின்றவர்களிடம் சென்று ஹதீஸ் பற்றி எதுவும் வினவினால் முதலில் குர்ஆனிய சமூகத்தை உருவாக்குவோம் அதற்குப் பின்புதான் ஹதீஸ் என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவரவர் நினைத்த விடயங்களை மையமாகக் கொண்டு சீர்திருத்தம் செய்ய முனைவதை சமூகத்தில் நாம் காண்கின்றோம். ஆகவே சீர்திருத்தமானாலும் இஸ்லாம் எதை மையமாகக் கொள்ளச் சொல்கின்றதோ அதை மையப் புள்ளியாக வைத்தே அவை மேற்கொள்ளப்படவேண்டும் இதுவே நாம் கூறவருவதாகும். அல்குர்ஆன் சுன்னாவை மேலோட்டமாக நாம் ஆய்வு செய்யும் பொழுதே கொள்கை அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தை நெறிப்படுத்த வேண்டியதே இங்கு முதன்மைப்படுத்த வேண்டியதாகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தின் பார்வையில் ஒரு சமூகமாற்றமானது அந்த சமூகத்தில் ஏற்படவேண்டிய தூய்மையான நம்பிக்கை, போக்கு என்பனவற்றிலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். சரியான நம்பிக்கை, தெளிவான போக்கு போன்றன இல்லாமல் உருவாக்கப்படுகின்ற ஒரு சமூகத்தை மறுபடியும் சீர்கேட்டுக்குக் கொண்டுவருவது மிக எளிதாகும். நபியவர்கள் வளர்த்த சமூகத்தை எடுத்து நோக்கும் போது நாம் மேலே பார்த்த கலாசார சீர்கேடுகளை விட மிக மோசமான நடத்தை பிறழ்வுகளை அவர்கள் கொண்டிருந்தார்கள்.

  • குழந்தைகளை உயிரோடு புதைத்தார்கள்.
  • பெண்களை அனந்தரச் சொத்துக்களாக எடுத்துக் கொண்டார்கள்.
  • ஆனாலும் நற்பண்பை விரும்பினார்கள்.

அதனால்தான் நபியவர்களை உண்மையாளர், நம்பிக்கையாளர் என்று மதித்தார்கள். நபியவர்கள் அந்த சமூகத்தின் சீர்திருத்தத்தை அவர்களிடம் காணப்பட்ட இழிசெயல்களிலிருந்தே ஆரம்பித்திருந்தால் நம் சமூகத்திலிருந்து வந்த எதிர்ப்புக்கள் கூட நபியவர்களுக்கு வந்திருக்காது. ஏனெனில் அந்த சமூகம் நற்பண்பகளை விரும்பியது. இஸ்லாம் கூட நற்பண்புகளை வலியுறுத்துகின்றது.

1.’நற்பண்புகளைப் பூரணமாக்கத்தான் நான் அனுப்பப்பட்டேன்.”
2.’மறுமையில் எனக்கு மிகவும் நெருக்கமானவராக உங்களில் நற்பண்பாடுகளுள்ளவர் இருப்பார்.” என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். 3.’அல்லாஹ்வின் அருளினால்தான் நபியே நீர் மென்மையாக நடந்து கொள்கிறீர். கடின சித்தமுள்ளவராக நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு விரண்டோடியிருப்பார்கள். என அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.

இவை இஸ்லாம் நற்பண்பாடுகளை எவ்வளவு தூரம் வலியுறுத்துகின்றது என்பதைக் காட்டுகின்றன. நபியவர்கள் வாழ்ந்த சமூகம் இந்த நற்பண்பாடுகளின் பால் அதிகம் தேவையானவர்களாகவிருந்தார்கள். அந்தவுக்கு அவர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் காணப்பட்டன. இவ்வளவு சீர்கேடுகளிருந்தும் மதுபானம், முத்ஆ திருமணம் போன்றன மதீனாவில்தான் தடை செய்யப்பட்;டன. மாற்றமாக எதைச் சொன்னால் அந்த சமூகத்துக்கு அதை மாற்றிக் கொள்வது அவர்களின் மனங்களுக்குப் பாரமாகவிருக்குமோ அதையே அந்த சமூகத்துக்கு முதலில் பிரச்சாரம் செய்யுமாறு அல்லாஹ் நபியவர்களுக்குப் பணித்தான்.
‘நபியே எது உமக்கு ஏவப்படுகின்றதோ அதை அம்மக்கள் மத்தியில் பகிரங்கமாகத் தெளிவாகச் சொல்லிவிடு. இணைவைப்பவர்களை நீ புறக்கனித்து விடு” என்று அல்லாஹ் கூறினான்.

அல்லாஹ்வை மட்டும்தான் வணங்கவேண்டுமென்பதையே  நபியவர்கள் தனது பிரசாரத்தில் முதன்மைப்படுத்தினார்கள்.

தனது மகன் இப்றாஹீம் மரணித்த போது, நபியவர்களின் மகன் மரணித்ததனால்தான் சூரிய கிரகனம் ஏற்பட்டது என்று மக்களெல்லாம் பேசிய போது மகன் மரணமடைந்த சோகத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் சூரியன், சந்திரன் ஆகியன அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும்  யாருடைய பிறப்புக்காகவும், இறப்புக்காகவும் அவை உதிப்பதோ மறைவதோ இல்லை என்று அந்த சமூகத்திடம் காணப்பட்ட மூடநம்பிக்கைகளை நபியவர்கள் ஒழித்தார்கள்.

ஒரு தடவை நபியவர்களும், நபித்தோழர்களும் சுபஹ் தொழுதுவிட்டு அமர்ந்திருந்த பேது நபித்தோழர்களைப்பார்த்து நபியவர்கள் இன்று ஒருவர் அல்லாஹ்வை நம்பியவராகவும், மற்றொருவர் அல்லாஹ்வை நிராகரித்தவராகவும் காலைப்பொழுதை அடைந்திருக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறியதாகக் கூறினார்கள். யார் அவர்கள் என்று நபித்தோழர்கள் நபியவர்களிடம் வினவிய போது நட்சத்திரங்களினால்தான்; இன்று மழை பொழிந்தது என்று கூறியவர் நட்சத்திரங்களை நம்பி அல்லாஹ்வை மறுத்து விட்டார். அல்லாஹ்வின் நாட்டத்தினால்தான் மழை பொழிந்தது என்று கூறியவர் நட்சத்திரங்களை நிராகரித்து அல்லாஹ்வை நம்பிவிட்டார் என்று அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி அந்த மக்களிடம் நல்ல நம்பிக்கைகளை நபியவர்கள் விதைத்தார்கள்.

நபியவர்களிடம் வந்த ஒருவர் அல்லாஹ்வும் நாடி நீங்களும் நாடினால் என்று சொன்ன போது அல்லாஹ்வோடு என்னை இணையாக ஆக்கிவிட்டாயா என்று கடிந்து அவ்வாறு கூறவேண்டாம் என்று நபியவர்கள் அதை மறுத்து, அல்லாஹ் மட்டும் நாடினால் என்று கூறுவீராக என்று சொன்னார்கள்.

ஆகவே நபியவர்கள் தன் பிரசாரத்தை கொள்கையைச் சொல்வதிலிருந்துதான் ஆரம்பித்தார்கள் என்பதை விளங்க முடிகிறது. நபியவர்கள் காலத்தில் காணப்பட்ட அளவுக்கு இன்றைய சமூகத்தில் மூடநம்பிக்கைகள் இல்லாவிடிலும் இருக்கின்ற மூடநம்பிக்கைகளை மாற்றுவதனால்தான் சரியான சீர்திருத்தத்தை சமூகத்தில் கொண்டு வரமுடியும் என்பதுவே இங்கு குறிப்பிடத்தக்கதாகின்றது.

நபி யூஸ{ப் (அலை) அவர்களின் வரலாற்றைப் பார்க்கும் போது அவர் விபச்சாரம் செய்யவில்லை என்பது அந்த சமூகத்துக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. பொருளாதார அமைச்சரின் மனைவி பலபெண்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு முன்னால் நடந்து போகுமாறு யூஸ{ப் நபியிடம் கூறுகிறாள் அவர் சென்றதும், அவரைப்பார்த்து தம் கைகளை அறுத்துக் கொண்ட அப்பெண்கள் இவர் மனிதரல்ல இவர் ஒரு கன்னியமான வானவர் என்று சொல்கிறார்கள். நான்தான் யூஸ{பை அழைத்தேன் இதன்பின்பும் நான் அழைத்து அவர் வரவில்லையாயின் அவரை சிறையில் தள்ளுவேன் என்று அமைச்சரின் மனைவி சொல்கிறாள். யூஸ{ப் நபி இவர்கள் அழைப்பதை விட சிறையே தனக்குச் சிறந்ததென்று சிறைக்குச் செல்கிறார். அங்கே சிறையில் இருவருக்குப்பிரச்சாரம் செய்கின்ற போது முதலில் கூறியது
‘எனது சிறைத் தோழர்களே பல கடவுட்கள் சிறந்தனவா? அடக்கியாளும் ஏகன் அல்லாஹ் சிறந்தவனா? என்பதுதான்.”

உண்மையில் அங்கு மிகப்பெரும் சமூகச்சீர்கேடு காணப்பட்டது. விபச்சாரத்துக்கு அழைத்த செய்தியை மேடை போட்டு அம்பலப்படுத்தி, அதே மேடையிலேயே மீண்டும் பகிரங்கமாக நபி யூஸ{பை அமைச்சரின் மனைவி விபச்சாரத்துக்கு திரும்பவும் அழைக்கப் போவதாகவும் கூறுகிறாள் இவ்வளவுக்கு சமூகம் சீர்கெட்டிருந்தது. யூஸ{ப் நபி தனது பிரச்சாரத்தில் இதையே மையப்படுத்தியிருக்கலாம் ஆனாலும் அவர் தௌஹீதைத்தான் முதலில் எடுத்துரைத்தார்.

எனவே முஸ்லிம் சமூகத்திலே மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது கொள்கை மாற்றமாகும். அதற்காக பிற துறைகள் பற்றிப் பேசக்கூடாது என்பதல்ல. கொள்கைப் பிரச்சாரத்துக்குப் பின்னால்தான் அவை சொல்லப்பட வேண்டும் என்பதுவே சரியான பார்வையாகின்றது.

ஓரிடத்துக்கு நாம் செல்கிறோம் அங்கே தவறான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அவற்றை முதலில் விளக்காது வேறொன்றை அங்கே நாம் பிரசாரம் செய்வோமானால் அது நபிமார்களின் பிரசார வழிமுறைக்கு முற்றிலும் முறனானதாகும். அல்லாஹ் நபிமார்களின் பிரசாரங்களைப்பற்றிக் கூறும் போது, செய்தான்களைப் புறந்தள்ளி அல்லாஹ்வுக்கு மட்டும் மனிதர்கள் கட்டுப்படவேண்டுமென்பதற்காகத்தான் ஒவ்வொரு சமூகத்துக்கும் தூதரை நாம் அனப்பினோம். என்று கூறுகிறான். நபிமார்கள் தத்தமது சமூகத்துக்கு எதைச் சொன்னார்கள் என்பதைக் கூறும் போது ‘அல்லாஹ்வை வணங்குங்கள் எந்தவொன்றையும் அவனுக்கு இணையாக ஆக்காதீர்கள்” என்று கூறுகிறான். எனவே எவ்வளவுதான் கலாசார சீர்கேடு முஸ்லிம்களிடம் காணப்பட்டாலும்  நாம் பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டியது கொள்கையைச் சொல்வதிலிருந்துதான் என்பதை நாம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து கொள்ள வேண்டும்.

மரணிக்கும் தருவாயிலும் நபியவர்கள் இந்த சமூகத்துக்கு எடுத்துரைத்ததும்
அதனைத்தான். மரணப்படுக்கையிலிருந்து மூச்சுத்திணரத்திணர நபியவர்கள் ‘எனது கப்ரை பெருநாள் கொண்டாடும் இடமாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று கூறினார்கள்.

அதே மரணப்படுக்கையிலேயே ‘யா அல்லாஹ் எனது கப்ரை வணங்கப்படும் ஒரு சிலையாக ஆக்கி விடாதே” என்று பிரார்த்தித்தார்கள்.

‘நபிமார்களின் கப்ருகளைப் பள்ளிகளாக எடுத்தக் கொண்ட யூத, கிறிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று நபித்தோழர்களைப்” பார்த்துக் கூறினார்கள்.

‘மர்யமுடைய மகன் ஈஸாவை கிறித்தவர்கள் அளவு கடந்து புகழ்ந்ததைப் போன்று நீங்கள் என்னை வரம்பு மீறிப் புகழ வேண்டாம்” என்று கூறி உயிரோடுள்ள மகான்களிடம் சென்று பிராத்திப்பதையும் நபியவர்கள் தடுத்தார்கள்.

‘ஹபஸா நாட்டுக்குச் சென்ற வேளை அங்குள்ள தேவாலயங்களில் காணப்பட்ட ஓவியங்களைப்பற்றி நபியவர்களின் மனைவிமார் சிலர் நபியவர்கள் மரணத்தருவாயிலிருந்த போது பேசிக் கொள்வதைக் கேட்ட நபியவர்கள் ‘அவர்கள்தான் படைப்பினங்களிலேயே மிக மோசமானவர்கள். ஒரு நல்ல மனிதர் மரணித்து விட்டால் அவரின் கப்ரிலே கட்டம் எழுப்பி அதிலே அவருடைய உருவப்படத்தை வரைபவர்களே அவர்கள் நீங்கள் அப்படிச் செய்வதை நான் தடுக்கின்றேன்.” என்று எச்சரித்தார்கள்.

ஒருவர் மரணித்தால் அவர் உயிரோடிருந்த கடைசிப் பொழுதுகளில் பேசியவற்றையே மக்கள் பெரிதும் பேசிக்கொள்வார்கள். ஆயிசா (ரழி) அவர்கள் நபியவர்கள் ஏன் தன் வீட்டிலே அடக்கப்பட்டார்கள் என்பது பற்றி நபியவர்களின் மரணத்துக்குப் பின்னால் கூறும் போது, ‘நபியவர்கள் இவ்வளவு எச்சரித்திருக்கா விட்டால் அவரை நாம் வெளியில் அடக்கியிருப்போம். அவ்வாறு அடக்கியிருந்தால் அதை வனக்கஸ்தலமாக மக்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று அஞ்சித்தான் வீட்டுக்குள் அடக்கப்பட்டார்கள்” என்று ஆயிசா (ரழி) கூறினார்கள். எனவே, நபியவர்கள் கடைசித்தருவாயில் எதை வலியுறுத்தினார்களோ அதிலிருந்துதான் பிரசாரம் ஆரம்பிக்கப்பட வேண்டும். தௌஹீத் சகோதரர்கள் எதில் கருத்து முறண்பட்டாலும் இதில் ஒன்றுபடுகிறார்கள் என்பதை மாற்றுக்கருத்துள்ள சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை மையப்படுத்தியே நாம் பிரசாரம் செய்து வருகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts