Friday, April 19, 2024

புரிதலைப் புரிதல்

 “புரிதல்” காலத்தாலும் இயல்புகளாலும் வரையறுக்கப்பட்ட ஒன்று.கருத்துக்களைப் புரிவதில் அவசரப்படும் மனித உள்ளங்கள் மனிதர்களைப் புரிவதில் வேகமற்றதாக இருப்பதும் அது வேறுபாடற்ற இயல்பாக இருப்பதும் ஒவ்வொரு மனித உள்ளங்களிலும் “வேதனைப் படிமங்கள்” என்ற பிறரால் உணர முடியாத ஓரு இடம் உருவாகக் காரணமாகிவிட்டது.

“வேதனைப் படிமங்கள்” இடங்கொள்ளாத மனங்கள் இருக்க முடியாது.அப்படிமங்களை தடயமற்றதாக ஆக்க எடுக்கப்படும் முயற்சிகள் அர்த்தமற்றவை என்பது ஐயமற்றது.ஆனாலும் ஆறுதல்கள் படிமங்களின் வீரியத்தை அதிகப்படுத்துவது அமைதிகாக்க முடியாதவொன்று.

சரியான ஆறுதல்கள் வழங்கத் தெரியாதவர்களின் மௌனமே வேதனைகளுக்கு வழங்கப்படும் மிகப் பெரும் ஆறுதல் என்பதை புரிதல் திறன் குறைந்தவர்கள் உணர்வது குறைவு.

ஏழைகளைப் புரியாத தனவந்தர்கள்,முதுமையைப் புரியாத இளமைகள் ,தாய்மையைப் புரியாத பிள்ளைகள்,குடிமகனைப் புரியாத தலைவர்கள்,பிள்ளையைப் புரியாத தந்தையர்கள் ,இலட்சியங்களை உணராத சமூக வழிகாட்டிகள்,அநாதைகளைப் புரியாத உறவினர்கள் கண்ணீரைப் புரியாத ஆனந்தங்கள் என புரியப்படாத பட்டியல் நீளுவது வேதனைக்குறியது.

இயல்பான புரிதலின்மை தவறு கிடையாது.புரிதலின்மை இயல்பானதென உணர்ந்து அதனால் ஏற்படும் தவறுகளை ஏற்பதும் இடைவெளிகளை நிவர்த்திசெய்வதுமே முதல் கடமையாகும்.உணரப்படாதவர்களின் உணர்வுகளைப் புரிய வைக்க ஆன்மீகத்தின் வகிபங்கு அளப்பெரியதாகும்.

அர்த்தராத்திரியில் சில்லென வீசும் இளந்தென்றலின் குளிரிலிருந்து தன்கால்களை விடுவித்துக்கொள்ள எச்சில்படும் வீதியோரத்தில் சுருண்டு உறங்கும் மேலையாடற்ற ஒரு அநாதைச் சிறுவனின் உணர்வுகளையும் குளிரூட்டியைக் குறைக்க வேலைக்காரனைத் திட்டியழைத்து விட்டு இரட்டைக் கட்டு மெத்தையிலே மெய் மறந்து உறங்கும் தனவந்த உணர்வுகளையும் சரியாகப் புரியும் இறைவனின் ஆன்மீகப் போதனைகளை உள்ளடக்கிய அல்குர்ஆனை நோக்கிய தெம்பான பிரயாணமே புரிதலைத் தேடும் உள்ளங்களுக்கு சிறந்த ஆறுதலாகும்.இதோ அல்லாஹ்வின் அருள்மறை சொல்லும் அழைப்பைச்; செவிமடுங்கள் .புரிதலைப் புரிவீர்கள்.இன்ஷா அல்லாஹ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts