Saturday, April 27, 2024

ஆர்ப்பாட்டம் அனுமதிக்கப்பட்டதா?

ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற காலத்தில் வாழ்கிறோம். எதற்கெடுத்தாலும் உடனே ஆர்ப்பாட்டம் என்று பாதையில் இறங்குகிறார்கள். எனவே, ஆர்ப்பாட்டம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? ஆர்ப்பாட்டங்களின் போது பெண்கள், குழந்தைகளை வீதியில் இறக்கலாமா? என்பன பற்றிய தெளிவை வேண்டி நிற்கிறேன்.

பதில் :

கால நிகழ்வுகளையொட்டி விளக்கப்படுத்த வேண்டிய ஒரு கேள்வி இது. எனவே, சுருக்கமாக ஆர்ப்பாட்டம் பற்றிய ஒரு தெளிவை தர முயற்சிக்கிறேன்.

ஆர்ப்பாட்டங்களுக்கு அரபியில் “முலாஹராத்” என்று சொல்வார்கள். பொதுவாக அரபுலகத்தில் இருந்து கொண்டு பேசப்படக் கூடிய மார்க்கத் தீர்ப்புக்களை எடுத்து நோக்கினால், அவ்வறிஞர்கள் “கூடாது, தடை செய்யப்பட்ட விடயம்” என்று சொல்வதைத் தான் பார்ப்பீர்கள். ஆனால் அதை இன்னும் விரிவாக விளக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், ஆர்ப்பாட்டம் சம்பந்தமான குர்ஆன் வசனங்களோ ஹதீஸ் வசனங்களோ கிடையாது. அதாவது அது “கூடும்” என்பதற்கோ “கூடாது” என்பதற்கோ நேரடியான எந்த குர்ஆன், ஹதீஸ் வசனங்களும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இது ஆரம்ப கால அறிஞர்கள் எதிர்கொள்ளாத ஒரு விடயமாகவும் “ஆர்ப்பாட்டம்” இருக்கிறது. அவர்கள் “குரூஜ்” எனப்படும் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியாளர்களைத் தான் எதிர்கொண்டார்கள். அதனாலேயே, இஸ்லாமிய ஆட்சியாளருக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசியிருக்கிறார்கள். எனவே தான் ஆரம்ப காலம் முதல் “ஆர்ப்பாட்டம்” பற்றிய நேரடியான எந்த செய்தியையும் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

நவீன காலத்தை எடுத்து நோக்கினால் “எதிர்ப்புக்கான ஓர் ஊடகமாக” ஆர்ப்பாட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. “கூடாது” என்ற நேரடியான ஆதாரங்கள் கிடைக்கபெறாததன் காரணமாக, இதன் அடிப்படை கூடும், அனுமதி என்ற நிலையிலேயே பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் சில நிபந்தனைகளுடன் “ஆர்ப்பாட்டத்தினை” கூடும் என்பதாக அனுமதிக்க முடியும். அதாவது, சில விடயங்கள் தவிர்க்கப்பட்டால் அல்லது சில நிபந்தனைகளோடு மேற்கொள்ளப்படுமாயின் அதனை தடை செய்ய முடியாது.

முதலாவது,

ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், இலக்கு பற்றிய விளக்கம் இருக்க வேண்டும். ஏனெனில் வெறுமனே எதிர்ப்பு என்பதில் ஒரு நாளும் எந்த பிரயோசனத்தையும் பெற்றுக் கொள்ள முடியாது. எதிர்க்கின்ற மக்களுக்கு எதற்காக இந்த எதிர்ப்பு என்பது பற்றிய அறிவு இருக்க வேண்டும். அத்தோடு, பின்னால் திரள்கின்ற மக்களுக்கும் எதிர்ப்பது பற்றிய தெளிவு இருக்க வேண்டும். அதனாலேயே ஆர்ப்பாட்டத்தின் நோக்கும் இலக்கும் தெளிவு படுத்தப்படுவது அத்தியாவசியமாகின்றது. அல்லாஹுத் தஆலா குர்ஆனில் “அறிவில்லாத விடயங்களைப் பின் தொடர்ந்து போவது கூடாது” என்று எச்சரிக்கிறான். எனவே, எதற்காக எதிர்க்கிறோம் என்ற நோக்கும் இலக்கும் கட்டாயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இரண்டாவது,

மேற்கத்திய ஆர்ப்பாட்ட முறைமைகளை முன்மாதிரியாகக் கொண்டு ஆர்ப்பாட்ட வழிமுறைகள் அமையப் பெறக் கூடாது. உதாரணமாக, கொடும்பாவி எரிக்கப்படல். ஒரு மனிதனின் உருவத்தை செய்து அதை எரித்து எதிர்ப்பை காட்டும் முறைமையானது, இஸ்லாமிய ஸுன்னா அங்கீகரிக்காதது. கொடும்பாவி செய்வதே பிழையாக இருக்க, ஒரு மனிதனின் உருவத்தை கொடும்பாவியாய் செய்து எரித்து சந்தோசமடைவது மட்டும் அனுமதிக்கப்படுமா என்ன? இது யார் செய்தாலும் தன்னைத் தானே மடத்தனமாக்கிக் கொள்ளும் மூடப் பழக்க வழக்கமே அன்றி வேறில்லை. இது “எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஓர் செயற்பாடு” என்று ஆயிரம் பேர்கள் சொல்லலாம். ஆனால், நாம் இதை இஸ்லாமிய அடிப்படையோடு சிந்திக்க கடமைப்பட்டிருப்பவர்கள். அந்த வகையில் ஒருவரின் உருவத்தில் “பொம்மை” செய்வது பிழையான ஒன்று. ஆர்ப்பாட்டத்தின் நோக்கும் இலக்கும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு, எதிர்க்கப்படுபவர்கள் திருந்தவோ இஸ்லாத்தில் இணையவோ படிக்கவோ மாட்டார்கள் என்ற சிந்தனையோடு எதிர்த்த நபர்களின் உருவங்களும் பொம்மைகளும் எரிக்கப்படுவது ஓர் சிறந்த வழிமுறையல்ல, அதில் எவ்வித பயனும் கிடையாது. மாறாக,  அவர்கள் கொண்டிருக்கும் கொள்கைகளும் கருத்துக்களுமே எதிர்க்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இது மார்க்கத்திற்கு முரணான செயற்பாடாகும்.

மூன்றாவது,

பெண்களும் குழந்தைகளும் ஆர்ப்பாட்டத்தில் இறக்கப்படக் கூடாது. இதை யார் செய்தாலும் முற்றிலும் பிழையானதும்  மார்க்கத்தில் தடை விதிக்கப்பட்ட செயற்பாடாகும். ஜிஹாதைப் பற்றி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகளாரிடத்தில் : “அல்லாஹ்வின் தூதரே, ஆண்கள் ஜிஹாத் செய்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு அவ்வாறில்லையே!” எனக் கேட்டார்கள்

அதற்கு நபியவர்கள் “பெண்களுக்குரிய ஜிஹாத், ஹஜ் ஆகும்” என்றார்கள். (புகாரி:2875)

இஸ்லாத்தின் உச்சகட்ட போராட்டம் என்பது ஜிஹாத். அந்த ஜிஹாதில் கூட “பெண்களாகிய நீங்களும் வாருங்கள்” என்று சொல்லப்படவில்லை. ஆனால், ஜிஹாதுக்கும் பெண்கள் அழைத்து வரப்பட்டார்கள் என்று ஆதாரங்களைச் சொல்லி இதை ஞாயப்படுத் முனையலாம். பெண்கள் ஜிஹாதிற்கு வந்தார்கள் என்றால் எவ்வாறு எதற்காக அவர்கள் வந்தார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். யார் யாரெல்லாம் ஜிஹாத் களத்திற்குப் போராளிகளாகப் போவார்களோ அவர்களது மனைவிமார்களும் கூடவே போவார்கள். ஆனால் அவர்கள் போராட்ட களத்தில் இறக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கென்று தனியான முகாம் அமைத்துக் கொடுக்கப்பட்டு அதில் அப்பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

ஒரு முறை அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓடி வந்து நபிகளாரிடத்தில் “யா ரஸுலுல்லாஹ் (தனது மனைவி) உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹு கையில் கத்தி வைத்திருக்கிறார்கள்” என்று முறையிடுகிறார்கள். நபிகளாரும் அதற்கான காரணத்தை வினவ, அதற்கு உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “எதிரிகள் எல்லை மீறி பெண்கள் இருக்கும் முகாமுக்குள் வந்தால் அவர்களை தாக்குவதற்கு வைத்திருக்கிறேன்” என்கிறார்கள்.(முஸ்லிம்-1809)

பெண்கள் ஒவ்வொரு யுத்த களத்திலும் வழமையாக இவ்வாறு ஆயுதம் வைத்திருப்பார்களேயானால் இந்தக் கேள்வி நபிகளாரிடத்திலிருந்து வந்திருக்காது. அதனாலேயே நபிகளாரும் ஆயுதம் வைத்திருப்பதன் காரணத்தை வினவினார்கள். பெண்கள் தமது சுய பாதுகாப்புக்காக தமது முகாமில் ஆயுதம் வைத்திருந்தார்கள் என்பதையே இச்சம்பவத்தினூடாக பெற முடிகின்றது. எனவே, பெண்கள் , குழந்தைகள் ஆர்ப்பாட்ட களத்தில் இறக்கப்படுவது நேரடியாக மார்க்கம் தடுத்த ஒன்றாகும்.

நான்காவது,

அர்த்தமற்ற சுலோகங்களை எழுதி வைத்துக் கொண்டு கத்துவது.. எதிர்ப்பை பறைசாட்டும் ஓர் முறையாக சொல்லப்படுகிறது. எதிர்க்கின்ற நபரை நையாண்டி செய்து கேவலமாக வாய் கிழிய கத்துவதென்பது இஸ்லாம் வரவேற்கும் விடயமல்ல. ஆனால், ஒரு செய்தியை கொண்டு சேர்க்கின்ற சந்தர்ப்பத்தில் பதாகைகளில் அவற்றை சுருக்கமாக எழுதிவைத்து மக்கள் பார்வைக்கு விடலாம். அதாவது, நமது செய்திகளை மக்கள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அர்த்தபூர்வமாக பதாகைகளில் சுலோகங்களாக பகிரங்கப்படுத்தலாம்.

இந்த அடிப்படையில் பாதையில் செல்லுகின்ற மக்களுக்கும் வாகனங்களுக்கும் குந்தகம் விளைவிக்காமலும் போக்குவரத்தைக் குலைக்கும் வகையில் அமையாமலும் ஆர்ப்பாட்டங்கள் அமையப்பெருமாயின் மார்க்கத்தில் அது “தடை செய்யப்பட்டதாக” கருதப்பட மாட்டாது. ஏனெனில் நேரடியாக குர்ஆனோ ஹதீஸோ தடை செய்யாத ஒரு விடயமாக “ஆர்ப்பாட்டங்கள்” இருக்கின்ற காரணத்தால் சில நிபந்தனைகளோடு அவற்றை செய்வதற்குரிய அனுமதியைப் பெற முடியும். இது ஆர்ப்பாட்டங்கள் பற்றிய ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு பகுதி என்னவென்றால், இஸ்லாமிய ஆட்சியில் இது தடுக்கப்பட்ட ஒன்றாகும். இஸ்லாமிய ஆட்சியின் அடிப்படையே இஸ்லாத்தைக் கொண்டு அமைக்கப்பெற்றது. அதாவது நீதி, நேர்மை என்பன இஸ்லாமிய வழிகாட்டலில் நிலைநாட்டப்படக் கூடிய ஆட்சியமைப்பு. இந்த ஆட்சியில் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் தீர்ப்புக்கள் தான் அடிப்படையாக அமையப்பெற்றிருக்கும். இவ்வாறு அமையபெற்ற ஆட்சியமைப்பில், அவ்வரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது கூடாத ஒரு காரியமாகும். நபிகள் நாயகம் அவர்கள் அதனை நேரடியாகவே கூடியிருக்கிறார்கள் “தொழுகை நிலை நாட்டப்படும் காலமெல்லாம், ஷிர்க் செய்யப்படாதவரைக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளம்பக் கூடாது. அவர்களுக்கு நன்மையை செய்வதாகவோ அவர்களது தீமையைத் தடுப்பதாகவோ இருந்தால் இரகசியமாக செய்ய வேண்டும்.”(அஸ்ஸுன்னா-1906) அதை விடுத்து பகிரங்கமாக அவற்றை செய்யக் கூடாது.

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் என்று சொல்லப்படுகிற நாட்டில் மார்க்கத்திற்கு முரணான எத்தனையோ விடயங்கள் நடகின்றனவே, அவற்றைப் பார்த்துக் கொண்டும் தடுக்காமல் அறிஞர்கள் மௌனம் காக்கறார்களே என்று சிலர் வாதிடுகிறார்கள். இவர்களது மனப்பதிவுகள் எவ்வாறென்றால் யாரெல்லாம் பகிரங்கமாக எதிர்க்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் அறிஞர்கள் என்று தப்பாக முடிவு செய்திருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஒழுக்க ரீதியான முரண்பாடு உருவாயிற்று. இதை பக்கத்து வீட்டில் உள்ள ஆலிமிடம் முறையிட்டு கொஞ்சம் அறிவுரை கூறுங்கள் என்று சொல்ல, அவரும் அவர்களை அழைத்து கண்டித்து அறிவுரை வழங்குகிறார். ஆனால், அவர்கள் இருவரது பிரச்சினையும் ஊரில் சிலருக்கு தெரிய வர, அவர்களோ பக்கத்து வீட்டில் இருந்தும் அந்த ஆலிம் இவர்கள் இருவருக்கும் ஓர் அறிவுரையேனும் வழங்காமல் இருக்கிறாரே என்று சொல்கிறார்கள். உடனே, அந்த ஆலிம் அவ்வாறான ஒரு முரண்பாடு அவ்விருவருக்கும் இருந்தது உணமைதான். அப்போது, அதில் நான் தலையிட்டுத்தான் தீர்த்து வைத்தேன் என்று மேடை போட்டு பகிரங்கப்படுத்துகிறார் என்றால்,, அந்த கணவன் மனைவியுடைய வாழ்க்கை அத்தோடு முறிவில் தான் முடிவுறும். அதன் போது, அது போன்ற ஆலிம்கள் மௌனமாக இருந்துவிட்டுப் போவதுதான் அந்த இருவரது வாழ்க்கை முறிவுராமல் இருப்பதற்கான சிறந்த வழியாகும்.

அதே போன்றுதான் ஓர் முஸ்லிம் நாட்டின் தலைவர் தவறு விடுகிற போது கூடவே இருக்கின்ற அறிஞர்கள் மௌனம் காப்பதையும் பார்க்க வேண்டும். இஸ்லாமிய ஆட்சியில் நன்மை, தீமை பற்றிய சுட்டிக் காட்டல் என்பது ஆட்சியாளர்களிடத்தில் தனிப்பட்டரீதியில் இரகசியமாக இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதரவர்கள் மனைவியரிடத்தில் சொல்கிறார்கள் “ நீங்கள் வீட்டில் தவிர பகைமையை காட்டக் கூடாது” என்பதாக. இதன் விளக்கம் யாதெனில், வீதியோரங்களில் பகைமை பாராட்டி சச்சரவுகளில் ஈடுபட்ட பின்னால் அவற்றைத் தீர்த்துவைப்பதென்பதே பெரும் போராட்டமாக அமைந்துவிடும். இதே போன்று தான் ஆட்சியாளர்களிடம் நன்மை, தீமை பற்றிய எத்திவைப்பும் தனிப்பட்டரீதியில் நடைபெற வேண்டும். இல்லையெனில், அவர்களது கெளரவம், கர்வம் போன்ற பலஹீனங்கள் அவர்களது செயற்பாட்டில் தாக்கம் செலுத்தலாம்.

உதாரணமாக, வட்ஸப் போன்ற சமூக தொடர்பூடகங்களில் நிறைய குழுமங்கள் அமைக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒருவர் விடக் கூடிய தவறை பகிரங்கமாக பகிர்ந்து குற்றத்தை தீர்க்கத்தான் அநேகர் விரும்புகிறார்கள். ஆனால், அவரது தவறை தனிப்பட்ட முறையில் எத்திவைப்பதில் காணக் கூடிய வெற்றியை பகிரங்கப்படுத்துகின்ற போது காண முடியாமலேயே போகிறது. இது போன்ற சிறிய நிகழ்வுகளில் ஏற்படுகின்ற விளைவுகளே இவ்வாறிருக்கமாயின் ஆட்சிபோன்ற விடயங்களில் இதை விட அவதானமாக நடக்க வேண்டும். எனவேதான், நபிகளார் இஸ்லாமிய ஆட்சியாளர் விடயத்தில் அவரது தவறுகளை எத்திவைக்க “பகிரங்கமான நடவடிக்கைகளை தடை செய்திருக்கிறார்கள்”.

இறுதியாக,,

ஆர்ப்பாட்டங்களால் பலனில்லை, பிரயோசனமில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உதாரணமாக, நபிகளாருக்கு எதிராகத்தான் “Innocence of Muslims’” என்ற கேடுகெட்ட திரைப்படத்தை இயக்கினார்கள். கேடுகெட்ட சிந்தனையுள்ளவர்களுக்குத்தான் நல்ல வரலாறையும் கெட்ட விதத்தில் யோசிக்க முடியும். அப்படத்தை மேற்குலகில் வெளியிட்டார்கள். அத்தோடு மாத்திரம் நிற்காது அரபு மொழியில் மொழிபெயர்த்து எகிப்திலும் வெளியிட்டார்கள். இதன் போதுதான் அப்படம் பெரும் சர்ச்சையை முஸ்லிம்கள் மத்தியில் உண்டாக்கியது. இப்படத்தை எதிர்க்க சில வழிகளை முஸ்லிம்கள் கையாண்டார்கள். ஒருசிலர் வீதியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். இதன் மூலம் ஆர்ப்பாட்டத்தின் முதல் நோக்கமாகிய மக்கள் மயப்படுத்தப்படும் விடயம் அரங்கேறியது. நபிகளாருக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் திரைப்படம் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் மூலைமுடுக்கெல்லாம் உள்ள மக்களுக்கு அறிய வந்தது. இங்கிலாந்தில் இருந்த இன்னொரு தரப்பினர், நபிகளாரின் வாழ்க்கை சரிதத்தை வீதி வீதியாக நின்று புத்தகங்களாகவும் குறுந்தட்டுக்கலாகவும் இலவசமாக விநியோகித்தார்கள். இவைகளும் எதிர்ப்பை பறைசாட்டக் கூடிய வழிமுறைகளாகும். எனவே, ஆர்ப்பாட்டங்கள் சில நிபந்தனைகளோடு செய்யப்படுமிடத்து இஸ்லாத்தில் அவை “தடுக்கப்பட்டது” என்ற வரையறைக்குள் வராது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

(உரை வடிவம்)

மௌலவி முஜாஹித் பின் ரஸீன்.

எழுத்து வடிவம் :

அபூ ஹமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts