Post by mujahidsrilanki 8 June 2011
அண்மையில் தவ்ஹீத் பிரச்சாரத்தை பல இஸ்லாமிய இயக்கங்கள் தைரியமாகவும் வீரியமாகவும் பல்லூடகங்கள் மூலமாக பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கொண்டு செல்வதையும் அந்த தவ்ஹீத் பிரச்சாரத்திற்கும் அல்லாஹ்வின் அருள் என்றும் இருப்பதையும் கண்டுகொண்ட பல இயக்கங்கள் அதைத் தங்கள் வழியாகக் கொள்வதை விட்டுவிட்டு வன்முறைகளையும் வன்னுரைகளையும் கையாள்வதைப் பார்க்கிறோம். அவ்வகையில்உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அல்ஹஸனாத்தை தவ்ஹீத் பிரச்சாரகர்களுக்கு எதிரான போர்ப்பிரகடனத்திற்கு பயன்படுத்தியிருப்பதை பார்த்து வருகிறோம். அது போன்றுஅஷ்ஷெய்க் இஸ்மத் அலி நளீமி அவர்களும் ஜமாஅதே இஸ்லாமியின் இலங்கை வரலாற்றை தூய்மை மிக்க ஒன்றாக காட்டவும் தவ்ஹீத் பிரச்சாரகர்களை ஜமாஅதே இஸ்லாமியின் வழமையான நளினமான நடை முறை தவறி ரசிகர் மன்றம் என்றும் நுனிப்புல் மேய்பவர்கள் என்றும் விமரிசிக்க ஆரம்பித்திருப்பதையும் பர்த்து வருகிறோம்.
அதனால்….…………
நாமும் எமது தவ்ஹீத் பிரச்சாரத்தை தவறாக சித்தரிக்க முற்படும் ஜமாஅதே இஸ்லாமியின் தலைமைக்கும் பிரச்சாரகர்களுக்கும் எதிரான ஓர் அறிவியில் போர்ப் பிரகடனம் செய்கிறோம். இன்சா அல்லாஹ் தவ்ஹீத் பிரச்சாரத்தை எதிர்க்காத ஜமாஅத்தே இஸ்லாமியின் நடுநிலையான எந்த அறிஞர்களையும் இந்த விமரிசனம் குறிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதன் விளைவை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமைகள் வெகுவிரைவில் உணரும் என்பதை சொல்லிக் கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.
ஒரு இயக்கத்தின் கடந்த கால வரலாற்றில் சில தவறுகள் இருப்பதும் அவைகளில் சிலவை பாரதூரமாக அல்லது கொள்கைத் தெளிவற்று இருப்பதும் இயல்பானதே. காலப்போக்கிலேயே மனிதன் கற்றுக்கொள்கிறான். ஆனால் அதை விடுத்து இஸ்லாத்தின் தூய்மை போன்று இயக்கமும் வரலாற்றில் என்றும் தூய்மையாகவே இருந்தது என்று பேசுவது தவறுகளை ஏற்கும் தன்மையில்லாத போலிகளுக்கே உறிய பண்பு. என்பதனாலேயே இந்த வரலாற்றை எழுத வேண்டிய அவசியம் எழுகிறது.
கொள்கை உறுதியோ கொள்கைத்தெளிவோ இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் வரலாற்றில் என்றும் இருந்ததில்லை. பிற இயக்கங்களின் தவறுகளை சுட்டிக்காட்டி விமிரிசிக்கும் கருத்துவளம் இன்மையால் பிற இயக்கங்களை சதிகளால் பிரித்தாளும் வழிமுறையையே தன் வரலாறாகக் கொண்டிருந்தது என்பது அதன் நகர்வுகளை அன்றிலிருந்து இன்று வரை அவதானிக்கும் யாரும் அறிவர்.
எனவே முதல் கட்டமாக அஷ்ஷெய்க் இஸ்மத் அலி நளீமி : “இந்த வகையில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அதன் கொள்கை, இலக்கு, சிந்தனைகள் என்னவென்பதை ஆரம்ப காலம் முதல் மிகத்தெளிவாக விளங்கியிருந்தது.அத்தகைய விளக்கம் இருந்ததன் காரணமாகவே காலத்திற்குக்காலம் வரும் அலைகளுக்கும் தனிப்பட்ட சிலரின் விருப்பு வெறுப்புக்களுக்கும் உட்படாது இயக்கம் அறுபது வருடங்களைத் தாண்டி தடம்புரளாது நிலைத்து நிற்கின்றது. (அல்ஹம்துலில்லாஹ்)“ என்று சொல்வதைப் போன்று இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் உண்மை வரலாறு இருந்ததா? என்பதை இங்கே தெளிவுபடுத்தினால் பல உண்மைகள் அறியதாவர்களுக்கு புலப்படும். இதை சொல்ல நான் முற்படும்போதேஜமாஅத்தின் பழைய தலைமைகள் முகங்குனிவதை என்னால் உணர முடிகிறது. அந்த அறிஞர்கள் யாரும் என்னை தவறாக எடுக்க வேண்டாம் அவர்களை அவமானப்படுத்துவது எனது நோக்கமல்ல. உண்மையை விளங்கப்படுத்துவதும் களங்கமற்ற இயக்கம்போன்று தம்மைக் காட்ட முற்பட்ட உங்களது சில வழிகாட்டிகளுமே இதற்குக் காரணம் என்பதை சற்று புரிந்து கொண்டால் போதுமானது.
ஆனால் ஜமாஅதே இஸ்லாமியின் கொள்கை ஸ்தீரனமற்ற வரலாற்றை அந்த ஜமாஅத்தின் வயதை விடக் குறைந்த நானோ உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரோ எழுதுவதை விட அந்த ஜமாஅத்தின் வயதை விடக் கூடிய ஒருவர் எழுதுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதனால் ரஸீன் இப்னு மஃரூப் அவர்கள் தொகுத்துத் தந்த கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன். இந்த வரலாற்றுச் செய்திகளில் எந்த விதத் தவறுகள் இருந்தாலும் சுட்டிக்காட்டலாம் தாழ்மையோடு திருத்திக்கொள்வோம்.
ரஸீன் எனது தந்தை. 14 வயது முதல் மார்க்க ரீதியான இயக்கங்களோடு நெருங்கிப் பழகியவர். ஜமாஅதே இஸ்லாமியின் பிறப்பிடமான கொழும்பில் பிறந்தவர். ஜமாஅதே இஸ்லாமியின் ஆரம்ப காலத்தில் அதனை விட செல்வாக்கு செலுத்திய மஜ்லிஸே இஸ்லாமியின்(1963) அங்கத்தவர்களிலும் அதை வழிநடத்தியவர்களிலும் ஒருவர். ஜமாஅதே இஸ்லாமியின் குரலாக இயங்கும் அல்ஹஸனாத் என்ற சஞ்சிகை இல்லாத காலத்தில் ஜமாஅத் செய்திகள் இடம்பெற்ற மஜ்லிஸே இஸ்லாமி என்ற சமூக இயக்கத்தின் ‘புதுமைக் குரல்’ சஞ்சிகையின் நிர்வாகிகளில் ஒருவர் என்பதானால் ஜமாஅத்தின் தலைமைகளோடு உறவாட பல நிகழ்வுகளோடு வாழ சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்திருந்தது. ஜமாஅத்தின் கொள்கையற்ற பிரித்தாளும் வரலாற்றைக் கண்டவர். இது அவர் பற்றிய ஒரு சுருக்கக் குறிப்பு.என் தந்தையின் கட்டுரைக்கு தெவையான தகவல்களைச் சேர்த்து எனது எழுத்து நடையிலேயே நான் இங்கு பதிவு செய்கிறேன்.
———————————————————————————————————————————–
بسم الله الرحمن الرحيم
{وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (148) } [البقرة: 148]
2:148. ஓவ்வொரு வருக்கும் ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.
{إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَإِذْ أَنْتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى (32)} [النجم: 32…………..]
53:32. “………………. நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் – எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் – யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான். “
ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகர் ஜெய்லானி ஸாஹிப்(B.A)(அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக) ஒரு மாணிக்க வியாபாரி மார்க்கத்தில் ஆழ்ந்த விளக்கம் உள்ளவரல்ல.
இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இவரது காலத்தில் அதிகமான இந்தியா வம்சாவளியினர் ஜமாஅத்தின் அங்கத்தவர்களாய் இருந்துள்ளனர். அவர்களின் மிகப்பெரும் வியாபரமாக பீடி, புடவை போன்றவைகள் இருந்தன. அவர்களது இன்று சார்ந்துள்ள இக்வானுல் முஸ்லிமீனிற்கோ ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற இயக்கங்களுக்கோ உள்ள ‘தாங்கள் சரிகாணும் கொள்கையைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கைப்பிடிப்போடு உருவாகிய பின்னணி இலங்கை ஜமாஅதே இஸ்லாமியிற்கு இருக்கவில்லை. அப்துல் ஹமீத் பாகவியின் தமிழ்த் தர்ஜமாவை விற்கும் நோக்கில் இலங்கை வந்த ஜெய்லானி ஸாஹிப் 1954இல் ஜமாஅதே இஸ்லாமி என்று பெயர் சூட்டி தன் குர்ஆன் வகுப்புக்களை ஆரம்பித்தார். அரபு மொழியில் சிறந்த அறிவுடன் இவர் இருக்கவில்லை. குர்ஆன் விளக்க வகுப்புக்களை இவர் நடத்தினார் என்றால் அவர் ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகரும் தலைவரும் என்றால் அன்றைய அதன் அங்கத்தவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை சிந்தனை செய்து பாருங்கள். அரபு தெரியாத ஒருவர் தான் தெரிந்த விடயங்களை விளங்கப்படுத்துவதை நாம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவர்தான் அந்த இயக்கத்தை ஸ்தாபித்தார் என்றால் அந்த இயக்கத்தின் ஆரம்ப நிலைபற்றி புகழ்வதை விட ஒரு அறியாமை கிடையாது. பொதுவாக நமது நாட்டில் உள்ள அதிகமான வழிதவறிய இயக்கங்களும் இந்தியா அல்லது பாக்கிஸ்தானிலிருந்து உருவானவையே.அதன் பிரச்சாரத்திற்கும் அரபுலகிற்கும் சம்பந்தம் இருக்காது. காதியானி இயக்கம், தப்லீக் ஜமாஅத், ஏத்தாளை ஜமாஅதுத் தக்பீர் இவற்றிற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதற்கான காரணம் கொள்கைத் தெளிவற்றவர்களால் சிந்தனை பரப்பப்பட்டதே. அவ்வகையில் ஜமாஅதே இஸ்லாமி இந்தியாவிலிருந்து வந்ததே. இந்தியாவில் இருந்து கொண்டு வந்த தர்ஜமாவை அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பாக ஜெய்லானி ஸாஹிப்(B.A) ஜமாஅதே இஸ்லாமியை உருவாக்கினார்.அவரளவில் தமிழ்த் தர்ஜமா அறிமுகம் என்பது அன்று மிக மிக சிறந்த ஒரு சேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. ஆனால் பெரிய கொள்கைப் பின்னணி எதுவம் ஜமாஅதே இஸ்லாமியிற்கு இருக்கவில்லை என்பதை மற்றும் யாரும் மறுக்க முடியாது.
தான் உருவாக்கிய ஜமாஅத்தின் பிரச்சாரத்திற்காக ‘அருள் ஜோதி’ என்ற சஞ்சிகையை ஜெய்லானி ஸாஹிப் அவர்கள் வெளியிட்டு வந்தார்கள். தொடர்ந்து வியாழன் பின்னேரமும் குர்ஆன் வகுப்பு நடத்திவந்தார். கொள்கையுள்ள எந்த இயக்கத்தின் சஞ்சிகையும் கொள்கையைப் பிரதிபலிக்கும். ஆனால் ஜமாஅதே இஸ்லாமியின் எந்த சஞ்சிகையின் பெயர்களும் சமரசமாகவோ அருள்ஜோதியாகவோ ஹஸனாத்தாகவோ இருக்குமே தவிர உண்மை உதயமாகவோ, ஏகத்துவமாகவோ, சத்தியக் குரலாகவோ, அழைப்பாகவோ, நேர்வழியாகவோ இருக்காது என்பதை அதன் ஆரம்பமே எடுத்துக் காட்டுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஜெய்லானி ஸாஹிப் அவர்கள் அருள் ஜோதியோடு ஜமாஅத்தை விட்டு வெளியேறியதுதான்.
ஜமாஅதே இஸ்லாமியின் கொள்கையிலிருந்து தடம்புரண்டு ஜமாஅதே இஸ்லாமியைஎதிர்த்த ஜமாஅதே இஸ்லாமி ஸ்தாபகர் ஜைலானி ஸாஹிப்
ஜெய்லானி ஸாஹிப் ஜமாஅதே இஸ்லாமியின் தலைவராக இரு வருடங்கள் கடமை புரிந்தார். இந்த இடத்தில் முக்கிய குறிப்பொன்றைப் பதிய வேண்டும். உலகிலே இஸ்லாத்தில் தூய்மையான தோற்றத்தையே மாசுபடுத்திய சூபித்துவ அமைப்புக்ளான தரீக்காக்கள் செல்வாக்கே இலங்கையில் அதிகமாக இருந்தன. மார்க்கத்தை சரிவரப் புரிந்த சிறந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையிலேயே காணப்பட்டார்கள். இஸ்லாத்தின் உண்மையான தூய்மையான வடிவத்தை பிரச்சாரம் செய்ய இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் இயக்கம் ஜம்இய்யது அன்ஸாரிஸ்ஸுன்னா அல் முஹம்மதீயா என்ற பெயரில் 1940 ன் கடைசியில் பரகஹதெனியாவில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாகும். ஜமாஅதே இஸ்லாமியின் இலங்கை ஸ்தாபகர் இந்தியாவைச் சேர்ந்தவர். ஆனால் தவ்ஹீத் பிரச்சாரத்தை இயக்க ரீதியாக செயல்பாட்டினூடாக முன்வைக்க களமிறங்கியவர் இலங்கையையும் அந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஊரையும் சேர்ந்தவர் என்பது இலங்கையின் தவ்ஹீத் பிரச்சார வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.
அது மாத்திரமல்ல ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகர் அரபு மொழியை முறையாகக் கற்றவரோ மார்க்க அறிஞரோ மௌலவியோ அல்ல. ஆனால் ஜம்இய்யது அன்ஸாரிஸ் ஸுன்னதுல் முஹம்மதீயாவினூடாக தவ்ஹீத் பிரச்சாரத்தை ஆரம்பித்த அப்துல் ஹமீத்பக்ரி(அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக) அறிவுத் தாகத்தாலும் கொள்கைத் தாகத்தாலும் அல்லலுற்றவர். ஆரம்பித்தில் 1920களில் காலிக்கோட்டை ஜிப்ரியா அரபுக்கலாசாலையிலும் பின்னர் பாடத்திட்டத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் இந்தியாவில்பொதக்குடி அந்நூறுல் முஹம்மதியா அரபுக் கலாசாலையிலும் அங்கும் பாடங்கள் சிர்க்கைப் போதிக்கும் வகையில் இருந்ததால் அதிலிருந்து விலகி டில்லியில் ஜாமிஆ தாரிஸ்லாமில்தன் கல்வியை கற்றுப் பூர்த்தி செய்து இலங்கை திரும்பினார். என்றாலும் அறிவுத் தாகம் காரணமாக மறுபடி இந்தியா பாகிஸ்தான் வழியாக ஸஊதி அரேபியா சென்று 1.அப்துல் அஸீஸ் பின் பாஸ் , 2.முஹம்மத் அலி ஹரகான், 3.இப்ராஹீம் பின் அப்துல் மலிக்,4.அப்துல் லதீப் ஆலுஷெய்க் போன்ற அறிஞர்களிடம் சுமார் 9 வருடங்களுக்கு மேலாக மார்க்க அறிவைத் தேடிய பின் இலங்கை வந்து ஏகத்துவப் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். மரணிக்கும் வரை அவரே தலைவராக இருந்தார். 1955 இல் உண்மை உதயம் என்ற சஞ்சிகையை ஆரம்பித்தார். இன்றுவரை அந்த இயக்கத்தின் சஞ்சிகை அதுதான். அவர் எழுதிய அரபு நூல்களில் ஒன்றுதான் ‘அஸ்ஸித்குல் ஹக் அலத் தஹ்ரீபாதில் காதியானியா’ தன் ஏகத்துவப் பிரச்சார இயக்கத்தை வழி நடத்த அறிஞர்களை உருவாக்கும் நோக்கில் பலரை ஸஊதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்று படிக்கவைத்தார். அப்படிக் கற்று மதீனாப் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வந்தவர்தான் அபூபக்ர் ஸித்தீக் மதனி ஜம்இய்யாவின் இரண்டாவது தலைவர்.இறுதியில் அப்துல் ஹமீத் பக்ரியவர்கள் 1976 இல் மக்கா மண்ணிலேயே மரணமானார். இஸ்லாத்தின் தாயகத்தோடும் நபிகளார் பிறந்த மண்ணோடும் இதயத்திற்கு ஈர்ப்பு இருப்பது இயல்பே.(இவரைப் பற்றி மேலதிக தகவல்களைக் காண الاخبار لما لسريلنكا من الأخبار என்ற எனது கட்டுரையைப் பார்வையிடவும்-முஜாஹித்).60 வருடங்களாக இரு தலைவர்களே. 60 வருடங்களாக ஒரு சஞ்சிகையே. சொல்லுங்கள் ஜமாஅதே இஸ்லாமி சகோதரர்களே இயக்க நிர்வாகம் பற்றிப் பேச நீங்கள் தகுதியானவர்களா நாம் தகுதியானவர்களா?. ஆனாலும் ஒரு காலமும் இயக்கத் தூய்மையை நாம் பேச மாட்டோம் அது ஜாஹிலிய்யத் இஸ்லாம் அழித்தொழித்த பண்பு.
விடயத்திற்கு வருகிறேன். அப்துல் ஹமீத் பக்ரியின் பிரச்சாரம் கொழும்பை குறைந்த அளவிலேயே எட்டியது. 1970களில் மௌலவி நிஸார் குவ்வதி(அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக) அவர்கள் மூலம் கொழும்பில் தவ்ஹீத் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு இன்றுவரைக்கும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரேயே சமூகத்தில் நுழைந்திருந்த மூட நம்பிக்கைகளையும் மத்ஹப் வெறியையும் பித்அத்களையும் தமது குர்ஆன் வகுப்புக்களிலே ஜெய்லானி ஸாஹிப் அவர்கள் கண்டித்தார். எதிர்த்தார். ஜெய்லானி ஸாஹிபின் எல்லாக் குர்ஆன் வகுப்புக்களிலும் பொதுவாக சிர்க் பித்அத் பற்றிய கேள்விகள் காணப்படும். அனைத்திற்கும் முகம் சுலிக்காமல் பதில் அளிப்பார். அவரது குர்ஆன் பக்கத்தை நோக்கிய அழைப்பும் மார்க்கத்தின் கொள்கைகளுக்கு முரணான எதிர்ப்புமே கொழும்பில் பலரை தூய்மையான இஸ்லாத்தைப் படிக்கத் தூண்டியது.
லாஇலாஹ இல்லலாஹ் என்ற கலிமாவிற்கு ஸையித் குதுப் அவர்கள் அளித்தி விளக்கம் பற்றிய அறிவையோ ‘இலாஹ், தீன், ரப்பு, இபாதா’ என்ற நான்கு சொல்லாடல்களுக்கும் மௌலானா மௌதூதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கொடுத்த புதுவிளக்கங்கள் பற்றிய அடிப்படைகளையோ ஜெய்லானி ஸாஹிப் வலியுறுத்தவும் இல்லை பிரச்சாரம் செய்யவும் இல்லை.
சுருக்கமாகச் சொல்வதென்றால் குர்ஆனை விளங்கும் ஒரு சமுதாயமாக இலங்கை முஸ்லிம்களை மாற்றுதல், ஷிர்க் மற்றும் பித் அத்கள் களிலிருந்து மக்களை மீட்டெடுத்தல் போன்றவைகளே கலாநிதி சுக்ரி, உஸ்தாத் அகார், உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் போன்ற இக்வானுல் முஸ்லிமீனைச் சேர்ந்தவர்கள் இல்லாத அன்றைய ஜமாஅதே இஸ்லாமியை வழிநடாத்திய ஜெய்லானி ஸாஹிபின் பிரச்சாரமாக இருந்தது.
சிறிது காலத்திலேயே அமைப்பின் ஸ்தாபகரும் பிரச்சாரகருமான ஜெய்லானி ஸாஹிபுடன் சில நிர்வாக முரண்பாடுகள் ஏற்பட்டதனால் தலைமைப்பதவியிலிருந்தும் ஜமாஅத்திலிருந்தும் ஜெய்லானி ஸாஹிப் அவர்கள் வெளியேறி தனியாக வகுப்புக்களை நடத்திவந்தார். வெளியேறும் போது அருள் ஜோதி சஞ்சிகை வெளியீட்டுறிமையையும் தன்னகமாக்கிக் கொண்டார். புரிகிறதா ஜமாஅதே இஸ்லாமியின் நிர்வாகமும் திறமையும்!!!!. அன்புள்ள ஜமாஅதே இஸ்லாமி சகோதரர்களே. உண்மையில் இந்த நிகழ்வு ஒரு ஜமாஅத்தின் ஆரம்ப கட்டத்திற்கு ஒரு பிரச்சனையே கிடையாது. ஆனால் இயக்கத் தூய்மை பேசி தம்பட்டம் அடித்தால் இதுவே மிகப் பெரும் பிரச்சனையாகிவிடும்.
ஜெய்லானி ஸாஹிபின் தடம்புரலலின் பின் (எனது ஞாபகப்படி) மௌலவி தாஸிம் பஹ்ஜி நத்வி(அப்பொழுது அஸ்ஹரியல்ல) தலைவரானார். ஜமாஅத்தின் குரலாக ஒலிக்க ‘வழிகாட்டி’என்ற சஞ்சிகையை துவங்கினார்.
ஜமாஅதே இஸ்லாமியின் கொள்கையிலிருந்து தடம்புரண்டு ஜமாஅதே இஸ்லாமியை எதிர்த்து ‘தீனுல் இஸ்லாம்’ என்ற புது இயக்கம் உருவாக்கிய ஜமாஅதே இஸ்லாமியின் 2வது தலைவர் தாஸிம் அஸ்ஹரி
இலங்கையின் கல்விமான்களில் தாஸிம் அஸ்ஹரியும் ஒருவர் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஜமாஅத்தின் இரண்டாவது தலைவராக அவர் இருந்த நேரத்தில் இன்றுள்ள அளவில் தவ்ஹீத் பிரச்சாரத்தில் ஈடுபாடுகாட்டாது விட்டாலும் தவ்ஹீத் பிரச்சாரமே அவரது மூச்சாக இருந்தது என்பதற்கு ஸாஹிரா கொலஜிலே அவர் நடத்தி வந்த குர்ஆன் வகுப்புக்கள் சாட்சி. இவர் பிற்காலத்தில் 1960 தொடக்கம் 1980 வரை இயங்கிய பலகத்துறையின் அன்றைய தவ்ஹீத் பிரச்சார அமைப்பான இக்வதுல் இஸ்லாமில் மிகப்பெரிய பங்களிப்புக்களைச் செய்தார். இவர் மீது அளப்பெரிய மரியாதை வைத்திருந்தாலும் தவ்ஹீத்வாதி என்பதைத் தெளிவாக தெரிந்த பலகத்துறை பெரியபள்ளி நிர்வாகம் ஒரு முறை இவரது பயானைத் தடை செய்து ஒரு அறிவிப்பை நோடிஸ்போடில் போட்டது. அன்று பள்ளிக்கு வந்த அவர் இந்த அறிவிப்பை வாசித்தார். இன்றைய ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர்கள் போல் அஞ்சாமல் ஜும்ஆவிற்குப் பின் எந்த அனுமதியும் இன்றி மக்கள் மத்தியில் எழுந்து பின்வருமாறு உரையாற்றியனார்:
“இது எனது ஊர். இது எனது பள்ளிவாயல். இவர்கள் எனது மக்கள். இது எனது நிர்வாகம். இவர்கள் எனது சகோதரர்கள். இது எனது……இது எனது……. இது எனது…..அப்படியிருக்க எனது ஊரில் எனது சகோதரர்களிடத்தில் எனது நிர்வாகத்தில் நான் பேசாமல் இருப்பது ஞாயமா? எனக்குரிமை உண்டு’ என்ற கருத்துப்படி அவர் பேசிய போது எந்த பதிலும் யாருக்கும் சொல்ல முடியவில்லை. இந்தத் திறமையும் ஆளுமையும் தைரியமும் இன்றைய தலைவர்களிடத்தில் காணமுடிவதில்லை.
இவ்வளவு ஆளுமைகளைக் கொண்ட தாஸிம் அஸ்ஹரி அவர்கள். அந்த ஜமாஅத்தின் தலைமையிலிருந்து சில நிர்வாகச் சிக்கல்களின் காரமணமாய் விலக வேண்டி ஏற்பட்டது. ஒரு திறமையான நிர்வாகமும் தெளிவான இயக்கக் கோட்பாடும் அந்த ஜமாஅத்திற்கு இருக்கவில்லை என்பதையே இது உணர்த்தி நிற்கிறது. இல்லையாயின் தலைவரோடு எப்படி ஜமாஅத் சஞ்சிகையும் வெளியேற முடியும்.!!
ஜமாஅத்திலிருந்து விலகிய தாஸிம் அஸ்ஹரி அவர்கள் ‘தீனுல் இஸ்லாம்’ என்ற ஒரு புது இயக்கத்தை ஆரம்பித்தார். பிரிந்தவுடன் தனியாக இயக்கம் காணுவது அன்றைய ஜமாஅதே இஸ்லாமியின் குண இயல்பாக இருந்ததைக் காணலாம். அங்கிருந்து விலகிய பின்னரே தாஸிம் அஸ்ஹரி அவர்கள் தன் வகுப்புக்களை ஸாஹிரா கொலஜில் நடாத்த ஆரம்பித்தார். இவரது வரலாறு பற்றியும் ஜமாஅதே இஸ்லாமியினூடான அவரது பிரச்சாரங்கள் பற்றியும் தனியாக எழுதவுள்ளேன் இன்ஷா அல்லாஹ்.
இவருக்குப் பின் கொழும்பு தெமடகொடயில் ஜமாஅத்தின் நூல் நிலையமான ‘இஸ்லாமிக் புக் ஸென்டரை’ இன்று நிர்வகிக்கும் ஸையித் அஹ்மத் அவர்கள் 3வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்க்கத்தை அதன் மூல மொழியில் கற்காத ஆனால் மார்க்க உணர்வுள்ள தலைவராக இவர் இருந்த போது இவர் ஜமாஅத்தின் நிர்வாக விடயங்களில்தான் கூடுதல் கவனத்தை செலுத்தினார் எனலாம். இவரது காலத்தின் ஜமாஅத் சுருருப்பாக இயங்கியது என கேள்விப்பட்டுள்ளேன். இலங்கையில் அகில உலக இஜ்திமா ஒன்றை ஸாஹிராக் கல்லூரியில் இவர் ஒழுங்கு செய்ததாகச் சொல்வார்கள். குடும்பச் சிக்கல்களால் இவருக்கும் அமீர்ப் பதவி நிலைக்கவில்லை. அமீர்ப் பதவியிலிருந்து வழுக்கட்டாயமாக இவர் நீக்கப்பட்டதால் நீண்டகாலம் ஜமாஅத்தை விமரிசித்தும் ஜமாஅத்துடன் ஒட்டாமலும் இருந்தார். ஜமாஅத்தே இஸ்லாமி நிர்வாகத்திறமை பற்றி பேசவோ தூய்மை பற்றிப் பேசவோ இந்த வரலாறு எங்கனம் துணை நிற்கும் சிந்தியுங்கள் ஜமாஅதே இஸ்லாமி சகோதரர்களே.
இவருக்கப் பின் ஜமாஅதே இஸ்லாமியின் தலைவராக யூஸுப் ஸாஹிப் வந்தார். இவர் மார்க்கத் தெளிவற்றவராகவும் மார்க்க விடயங்களை விடவும் ஒரு இயக்கத்தை எப்படியாவது நடாத்த வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் இருந்தார். இவரது காலத்திலே ஜமாஅதே இஸ்லாமி மிக பலஹீனப்பட்டது மாத்திரமல்லாமல்ல மார்க்க சட்டப்பிரச்சனை விடயங்களில் நழுவல் போக்கை கடைபிடித்தார்.
ஜமாஅதே இஸ்லாமியிலிருந்து தடம் புரண்டு ஈரானிய சீயாஇஸப் புரட்சியை இலங்கையில் பரப்ப அமைக்கப்பட்ட இயக்கத்தின் தலைவராக மாறி ஜமாஅதே இஸ்லாமியை எதிர்த்த ஜமாஅத்தே இஸ்லாமியின் 4காவது தலைவர் யூஸுப் ஸாஹிப்
யூஸுப் ஸாஹிபின் போக்கில் அன்றைய முக்கிய அங்கத்தவர்களுக்கு திருப்தி இருந்திருக்க முடியாது. இவர் மார்க்க சட்ட விடயங்கள் பற்றிய ஆய்வுகளை மதிக்கும் போக்கைக் கொண்டவரல்ல. அரபுமொழி தெரியாத மூல மொழியில் மார்க்கத்தைக் கற்காதவர்களை ஒரு இயக்கத்தின் நிர்வாகத்தில் தலைமையில் வைப்பது தவறல்ல. ஒரு முழுக்கொள்கையையே இந்த இயக்கம் பிரதிபலிக்கிறது என்று கூறும் இயக்கத்திற்கு இது பொருத்தமற்றது. இவரது காலத்தில்தான் நீர்கொழும்பு பலகத்துறையைச் சேர்ந்த ஹோமியோபதி வைத்தியரான நுபார்பாரூக் அவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் ஜமாஅதே இஸ்லாமியின் 2வது தலைவரான தாஸிம் அஸ்ஹரியின் சகோதரர். இந்தச் செயலாளரும் கருத்துவேற்றுமையால் விலகி மாளிகாவத்தையில் ‘தஹ்ரீருச் சபாபில் முஸ்லிமீன்’ என்ற இரகசிய இயக்கத்தை ஆரம்பித்தார். ஜமாஅதே இஸ்லாமியின் செயலாளராக இருந்து பிரிந்தவரின் ஜமாஅத்திற்கெதிரான பிரச்சாரத்தால் ஜமாஅதே இஸ்லாமி கலங்கிப்போனது. ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர்கள் தடம்புரண்டதல்லாது செயலாளர்களுமா!!!இது எந்த வகை நிர்வாகத் திறமையில் அடங்குமோ என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் தற்காலிகமாக செயலாளர் பதவியில் அறியாமல் அமர்த்திவிட்டோம் என இலேசாக ஜமாஅத் சொல்லிவிட முடியாது. ஏன் என விளக்குகிறேன் கேளுங்கள்.
ஸையித் அஹமத் தலைவராக இருக்கும் காலத்திலே பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் முல்தான் மத்ரஸாவிற்கு 5வர் 5வருட கற்கைக்காக இலங்கையிலிருந்து ஜமாஅதே இஸ்லாமியால் தெரிவு செய்து அனுப்பப்பட்டனர். எனது ஞாபகத்தில் உள்ளவர்கள். நுபார்பாரூக், அஷ்ரப் மரிக்கார், அஷ்ரப் (புதுக்கடை), ஜுனைத் என்ற 4வர்களே.இவர்களில் அஷ்ரப் மரிக்கார் 2வருடங்களில் இலங்கை திரும்பி ஜமாஅதே இஸ்லாமியோடு ஒத்துழைக்காமல் நானும் பின்னர் அங்கத்துவரான மஜ்லிஸே இஸ்லாமியை ஆரம்பித்து செயல்பட்டார். புதுக்கடை அஷ்ரப் தப்லீக் ஜமாஅத்தில் சேர்ந்து அஷ்ரப் ஹாஜியார் என்ற பெயரில் பிரபல்ய பிரச்சாரகராக இருந்தார். ஜுனைத் என்பவர் ஓரிருவருடம் கற்று விட்டு ஜித்தாவில் வேலை பார்த்தார்.
இந்த வரிசையில் நுபார் பாரூக் அவர்கள் 3வருடங்களில் கற்கையை முடிக்காமல் திரும்பி வந்து ஜமாஅத்தின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றினார். மௌலான மௌதூதியின் மாணவராக இருந்தவர். ஆக இவரைச் செயலாளராக்க முன் தூரப்பார்வையுடனேயே(?) ஜமாஅத் இவரைத் தெரிவு செய்திருக்கிறது. மௌலானா மௌதூதியின் மாணவர் என்ற அடைமொழியே இதற்குப் போதும். ஆனால் துரதிஷ்டவசமாக ஜமாஅத் அனுப்பிய அனைவருமே வேறு இயக்கங்களில் போய் சேர்ந்தனரே தவிர ஜமாஅதே இஸ்லாமியில் சேரவில்லை. நுபார்பாரூக் செயலாளராக சில காலம் இருந்தார். அவரும் ஜமாஅதே இஸ்லாமியை எதிர்த்து வெளியேறி பிரிதொரு இயக்கம் கண்டார். ஜமாஅத்தின் ஸ்தீரமற்ற ஆரம்ப கால நிர்வாகத்திற்கு இவைகள் மிகப் பெரிய ஆதாரங்கள்.
இந்த யூஸுப் ஸாஹிபின் தலைமைக் காலத்தில் அவரும் அபூ உபைதாவும் பாகிஸ்தான் சென்று அங்குள்ள ஜமாஅதே இஸ்லாமியின் செயற்பாடுகளை பார்த்து வந்தார்கள். ஒரு முறை மாலிகாவத்தையில் மஜ்லிஸே இஸ்லாமியிற்கு அழைத்து அங்கத்துவர்களுக்கு மத்தியில் பேச வைத்தோம். அவ்வுரையில் பாகிஸ்தான் ஜமாஅத்தின் ஜம்இய்யதுத் தலபாவின் சுருசுருப்பை விளங்கப்படுத்தினார். இறுதியில் கேள்விபதில் பகுதியில் (இன்றைய ஜமாஅதே இஸ்லாமியில் அப்படியொரு பகுதியே கிடையாது) சுறுசுறுப்பான பாகிஸ்தான் ஜமாஅத்தின் கிளையான இலங்கை ஜமாஅதே இஸ்லாமி இவ்வாறு செயலற்றுப் போயிருப்பதன் காரணமென்ன? என்ற வினா எழுப்பப்பட்டபோது பின்வருமாறு பதிலளித்தார்: ‘நல்ல கேள்வி. எனக்கு முன்பு தலைமையில் இருந்தவர்கள் நன்மை என்று நினைத்து சில தீமைகளைச் செய்துவிட்டார்கள். அதனால் ஜமாஅத்தின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன’
இதன் உண்மை யாதெனில் இவருக்கு முந்திய தலைமைகள் ஷிர்க்கை எதிர்ப்பதிலும் பித்அத்துக்களை எதிர்ப்பதிலும் தீவிரம் காட்டினர். பரகஹதெனிய கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் தவ்ஹீத்வாதிகளுக்கு அடையாளமாக இருந்ததே ஜமாஅதே இஸ்லாமி என்ற பெயர்தான். குர்ஆன் வகுப்பு என்றாலே எதிர்ப்புத்தான். ஆனால் யூஸுப் ஸாஹிபிடம்அந்தத் தீவிரம் இருக்கவில்லை. இதுவே அவரின் இந்த பதிலிற்கான காரணமாக இருந்தது. இவரது காலத்தில் ஜமாஅதே இஸ்லாமியின் பொருளாதார வலமும் குறைவாகவே காணப்பட்டது.(அன்று ஜம்இய்யா டீ சேட் பற்றி சிந்தனை வர வாய்ப்பே இருக்கவில்லை).
யூஸுப் ஸாஹிபுடை காலப்பகுதியில் மஜ்லிஸே இஸ்லாமியின் ‘புதுமைக் குரல்’ சஞ்சிகையை நிறுத்த ஒரு சதி செய்யப்பட்டது. ஜமாஅத் எங்கே சதி செய்தாலும் ஜமாஅத்திற்கு சம்பந்தம் உண்டாகாத வகையில்தான் அது நடக்கும் ஏன் அது சதி என்பது கூட உள்ளங்களை அறிந்தவனான அல்லாஹ்விற்கும் அந்த சதியில் அகப்பட்டவர்களுக்கும் ஜமாஅத்தின் தலைமைகளுக்கம் மாத்திரமே தெரிந்திருக்கும். இன்று வரை பிரித்தாளுங்கொள்கையை ஜமாஅத் விடவில்லை. இன்ஷா அல்லாஹ் இதை அவர்கள் மறுத்தால் ஜமாஅத்தின் 10 இற்குப் மேற்பட்ட சதிகளை ஆதாரங்களோடு என்னால் சமர்ப்பிக்க முடியும் அது வரை அதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. அப்படிப்பட்ட சதிகளில் ஒன்றாகவே ‘புதுமைக் குரல்’ சஞ்சிகையை நிகழ்த்தும் அந்த நடவடிக்கை இருந்தது. அல்லாஹ் எங்களைக் காப்பாற்றினான்.
இறுதியில் ஆசனம் ஆட்டம் கண்டதால் ஜமாஅத்தை விட்டு யூஸுப் ஸாஹிப் அவர்கள் வெளியேறினார். பின்னர் 1970 களின் கடைசியில் ஏற்பட்ட ஈரானியப் புரட்சிக்கு கடுமையான ஆதரவளித்தார்.அதை இலங்கையில் வழி நடத்திய இயக்கத்தின் தலைமைப் பதவியையும் ஏற்றார். ஒருகொள்கையே இல்லாதவர்தான் ஜமாஅதே இஸ்லாமியின் தலைவராக இருந்திருக்கிறார் என்பது இதிலிருந்து வெளிச்சமாகிறது. இலங்கையில் குமைனி இமாம் குமைனி என்று அழைக்கப்பட முழுக் காரணமும் ஜமாஅதே இஸ்லாமிக்குத்தான். இதற்குப் பல ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும். ஈரானிய ஷீயாப் பரட்சியை ஜமாஅதே இஸ்லாமி அன்று கடுமையாக ஆதரித்தது. ஈரானிய ஷீயாப் புரட்சியின் போது இலங்கை ஜமாஅதே இஸ்லாமி என்ற தனித் தலைப்பில் இதை இன்சா அல்லாஹ் தெளிவாக எழுதுவேன். இந்த ஷீயாப் பரட்சியை உடனேயே எதிர்த்து மக்களுக்குத் தெளிவுபடுத்திய நன்மை பரகஹதெனிய ஜம்இய்யது அன்ஸாரிஸ் ஸுன்னவாவிற்கு உண்டு. அன்று முதல் இன்று தவ்ஹீத் பிரச்சாரம் கொள்கைத் தெளிவோடு இருப்பதும் அது பற்றி ஆழ்ந்த அறிவோடும் பற்றோடும் இருப்பதே இதற்குக் காரணம். ஆனால் ஜமாஅதே இஸ்லாமி அவ்வாறல்ல எங்கேயாவது முஸ்லிம் நாட்டில் சண்டை என்றால் ‘அல்லாஹு அக்பர் இஸ்லாமியப் புரட்சி’ என்று கோஷமிடுவதும் ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ என்று பின்னர் திரும்புவதும் அவர்களின் வழமை என்பதை உணர பெரிய ஆதாரங்கள் தேவையில்லை.
யூஸுப் ஸாஹிபின் பிளவிற்குப் பின் ஜமாஅதே இஸ்லாமியின் தலைவராக வந்தவர் இப்ராஹீம் மதனி அவர்கள். இவரது காலத்தில் ஜமாஅதே இஸ்லாமியின் போக்கில் ஒரு பாரிய மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றத்தை இன்றைய ஜமாஅதே இஸ்லாமியின் போக்கின் 1 கட்டமாக்கொள்ளலாம்.
பாகிஸ்தானிலிருந்த பார்வையை அரபு நாடுகளின் பக்கம் திருப்பி படிப்படியாக தன்னையறியாமலேயே இக்வானுல் முஸ்லிமீனாக மாற்றிக் கொண்ட இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அரபு நாட்டுப் பிரவேசம்.
5வது தவைரான இப்ராஹிம் மௌலவி அவர்கள் கபூரியாவில் பட்டம் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி அங்கு அரபுமொழித் தேர்ச்சி பெற்றவர். இவருக்கு மௌலானா மௌதூதியினதோ ஸையித் குதுபினதோ எந்தவித சிந்தனைத் தாக்கமும் இருக்கவில்லை. தூய்மையான அகீதா பற்றிய தெளிவு அதைப் பிரச்சாரம் செய்வதன் முக்கியத்துவம் இன்னும் தவ்ஹீத் பிச்சாரம் சுமந்துள்ள கருத்துக்களுடனான சார்பு நிலை அனைத்தையும் கொண்டிருந்தவர். அரபு மொழி தெரிந்த ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர்களில் இவர் 2வது நபர். தவ்ஹீத் பிரச்சாரம் இலங்கையில் முன்வைக்கப்படும் போது நபிகளாரின் மண்ணுடனான நேரடித் தொடர்போடே ஆரம்பித்தது. ஆனால் இப்றாஹீம் மௌலவியின் வருகையின் பின்னர் ஜமாஅதின் வறுமை நிலை நீக்கும் நோக்கில்தான் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அரபு நாடுகளின் பக்கம் முகத்தை திருப்பியது என்று கருத்து நிராகரிக்கப்பட முடியாத ஒன்று.
ஜமாஅதே இஸ்லாமிக்கு அன்று பெரிய கட்டிடமொன்றோ ஆகக் குறைந்தது நிர்வாகத்தை கொண்டுசெல்லவென ஒரு சிறந்த காரியாலயமொன்றோ வாங்கும் அளவில் பொருளாதார நிலை இருக்கவில்லை.இக்காலப் பகுதியில் பட்டதாரியான இப்றாஹீம் மௌலவி அவர்களின் தலைமையேற்பு இதை நிவர்த்தி செய்தது. அந்த நிவர்த்திகளோடு ஜமாஅத்தின் முகம் அரபு நாடுகளின் பக்கம் குறிப்பாக குவைத் பஹ்ரைன் பக்கம் திரும்பியது எனலாம். அரபுநாடுகளை நோக்கிக் கடிதங்கள் பரந்தன. இல்லையென்றால் இப்றாஹிம் மௌலவி இன்று வைத்திருக்கும் குட்டி இயக்கமான “ஸெரன்தீப் ஆய்வு மைய”த்தை நடாத்த முடியாது. ஜமாஅதே இஸ்லாமி இப்றாஹீம் மௌலவிக்கு முந்திய பாகிஸ்தான் இந்தியா ஜமாஅதே இஸ்லாமியுடனான தொடர்பிலே காரியாலயம் அமைக்கும் அளவு கெலக்ஷன் பண்ண முடியாது என்பதை உணர்ந்தது கசப்பான உண்மை. இதனால்தான் இன்று அரபு நாட்டு தொடர்பு அறுந்துவிடாமல் மிகக் கவனமாக இருக்கிறது. தவ்ஹீத் பிரச்சாரமும் அரபுப் பணத்துடன் மிக ஆழமான தொடர்பு வைத்துள்ளதே என்ற ஐயம் யாருக்காவது எழுந்தால் அது ஞாயமானதே. அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: ஜமாஅதே இஸ்லாமியின் பிறப்பிடம் இந்தியா வளர்ப்பிடம் பாகிஸ்தான் (இலங்கை ஜமாஅதே இஸ்லாமி பெயரளவில்தான் தொடர்பில் இருந்ததே தவிர தலைவர்களின் கொள்கைக்கேற்ப ஜமாஅத் நகர்ந்தது என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்) . இந்தத் தொடர்பு அரபு நாட்டுக்கு மாறுவதாயின் இவர்கள் போக்கைக் கொண்ட ஜமாஅதே இஸ்லாமி இயக்கமொன்று அங்கே இருந்து இவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டால் அது ஞாயமானது. அல்லது ஏதாவது ஒரு இயக்கத்துடன் தங்களைக் கிளையாக இணைத்துக்கொள்ள அரபு நாட்டு ஜமாஅதே இஸ்லாமி ஒன்றைத்தேட அரபு நாட்டுடன் தொடர்பு ஏற்பட்டால் அது ஞாயமானது. அந்தத் தொடர்பு தவ்ஹீத் பிரச்சாரத்தில் தெளிவாகத் தெரிகிறது. தெரிவது மாத்திரமல்ல அவர்களிடமிருந்துதான் நாம் இந்த கொள்கையையே கற்றோம். எனவே எங்களுக்கு தொடர்பு இருப்பது ஞாயமானதே. ஆனால் உங்களுக்கு இந்த தொடர்பு எதனால் ஏற்பட்டது? ஜமாஅதே இஸ்லாமி ஸென்டர் கட்டுவதாயின் அதற்கு ஒரே வழி அரபு நாட்டுத் தொடர்புதான். இவர்களது அதிகமான ஸென்டர்கள் அமைந்த முறையைச் சொல்கிறேன். பள்ளி கட்டினால் உள்ள நன்மையை அறிந்து அரபு தனவந்தர்கள் தரும் பணத்தில் எப்படியாவது முயற்சித்து இரண்டு தட்டுக்களை அமைத்து விடுவார்கள் மேல் தட்டு பெயரில்லாத ஸென்டராக இயங்கும். கீழ்த்தட்டு பள்ளியாக இயங்கும். எங்கேயாவது பள்ளிக்கு “தார்” (இல்லம்) என்ற பெயரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒரு நபரின் பெயருடன் மஸ்ஜித் அல்லது ஜாமிஃ என்ற பெயரையே காணுவீர்கள். ஆனால் இவர்களுக்கு கட்டப்படும் பள்ளிகளில் ஊரில் ஒரு பள்ளியிருக்க ஜமாஅதே இஸ்லாமி பள்ளி என்ற பெயர் வரவும் கூடாது பள்ளிகட்டப் பணந்தந்த அரபிக்கு அது பள்ளியாகவும் இருக்க வேண்டும். ஜமாஅதே இஸ்லாமியின் நடவடிக்கைகளுக்கான அது அந்த ஊர் ஸென்டராகவும் இருக்க வேண்டும் என்பதனால் வித்தியாசமான முறைகளில் பெயர்களைப் பதிவு செய்யும் ஒரு போக்கே இவர்களிடத்தில் உண்டு. மறுத்தால் ஆதாரங்களுடன் நிரூபிப்போம் இன்ஷா அல்லாஹ். ஆனால் தவ்ஹீத் பிரச்சாரப் பள்ளிவாயல்கள் அப்படியல்ல கட்டுப்படுவதே கொள்கைக்காகத்தான். தவ்ஹீத் என்ற பெயர் அல்லது மஸ்ஜித் என்ற பெயர் தெளிவாக இருக்கும்.
இப்றாஹீம் மௌலவியின் வருகையின் பின்னர்தான் இன்று தெமடகொடையில் காணப்படும் அழகான இஸ்லாமிய நூலகமொன்றைத் தன்னகத்தே கொண்ட ஜமாஅத்தின் தலைமையகம் அமைந்தது. அவருக்கு முன்னர் அக்கட்டிடத்திற்கு முன்னுள்ள சிறிய வீட்டொன்றிலேயே இயங்கினார்கள். அரபு நாட்டு பணத்தின் வருகையின் பின்னர் ஜமாஅத் செழிப்பானது.ஜமாஅத்தின் புத்தக நிலையத்தின் போக்கிக் சில விடயங்களில் ஜமாஅத்திற்கே சில அதிருப்திகள் உண்டு. ஆனால் அந்த புத்தக நிலையம் சிறந்த முன்னேற்றங்காண ஜமாஅத்தின் பங்களிப்பை விட அதை நிருவகிக்கும் ஸையித் அஹமதின் எட்மினிஸ்ட்டேரஷனே அடிப்டைக் காரணமென்பதை ஜமாஅத் தெரிந்து வைத்திருப்பது மாத்திரமல்ல. அதன் பொறுப்பை ஸையித் அஹமதிடமிருந்து எடுத்தால் ஜமாஅத்தின் சில வெடிப்புக்கள் வெளியே தெரியும் என்பதால் அவ்விடயத்தில் மிகவும் மௌனம்காக்கிறார்கள் என்பது ஜமாஅத்துடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். அந்தப் புத்தக நிலையம் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய சேவை செய்துள்ளது என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இப்றாஹீம் மௌலவியின் காலத்திலேயே மாதம்பை இஸ்லாஹியா வளாகம் அரபுப் பணத்தால் அழகுற ஆரம்பித்தது. இப்படிப் பலவகையில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அரபுலகப் பிரவேசம் ஜமாஅத்தின் வறுமையை நீக்கியது. ஜமாஅதே இஸ்லாமியின் அரபுலகப் பிரவேசம் பணத்திலேயே ஆரம்பித்தது என்பதை ஜமாஅத் வரலாற்றை அவதானிப்பவர்கள் உணர்வார்கள்.
ஜாமிஆ நளீமியாவில் தவ்ஹீத் பிரச்சாரத்தின் மூத்த பிரச்சாரகரான மீரான் பாஸி அவர்கள் கடமையாற்றியதும் பரகஹதெனிய தாருத் தவ்ஹீதில் இன்று குவைத்தில் கடமை புரியும் முனாஸ் நளீமி போன்ற சில நளீமீக்கள் கடமையாற்றியதும் மார்க்க அறிஞர் மௌலவி பீஜே அவர்கள் பற்றிய விமரிசனத்திற்கு இஸ்மாஈல் ஸலபியின் பதில் அல்ஹஸனாத்தில் இடம்பெற்றதும் அல்ஹஸனாத் சஞ்சிகை பற்றி சில பாராட்டுக்கள் உண்மை உதயத்தில் இடம்பெற்றதும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் போக்கு அன்று தவ்ஹீத் பிரச்சாரப் போக்கிலிருந்து வெகுதூரத்தில் இருக்கவில்லை என்பதையே எமக்குத் தெளிவாகச் சொல்கிறது.
ஜமாஅதே இஸ்லாமியின் பணத்தை அடிப்படையாகக் கொண்ட அரபுலகப் பிரவேசம் அங்கே மௌலான மௌதூதியின் கொள்கைக்கு ஓரளவு ஒத்த போக்கைக் கொண்ட இக்வானிசச் சிந்தனையை கதாரிலும் குவைத்திலும் கண்டுகொள்கிறது. நளீமியாவை எகிப்திய இக்வானியச் சிந்தனைக்கு மாற்றிக் கொண்டிருந்த கலாநிதி சுக்ரி அவர்களின் சிந்தனையுடனும் அவர்களால் நளீமியாவில் வளர்க்கப்பட்ட மாணவ நளீமிக்களின் சிந்தனைகளோடும் தெளிவாகவே அரபுலகப் பணப் பிரவேசத்தால் கிடைத்த இக்வானிசம் ஒத்துப் போனதால் வேகமாக ஜமாஅதே இஸ்லாமியின் தலைமைகளும் முக்கிய முகாம்களும் இக்வானிசத்தை தழுவ ஆரம்பித்தன.
ஜாமிஆ நளீமியாவில் இருந்த தாஸிம் அஸ்ஹரியிற்கோ கலாசிதி சுக்ரிக்கோ ஜமாஅதே இஸ்லாமியில் குறிப்பிடத்தக்க அளவிலாவது நல்லெண்ணம் இருந்ததாகச் சொல்ல முடியாது. எனவே எப்பொழுதும் நளீமியா ஜமாஅதே இஸ்லாமியாக இருந்ததில்லை. அங்கே படித்தவர்களின் செல்வாக்கு ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கத்தை அஸ்த்தமிக்கச் செய்தது. ஜமாஅதே இஸ்லாமி இக்வானியாக மாறியது. இனி இப்றாஹீம் மௌலவிக்குத் தலைமை நிலைக்குமா!!!!. நிச்சயமாக இல்லை. அரபு நாட்டுக்கு அழைத்துச் சென்றவரை இடை நடுவில் இறக்கிவிட்டார்கள் ஆட்சி பீடம் ஏறினார் இக்வானியான சுக்ரியின் மாணவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர். எந்தத் தலைவரின் பதவிக் காலத்தை விடவும் ஹஜ்ஜுல் அக்பரே தலைமையில் இருக்க முக்கிய காரணங்களில் மாணவர் அணியின் பலத்த ஆதரவு பிரதான காரணம். நான் சொல்வதன் உண்மை நிலை காண வேண்டுமாயின் உஸ்தாத் ரம்ஸி அதிபராக இருக்கும் இஸ்லாஹியா மாணவர்களுக்கும் கலாநிதி சுக்ரி அதிபராக இருக்கும் நளீமியா மாணவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்திலேயே இதனைப் புரிந்துகொள்ளலாம். இனி தலைமைகளால் ஜமாஅதே இஸ்லாமி மாறக் கூடாது என்பதற்கான அனைத்து அத்திவாரங்களும் இடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஜமாஅதே இஸ்லாமியின் வரலாறு பற்றி ஜமாஅத் பெரிதாக அலட்டாமல் இருப்பதற்கு அவர்களது கடந்த கால வரலாறு பற்றிய அறிவே மிக முக்கிய காரணம்.
இப்றாஹீம் மௌலவியின் ஜமாஅத்திற்கான தலைமைக்காலத்தில் மஜ்லிஸ் இஸ்லாமி என்ற எமது பலமான இளைஞர் அணியைப் பிரிக்க ஒரு சதி மேற்கொள்ளப்பட்டது. அன்று மஜ்லிஸே இஸ்லாமி ஒரு பலமான இயக்கம். ஜமஅதே இஸ்லாமி தனது அருள்ஜோதியையும் வழிகாட்டியையும் இழந்த காலப் பகுதியில் சஞ்சிகையற்றிருந்தபோது அவர்களின் செய்திகளையும் பிரசுரித்தது மஜ்லிஸே இஸ்லாமியின் சஞ்சிகையான புதுமைக்குரல். இந்தப் புதுமைக்குரலில் தற்போது ஈரான் நாட்டுத் தூதுவராகவும் ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் இருக்கம் எனது நண்பர் எம்.எம். zuஹைர், எனது அண்டை வீட்டவரான எம்.பி.எம் அஸ்ஹர் நவமணி ஆசிரியர், தமிழ்நாடு காயல்பட்டிணத்தைச் சேர்ந்த இக்பால், அஷ்ரப் மரிக்கார் போன்றோர் ஆழிய ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். அவர்களே மஜ்லிஸே இஸ்லாமி நிர்வாகிகளாகவும் இருந்தனர். என்னைப் போன்ற பலர் இளைஞர்களாக இருந்த நேரம் தியாகத்துடன் ஈடுபட்டோம்.
அந்நாட்களில் இலங்கையில் “இன்ஸான்” எனும் கொமியூனிஸம் பரப்பும் வாராந்தப் சஞ்சிகையும் “ஜிஹாத்” எனும் யூ என்பி சார்பு வாராந்த சஞ்சிகையும் வெளிவந்துகொண்டிருந்தன. ஒரு முறை இன்ஸானில் “மௌலான மௌதூதி ஒரு ஸி.ஐ.ஏ ஏஜன்ட் மௌலானா பாஷானி பத்வா” என்ற செய்தி வெளியானது. அச்சமயம் ஜமாஅதே இஸ்லாமிக்குக் குரலே இருக்கவில்லை. அப்பொழுது அதை மறுத்து அவர் ஸி ஐ ஏ ஏஜன்ட் அல்ல எனும் விளக்கும் கட்டுரையை அவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க வெளியிட்டோம். மௌலான பாஷானி கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போது பங்களாதேஷ்) இருந்த ஒரு கம்யூனிஸ்ட்வாதி என்பதையும் அதில் தெளிவுபடுத்தினோம். அதே நேரம் மௌலான மௌதூதியின் சில தவறுகளை மறைமுகமாக எழுதினோம். அவைகளை எழுத வேண்டாம் எனத் தடுத்தார்கள். மௌலானா மௌதூதி ஜமாஅதே இஸ்லாமிக்கு சொந்தமானவரல்ல. என்பதை விளக்கினோம். அவர்கள் அடம்பிடித்ததால் நாம் நிறுத்தி விட்டு“மௌதூதி மௌலானா’ கூண்டுக் கிளியானார்” என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டோம். இது போன்ற நிகழ்வுகளால் பலமாக இருந்த இளைஞர் இயக்கத்தின் சில பிளவுகளைப் பிரிவாக்க முயன்று வெற்றியும் கண்டார்கள். இது ஜமாஅதே இஸ்லாமியின் சதி வரலாற்றை நிரூபிக்கும் இன்னொரு நிகழ்வு. மறுத்தால் ஆதாரத்துடன் வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ். ஜமாஅதே இஸ்லாமியின் பொற்காலமான இப்றாஹீம் மௌலவியின் தலைமைக் காலம் குறுத்தோலைப் போட்டியாலும் இக்வானிஸ மிகைப்பாலும் இடம்மாறியது. ஜமாஅதே இஸ்லாமி இக்வானுல் முஸ்லிமீனாக மாறியது. ஹஜ்ஜுர் அக்பர் ஆட்சிபீடம் ஏறினார்.(முதல் பாகம் முற்றும்)