நாம் உழ்ஹியாவில் 7 நபர்கள் பங்கெடுப்பது நபி வழி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு ஒரு ஒரு சகோதரர் அந்தக் கட்டுரையின் கீழ் மறுப்புரை எழுதியிருந்தார். முக்கியத்துவம் கருதி அதற்கு ஒரு மறுப்புரை எழுதினேன். அதை தனிக்கட்டுரையாக இங்கே பதிவு செய்கிறேன்
உங்ளது விமரிசன விளக்கத்தை 5 விடயங்களை மையமாக வைத்து எழுதியுள்ளீர்கள். அதே நேரம் எனது கட்டுரையில் நான் எழுதியுள்ள சில முக்கியமான விடயங்களுக்கு பதில் சொல்லாமல் மௌனித்துள்ளீர்கள். நேர்மையாக பதில் எழுதும்போது ஒரு கட்டுரைக்கு உரியவர் ஆதாரமாக முன்வைக்கும் அனைத்துக்கும் பதில் எழுத வேண்டும். ஆனாலும் உங்கள் மறுப்பில் நீங்கள் எழுதியுள்ள கட்டுரையோடு சம்பந்தப்பட்ட அனைத்திலும் எனது நிலைப்பாட்டை இங்கு விளங்கப்படுத்துகிறேன்.
1.இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் குறிப்பிடும் பிரயாணம் இறுதி ஹஜ் பற்றியதே
2.மாலிக் இமாமின் கூட்டாகக் கொடுப்பது கூடாது என்ற பத்வாவை யாரும் மறுக்கவில்லை.
3.நபித்தோழர்கள் அவ்வாறு கூட்டாகக்கொடுக்கவில்லை.
4.இபாதத்தில் கியாஸ் இல்லை.
5.துணை வாதம்.
இந்த 4விடயங்களை பிரதானமாக வைத்தே உங்கள் மறுப்பை எழுதியுள்ளீர்கள். ஏதாவது முக்கிய வாதங்கள் விடுபட்டிருந்தால் முன்வையுங்கள் அது பற்றிய எனது நிலையை எழுதுகிறேன்.இன்சா அல்லாஹ்
1.இபாததில் கியாஸ் இல்லை என்று பின்வருமாறு ஸித்தீக் ஹஸன்கான் கூறுவதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
“மேலும் இமாம் சவ்க்கானியின் நூலுக்கு விரிவுரை எழுதிய இமாம் சித்திக் ஹசன் கான் அவர்கள் “ஹதியில் இருந்து கியாஸ் செய்யப்பட்டது தான் உழுஹிய்யா சட்டம் என குறிப்பிடுகின்றார்கள்.( பார்க்க ரவ்லாதுன் நதியா பி சரஹில் பரிய்யா )… இபாதத்தில் கியாஸ் இல்லை என்பது மார்க்கத்தின் அடிப்படையான சட்டம் எல்லோராலும் அறியப்பட்ட விடயமாகும்.”
பதில்:
இபாததில் கியாஸ் இல்லை என்பதில் மாற்றுக் கருத்துள்ள இஸ்லாமிய அறிஞர்கள் இருப்பதாக நான் அறிந்ததில்லை. அப்படியொரு வாதத்தை நான் முன்வைக்கவுமில்லை. நான் இப்னு அப்பாஸின் ஹதீஸைத்தான் முன் வைத்துள்ளேன். அதற்கு நீங்கள் எழுப்பியுள்ள வாதங்களுக்கு நான் பதில் சொல்கிறேன். ஆனால் நான் கியாஸ்தான் இதில் ஆதாரம் என்று சொல்லாமல் அதை நீங்கள் இட்டிருக்கத் தேவையில்லை. கியாஸின் அடிப்படையில் வாதம் வைப்பவர்களுக்கும் பதிலாக அமையட்டும் என்று அதனை நீங்கள் எழுதியிருந்தால் அதைக் கட்டுரைக் குறிய பதிலில் எழுதியிருக்கக் கூடாது. நான் இப்னு அப்பாஸின் ஹதீஸைத்தான் எனது ஆதாரமாக எழுதியுள்ளேன். ஸித்தீக் ஹஸன்கான் ரவ்லதுன் நதீயாவில் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் .நீங்கள் சொன்ன இடத்திகும் நமது வாதத்திற்கும் சம்பந்தம் இல்லை. அதனால் தான் இப்னு அப்பாஸின் ஹதீஸ் உழ்ஹியா பற்றியது என்று அதே ரவ்லதுந் நதீயாவில் ஸித்தீக் ஹஸன்கான் கூறுகிறார். பார்க்க 1/268
الروضة الندية – (1 / 268) ولا يعارض هذا حديث ابن عباس عند أحمد والنسائي وابن ماجة والترمذي وحسنه قال : [ كنا في سفر فحضر الأضحى فذبحنا البقرة عن سبعة والبعير عن عشرة ] وكذلك لا يعارضه ما في الصحيحين من حديث رافع بن خديج : [ أنه صلى الله عليه و سلم قسم فعدل عشرا من الغنم ببعير ] لأن تعديل البدنة بسبع شياه هو في الهدي وتعديلها بعشر هو في الأضحية والقسمة
- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் குறிப்பிடும் பிரயாணம் இறுதி ஹஜ்பற்றியது என்பதற்குப் பல வாதங்களை முன் வைத்துள்ளீர்கள்.
முதல் வாதம்:
“ “நாங்கள் பிரயாணத்தில் இருந்தோம்.ஹஜ்ஜுப் பெருநாள் தினம் வந்தது.ஒரு மாட்டில் ஏழு பேரும் ஒரு ஒட்டகத்தில் பத்துபேரும் கூட்டாகிக் கொண்டோம்.”அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆதாரம்: திர்மிதி, இப்னு ஹிப்பான்
மேற்கூறப்பட்ட செய்தியை நாங்கள் பிரயாணத்தில் இருந்தோம். பெருநாள் தினம் வந்தது என்ற சொற்தொடர் கவனிக்கப்படக்கூடிய ஒன்றாகும்.ஏனனில் நபியவர்கள் துல் ஹஜ் மாதம் பிரயாணம் செய்தது இரண்டு சந்தர்ப்பங்களிளாகும்.
1ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த ஆண்டு
2ஹஜ்ஜதுல் விதாஃ என்ற இருதி ஹஜ்ஜை நபியவர்கள் நிறை வேற்றிய ஆண்டு
இதனடிப்படையில் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு யின் செய்தி நபியவர்கள் ஹஜ்ஜுச் செய்த வேளையில் நடந்த நிகழ்வைக் குறிக்கிறது…….”
பதில்:
சகோதரரே எந்தவொரு ஆதாரத்தையும் யூகத்தின் அடிப்படையில் மறுக்கக் கூடாது என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். நபியவர்களது அன்றாட நிகழ்வுகளைப் பார்த்த எந்த நபித்தோழராவது நபியவர்கள் மதீனாவில் தங்கிய பத்து வருடங்களில் நீங்கள் குறிப்பிட்ட 2 பிரயாணங்கள் தவிர வேறெந்தப் பிரயாணமும் போகவில்லை என்று சொல்லியுள்ளார்களா? நபியவர்கள் துல் ஹஜ் ஆரம்பப் பத்தில் இந்த இரண்டு பிரயாணந் தவிர வேறெந்தப் பிரயாணமும் போகவில்லை என்பது நபியவர்கள் மீது பொய் சொல்வதாக அமையாதா? அந்தப் பிரயாணம் ஹஜ்ஜைக் குறிக்கிறது என்பதற்கு “2பிரயாணங்கள் தவிர வேறெந்தப் பிரயாணமும் போகவில்லை” என்று சொல்வது ஆதாரமற்றது.
அடுத்து இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் நபியவர்களோடு ஹுதைபியாவில் இருக்கவில்லை. அவர் அந்நேரம் இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும் சிறுவராக இருந்ததால் தனது தந்தை அப்பாஸ் ரலியல்லாஹ் அவர்களோடே இருந்தார்கள். மக்கா வெற்றிக்குப் பின்னரே தந்தையுடன் குடும்பம் சகிதம் மதீனாவிற்கு வந்தார்கள். இது இப்னு அப்பாஸ் பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் வரலாற்றுக் குறிப்பு. அப்படியிருக்க இது எவ்வாறு ஹுதைபியாவைக் குறிக்கும். இந்தத் தெளிவை இது ஹுதைபியாவில் நடந்தது என்று சிலர் வாதத்தை எழுப்பிவிடக் கூடாது என்பதற்காகப் பதிவுசெய்து கொள்கிறேன்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வாதங்கள்:
“இதை வழுவூட்டும் வகையில் இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் இந்தப் பாடத்தில் தான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தி இடம் பெற்றுள்ளது என்று கூறுகின்றார்கள்.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் செய்தி அபூ தாவுத், நஸாஈ, இப்னு மாஜஹ் போன்ற கிரந்தங்களில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:
“நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ஒரு மாட்டை தனது குடும்பத்தினருக்காக அருத்தார்கள். முஸ்லிமில் இடம் பெரும் ஜாபிர் ரலியள்ளஹு அன்ஹு யின் அறிவிப்பில் இறுதி ஹஜ்ஜில் தமது மனைவியர்களுக்காக ஒரு மாட்டை அருத்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது. எனவே இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு யின் செய்தி ஹஜ் செய்த வேளையில் நடந்த நிகழ்வைக் குறிக்கிறது என்பது தெளிவாகிறது.ஹஜ் கடமையை நிறை வேற்றும் ஒருவருக்கு உழ்ஹிய்யா வணக்கம் நபிவழி கிடையாது அவர் ஹத்ய் என்ற வணக்கத்தைதான் நிறை வேற்றுவார் என்பது நாம் அறிந்த விடயமாகும்…………………..
அத்தோடு சஹாபாக்களின் வார்த்தைகளை சேர்த்து விளங்க முயற்சி செய்ய வேண்டும். இவர் கூறுவது போன்று நாம் எடுத்துக் கொள்வதாக இருந்தால் அந்த இமாம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீதை ஏதெனும் பிரயாணத்தில் உள்ளவர்கள் மாத்திரம் தான் பாவிக்க முடியுமே தவிர, ஹஜ் செல்லாதவர்கள் அல்ல. ஏனெனில் ஹதீதின் வாசகம் பிரயாணம் என்று சொல்கிறது. இபாதத்தில் யூகங்களுக்கு இடம் கிடையாது. பிரயாணம் என்று இருப்பதால் அந்த இபாதத்தை பிரயாணத்தில் தான் செய்ய வேண்டும். ஆனால் மாற்றமாக ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஹதீஸும் ஹுதைபிய்யா என்ற இடத்தை குறிக்கின்றது. அதுவும் பிரயாணம். எனவே இந்த இரு அறிவிப்புக்களை சேர்த்து விளங்குவதுதான் முறையானது”
ஹஜ் பிரயாணமாயின் “நாம் நபியவர்களுடன் ஒரு பிரயாணத்திலிருந்தோம்” என மூடலாகக் குறிப்பிட்டிருக்கமாட்டார்கள் என்பதை நாம் வெறும் யுகமாகக் குறிப்பிடவில்லை. அந்த ஹதீஸிலேயே உழ்ஹிய்யாத் தினம் வந்தது என்ற வார்த்தையுள்ளது. ஹஜ்ஜில் உழ்ஹியாத் தினம் இல்லை. உள்ளது என்றால் அங்கே அறுப்பதும் உழ்ஹியா என்றாகிவிடும். ஹஜ்ஜில் உழ்ஹியாத் தினம் இல்லை என்பதை பச்சை நிறமிட்டுள்ள வரிகளில் நீங்களே தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். எனவே இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்களின் ஹதீஸை விளங்க ஜாபிர் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்களின் ஹதீஸை துணைக்கு அழைக்கத் தேவையில்லை. காரணம் உழ்ஹியாத்தினம் என்று இப்னு அப்பாஸ் அவர்கள் தெளிவாகவே சொல்லியுள்ளார்கள்.
அடுத்து நாம் சிவப்பு நிறமிட்டிருக்கும் பகுதியில் இந்தச் செய்தி ஹுதைபியாவில் நடந்ததாகச் சொல்லியுள்ளீர். இது தவறுதலாக இடம் பெற்றிருப்பின் கண்டுகொள்ளத் தேவையில்லை. அல்லது அந்தக் கருத்தில் நீங்கள் உள்ளீர்களாயின் ஹுதைபியா பிரயாணத்தில் இப்னு அப்பாஸ் இருக்கவில்லை என்பதைம் நாம் தெளிவாகவே விளக்கியுள்ளோம்.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்களின் ஹதீஸ் ஹஜ் பிரயாணம் அல்ல என்பதற்கு அங்கே ஒரு ஒட்டகத்தில் பத்துப் பேர் பங்கு கொண்டனர் என ஹதீஸில் இடம்பெறும் வார்த்தையும் ஆதாரமாக உள்ளது. ஏனெனில் ஹஜ்ஜில் 1 ஒட்கத்தில் 7 நபர்களே பங்குகொண்டனர் என்பதை இறுதி ஹஜ் பற்றிய ஹதீஸ்கள் தெளிவாகவே சொல்கின்றன. ஹஜ்ஜில் ஒரு ஒட்டகத்தில் பத்துப்பேர் பங்குகொள்ளலாம் என்று நீங்களும் சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
அடுத்து திர்மிதீ இமாம் அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்து விட்டு “இந்தப் பாடத்தில்தான் இந்த செய்தியும் வருகிறது” என்று கூறி ஹஜ் பற்றிய ஒரு செய்தியைப் பதிவு செய்திருப்பதையும் இப்னு அப்பாஸின் ஹதீஸ் ஹஜ் பற்றியதுதான் என்பதற்கு ஆதாரமாகக் கூறியுள்ளீர்கள். இமாம் திர்மிதி அவ்வாறு சொல்லியிருப்பதை “மாட்டிலும் ஒட்டகத்திலும் பங்குகொள்ளல்” என்ற பாடத்திற்கு உரியது என திர்மிதீ கருதுவதாகவும் விளங்க இடமுண்டு. அப்படித்தான் விளங்கவும் வேண்டும். ஏனெனில் “மாட்டிலும் ஒட்டகத்திலும் பங்குகொள்ளல்” என்ற பாடத்தின் கீழ்தான் இமாம் திர்மிதீ அவ்வாறு சொல்கிறார். ஹத்ய் என்றோ உழ்ஹிய்யா என்றோ குறிப்பிடவில்லை. அதே வேளை ஆய்வின்றி எழுதுகிறீர்கள் என்பதற்கு திர்மிதீ இமாம் இதே ஹதீஸை “உழ்ஹியாப் பிராணியில் கூட்டுச் சேர்தல்” என்ற பாடத்தின் கீழும் கொண்டுவந்துள்ளார் என்ற செய்தியே போதுமானதாகும். திர்மதீ இந்தச் செய்தியை முதல் பாடத்தில் ஒட்டகத்தில் ஏழு நபர்கள் பங்கு சேர்வதா பத்து நபர்கள் பங்கு சேர்வதா என்ற விளக்கத்திற்கும் உழ்ஹியா பாடத்தில் உழ்ஹியாவில் கூட்டுச் சேரலாம் என்பதற்கும் கொண்டு வந்துள்ளார். அதுபோன்று திர்மிதீ மாத்திரம் இந்தச் செய்தியைப் பதிவு செய்யவில்லை இன்னும் பல அறிஞர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்பதையும் கவனத்தில்கொள்ளவும்.
- நபித்தோழர்கள் அவ்வாறு கூட்டாகக்கொடுக்கவில்லை.
ஒட்டு மொத்த நபித்தோழர் வாழ்விலும் இப்படியொரு நிகழ்வு நடைபெறவில்லை என்பதை பின்வருமாறு எழுதுகிறீர்கள்
“ஆம், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களோ அல்லது அவர்களது தோழர்களோ தமது வாழ்நாளில் உழ்ஹிய்யாவை கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றியுள்ளார்கள் என்பதற்கு ஏனைய ஆதாரங்கள் முன்வந்தால் நாமும் அப்படிச் செய்யமுடியும். எனினும் அவர்களது வாழ்க்கையில் அவ்வாறு நடந்ததாக எந்தவொரு ஆதாரமும் இல்லை.”
அபு அய்யூப் அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது : –
” நாங்கள் ஒரு ஆட்டை அறுப்பவர்களாக இருந்தோம். அதனை ஒருவர் தனக்காகவும் தந்து குடுப்பத்தினருக்காகவும் அறுப்பர். பின்னர் மக்கள் ஒருவருக்கொருவர் போட்டிபோட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் அது பெருமைப்படத்தக்க விடயமாக மாறிவிட்டது. ” இமாம் மாலிக்கின் முஅத்தாஃ”
பதில்:
நபியவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் உழ்ஹிய்யாவில் பங்குகொண்டுள்ளார்கள்.என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் சொல்கிறார்கள் என்பதும் அது உழ்ஹியா பற்றியதுதான் என்பதும் உங்களுக்கும் இப்பொழுது தெளிவாகியிருக்க வேண்டும். எனவே அதற்கு பதில் தேவையில்லை. ஆனால் எனது கட்டுரையில் “அலி ஆயிசா அனஸ் இப்னு மஸ்ஊத் அபு மஸ்ஊத் ஹுதைபா ஜாபிர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹும் இன்னும் பெரும்பாலான நபித்தோழர்கள் அனைவரும் இதை அனுமதித்தே வந்துள்ளனர். நபித்தோழர்களில் இதற்கு மாற்றமாக யாரும் இருந்ததாக எந்தச் செய்தியும் இல்லை.” என நான் குறிப்பிட்ட தகவல் நபித் தோழர்கள் அனைவரும் உழ்ஹியாவில் கூட்டுச் சேரலாம் அதுவும் நபிவழிதான் என்ற கருத்தில் இருந்ததை தெளிவாகச் சொல்கிறதே ஏன் அதற்கு பதில் சொல்லவில்லை. அப்படியானால் நபியவர்கள் வழிகாட்டாத ஒன்றை அனைத்து நபித் தோழர்களும் செய்துள்ளார்கள் அப்படிச் சொல்லவருகிறீர்களா?. இதற்கு உங்கள் பதில் என்ன?
அபு அய்யுப் அல் அன்ஸாரி ரலியல்லாஹ் அன்ஹ் அவர்களின் செய்தியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடுதான் கொடுக்க வேண்டும். குடும்பத்தில் 9 பேர் இருந்தாலும் சரி ஒரு ஆடுதான். 9 பேருக்கும் 9ஆடு அல்ல. பிற்காலத்தில் பெறுமையின் காரணமாக குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு ஆடு கொடுக்க ஆரம்பித்துவிட்டதால் இன்று அது பெறுமையாக மாறிவிட்டது என்கிறாரே தவிர மாட்டில் கூட்டுச் சேரவில்லை என்று சொல்லவில்லை. இல்லையெனில் நபியவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் ஒட்டகமும் மாடும் உழ்ஹியாக் கொடுக்கவில்லை ஆடு மட்டும்தான் கொடுத்துள்ளார்கள் என்றாகிவிடும்.
- மாலிக் இமாமின் கூட்டாகக் கொடுப்பது கூடாது என்ற பத்வாவை யாரும் மறுக்கவில்லை.எனப் பின்வருமாறு எழுதியுள்ளீர்கள்.
“இன்னும் இமாம் மாலிக்கின் பத்வாவை வரலாறில் யாருமே பிழையென மறுக்கவும் இல்லை………. ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய உழ்ஹிய்யாக் கொடுக்கும் பிராணிகளில் நான் செவிமடுத்தவைகளில் மிகவும் சிறப்பானது எதுவெனில் ஒரு மனிதன் தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் ஒரு ஒட்டகத்தை அறுப்பதாகும். இன்னும் ஒரு மனிதன் தனக்குச் சொந்தமான மாட்டையோ அல்லது ஆட்டையோ அறுப்பதாகும். அதனை அவரது குடும்பத்தினருக்காகவும் அறுத்து அவர்களையும் அதில் சேர்த்துக் கொள்வார். இன்னும் சிலர் ஒட்டகம் அல்லது மாடு அல்லது ஆடு போன்ற ஏதேனும் ஒன்றை வாங்கி குர்பானி (நுஸ்க்) கொடுக்கும் விடயத்திலேயும் உழ்ஹிய்யாவில் கூட்டுச் சேர்த்துக் கொள்கிறார்கள். அதன் பின்னர் அவரவர் தனது பங்குக்குரிய தொகையை ஏற்றுக் கொள்கிறார்கள். இன்னும் அவரவருக்கு அதனது இறைச்சியிலிருந்து ஒரு பங்கை பெற்றுக் கொள்கிறார்கள். நிச்சயமாக இது வெறுக்கத்தக்கதாகும். நாங்கள் ஹதீஸீல் செவிமடுத்த விடயம் என்னவெனில் வணக்கமாக செய்யப்படும் குர்பானியில் கூட்டுச் சேர முடியாது. நிச்சயமாக ஒருவர் தனது பொறுப்பிலுள்ள குடும்பத்திற்காக மட்டுமே முடியும்.” ( முஅத்தா )
பதில்:
அன்புள்ள சகோதரரே. பல இடங்களில் அறியாமல் பேசுகிறீர்கள். மொழிபெயர்ப்பைக் கூட தவறாகவே செய்துள்ளீர்கள். இமாம் மாலிகின் கருத்திற்கு நீங்களே பல முறை இக்கட்டுரையில் மறுப்புச் சொல்லியுள்ளீர்கள். தொடர்ந்து வாசியுங்கள் புரிந்துகொள்வீர்கள்.
இமாம் மாலிகின் கருத்து என்ன?
4கு வகையான குர்பான் முறைகள் உண்டு.
1.உழ்ஹிய்யா
2.தமத்துஃ கிரான் முறையில் ஹஜ் செய்பவர் கொடுக்கும் குர்பானி
3.ஹஜ்ஜில் குற்றப் பரிகாரமாக் கொடுக்கும் குர்பானி
4.ஹஜ்ஜிலோ ஹஜ் அல்லாத காலங்களிலோ விரும்பிக் கொடுக்கும் குர்பானி
இதில் எல்லாவற்றிலும் கூட்டுச் சேரலாம் என்பதே அதிகமான அறிஞர்களது நிலைப்பாடு. ஆனால் விரும்பிக் கொடுக்கும் குர்பானியைத் தவிர மற்ற எதிலும் கூட்டுச் சேர்வது கூடாது என்பதே இமாம் மாலிகுடைய நிலைப்பாடு. அதாவது ஹஜ்ஜிலும் கூட்டுச் சேரக் கூடாது. இதுதான் இமாம் மாலிகுடைய நிலைப்பாடு என்பதை இமாம் மாலிகுடைய நூற்கள் அவரது கருத்துக்களை விளக்கும் ஆராயும் அவரது மத்ஹபு சார்ந்த அறிஞர்களின் அனைத்து நூற்களிலும் காணலாம். எடுத்துக்கட்டிற்காக தாங்கள் தவறாக மொழிபெயர்த்த பந்தியில் உள்ளதை பின்வறுமாறு சரியாக மொழிபெயர்த்தாலே புரிந்துகொள்வீர்கள் இன்சா அல்லாஹ்:
موطأ الامام مالك لمالك الأصبحي – 2 / 26
فأما ان يشتري النفر البدنة أو البقرة أو الشاة يشتركون فيها في النسك والضحايا فيخرج كل إنسان منهم حصة من ثمنها ويكون له حصة من لحمها فإن ذلك يكره وإنما سمعنا الحديث انه لا يشترك في النسك وإنما يكون عن أهل البيت الواحد
“……………….ஒரு சிலர் சேர்ந்து ஒட்டகத்தையோ மாட்டையோ அல்லது ஆட்டையோ வாங்கி ஹஜ் கடமையின் போது நிறைவேற்றப்படும் குர்பானியிலோ அல்லத உழ்ஹியாவிலோ ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு பங்கு கடைக்கும் வகையில் அதை வாங்கும் பெறுமதியில் கூட்டுச் சேர்வது கூடாது. நாங்கள் ஹதீஸில் செவிமடுத்ததெல்லாம் ஹஜ் கடமையின் போது நிறைவேற்றப்படும் குர்பானியில் அவ்வாறு பங்குகொள்ள முடியாது என்பதுதான். ஒரு பிராணிஒரு குடும்பத்திற்கு மாத்திரமே.” முவத்தா:2.26
இதுதான் இமாம் மாலிகின் நிலைப்பாடு . இதற்கு இந்தக் கட்டுரையில் நீங்களே பல இடங்களில் பதில் சொல்லியுள்ளீர்கள். இப்னு அப்பாஸின் ஹதீஸ் ஹஜ் பற்றியது என பல முறை நிறுவ முயற்சித்துள்ளீர்கள். ஹஜ் பற்றிய ஜாபிர் அவர்களினதும் ஹதீஸைப் பல முறை குறிப்பிட்டுள்ளீர்கள். இவை அனைத்தும் மாலிக் இமாமின் கருத்தை மறுத்துரைக்கும் ஹதீஸ்களே.
எனவே மாலிக் இமாமின் இந்த நிலைப்பாட்டை பல அறிஞர்கள் மட்டுமல்ல இஸ்லாமிய சமூகமே மறுத்திறுக்கும் என்பதைப் புரிந்திருப்பீர்கள். என்றாலும் எடுத்துக்காட்டிற்காக இமாம் மாலிகின் முவத்தாவிற்கு விரிவுரை எழுதிய அவரது மத்ஹபின் மிகப் பெரிய அறிஞர்களில் ஒருவரான இமாம் இப்னு அப்தில் பர் அவர்கள் தம்ஹீத் 12-157 என்ற விரிவுரை நூலில் மறுத்துரைக்கிறார். அது போல் இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் தமது முஹல்லா என்ற நூலில் 4-636 மறுத்துள்ளார்.அவைகளை வாசியுங்கள்.
- துணை வாதம்
உழ்ஹியா வசதி படைத்தவர்களுக்கு என்ற அடிப்படையில் பின்வரும் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள்.“அதுமட்டுமன்றி இந்த கூட்டுச் சேர்ந்து கொடுக்க முடியும் என்கற கருத்தும் கூட உழ்ஹிய்யாவின் போக்குக்கு முற்றிலும் நேர்மாரானதாக இருப்பதை காணலாம். வசதி படைத்தவர்கள் மட்டும் தான் உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும் என்றிருக்கும்போது ஏனையவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்?”
இந்த வாதத்தின் பிரகாரம் வசதி படைத்தவர்கள் கூட்டுச் சேரலாம் என்றும் ஹஜ்ஜில் வசதியற்றவர்கள்தான் கூட்டுச் சேர வேண்டும் என்றும் வசதியற்றவர்களும் ஹஜ் செய்கிறார்கள் என்றும் நபியவர்கள் வசதி படைத்தவர்கள் என்றும் பல தவறான முடிவுகள் உருவாகும். ஏனெனில் நபியவர்கள் மரணிக்கும் வரை ஏழை என்பதை நாம் அறிவோம். அவரும் உழ்ஹியா கொடுத்துள்ளார். ஹஜ்ஜில் கூட்டுச் சேரலாம் என்பது அனைவரதும் நிலைப்பாடு என்பதால் வசதியற்றவர்களும் ஹஜ் செய்கிறார்கள் என்றாகிவிடும். வீணான வாதங்களாலேயே இவ்வாறான தவறான முடிவுகள் பிறக்கும் தயவு செய்து சிந்தியுங்கள்.
ஹஜ்ஜில் குர்பானி கொடுக்க வசதியற்றவர் ஹஜ்ஜில் 3 நோன்பும் ஊர் வந்து 7 நோன்பும் பிடிக்குமாறும் அல்லஹ் கட்டளையிடுகிறான. எனவே பணக்காரருக்கு மாத்திரம் ஹஜ் கடமையில்லை என்பது தெளிவாகிறது. ஹஜ் செலவுகள் கையில் இருந்து போக வழியும் கிடைத்தால் குர்பானி வாங்க முன்னூறு ரியால் கிடைக்காது விட்டாலும் ஹஜ் கடமையாகிவிடும். அது போலத்தான் குர்பானியும் அன்றாட செலவு போக குர்பானி கொடுக்க யாருக்கு வசதியிருக்கிறதே அவர் கூட்டாகவோ தனியாகவோ குர்பானி கொடுக்க வேண்டும். இல்லாது விட்டால் அப்படிப்பட்டவர்கள் தொழுமிடத்தை நெருங்க வேண்டாம் என நபியவர்கள் தடுத்ததைப் பார்க்கிறோம். தனது உம்மத்தில் உழ்ஹியாக் கொடுக்கக் கூட வசதியில்லாதவர்களுக்காக நபியவர்கள் ஒரு ஆட்டை அறுத்தார்கள்.
முடிவாக அன்புள்ள சகோதரரே!
எந்தவொன்றையும் ஆய்வின்றி மறுக்காதீர்கள் ஏற்காதீர்கள். அதுவும் ஒரு சமூகம் ஆதாரப் பூர்வமான நபியின் சுன்னா என உறுதியாக பல நூற்றாண்டுகளாக செய்து வரும் ஒன்றை மறுக்கும்போது அதற்கு மாற்றமான முடிவை இன்னும் பார்ப்போம் இன்னும் பார்ப்போம் என நன்றாக ஆய்வு செய்ய வேண்டும். அதன்பின்னரே அதை வெளியிட வேண்டும். சில வேளை அந்தக் கருத்தை நமக்குச் சொல்லித் தருபவர் போதிய ஆய்வற்றவராக இருப்பார் நமது ஆய்வின்மையால் அவர் பெரிய ஆய்வாளராகத் தோன்றுவார் அவரை நம்பி அத்தனையையும் நம்பிவிடக் கூடாது. அவரையும் தவறிலிருந்து காப்பாற்றி நம்மையும் நிலைப்படுத்திக் கொள்ள பலரிடம் கேட்க வேண்டும் பலதையும் வாசிக்க வேண்டும். அப்போதுதான் நான் தக்லீத் செய்யாமலேயே இந்த முடிவுக்கு வந்தேன் என்ற மன நிறைவை அடைய முடியும்.சொன்னவுடன் ஒன்று சரியென்றுபடுவதற்கு பெரும்பாலும் தக்லீத் காரணமாக இருக்கும். எடுத்தவுடன் ஒன்றை மறுப்பது பெறும்பாலும் காழ்ப்புணர்வாகவே இருக்கும் எல்லாம் எம்மனைவரது நல்லமல்களையும் ஏற்றுக் கொள்வானாக. நான் மேலே பதிந்தவைகள் தவறெனின் முழுமையான மறுப்பைப் பதியவும் அதை விடுத்து நேரங்களை வீணாக்குவதை நான் விரும்பவில்லை.