இரு முக்கிய வினாக்கள் இதில் ஒன்று அலட்சியப்படுத்தப்பட்டாலும் நாம் கடந்துவரும் ஏகத்துவப் பிரச்சாரம் அசிங்கப்படலாம். பாதையின் அசுத்தங்களால் பயணங்கள் அழுக்காகியதில்லை; ஆனால் பயணங்கள் அசிங்கப்படுகின்றபொழுது பாதையின் தூய்மையால் எந்தப்பயனுமில்லை. எமது பிரச்சாரப் பயணங்களின் தூய்மை நீடிக்க எமக்கு முன்னால் இருக்கும் இக்கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் எம்மிடத்தில் இருக்கவேண்டும்.
ஆனாலும் கவலைக்கிடமான நிலை யாதெனில் பிரச்சாரக்களம் எதற்காகச்செய்கிறோம் என்பதைத் தெரிந்திருந்து என்ன செய்கிறோம் என்பதைத் தெரியாதிருந்தாலோ அல்லது என்ன செய்கிறோம் என்பதைத் தெரிந்திருந்து எதற்காகச் செய்கிறோம் என்பதைத் தெரியாதிருந்தாலோ பிரச்சினை தீர்க்கப்படலாம் என எண்ணலாம்.
ஆனால் செய்கிறோம் என்பதைத் தவிர என்ன, எதற்காக என்ற வினாக்களே இல்லாத நிலையில் எமது பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவது வேதனை தருவதாகும். ஆச்சரியம் யாதெனில் இந்த வினாக்கள் முன்வைக்கப்பட்டு முடியும் முன்னரே சரியான பதில்கள் முன்மொழியப்படுவதாகும். என்ன செய்கிறோம்? அல்லாஹ்வும் ரஸ_லும் சொன்னதைச் செய்கிறோம். எதற்காகச் செய்கிறோம்? அல்லாஹ்வுக்காகச் செய்கிறோம் இவைகள்தான் வினவப்பட்ட வினாக்களுக்கான ஈமானிய பதில்கள். இடைவெளிகள் அறிவில் இல்லை. அறிவு சரியாகத்தான் இருக்கிறது. அப்படியானால் இந்த ஆன்மீக வறுமைக்கான காரணம் என்ன? ஒன்றுதான் தெரிகிறது. தூய்மையற்ற உள்ளங்கள். சரியான பதில்களையும் தவறான உள்ளங்களையும் சுமந்து செல்லும் பிரச்சாரங்கள் இறைதிருப்தியை இலக்காகக் கொண்டவைகள் அல்ல.
‘தொழாதவர்களுக்கு கேடுதான்!” என்று சொல்லவேண்டிய இறைவன் ‘தொழுபவர்களுக்குக் கேடுதான்!” என்று சொல்வது வடிவங்களைவிட நோக்கங்களுக்கே முதலிடம் என்பதை எமக்குச் சொல்கிறது. ‘எனது தோழர்களை ஏசவேண்டாம் உங்களில் ஒருவர் உஹது மலையளவுக்கு தங்கத்தைச் செலவளித்தாலும் அவர்களின் கையளவு தர்மத்திற்கு ஈடாகாது.” என்ற நபியவர்களின் கூற்று தர்மத்தின் பெருமதியைவிட தர்மம் செய்பவனின் பெருமதியையே முதன்மைப்படுத்துகிறது.
எனவே என்ன செய்கிறோம்? எதற்காகச் செய்கிறோம்? என்பதை தெரிந்தளவுக்கு செயற்படுத்தக்கூடிய வினைத்திறனுள்ள பிரச்சாரங்களாக எமது பிரச்சாரங்களை இறைவன் அமைத்துத் தருவானாக!
பாதையின் அசுத்தங்களால் பயணங்கள் அழுக்காவதில்லை