ஒரே பிரயாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உம்ராக்கள் செய்யலாமா?
உம்ராவிற்குச் செல்பவர்களும் ஹஜ்ஜிற்கு செல்பவர்களும் தங்களது கடமையை நிறைவேற்றிய பின்னர் பல உம்ராக்கள் செய்யும் வழமை பலரிடம் காணப்படுகிறது. ஆயிசாப் பள்ளி என்று அழைக்கப்படக் கூடிய தன்ஈம் என்ற இடத்திற்குப் போய் இஹ்ராம் செய்து ஒன்றுக்குப் பல உம்ராக்களை நிறைவேற்றும் வழமையைக் காணுகிறோம்.
ஆனால் நபியவர்கள் மக்கா வெற்றியின் பின் 19 நாட்கள் மக்காவிலே தங்கினார்கள் அங்கே பல உம்ராக்கள் செய்ததற்கு எந்த ஆதாரமும் காணக்கிடைக்கவில்லை.
அதேபோல் தங்களது ஹஜ் தமக்கு இறுதியானது என்பதை அறிந்தும் கூட நபியவர்கள் ஹஜ்ஜிற்குப் பின் இன்னொரு உம்ரா செய்யவில்லை.
ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா அவர்களுக்கு தன்ஈம் என்ற ஹரமிற்கு வெளியே உள்ள இடத்திலிருந்து உம்ராவிற்காக இஹ்ராம் செய்யச் சொன்ன அந்த நிகழ்வு பின்வரும் காரணங்களால் ஆயிசாவிற்கு மட்டுமே உறியது எனப் புரிந்துகொள்ளலாம்.
1.நபியவர்களோடு அந்த ஹஜ்ஜின்போது இலட்சக் கணக்கானவர்கள் வந்திருந்தார்கள் அதில் பல ஆயிரக்கணக்கான பெண்களும் வந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களில் சிலருக்கு ஆயிசா அவர்களுக்கு ஏற்பட்ட உபாதை ஏற்பட்டே இருக்க வேண்டும். அவ்வாறிருந்தும் நபியவர்கள் அதைப் பொதுக் கட்டளையாக இடவில்லை.
2.அல்லது அவ்வாறு ஆயிசா ரலியல்லாஹ{ அன்ஹா அவர்கள் இஹ்ராம் செய்கிறார்கள் என்பதையறிந்து எந்தப் பெண்களாவது அவர்களைப் போன்று செய்தார்கள் என்பதற்கும் எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை.
3.ஒரு வாதத்திற்காக அவ்வாறு தன்ஈமிலிருந்து உம்ராவிற்காக இஹ்ராம் செய்யலாம் என வைத்துக் கொண்டாலும் அது அவ்வாறு உபாதை ஏற்பட்டு ஹஜ்ஜின்போது உம்ரா செய்ய முடியாமல்போன பெண்களுக்கு மாத்திரம் அச்சலுகை உறியது எனக் கொள்ளலாமே தவிர அவ்வாறு எந்தத் தடங்களும் ஏற்படாத பெண்களுக்கும் ஆண்களுக்குமான பொதுவான ஆதாரமாக எவ்வகையிலும் நாம் விளங்க முடியாது.
4.ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா அவர்களை தன்ஈமிற்கு அழைத்துச் சென்ற அவரது சகோதரர் அப்துர் ரஹ்மானும் கூட சகோதரியுடன் சேர்ந்து நானும் இஹ்ராம் செய்துகொள்வோம் என்று எண்ணவமில்லை செய்யவுமில்லை.
எனவே மீகாத்தைக் கடந்து சென்ற பின் எல்லைக்குள் இவ்வாறு பல உம்ராக்கள் செய்வதற்கு எந்த வித மார்க்க ஆதாரமும் கிடையாது என்பது தெளிவு. ஆனாலும் உம்ரா செய்த ஒருவர் மதீனாப்பள்ளிவாயலை தரிசிக்கச் செல்லும்போது துல் ஹ{லைபா என்ற மீக்காத்தைக் கடந்து செல்கிறார். இவர் விரும்பினால் மக்காவிற்குள் மறுபடி நுழையும் போது துல்ஹ{லைபாவில் வைத்து உம்ராவிற்காக இஹ்ராம் செய்துகொள்வதில் தவறு இல்லை. ஏனெனில் நபியவர்கள் இந்த எல்லைகளைப் பற்றிச் சொல்லும்போது
صحيح البخاري ـ 1524 – عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ وَلِأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ وَلِأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ وَلِأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ هُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ
“இந்த எல்லைகள் அந்த ஊர்வாசிகளுக்கும் அதைக் கடந்து செல்லும் ஏனையவர்களுக்கும் உரியது” என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ஆதாரம் : புகாரி 1524