ஒரு சமூகத்தின் சுய இருப்பு அதன் கலப்படமற்ற ஆன்மீகத் தனித்துவத்திலேதான் தங்கியிருக்கிறது என்பதால் காலத்திற்குக் காலம் இடத்திற்கு இடம் ஏற்படும் சமூகக்கொந்தழிப்புகளுக்கு அடிப்படைக் காரணமாக அதன் விழுமியங்களை நோக்கி எறியப்படுகின்ற மதவாத இனவாத கிரணங்களே முதன்மைக் காரணியாக இருந்துள்ளன. சமூகப்பற்றுள்ள ஆனால் வழிகாட்டலற்ற சிலரின் தவறான முடிவுகளுக்கும் உந்துதல்களுக்கும், சரியோ தவறோ சமூகக் குரல்தானே என்று அவைகள் ஒத்தூதப்படுவதற்கும் அச்சமூகத்தின் ஆன்மீகத் தனித்துவம் இனவாதப் பார்வையால் நோக்கப்பட்டு சுதந்திரத்தின் குரல்வலை வெளிப்படையாகவே நசுக்கப்படுவதுதான் முக்கிய தூண்டுதலாய் அமைந்துவிடுகிறது.
முஸ்லிம் பாடசாலைகளின் தோற்றத்திற்குத் தலையாய அம்சமாக விளங்குவது நம் சமூகத்தின் கலாச்சாரத் தனித்துவங்களையும் அடையாளங்களையும் பாதுகாப்பதுதான் என்றிருந்துங்கூட சடவாதக் காரணிகளும் லௌகீஹத்தை மையமாகக் கொண்ட படாடோபமான வாழ்வை நோக்கிய எத்தனங்களும் எமது அடையாளங்களையும் எமது உரிமைகளையும் பெறமுடியாத இடங்களில் ஆன்மீக உரிமை என்ற பெயரில் எம்மைக் குரலெழுப்பவைத்துள்ளன.
முன்வைக்கப்படும் நியாயங்களை மாத்திரம் கருத்திற்கொண்டு முன்னெடுப்பவர்கள் யாரென நோக்காமல் முன்னிறங்க முற்படுவது தருணம் பார்த்திருப்பவர்களுக்கு சாதகங்களை உருவாக்கிக் கொடுத்து பெறுவதற்கிருந்த மருதலிக்கமுடியாத உரிமைகளையும் உதாசீனப்படுத்துவதற்கு வழிகோலியது.
தம்மிடமுள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்றமாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும்போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவர்களுமில்லை.” (13:11)
எமது ஆன்மீக வறுமையும் மறுமையை இலட்சியமாகக் கொண்ட வாழ்வின் தடம்புறலலுமே எமது இன்றைய அவலநிலை என்பதை மேற்கண்ட வசனம் தெளிவாகச் சித்தரிக்கின்றது.
ஆன்மீகத்தை நோக்கிய சுவடுகள் வழியிலான எமது பயணமும் சுயநலமற்ற இறைவழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்ட தூய உள்ளங்களின் போராட்டமும் தான் கண்ணீர் வடிக்கும் எம் சமூகத்தின் அடிப்படைத் தேவையாகும்.