Friday, December 27, 2024

சகோதரி ரிஸானா நபீக் விவகாரம் (2013)

சகோதரி ரிஸானா நபீக் விவகாரம்

தற்போது மிகுந்த பரப்பை ஏற்படுத்தியிருக்கும் சகோதரி ரிஸானா நபீக் விவகாரம் தொடர்பில் இஸ்லாமிய வரம்புகளுக்குட்பட்ட நேர்மையானதும், நியாயமானதுமான ஒரு கண்ணோட்டத்தை இங்கே பகிரவிளைகின்றோம்.

நுழைய முன்பாக….

ஏதாவதொன்றை விமர்சிக்கும் போது தகுந்த ஆதாரம், நேர்மை, நடுநிலைமையான பார்வை போன்றன இன்றியமையாதவைகளாகின்றன. அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இந்தப்பண்புகளைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முறைகளைக் கொண்டிராத விமர்சனங்களால் நல்ல மாற்றங்களைத் திருத்தங்களை ஏற்படுத்த முடியாது என்பதுடன் அவை விமர்சனம் என்ற பேரால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட ஒருவர் மீது ஏற்படுத்தப்படும் பழிவாங்கலாக, சேறுபூசலாகவே கருதப்படும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

சகோதரி ரிஸானா நபீக் விவகாரம் தொடர்பான கருத்தாடல்கள், விமர்சனங்களை பார்க்கும் போது தனிப்பட்ட ஒருவர் மீதான அனுதாபம் என்ற பெயரில் சவூதியின் சட்டங்களைக் குறைப்பட்டுக் கொள்வதாக எண்ணி இஸ்லாத்தின் கொள்கைகள், சட்டங்கள் சர்வசாதரணமாக குறைகாணப்படுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சகோதரி ரிஸானா நபீக் அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானதுதானா? சவூதியரசு இவ்விடயத்தில் பக்க சார்பாக நடந்து கொண்டதா? போன்ற விடயங்கள் பற்றிப் பேசுவது தவறல்ல. ஆனாலும் அது இஸ்லாத்தின் சட்டங்களில் கையாடல் செய்கின்ற நிலைக்கு போய் விடக்கூடாது என்பதில் நாம் மிகுந்த அவதானத்தோடிருக்க வேண்டும். ஆனாலும் முஸ்லிம்களிலேயே ஒரு சாரார் மரண தண்டனை சட்டத்தையே கேள்விக் குறியாக விமர்சிக்கும் நிலையேற்பட்டிருக்கிறது. மார்க்க விளக்கமுள்ளவர்கள் என்று கருதப்படுவோர் கூட ‘அந்தக் காலத்து அரபுகளிடம் பழிக்குப்பழி வாங்கும் வழக்கமிருந்தது இஸ்லாம் அதனை அங்கீகரித்தாலும் கூட…….’ என்று பேசத் தலைப்பட்டுவிட்டனர். சவூதியை விமர்சிப்பதற்கப்பால் இஸ்லாம் விதித்துள்ள மரண தன்டனைச் சட்டத்தையே விமர்சிக்குமளவுக்கு இவர்களின் கருத்துக்கள் வளர்ந்துவிட்டன என்பதையே நாம் இங்கே சுட்டிக்காட்டுகிறோம். இஸ்லாத்துக்கு வெளியிலிருந்து வரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது ‘இஸ்லாம் சிறுபிள்ளை என்று கூடப்பார்க்காமல் தண்டிக்குமளவிற்கு இரக்கமற்றது. சாந்தி பிறந்த மண்ணிலேயே சாந்தி செத்து விட்டது’ என்று இஸ்லாத்தை முழுமையாகவே அவை பிழைகாண்கின்றன.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை சரியா? தவறா? சட்டங்களை அமுலாக்குவதில் சவூதியில் பாரபட்சங்கள் காட்டப்படுகின்றனவா? என்ற விடயங்களைப் பேசுவது இஸ்லாத்தைப் பாதிக்காது. தனிப்பட்ட ஒரு பார்வையாகவே அது அமையும். அப்படியான விமரிசனங்கள் ஆதாரங்களோடு முன்வைக்கப்படும்போது ஏற்பது ஒரு ஞாயஸ்தனின் கடமை. அதே வேளை மரண தண்டனை விடயத்திலே நாம் நெகிழ்வோமாயின் அது இஸ்லாத்தை விமரிசிப்பதாகவே அமையும்.

மரண தண்டனை என்பது இஸ்லாத்தில் ஒரு பகுதியாகும். எப்போது மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்? யாருக்கு வழங்கப்பட வேண்டும்? அதற்கான விசாரணை எப்படியிருக்க வேண்டும்? அதற்கான சாட்சிகளை எவ்வாறு கையாள வேண்டும்? அவை நிரூபிக்கப்பட்டால் எவ்வாறு தண்டிக்க வேண்டும்? தண்டப்பரிகாரத்தை எவ்வாறு வாங்குவது? வாங்கமலிருப்பதற்கு மாற்றுத்தரப்பிற்கு என்ன உரிமையிருக்கிறது? உடன்படிக்கை செய்தவரைக் கொன்றால் என்ன? தாய் பிள்ளையைக் கொலை செய்தால் என்ன செய்ய வேண்டும்? என ஒவ்வொன்றுக்குப் பிரத்தியேகமான சட்டங்கள் இஸ்லாத்திலுண்டு. மரண தண்டனையை எழுந்தவாரியாக இஸ்லாம் கூறவில்லை.

 ரிசானாவின் பிரச்சனை சம்பந்தமாக

2005ம் ஆண்டு மேமாதம் ரியாத் நகரில் தவாத்மீ என்ற இடத்துக்குப் பணிப்பெண்ணாக ரிஸானா நபீக் செல்கின்றார். அங்கு சென்ற சில நாட்களிலேயே கொலைக் குற்றச்சாட்டுக்குள்ளாகி பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றார். ‘4மாதக் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது அது தொண்டையில் கட்டியதால் நான் குழந்தையின் தொண்டையைத் தடவினேன். ஆனாலும் குழந்தை மரணித்து விட்டது’ என்று அவர் தனது வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறார். மூன்று முறை நடைபெற்ற விசாரனைகளிலும் அவர் இதையே கூறியிருக்கிறார். குழந்தையின் பெற்றோரின் வாக்கு மூலத்தில் ‘இப்பெண்மணிக்கும் எங்களுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. எமக்கிடையே இந்த சிக்கல்தான் கொலைக்கான காரணம்’ என்று கூறப்பட்டுள்ளது. பலதரப்பட்ட விசாரனைகள் நடாத்தப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்பு உதைபியா கோத்திரத்தைச் சேர்ந்த காயித் இப்னு நாயிப் இப்னு ஜுஸ்யான் என்ற குழந்தையை இப்பெண்மணி கொலை செய்ததாக் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. சவூதி சட்டப்படி விசாரனையின் பின்னர் மரண தண்டனைதான் என்பது உறுதியாகிவிட்டால் மூன்று மாதங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட தரப்பிடம் மன்னிப்பு அல்லது தண்டப்பரிகாரம் பெறுவதற்காக மூன்று தடவை அவகாசம் வழங்கப்படும். ஆனாலும் சர்வதேச அழுத்தங்கள், இலங்கை அரசின் தலையீடு போன்றவைகளால் மேலும் பல விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு இக்காலக்கெடு சுமார் ஏழு வருடங்கள் வரை நீடித்தது.

இச்செய்தி பற்றி மீடியாக்கள்

இச்செய்தியை மீடியாக்கள் கையாண்ட முறைகளுக்குப்பின்னால் பல உள்நோக்கங்கள் காணப்பட்டன. இதையொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி சவுதி அரசை முழுமையானளவில் சிலர் விமர்சிக்கத்துவங்கினர். சிலர் இதை வைத்து நபியவர்கள் காலத்திலும் இவ்வாறுதான் தண்டனைகள் வழைங்கப்பட்டன. இப்படியொரு மார்க்கம் மனித குலத்துக்குத் தேவைதானா? என்று இஸ்லாத்தையே விமர்சித்தனர்.

இவ்வழக்கு விசாரணைகள் நீடித்திருந்த ஆறு வருட காலமும் இப்பிரச்சினை தொடர்பில் விதவிதமாக விவாதிக்க மீடியாக்களுக்கு நல்ல சந்தர்ப்பமாகவிருந்தது.

இந்த சகோதரி வறுமையில் தவித்தவர் என்பதால் இவர் மீது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அனுதாபங்கள் அதிகரித்தன. அதிலும் தனது எதிர் கலாத்துக்காக ஒரு நல்ல வீட்டைக் கட்ட வேண்டும், திருமணம் போன்ற அவசியங்களால் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகச் சென்ற சில நாட்களிலேயே இவ்வாறு அசாதாரண நிலைமை அவருக்கேட்டபட்டமைதான் இவர் மீது மனிதாபிமானமுள்ள அனைவருக்கும் அனுதாபத்தை உண்டாக்கியது.

உணவில் எலிமருந்தைக்கலந்து கொடுத்து தாலா என்ற குழந்தையைக் கொலை செய்ததாக இந்தோனேசியப் பெண்மணி மீது குற்றம் சாட்டப்பட்டு அவ்வழக்கு இன்னும் நிலுவையிலுள்ளது. அதே போன்று மிஷாரீ என்ற குழந்தையைக் கொலை செய்ததாக எத்தியோப்பியப் பெண்ணொருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு அதுவும் நிலுவையிலுள்ளது. இதனால் இந்த நாடுகளைச் சேர்;ந்த பணிப்பெண்களுக்கு சவுதியில் நல்லபிப்பிராயம் குறைந்துள்ளது. பொதுவாக இலங்கைப் பணிப்பெண்கள் இவ்வாறான குற்றச் செயல்களிலீடுபடுவது மிகவும் அரிதென்பதால் ‘இலங்கைப் பணிப்பெண்கள் குற்றம் செய்வது குறைவு’ என்ற கருத்து பரவலாக சவுதி நீதி மன்றங்களில் காணப்படுகின்றது. இதுவும் இந்த தண்டனை காலந்தாழ்த்தப்பட் காரணமாயிருந்தது. இதற்கான முழு ஒத்துழைப்பையும் சவுதியரசு வழங்கியிருந்தது.

ஆனால் இந்நிலையை தலைகீழாக மாற்றி இலங்கை சகோதரி மீது அனுதாபக் தெரிவிக்கின்றோம் என்று கூறி ‘சவுதியர்கள் இறக்கமற்றவர்கள் இவ்வளவு கெஞ்சி மன்னிப்புக் கேட்ட பின்னரும் கொஞ்சம் கூட அவர்கள் இரக்கம் காட்டவில்லையே, ஆனால் ஓர் ஐரொப்பியப் பெண்ணாக இருந்தால் மன்னித்திருப்பாளல்லவா? இந்தப் பெண்மணி ஒரு முஸ்லிமாக இருந்தும் மன்னிக்கவில்லையே’ என்று சிலர் விமர்சித்தனர்.

இன்னும் சிலர் ‘இது கொலையே அல்ல வேண்டுமென்றே சவுதியரசு இதைக் கொலைக் குற்றச்சாட்டாக்கி அதை நரூபித்து, கேட்க ஆளில்லாத ஓரேழையென்பதற்காக இவ்வாறு தண்டனை வழங்கியுள்ளது’ என்று விமர்சித்தனர்.

இன்னும் சிலர் ‘அரச குடும்பத்தவராகவிருந்தால் அவருக்கு இவ்வாறு மரண தண்டனை கொடுப்பார்களா?’ என்று பேசுகின்றனர். ‘மேற்கு நாட்டவராவிருந்தால் இப்படி மரண தண்டனை வழங்கியிருப்பார்களா?’ என்று வேறு சிலர் கேட்கின்றனர். இன்னும் சிலரோ ‘அஜமி அரபி என்ற பாகுபாட்டினாலேயே இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்று விமர்சித்தனர்.

‘ரிஸானா நபீக்குடைய வயது 17 ஆகவே 17 வயதுடையவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது சர்வதேச சட்டங்களை மீறுவதாகும்’ என்று இன்னும் சில விமர்சனங்கள் கூறுகின்றன. இந்தக் கருத்தைப் பொறுத்த மட்டில் 17 வயதுக்குக் குறைந்தவர்களை பணிப்பெண்களாக சவுதியோ இலங்கையோ அனுமதிக்காது என்பதற்காக இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் முகவர்களே இந்த சகோதரியின் வயதைக் கூட்டிக் காட்டி முறைகேடாக கடவுச்சீட்டைத் தயார் செய்து அனுப்பியுள்ளனர். விசாரனையின் போது வயதைக் காரணம் காட்டி இவருக்குத் தண்டனை நிறேவேற்ற முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இதை மையமாக வைத்து ‘இலங்கை அரசு வயதை நிரூபித்தும் அதை சவுதியரசு கண்டு கொள்ளவில்லையே’ என்றும் ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

விமர்சனங்கள் ஓர் அலசல்

1-மைனர் பெண்ணைத் தண்டிக்கலாமா?

17 வயதுடையவரை தண்டிக்க முடியாது என்பது சர்வதேச சட்டமாகும். பருவ வயதையடைந்தவராயிருந்தால் அவரைத் தண்டிக்கலாம் என்பதுவே இஸ்லாமிய சடட்டம். நபியவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களை ஒன்பது வயதில் திருமணம் செய்தார்கள். பாதிமா (ரழி) அவர்களுக்கு 15 வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது. நபியவர்கள் காலத்துத் திருமணங்கள் 15 வயதுக்குள்ளேயே பெரும்பாலும் நடைபெற்றுள்ளன. பருவ வயதையடைந்தால் தொழுகை நோன்பு போன்ற இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுவது கட்டாயமாகின்றது. பருவ வயதையடைந்தவர் கடட்டாயம் தொழவேண்டும். தொழாவிட்டால் அவரைத் தண்டிக்க வேண்டும். என்பதுவே இஸ்லாமிய சட்டமாகும். எனவே யுனிஸெப் சட்டங்களையெல்லாம் நாம் இங்கு கவனத்தில் கொள்ள முடியாது. ஆகவே 17 வயதுடையவரைத் தண்டிக்க முடியாது என்பதை முஸ்லிம்களாகிய நாம் சொல்லவே கூடாது.

2-மேலைத் தேயவராக இருந்தால் தண்டித்திருப்பார்களா?

‘மேற்கு நாட்டவராவிருந்தால் இப்படி மரண தண்டனை வழங்கியிருப்பார்களா?’ ‘அஜமி அரபி என்ற பாகுபாட்டினாலேயே இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்றெல்லாம் பேசுவதற்கு யாராவது சவுதி சட்டங்கள் தொடர்பில் முறையாக அறிந்துள்ளார்களா? அங்குள்ள நீதி மன்றங்களுக்குச் சென்று வழக்கு விசாரனைகளை, தீர்ப்புக்களையோ பார்த்தார்களா? அல்லது நல்ல முறையில் அவைகளை வாசிப்பு செய்துவிட்டுத்தான் பேசுகிறார்களா என்றால் ஒரு சிலறைத் தவிர அதிகமானவர்களிடமிருந்து இல்லையென்றே பதில் வரும். எனவே எதையும் ஆதாரத்தோடுதான் பேசவேண்டும். ஆதாரமில்லாவிட்டால் தெரியாது என்று சொல்லியிருந்துவிட வேண்டும். ஆதாரமின்றி இதை ‘நீதி’ என்று சொல்லவும் கூடாது. ஆதாரமின்றி ‘அநீதி’ என்று சொல்லவும் கூடாது.

சென்ற வருடம் மாத்திரம் 76 பேருக்கு சவுதியில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மேலைத்தேயமே சொல்கின்றது. 76 பேர் சட்டத்தைக் காரணம் காட்டிக் கொல்லப்பட்டார்கள் என்று மனித உரிமை பேசியவர்கள் அவ் 76 பேரும் 76 பேரைக் கொன்றார்களே அது பற்றிப் பேசவில்லை என்பதுவே இங்கே வேடிக்கையாகும்.

ஸவுதி விமான சேiவையில் பணிபுரிந்த இலங்கைப் பெண்ணுக்கும் அமெரிக்கரொருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டு பின்னர் முறைப்படி இருவரும் திருமணம் முடித்து வாழ்கையில் இருவருக்குமிடையே முரன்பாடுகளேற்பட்டு நாளடைவில் இப்பெண் காணாமல் போயுள்ளார். பின்னர் நடைபெற்ற விசாரனைகளின் பின்பு இப்பெண்மணியின் கணவரான அமெரிக்கரே இவரைக் கொலை செய்துள்ளார் என்பது நிரூபணமாகின்றது. உடனே குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அரசு குற்றவாளியாகக் கண்டதும் தண்டனை கொடுக்கப்படுவதில்லை. குற்றவாளியின் தரப்பில் ஏதேனும் நியாயங்களுண்டா என்பதையறியவே விசாரனை மேற்கொள்ளப்படுகின்றது. ஆனாலும் வெகு விரைவில் இந்நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

‘மேற்கு நாட்டவராவிருந்தால் இப்படி மரண தண்டனை வழங்கியிருப்பார்களா?’ என்று இந்தப் பிரச்சனையில் கேறபது எவ்வளவு அறிவீனம்.

அமெரிக்கருக்கு, ஐரோப்பியருக்கு மரண தண்டனை வழங்குவதை விடப் பெரிய பிரச்சினையாகவே ஸவுதியரசு இதைப்பார்த்தது. அமெரிக்கருக்கோ, ஐரோப்பியருக்கோ தண்டனை வழங்கும் போது அந்தந்த நாட்டு அரசுகளால் இராஜதந்திர ரீதியில் நெருக்கடியேற்படலாம் என்பதற்காக சவுதியரசு இந்நாட்டவர்களுக்குத் தண்டனை வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றது என்று சொன்னால் ரிஸானா நபீக் விவகாரம் அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாண்டி சர்வதேசப்பிரச்சினையாகிவிட்டதால் சர்வதேசத்தையே சவுதி பகைக்கவேண்டியேற்படலாமல்லவா? சர்வதேசளவில் சவுதி இராஜதந்திர நெருக்கடியை எதிர்கோள்ளலாமல்லவா? உண்மையும் இதுதான். ஐரோப்பிய ஒன்றியம், யுனிஸெப் போன்ற அமைப்புக்கள் இது விடயத்தில் சவுதியை மிகக்கடுமையாக எதிர்த்துள்ளமை இதற்குப் போதுமான சான்றாவுள்ளதே. எனவே மேற்கத்தேயத்துக்கு ஆதாரவாக சவுதி செயற்படுகின்றதென்றால் இந்த மரண தண்டனையை சவுதியரசு நிறைவேற்றமல் விட்டிருக்கவேண்டும். முஸ்லிம்களின் ஆதாரவும் இதற்கு இருப்பதுதான் முழு உலகும் கைகோர்த்து சவுதியை இதில் எதிர்ப்பதற்கான காரணமாகும்.

3-அரச குடும்பத்தவராகவிருந்தால் மரண தண்டனை கொடுப்பார்களா?

அரச குடும்பத்துக்குள்ளேயே ஏராளமானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகவல்கள் எமக்குத் தெரியாமல் இருக்கலாம். 1970 களில் மன்னர் காலிதுடைய ஆட்சிக்காலத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த மஷாஇல் பின்த் பஹ்திப்னு முஹம்மத் ஆலு ஸுஊத் என்ற பெண்மனிக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது. எழுபதுகளில் இது பெரியளவில் சர்வதேச மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்பெண்மணிக்கு வழங்கப்பட்ட தண்டனை அநீதியானது என கொக்கரித்த மேற்குலகம் டெத் ஒப் எ பிரின்ஸஸ் என ஒரு படத்தை தயாரித்தது. இதனால் ஸஊதிக்கான பிரிடிஷ் தூதுவரை ஸஊதி வெளியேற்றியது.

பஹ்த் இப்னு நாயிப் இப்னு ஸுஊதிற்கு 19 வயதான நிலையின் மரண தண்டனை பீடம் வரை கொண்டுவரப்பட்டு உரியவரான ஸுலைமான் அல்காலி மன்னித்ததால் விடுவிக்ப்பட்டார். இது 2004 காம் ஆண்டு நடந்தது. உதாரணத்திற்காகவே இவைகளை சொன்னேன். நிறையவே செய்திகள் உண்டு.

அதற்காக நூறு சதவீதம் அங்கே சட்டங்கள் சரியாக நடை முறைப்படுத்தப்படுகின்றது என்று நாம் சொல்ல வரவில்லை. தெரியாமல் சில வலைவு நெழிவுகள் இடம் பெற்றிருக்கலாம். சவுதிப்பிரஜைகளுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகின்றன. இதற்கு ஏராளமான ஆதாரங்களுண்டு.

4-ரிஸானா நபீக் மீதான வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லையா?

இவ்வாறு கூறுவோர் எத்தனை வழக்கு விசாரணைகளைப் பார்த்திருப்பார்களோ அல்லது வாசித்திருப்பார்களோ தெரியவில்லை. பதிமூன்று நீதிபதிகள் விசாரிக்கும் வரைக்கும் மரண தண்டனை அங்கே நிறைவேற்றப்படமாட்டாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றதாக உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர். ‘குழந்தைக்கு நான் பாலுட்டிய போது அது குழந்தையின் தொண்டையில் இறுகியதால் குழந்தையின் தொண்டையை எனது கையினால் நான் தடவினேன்’ என்பதாக சகோதரி ரிஸானா நபீக்கின் வாக்கு மூலத்தில் காணப்படுகின்றது. இதை வைத்தே பலரும் ‘யாராவது இதைக் கண்டார்களா?’ என்று தமக்குத் தோன்றியதையெல்லாம் கூறிவருகின்றனர். விசாரனையை மொழி பெயர்த்ததில் சிக்கலுள்ளது என்று கூறப்பட்ட போது மொழிபெயர்ப்பாளரும் மாற்றப்பட்டார். மூன்று முறை அந்த சகோதரியிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. இலங்கை, இந்தியர்களே இவ்வழக்கில் மொழிபெயர்ப்பாளர்களாவிருந்துள்ளனர் இவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் இது தொடர்பான தகவல்களை நன்கு அறிந்து கொள்ள முடியும்.

சகோதரியின் வாக்கு மூலத்திலிருந்து குழந்தை அவரது கையிலேயே இறந்தது என்பது உண்மையாகின்றது. மருத்துவ அறிக்கையில் குழந்தையின் கழுத்து நெறிக்கப்பட்டமை, ஆத்திரத்தில் குழந்தையை பாரதூரமாக நடாத்திய விதம் போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன. சம்பவ தினத்தில் அவருடன் வேறெவரும் இருக்கவுமில்லை குழந்தையின் கழுத்து நெறிக்கபட்டமையயும் மருத்தவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது இவ்விரண்டையும் வைத்தே குற்றம் நிரூபணமாயிருக்கின்றது.இங்கே ரிசானா குழந்தை மரணிக்கும் பொழுது நான் இருக்கவில்லை என்றோ அல்லது வேறு வகையிலோ சொல்லியிருந்தால் குழந்தை கொல்லப்பட்டது நிச்சயமாகவும் கொன்றது யாரென்பது ஐயமாகவும் இருந்திருக்கும். ஆனால் இங்கு ரிசானா இறக்கும் போது தனது இருப்பை உறுதியப்படுத்தியமையும் எடொமிக் மெடிகல் டெஸ்ட் இதை உறுதிப்படுத்தியமையுமே ரிசானாவை நீதிமன்றம் குற்றவாளியாகக் கண்டமைக்கான காரணம்.

சர்வதேச அழுத்தங்களுக்கிடையில் தீர்ப்பு வழங்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றியவர்களுக்கு இந்த நியாயங்கள் தெரியாமல் போயிருக்குமா? தக்க ஆதாரங்களின்றி குற்றம் நிரூபணமாகியிருக்குமா? என்பதையும் ஒரு கனம் நாம் சிந்திக்க வேண்டும். சுருங்கச் சொல்வதாயின் ‘இந்தத் தீர்ப்பு பிழையானது’ என்று நாம் சொல்வதற்கு நம்மிடம் என்ன சான்றுகள் காணப்படுகின்றன? எத்தனை சவுதி நீதி மன்றங்களுக்குச் சென்று எத்தனை விசாரனைகளை நாம் பார்த்துள்ளோம்? சவுதியின் சட்டங்கள், நீதிமன்றங்கள் தொடர்பாக என்ன அறிவு நம்மிடம் காணப்படுகின்றது? போன்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேடவேண்டியுள்ளது.

எனவே சகோதரி ரிஸானா நபீக் அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி நாம் பேசும் போது உணர்ச்சி வசப்படக்கூடாது. ஆவேசப்படக்கூடாது. ஆதாரங்களின்றி, தக்க அறிவின்றி கருத்துக்களை முன்வைக்கக்கூடாது என்பதைக் கவனத்திற்கொள்ளவேண்டும். (தொடரும்)

5-குழந்தையின் தாயாருக்குக் கொஞ்சம் கூட இரக்கமில்லையா?

‘சர்வதேச சமூகம் வேண்டியும், இலங்கை ஜனாதிபதி வேண்டியும் அந்த அரபுத்தாய் மன்னிக்கவில்லையே. கொஞ்சம் கூட அவர் இறங்கவில்லையே. அவ கல்நெஞ்சம் கொண்டவ…..’ என்று சிலர் கூறுகின்றனர். இப்பிரச்சினையை சரியாக முறையில் அவதானித்தால் இக்குழப்பத்திலிருந்து தெளிவு பெறலாம். ரிஸானா நபீக்குக்குத் தண்டனை வழங்காமலிருப்பதுவே சவுதியரசின் முழுமையான எதிர்பார்ப்பாகும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சவுதியரசு முன்னெடுத்திருந்தது. இப்பிரச்சினை சர்வதேசமயமானதே இதற்குக் காரணமாகும். இதை வாசிக்கும் உங்கள் குழந்தை கொல்லப்படுகிறது. நீங்கள் ஒருவரை குற்றவாளி என நம்புகிறீர்கள்.இதை கோட்டிற்கு கொண்டுபோக மாட்டீர்களா? பிரச்சனையாக மாற்ற மாட்டீர்களா? கோட்டுக்கு போவது மன்னிக்கவா? தண்டிக்கவா?. தண்டிக்கத்தான் ஆனால் மரண தண்டனையில்லாமல் வேறு தண்டனை வழங்கத்தான் வழக்குப் பதிவு செய்கிறோம் என்றால் ஸஊதி குறைந்த பட்ச தண்டனை என கொலைக்கு எந்தத் தண்டனையும் இல்லை. ஒன்றேன் மரண தண்டனை அல்லது மன்னிப்பு. குழந்தையை இழந்த அந்த தாயிற்கு ஸஊதியில் குணப்படுத்த முடியாது என வைத்தியர்களால் கைவிடப்பட்ட ஒரு குழந்தையும் இருக்கிறது. இது அவரது வேதனையi அதிகப்படுத்தியிருக்கலாம். எனினும் மன்னிப்பே மகிச் சிறந்தது என்பதை நான் மறுக்கவில்லை.

6-பிரச்சினையைத் தீர்க்க சவுதியரசு மேற்கொண்ட முயற்சிகள்

சவுதியரசர் அப்துல்லாஹ் ரிஸானாவை மன்னிப்பதற்குப் பரிகாரமாக முப்பது இலட்சம் ரியால்களைத்தர முன்வந்தார். ஆனால் அந்தத் தாய் இதற்கு சம்மதிக்கவில்லை. சவுதியின் குற்றவியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவுள்ள வெளிவிவகார அமைச்சர் அமீர் நாயிப் பின் அப்தில் அஸீஸ் அவர்கள் ரிஸானாவின் மன்னிப்புக்காக எவ்வளவோ முயற்கித்தார் ஆனாலும் பலன்கிட்டவில்லை. அவரும் மரணித்து விட்டார். இவருக்குப் பதிலாக நியமனம் பெற்ற இளவரசர் ஸல்மான் இக்குடும்பத்தோடு ரிஸானாவுக்காகப் பேசினார். சவுதியில் குணப்படுத்த முடியாதளவுக்குக் கடுமையான நோயினால் பீடிக்கப்பட்ட தமது மறு குழந்தைக்கு ஜேர்மனியில் சிகிச்சையளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுப்பதாகவும் குழந்தையின் தாயிடம் கூறினார் அந்தத் தாய் இதற்கும் இணங்க மறுத்துவிட்டார். இலங்கையிலிருந்து ஒரு குழு சவுதி சென்று உதைபியாக் கோத்திரத் தலைவருடன் பேசியது. அதற்கும் தாய் சம்;மதிக்கவில்லை. இதையெல்லாம் வைத்து ‘இவ கல்நெஞ்சம் கொண்டவ’ என்று சொல்கிறார்கள். கல்நெஞ்சம் கொண்ட தாயாக இருந்தால் நிச்சயமாக முப்பது இலட்சம் ரியால்களை விரும்பியிருப்பார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இது இந்த உலகுக்கு உணர்த்துவதெல்லாம் மன்னரோ, ஆட்சியாளரோ எவரும் கையடிக்க முடியாத சட்டம் இஸ்லாத்தில் மட்டுமே இருக்கின்றது என்பதையே. இதைக் கொச்சைப்படுத்துவதற்காகவே ரிஸானா நபீக் மீதான அனுதாபம் என்ற பேரில் சவுதி மீது விமர்கனக் கனைகள் அள்ளி வீசப்படுகின்றன. உலகத்தில் எந்தத் தலைவர் கையடித்தாலும் கையடிக்க முடியாத இறுக்கமான இறைவனது சட்டங்களால்தான் பலஹீனர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்வில் நம்பிக்கை ஏற்படும்.

7-பொது மன்னிப்பு வழங்கிய ஸஊதி ரிசானாவிற்கு ஏன் வழங்கவில்லை?

சவுதியில் அண்மையில் சிலருக்கு மன்னரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதை வைத்து ‘ரிஸானாவுக்கும் மன்னர் பொது மன்னிப்பு வழங்கியிருக்கலாம்தனே’ என்று சிலர் கூறுகின்றனர். உலக நாடுகளில் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்புக்கும் ஸவுதியின் மன்னிப்;புக்கும் வித்தியாசங்களுள்ளன. வீதிச்சட்டங்களை மீறுதல் கடவுச் சீட்டுப் பிரச்சனைகள் போன்ற பொதுச் சட்டங்களுக்கே பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது. விபச்சாரம், களவு, கொலை போன்ற குற்றங்களுக்கு மன்னரால் பொது மன்னிப்பு வழங்க முடியாது. ஏனென்றால் அது இஸ்லாத்தின் சட்டமாகும். அதில் அணுவளவையும் எவராலும் மாற்ற முடியாது.

உலக நாடுகளிலிருந்து சகோதரி ரிஸானா நபீகிக்கு ஆதாரவாக அனுதாபங்கள் குவிவதைப் போன்று சவுதியிலிருந்தும் பலவிதமான கருத்துக்கள் இது தொடர்பில் வந்தவண்ணமுள்ளன. ‘ஏழு வருடங்கள் இதைப் பிற்போடப்பட்டிருக்கிறதே இதெல்லாம் ஓர் இஸ்லாமிய நாடுதானா?’ என்று கூறக்கூடிய சவுதிப்பிரஜைகளுமுள்ளனர். ‘பாவம் அந்த சகோதரி(ரிஸானா) வறுமையின் காரணமாக உழைக்கத்தானே இங்கு வந்திருப்பார்’ என்று கூறக்கூடிய சவுதிப்பிரஜைகளுமுள்ளனர். இவ்விடயத்துக்கு சவுதியில் ஆதரவுமுள்ளது. எதிர்ப்புமுள்ளது. எனவே இது போன்ற இன்றியமையாத பகுதிகளை அறிந்து கொள்ளாமல் இவ்விடயம் தொடர்பில் தர்க்கம் செய்யக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள்

1- இஸ்லாத்துக்கு முரணாக சவுதியரசு விதித்துள்ள சட்டங்களில் ஒன்றுதான் மஹ்ரமின்றி பணிப்பெண்களை ஸவுதிக்கு வர அனுமதிப்பது. ஹஜ், உம்ரா, கல்வி போன்றவற்றுக்கு மஹ்ரமின்றி பெண்களை தம் நாட்டுக்கு அனுமதிக்காத தனது பெண்கள் வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதிக்கா ஸஊதி அரசு கொலைக்குக் கொலை என்ற சட்டத்தை அமுல் நடத்துவதைப் போன்று பணிப்பெண்கள் விடயத்திலும் மார்க்கம் சொல்வதைப் போன்று மஹ்ரம், அஜ்னபீ சட்டத்தை அமுல் நடத்த வேண்டும். இதை நடை முறைப்படுத்த முடியாமைக்காக அவர்கள் முன் வைக்கும் காரணங்கள் பொருத்தமற்றதாகவே உள்ளன.

2- வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகள் தம் நாட்டிலிருந்து பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோருக்குக் கடுமையான சட்டங்களை விதித்துள்ளதைப் போன்று இலங்கையும் அன்னியச் செலாவணியைக் கவனத்திற்கொள்ளாது கடுமையான சட்டங்களை அமுலாக்கவேண்டிய தருணமேற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் முன்னெடுக்கவேண்டியுள்ளது. இன்னும் பல ரிஸானாக்கள் உருவாவதைத் தடுக்கவேண்டியுள்ளது.

3- அனுதாப வசனங்களைக் கூறிப் புள்ளரிப்பிழாழ்த்தும் நம் சமூகமும், தனவந்தர்களும் ஏழைகளுக்குப் போய் சேர வேண்டிய ஸகாத் பணங்களை முறையாக அவர்களுக்கு சென்றடயும் வழியை ஏற்படுத்த வேண்டும். ‘தன் திருமணத்துக்காக ஒரு வீட்டைக்கட்ட வேண்டும், குடிசையில் வாழும் தன் குடும்பம் ஏழ்மையிலிருந்து ஓரளவாவது மீளவேண்டும்’ என்ற நோக்கங்களுக்காகவே ரிஸானா நபீக் சவுதி சென்றாரென்றால் வறுமையில் தவிக்கும் இத்தகைய குடும்பங்களுக்கு ஸகாத் பணம் உரிய முறையில் போய் சேருமாயின் குமரிப்பெண்கள் ‘வேலைக்காரிகளாய்’ வெளிநாடு செல்லும் அவலத்துக்கு முடிவுகட்டலாம்.

4- கொள்ளை லாபங்களுக்காக சட்டவிரோதமாகக் கடவுச்சீட்டுக்களைச் செய்து அப்பாவிப்பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் முகவர்களுக்கெதிராக இலங்கை அரசு மிகக்கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆள்மாறாட்டம், மனிதகடத்தல் போன்றவற்றின் மொத்த வடிவமே வெளி நாட்டுக்குப் பணிப்பெண்களை ஏற்றுமதி செய்வதாகும். ரிஸானா நபீக்குடைய கடவுச்சீட்டு போலியான வயது விபரங்களை வைத்துத் தயார் பண்ணப்பட்டது என்ற உண்மை அம்பலமாகி சர்வதேச சமூகத்திடம் இலங்கைக்கு; தலை குணிவை ஏற்படுத்திய இவர்களை விட்டு வைக்கக்கூடாது.

5- வயதுக்கு வந்த தமது பெண்பிள்ளைகளை உழைப்பதற்காக வெளி நாட்டுக்கு அனுப்பும் தந்தைமார்கள் ஒன்றைப் புரியவேண்டும். உணவளிப்பவன் அல்லாஹ் ஒருவனே இப்புவியிலுள்ள அனைவருக்கும் அல்லாஹ்வே ரிஸ்க் வழங்குகின்றான். அல்லாஹ் எழுதியுள்ள ரிஸ்க் அவரவருக்கு அவ்வப்போது கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது. தமக்கு எழுதப்பட்ட ரிஸ்க் முடிந்த பின்னரே ஒருவர் மரணிக்கின்றார் என்ற புரிதலை இவர்கள் மனங்களில் கொள்ளவேண்டும். பிள்ளைகளை வேலைக்கனுப்பி பிழைப்பு நடாத்த முனையக் கூடாது. தவக்குல், நேர்மை போன்ற உயரிய பண்புகளைப் பற்றிய விரிவான விளக்கங்கள் நம் சமூகத்துக்குப் போதிக்கப்பட வேண்டும்.

6- சகோதாரி ரிஸானா நபீக்குக்கு ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண நிலைக்கு நமது இளைஞர்களுக்கும் பங்குண்டு. சீதனக்கொடுமை தலைவிரித்தாடுவதானேலேயே குமரிப்பெண்கள் வெளிநாடு செல்லவேண்டியுள்ளது. தனக்கு வீட்டைக்கட்டித் தரவேண்டிய மணமகனுக்காக தாமே வீட்டைக்கட்டவேண்டிய நிலை பெண்கள் மீது விதியாக்கப்பட்டு விட்;டது. தமது மணவாழ்வுக்காக தம்மையே இழந்த பெண்மணிகள் ஏராளம். சொந்தங்களோடு சுகமாய் உறவாட வேண்டிய வயதில் பிச்சையெடுக்கும் இளைஞர் வர்க்கத்திற்காய் வெளிநாட்டில் உதிர்ந்த பெண்களில் ஒருபெண்ணே ரிசானா. இந்நிலை மாற வேண்டுமானால் நமது இளைஞர்கள் முன்வரவேண்டும். சீதனம் எடுக்கமாட்டேன் என்மனைவிக்குரிய அனைத்தையும் நனே நிறைவேற்றுவேன் எனும் மன உறுதி இளைஞர்களிடையே வேறூன்ற வேண்டும். சீதன விருந்துகளைப் புறக்கணிக்க வேண்டும். இதுவே ரிசானாக்களுக்கு நாம் செய்யும் ஒரு பரிகாரம். இது காலத்தின் கட்டாயமான மற்றங்களிலொன்றாகும்.

யாஅல்லாஹ் இந்தத் தீர்ப்பு சரியானதாக இருந்தால் இந்தத் தண்டனையை அவரது குற்றத்திற்கான பரிகாரமாக மாற்றி ஜன்னதுல் பிர்தவ்ஸில் அந்தப் பெண்மனிக்கு வாழ்வளிப்பாயாக. இந்தத் தீர்ப்பு வேண்டுமென்றே அநியாயமாக வழங்கப்பட்டிருந்தால் அவர்களைத் தண்டிப்பதோடு இன்று இஸ்லாமிய ஷரீஆ பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த உயிர் நீத்த ஷஹாதத் எனும் கூலியை என் சகோரிக்கு வழங்க உன்னை என் உளமுறுக மன்றாடிக் கேட்கிறேன். தான் அநியாயமாகக் கொல்லப்பட்டிருந்தால் நிச்சயம் ரிசானாவின் கழுத்தில் வால் வைக்கப்பட்ட நேரம் உன் கருணை இந்த உலகத்தோரின் கருணையை விட மிக நெருக்கமாக இருந்திருக்கும். நான் அநியாயமாகக் கொல்லப்படுகிறேன் என என் சகோதரியின் உருக்கமான உணர்வை எம்மை விட அறிந்தவன். யாஅல்லாஹ் நீதியை நிரூபித்துவிடு. நான் உற்பட அறிந்தோ அறியாமலோ ரிசானாவிற்காக அழுத உள்ளங்களின் பாவங்களை மன்னித்துவிடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts