Tuesday, October 8, 2024

ஆட்சி பேசும் இயக்கங்களது தஃவாக்கள நிலைகள்

1-அரபு நாடுகளை விமரிசிப்பதையும் ஈரானைப் பாராட்டுவதையும்  கொள்கையாக்கிக் கொண்டமை.

 இவர்கள் சவூதியை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள். தவ்ஹீதை தனது ஆட்சிக் கொள்கையாகக் கொண்டமைக்குத்தான் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் சர்வதேச அளவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் இழப்புகளைச் சந்திக்கின்றார்களோ அங்கெல்லாம் சென்று அவர்களுக்கு உதவுவதெல்லாம் அதே சவூதிதான். இந்தோனேசியாவில் சுமார் ஐந்து இலட்சம் முஸ்லிமகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியபோது அங்கு சென்று தக்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததும் அந்த நாடுதான். சர்வதேச நிவாரண அமைப்பு என்ற நிருவனத்தின் தலைமை நிருவனமான ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமி சவூதியில்தான் உள்ளது.

ஏதோ சர்வதேச முஸ்லிம்கள் பற்றி தமக்குத்தான் கவலையுள்ளது என்று பிதற்றிக் கொள்ளும் இவர்கள் செய்வதெல்லாம் பலஸ்தீனையும், கஷ்மீரையும், செச்னியாவையும் வைத்து இசையுடன் கலந்த பாடல்கள் வெளியிடுவதும், கவிதை எழுதுவதும்தான். இதனால் இவர்களுக்கு நல்ல வருவாய்தான் ஏற்பட்டதே தவிர வேறொன்றும் விளைந்ததில்லை. இந்தப்பாடல்களாலும், கவிதைகளாலும் உணர்வு பெற்ற யாராவது பலஸ்தீனுக்குச் சென்று போராடியுள்ளாரா? ஆனால் இவர்கள் விமரிசிக்கும் சவூதியிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இது போன்ற நாடுகளுக்குச் சென்று போர் புரிந்து கொல்லப்படுகின்றார்கள். அது போல மற்றைய அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு போராடுகின்றார்கள். இப்போராட்டங்கள் பற்றிய ஆவணங்களைப் பார்;த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். இலங்கையிலிருந்து ஒருவர் கூட இவ்வாறு போராடுவதற்காக பலஸ்தீனுக்கோ, கஷ்மீருக்கோ அல்லது வேறெந்த முஸ்லிம் நாட்டுக்கோ செல்லவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். ஈரானின் ‘கும் நகரம்’ வரை போகும் இவர்களுக்கு ஏன் பலஸ்தீனுக்குப் போகமுடியாது. எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள்தான். இவைகளைப் பார்ப்பதால், படிப்பதால் உணர்வுகள் தூண்டப்படலாமே தவிர வேறெதுவும் ஏற்படப் போவதில்லை. உணர்வுகளைத் தட்டியெழுப்பும் வகையில் நாமும் பேசுகிறோம். எழுதுகிறோம். அப்படியாயின் எங்களை  விட மேலதிகமாக இவர்கள் செய்துள்ளது சீடி வெளியிட்டதும், சஞ்சிகைகளில் சில பக்கங்களை ஒதுக்கியதும்தான். பலஸ்தீனுக்காகப் பேசும் இவர்கள் மீது அரசாங்கத்தின் சந்தேகப்பார்வை விழும் போது ‘நாமும் அரசுடன்தான் உள்ளோம்’ என்று அரசையும் சமாளித்துக் கொள்கிறார்கள்.

2-மேற்கத்தேய மோகம்

‘மேற்கத்தேயத்தை நாம் வண்மையாக எதிர்க்கின்றோம்’ என்று பரவலாக இவர்கள் பேசுவதையும், எழுதுவதையும் காணலாம். ஆனால் இதைச் சொல்லும் இவர்களின் இலட்சணத்தைப் பார்த்தால் முகத்தில் தாடியில்லை. சுத்தமாய் முகச்சவரம் செய்திருப்பார்கள். கோட்டும், டைய்யும் அணிந்து கரண்டைக்குக் கீழ் ஆடை அணிந்திருப்பார்கள், பெண்கள் ஆண்களோடு சகஜமாகப் பழகலாம் என்பார்கள், பெண்கள் பாட்டுப்படலாம், நடனமாடலாம் என்று சொல்வார்கள்…… இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். இதைத்தானே மேற்கத்தேயக் கலாசாரம் என்கிறோம். மேற்கத்தேயத்தை எதிர்ப்பவர்கள் இவற்றையெல்லாம் வெறுக்க வேண்டுமே?

3-சினிமாவை ஊக்குவித்தல்

சினிமாவைப் பற்றி இவர்களிடம் வித்தியாசமான கருத்துக்கள் காணப்படுகின்றன. ‘இஸ்லாமிய சினிமாவொன்று உருவாகல் வேண்டும். அதிலும் ஈரானிய சினிமா தற்போது நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றது. சர்வதேச கவனத்தைத் தன்பால் அது ஈர்க்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் ஈரானில் சினிமாவுக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. அவை நீக்கப்பட வேண்டும்……..’ என்று ஈரானிய சினிமாவைப் புகழ்ந்து கொண்டு போகிறார்கள். கடந்த 2007 மார்ச்சில் வெளிவந்த ‘எங்கள் தேசம்’ பத்திரிகையில் ‘தடைகளுக்கு மத்தியில் முன்னேறி வரும் ஈரானிய சினிமா’ என்று ஒரு கட்டுரை வரையப்பட்டிருந்தது. அதில் கீழ்வரும் செய்திகள் கூறப்படுகின்றன. ‘ஈரானியப் புரட்சியின் பின் அங்கு பெண் இயக்குனர்களுக்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது’ என்று இரு பெண்களின் பெயர்கள் கூறி தொடர்ந்து செல்லும் அவ்வாக்கத்தில் ‘இவர்கள் போன்ற பெண் இயக்குனர்கள் பெண்களைக் கருப்பொருளாகக் கொண்ட படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றுள் ‘நர்கிஸ்’ என்ற படம் அனைவராலும் வரவேற்கப்பட்ட ஒரு திரைப்படமாகவிருந்தது. பலமான சட்டங்களுக்கு ஊடாக ஏற்படுகின்ற ஆண்,பெண் உறவு முறைகளில் ஏற்படுகின்ற உன்னத சந்தர்ப்பங்களை உளப்பூர்வமாக சமர்ப்பிக்க அவள் முன்வந்துள்ளாள். ஓர் அழகான பெண்ணையும் மற்றும் அவளுடன் இணைந்து கொள்கின்ற ஒரு கள்வனையும், அவனின் சட்டபூர்வ மனைவியையும் கருப்பொருளாகக் கொண்ட ‘நர்கீஸ்’ சர்வதேச விருது பெற்ற திரைப்படமாக மாறியது. காதல் எனும் மாயைக்காக வேண்டி சமுதாயக் கட்டுப்பாடுகளையும், விழுமியங்களையும் தகர்த்தெரிகின்ற இளைஞர்கள் தொடர்பாக இத்திரைப்படம் அலசி ஆராய்கின்றது. இம்முறை லண்டன் சர்வதேச திரைப்பட அரங்கில் பங்கு கொண்டிருந்த ‘டைம் போஸ்’ என்ற திரைப்படமானது அலி றிஸா ஆமினீ எனும் இளம் திரைப்பட இயக்குனரால் உருவாகியதாகும். அது மாத்திரமின்றி படர்ந்த பனியின் மீது பயணிக்கின்ற ஒரு கற்பினிப் பெண்ணும் அங்கே காட்சி தருகின்றாள் அவள் தனது காதலனைத் தேடியவாறு வருகின்றாள் அவள் தன்னைக் கைவிட்டுச் சென்ற காதலன், மற்றும் தான் வயிற்றில் சுமக்கின்ற குழந்தையோடும், இறைவனோடும், தன்னோடும் அவளது பயணம் நெடுகிலும் நீண்டதொரு சம்பாசனையோடு செல்கின்றாள்.’ என்று கட்டுரை தொடர்கின்றது இப்படி கேடு கெட்ட காட்சிகளை உன்னதப்படுத்தி ஜமாஅதே இஸ்லாமியின் எங்கள் தேசம் சஞ்சிகை எழுதுகிறது. . சினிமா என்றாலே குப்பைதான் என்பதில் யாரும் முரண்பட முடியாது. அதில் ஈரானிய சினிமாவும் விதிவிலக்காகாது. இதற்கு வேறு இஸ்லாமிய சினிமாவென்று முத்திரை குத்துவது எவ்வகையிலும் ஏற்கமுடியாதது. லண்டன் திரைப்பட விழாவில் விருது பெறுவது பெருமைக்குரியதொன்றல்ல மாறாக இஸ்லாத்துக்கு மிகப் பெரும்  இழுக்காகும்.

சினிமாவை ஆதரிப்பது மட்டுமல்லாது அதற்கு இஸ்லாத்தின் பேரால் ஒழுங்கு விதிகளையும் வகுத்திருப்பது நகைப்புக்குரியதும், வெட்கித் தலை குனிய வேண்டியதுமாகும். யூஸுப் கர்ளாவி அவர்களே இந்த விதிகளைக் கூறியுள்ளார். அது பற்றிய விவரங்கள் 98ம் ஆண்டு நவம்பர், டிசம்பர்களில் வெளியான அல்ஹஸனாத்தில் 15ம் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது. அதில் கூறப்பட்டுள்ள விடயமாவது:

‘முஸ்லிம் பெண்கள் நடிப்புத்துறையில் ஈடுபடலாம் என்ற தலைப்பில் ‘ஆதம் (அலை) முதல் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையுள்ள இறைத் தூதர்களைப் பற்றி அல்குர்ஆன் கூறும் போது எந்த இடத்திலும் பெண்களின் இருப்பை அலட்சியப்படுத்தவில்லை. ஆதம், ஹவ்வா, நூஹும் அவரின் மனைவியும், லூத்தும், மனைவியும், இப்றாஹீமுடைய இரண்டு மனைவியரும், ஆதத்தின் இரு மகன்களின் நிகழ்ச்சி, மூஸா நபியின் பிறப்பும் அவரின் அண்ணையும், சகோதரியும், பிர்அவ்னின் மனைவி, சுஐப் நபியின் இரு மகள் மூஸாவோடு நடத்திய உரையாடல், யூஸுப் நபியும் எகிப்து ஆட்சியாளரின் மனைவியும் முக்கிய பாத்திரங்களாய் இடம் பெற்ற ஒரு முழு அத்தியாயம். ஈஸா நபியும், அன்னை மரியமும், ஸைதும் ஸைனபும் என அல்குர்ஆன் விவரிக்கும் அத்தனை நிகழ்வுகளிலும் முக்கிய ரோலில்( சினிமாவில் பயன்படுத்தப்படும் வார்த்தையை தூய்மையானவர்களுக்கப் பயன்படுத்துகிறார்)பெண்ணிருக்கின்றாள். பின்னர் எப்படி நாம் பெண்களைப் புறக்கணிக்க முடியும்? பெண்கள் நடிப்புத் துறையில் ஈடுபடுவதி பற்றி மார்க்க அறிஞர்கள் கூடி இஜ்திஹாத் செய்து முடிவு எடுப்பது அடிப்டையில் தீர்மானிக்கலாம் என்று கூறிய அவர் (யூஸுப் கர்ளாவி) ‘இது கூடாது. ஹராம் என்று சொல்வது எளிது ஆனால் அது தீர்வாகாது. ஓவ்வொரு விடயத்திலும் ஹராம் ஹராம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது பிரச்சினையை  வளர்ப்பதுடன் மக்கள் அவர்களுக்குப் பிடித்த வழியில் சென்று கொண்டிருப்பார்கள். ஆகையால் தெளிவான நவீன தீர்வுகளை சொல்ல வேண்டும். பெண்களே இல்லாமல் கதைகளை உருவாக்குவதை யாரும் ஏற்கமாட்டர். ஆனால் பெண் நடிப்புத் துறையில் ஈடுபடும் போது ஒரு சில ஒழுக்க முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவள் உடை அணியும் முறை இஸ்லாமிய முறைப்படி இருக்க வேண்டும். இயக்குனரும் படப்பிடிப்பாளரும் பெண்களின் வடிவழகை ஆபாசமாய் காட்டக் கூடாது. தரக்குறைவான வசனங்களைத் தவிர்க்க வேண்டும். இந்த வரம்புகளையெல்லாம் கடைபிடிக்கும் முஸ்லிம் பெண் கலைஞர்கள் இன்றுள்ளனர். நான் அவர்களைப் பார்த்துள்ளேன் எனது இக்கருத்துக்களை அவர்கள் பெரிதும் வரவேற்றனர். முஸ்லிம் உலகில் முதலாவது இஸ்லமிய செட் லைட் சனல் 99 ஜனவரியில் செயல்படத் தொடங்கும் பிரபல சவுதி தொழிலதிபர் ஷேஹ் ஸாலிஹ் அப்துல்லாஹ் காமிலுக்கு இது தொடர்பில் ஊக்கமளித்ததும் நான்தான்’ என்று அந்த ஆக்கம் செல்கின்றது. இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தையும் அவதானிக்கும் போது சிரிப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்????????????? ஓட்டு மொத்த சினிமா வழிகேட்டிற்கும் இவர்கள்தான் காரணம் என்பதை இதில் ஏற்றுக்கொள்கிறார்கள்.

மீள்பார்வை 2010 நவம்பர் மாத இதழில் இஸ்லாமிய சினிமா ஹோலில் ஆண் ரசிகர்களுக்கும் பெண் ரசிகர்களுக்கும் மத்தியில் கருப்புத் திரையொன்று போடப்பட வேண்டும் என பரிதாபமான நிபந்தனையைச் சொல்லியுள்ளார்கள்.

பலஸ்தீனில் அக்கிரமம் நடந்தேறும் போது பேசும் பேச்சா இது? விரலாட்டுவதையே பேசக் கூடாது என்று கூறும் நீங்கள் அதை விடச் சின்ன விடயமான இந்த சினிமா விவகாரத்தையெல்லாம் பேசலாமா??

  1. சில்லறைப் பிரச்சனைகளென மார்க்க விடயங்களை அலட்சியப்படுத்தல்.

‘மார்க்கத்துக்காக நாம் சிலதை விட்டுக் கொடுக்கின்றோம்’ என்று இவர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் மக்கள் ஜுப்பா அணிதலை விரும்புகிறார்கள் இவர்கள் அதந்குத் தயாரா? தாடி வளாப்பதை மக்கள் விரும்புகிறார்கள் ஜமாஅத்தே இஸ்லாமி, டீஏ அன்பர்கள் இதற்குத் தயாரா? இதற்கெல்லாம் அவர்கள் தயாரில்லை. மார்க்கத்தை விட்டுக் கொடுக்க அவர்கள் தயார். விட்டுக்கொடுப்பதற்கு நாம் மார்க்கத்தின் உரிமையாளர்களல்ல. அதற்குறியவன்தான் அதனை விட்டுக்கொடுக்க வேண்டும். அவன் விட்டுக்கொடுத்தவைகளைத்தான் சலுகைகள் என்றழைக்கிறோம். ஆயிரம் ரூபாய் சதங்கள் என்ற சில்லறைகளால் ஆனதுதான் 2 சதத்தைப் புறக்கணித்தான் அது ஆயிரமாக முடியாது. சுமூகத்தின் ஒற்றுமைக்காக தாடி மயிரை கொஞ்சம் நீளமாக வளர்க்கத் தயாராக இல்லை. சேட் ஆடையை களற்றி ஜுப்பா அணியத் தயாராக இல்லை. இசையை விடத் தயாராக இல்லை. ஜமாஅதே இஸ்லாமி சகோதரர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.

ஜமாஅத்தே இஸ்லாமிக்கு சில நல்ல பகுதிகள் இருந்தாலும் டீஏவுக்கு அப்படி எதுவுமில்லை. தவ்ஹீத் பிரசாரத்துக்கும், சில போது ஜமாஅத்தே இஸ்லாமிக்கு எதிராகவும் சதி தீட்டும் வேலைகளைக் கைக் கொண்டது டீஏதான் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு அவை வெடிக்கும் நேரம் பார்த்து சுற்றுலா செல்வது போன்ற தந்திரங்களையெல்லாம் கையாண்டு தமது கைங்கரியங்களை அவ்வியக்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது.

  1. ஆட்சி பற்றிய சரியான விளக்கமின்மையால் போலி இஸ்லாமிய ஆட்சி நாடகமாடும் ஈரானிய சீயாக்களுக்கு சார்பாக நேரடியாகவே ஆதரவளித்தல்.

இஸ்லாமி ஆட்சி என்ற பேரில் இவர்கள் ஷீஅக்களோடு எந்தளவுக்கு ஒத்துப் போகின்றார்கள் என்பதைக் கீழ்வரும் செய்தியிலிருந்து விளங்கலாம்:

99ல் வெளியான அல்ஹஸனாத்தின் ஆசிரியர் கருத்தில் பின்வருமாறு தமது சீயா ஆதரவை வெளிப்படுத்தினார்கள்

‘நபிப் பேரர் ஹுஸைன் (ரழி) அவர்கள், இஸ்லாமிய ஆட்சி மன்னராட்சியாக மாறுவதை சகிக்க முடியாமல் உண்மையான கிலாபத்தை நிலை நிறுத்தும் நோக்கில் தமக்கு ஆதரவளிக்க முன் வந்த கூபாவை நோக்கி மதீனாவைத் துறந்து செல்கிறார்கள். கர்பலாவில் வைத்து அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள். எனவே மன்னராட்சி தொடர்ந்தது. ஹி 100ல் கலீபா உமரிப்னு அப்துல் அஸீஸ் மீண்டும் உண்மையான கிலாபத்தை நிறுவிய வேளை அவர்களும் ஷஹீதாக்கப்பட்டார்கள். எனவே மன்னராட்சி இன்னும் தொடர்கின்றது. இடையில் வலிமையற்ற மன்னர்கள் தோன்றும் போதெல்லாம் மன்னராட்சி புரட்சிகள் மூலம் கைமாற வேண்டியிருந்தது. ஆதனால் பல வெட்டுக் குத்துக்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் பதிவாகின. எனினும் 1924 வரை ஏதோ ஒரு வகையில் காணப்பட்ட முஸ்லிம்களின் கிலாபத் திட்டமிட்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இஸ்லாமிய சாம்ராஜியம் சிறு நாடுளாகக் கூறுபோடப்பட்டு மன்னர்கள், இராணுவ ஜெனரல்கள், சர்வாதிகாரிகள், கம்யூனிஸ்டுகள் போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கிலாபத் மறைந்து எழுபத்தைந்து முஹர்ரம்கள் வந்து சென்று விட்டன. நபிப் பேரர் உணர்வில் வாழ்ந்து வளர்ந்த சமுதாயம் இன்று இஸ்திரமான ஆயத்துல்லாக்களின் ஆட்சியொன்றை அடைந்து கொண்டது. மன்னர்களுக்குத் தலை சாய்த்துப் பழகிவிட்ட சமுதாயம் இன்னும் அடிமைத்துவத்தில் ஆழ்ந்து கிடக்கின்றது. புரட்சிக்குழுக்களெல்லாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் முடிவை நோக்கியே வருகின்றன…’ என்று அவ்வாக்கம் காணப்படுகின்றது.

இவ்வாக்கத்தில் காணப்படும் ஷீஆக்களுக்கு ஆதாரவனதும், இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணாணதுமான கருத்துக்கள்:

1- முஹர்ரம் இதழில் (99 மார்ச்) இக்கருத்துக்கள் வெளியாவதிலிருந்து ஷீஆக்கள் கொண்டாடும் முஹர்ரம் விழாவை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்.

2- ‘நபிப் பேரர் ஹுஸைன் (ரழி) அவர்கள் இஸ்லாமி ஆட்சி மன்னராட்சியாக மாறுவதை சகிக்க முடியாமல் உண்மையான கிலாபத்தை நிலை நிறுத்தும் நோக்கில் தமக்கு ஆதரவளிக்க முன் வந்த கூபாவை நோக்கி மதீனாவைத் துறந்து செல்கிறார்கள்’ இக்கருத்து முற்றிலும் தவறானதாகும். முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் அரியணை ஏறினால் அது மன்னராட்சி என்றால் அலீ (ரழி) அவர்களின் மகன் ஹுஸைன் ஆட்சிக்கு வருவதும் மன்னராட்சியே. ஆனால் உண்மையில் ஹுஸைன் (ரழி) அவர்கள் போனது ஆட்சிக்காகவன்று. அவர் போனதெல்லாம் வேறொரு விடயத்துக்காகத்தான்.

3-’ஹி 100ல் கலீபா உமரிப்னு அப்துல் அஸீஸ் மீண்டும் உண்மையான கிலாபத்தை நிறுவிய வேளை அவர்களும் ஷஹீதாக்கப்பட்டார்கள்’ என்ற வசனத்தின் மூலம் யஸீத் , உமரிப்னு அப்துல் அஸீஸ் இருவருக்கும் இடைப்பட்ட ஆட்சியாளர்களை இவர்கள் நல்லவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் நபியவர்கள் இவ்வாட்சியாளர்களை நல்லவர்கள் என்று கூறியுள்ளார்கள். அதைப்பின்வரும் ஹதீஸ் கூறுகின்றது.

صحيح مسلم 10 – (1822) عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ: كَتَبْتُ إِلَى جَابِرِ بْنِ سَمُرَةَ مَعَ غُلَامِي نَافِعٍ، أَنْ أَخْبِرْنِي بِشَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَكَتَبَ إِلَيَّ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ …..يَقُولُ: «لَا يَزَالُ الدِّينُ قَائِمًا حَتَّى تَقُومَ السَّاعَةُ، أَوْ يَكُونَ عَلَيْكُمُ اثْنَا عَشَرَ خَلِيفَةً، كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ»
‘மறுமை வரைக்கும் அல்லது குறைஷ் குலத்தைச் சேர்ந்த பனிரெண்டு கலீபாக்கள் உங்களில் இருக்கும் வரைக்கும் இந்த மார்க்கம் நிலையானதாய் இருக்கும்’ என நபியவர்கள் சொன்னார்கள்.
ஆறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 1822

ஆனால் இவர்கள் இதற்கு மாற்றமாக இடைப்பட்ட அனைத்து கலீபாக்களையும் தட்டி விட்டு உமரிப்னு அப்துல் அஸீஸ் அவர்களை மட்டும் நல்லவராகச் சொல்கிறார்கள்.

4-’இஸ்லாமிய சாம்ராஜியம் சிறு நாடுளாகக் கூறுபோடப்பட்டு மன்னர்கள், இராணுவ ஜெனரல்கள், சர்வாதிகாரிகள், கம்யூனிஸ்டுகள் போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்ற வசனத்தின் மூலம் சவுதி, குவைட், ஐக்கிய அரபு இராச்சிய மன்னர்கள் அனைவரும் பேர்தாங்கிகள் ஈரானின் ஆட்சியாளர் மட்டுமே இஸ்லாமிய ஆட்சியாளர் என்று சொல்ல வருகிறார்கள். அதன் மூலம் ஜனநாயக ஆட்சி முறையை மிக்க சரிகாண்கின்றார்கள். ஜனநாயக ஆட்சி முறை இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானதாகும். அபூபக்கர் (ரழி) அவர்கள் தெரிவு செய்யப்பட்ட முறையும் அவருக்குப் பின்னால் வந்த ஆட்சியாளர் தெரிவு செய்யப்பட்ட முறையும் ஜனநாயக ஆட்சி முறையல்ல. இதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

4- ‘கிலாபத் மறைந்து எழுபத்தைந்து முஹர்ரம்கள் வந்து சென்று விட்டன. நபிப் பேரர் உணர்வில் வாழ்ந்து வளர்ந்த சமுதாயம் இன்று இஸ்திரமான ஆயத்துல்லாக்களின் ஆட்சியொன்றை அடைந்து கொண்டது’ என்ற வசனத்தின் மூலம் ஈரானிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள ஷீஆக்கள் மட்டுமே நபிப் பேரர் உணர்வில் வாழ்ந்தவர்களாகும். ஜமாஅத்தே இஸ்லாமி உட்பட அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த மற்றைய அனைத்து இயக்கங்களும்  நபிப்பேரார் உணர்வில் வாழவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்கிறார்கள். இந்த வரிகளில் இவர்கள் சீயாக்களை தெளிவாக ஆதரிப்பதையும் சீயாக்களைத் தவிர மற்ற யாரும் பேரர் ஹுஸைனை மதிக்கவில்லை என்றும் தெளிவாகச் சொல்வதை சிந்தனையுள்ள யாரும் மறுக்கமாட்டார்கள்.

5- ‘மன்னர்களுக்குத் தலை சாய்த்துப் பழகிவிட்ட சமுதாயம் இன்னும் அடிமைத்துவத்தில் ஆழ்ந்து கிடக்கின்றது’ என்ற வசனத்தின் மூலம் நேரடியாகவே அரபுநாடுகளையும் சீயாக்கள் அல்லாதவர்களையும் தாக்குகின்றார்கள். விமரிசிக்கிறார்கள்.

6- ‘புரட்சிக்குழுக்களெல்லாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் முடிவை நோக்கியே வருகின்றன…’ என்ற வசனத்தின் மூலம் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சி செய்வதையும், முஸ்லிம் நாடுகளுக்குள் வன்முறைகளைத் தூண்டுவதையும் இவர்கள் சரிகாண்கின்றார்கள். சவூதியில் இருப்பது ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சியல்ல ஏதோ ஒரு வகையில் அங்கு தொழுகை நிலை நாட்டப்படுகின்றது. இஸ்லாமிய சட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுன்றன. ஷிர்க்கிற்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச மட்டத்தில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் பல்வேறு சேவைகள் செய்யப்படுகின்றன. சர்வதே அளவில் இடம் பெறும் போராட்டங்களுக்கு மறைமுகமாகப் பல உதவிகள் செய்யப்படுகின்றன. ஆப்கானில் பமியான் சிலை உடைக்கப்பட்ட போது ஜமாஅத்தே இஸ்லாமியும், டீஏயும் மறைமுகமாக அதைக் கண்டித்தபோது சவூதி அமைச்சர்களால் சிலை உடைப்பு சரியானதே என அரிக்கை கொடுக்கப்பட்டது. இத்தனையும் இருக்கும் போதுதான் அந்நாட்டுக்கு எதிராகக் கிளம்புவதை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்.

ஷீஆக்களை ஆதரிப்பதில் டீஏ இயக்கத்துக்கு அலாதிப்பிரியம் காணப்படுகின்றது. ஏனெனில் கொமைனீ ஈரானைக் கைப்பற்றிய போது அவரை ஆதரிக்க முதலில் அங்கு சென்றவர்கள் இஹ்வானியர்கள்தான். இவர்கள் எப்படியெல்லாம் ஷீஆக்களை ஆதரிக்கின்றார்கள் என்பதைக் கீழே பார்ப்போம்.

2007 மார்ச் மாதம் வெளியான மீள்பார்வையில் கருத்து வேறுபாடுகளில் பிளவை ஏற்படுத்தக் கூடாது என்ற தலைப்பில் கர்ளாவி அவர்களின் பத்வா வெளியாகியிருந்தது. அதில் கூறப்பட்டுள்ள செய்திகளாவன.

பிக்ஹு ரீதியான கருத்து வேறுபாடுகள் முஸ்லிம் உம்மத்தை பல கூறுகளாகப் பிரித்து விடக் கூடாது. என சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் தெரிவித்துள்ளார். ஈராக்கில் தற்போது நிலவும் ஷீஆ, ஸுன்னி கருத்து முரண்பாடு பற்றிக் கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்…………ஈராக்கில் ஷீஆக்களும், ஸுன்னிகளும் தமக்குள்ளிருக்கும் எதிர்ப்புக்களைக் கைவிட வேண்டும். அடுத்தவர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயலில் எத்தரப்பும் ஈடுபடக்கூடாது. ஷீஆக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஸுன்னிகள் பிரசாரம் செய்யக் கூடாது. ஸுன்னிகள் கூடுதலாக வாழும் பகுதியில் ஷீஆக்கள் தமது கொள்கையைப் பிரசாரம் செய்யக் கூடாது……’ என்று அவ்வாக்கம் சீயா ஆதரவை தெளிவாகவே சொல்கிறது

இதிலே கவனிக்க வேண்டிவைகள் எதுவெனில்,

ஷீஆக்களுக்கும், ஸுன்னிகளுக்கும் இடையில் காணப்படுவது  பிக்ஹு ரீதியான கருத்து வேறுபாடுகள்தான் அகீதா ரீதியானதல்ல என்று சொல்கிறார். அப்படியென்றால் ஷீஆக்கள் இன்று நம்மிடமுள்ள அல்குர்ஆனைப் பிழை காண்பது, ஆயிஷா நாயகியை விபச்சாரி என்பது, அபூபக்கர்,உமர் உத்மான் போன்ற பெரும் நபித்தோழர்களை முனாபிக்குகள் என்று ஷீஅக்கள் கூறுவது,………. போன்ற அனைத்தும்  பிக்ஹு ரீதியான கருத்து வேறுபாடுகள்தான் அகீதா ரீதியானதல்ல என்று கர்ளாவி சொல்கிறார். ஆனாலும் ஷீஆக்களுக்கும், ஸுன்னிகளுக்கும் இடையில் காணப்படுவது அகீதா ரீதியான  கருத்து வேறுபாடுகள்தான் என்பதை. ‘ஸுன்னிகள் கூடுதலாக வாழும் பகுதியில் ஷீஆக்கள் தமது கொள்கையைப் பிரசாரம் செய்யக் கூடாது……’ என்ற வார்த்தைகள் மூலம் தன்னை அறியமலேயே ஏற்றுக் கொள்கின்றார்.

ஷீஆக்களை ஆதரிப்பதில் டீஏ இயக்கத்துக்கு இருக்கும் பங்களிப்பை மென்மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கீழ்வரும் செய்தி காணப்படுகின்றது. ஷீஆக்களின் இலங்கைக்கான முகவர்களில் ஒன்றாக விளங்கும் வெலிகம மிலேனியம் கல்விஸ்தாபனம் எனும் அமைப்பால் வெளியிடப்பட்ட ‘இஸ்லாமிய உலகும் சவால்களும்’ என்ற நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள மீள்பார்வையின் ஆசிரியர் ரவூப் ஸெய்ன் தனது அணிந்துரையில் ‘இது போன்ற திறந்த கருத்தாடல்கள் வரவேற்கப்பட வேண்டும்…..’ எனப்பாராட்டியுள்ளார். ஆனால் அந்நூலின் 57ம் பக்கத்தில் வஹாபிஸம் ஒரு சமூக அரசியல் நோக்கு என்ற தலைப்பில் பீஜே அவர்களை ‘குறை ஆன்மீக வாதிகள், விரல் நுனியில் மார்க்கத்தைச் செய்பவர்கள். அறிவில்லாதவர்கள், தர்காவை உடைப்பவர்கள், ஈரானுக்கெதிராகப் பேசுபவர்கள்………. ‘ என்றெல்லாம் கண்டவாறு விமர்சிக்கப்பட்டிருந்தது. ரவூப் ஸெய்னுக்கு நெருக்கமான ஒருவரிடம் இது பற்றிக் கேட்ட போது ‘தனக்கு இப்புத்தகத்தை அனுப்பும் போது குறித்த வஹாபிஸம் ஒரு சமூக அரசியல் நோக்கு என்ற தலைப்பு இருக்கவில்லை என்று ரவூப் ஸெய்ன் கூறியதாக அறிந்தோம். ஒருவேளை அப்படி நடந்திருக்கலாம் என்று பார்த்தாலும் மறுபடியும் அவர் அதே நிருவனத்தின் கருத்துக்கண்ணோட்டம் என்ற தொடர் நூலுக்கு இவ்வாறு அணிந்துரையளித்திருக்கின்றார். வாதப்பிரதிவாதங்கள் என்ற அந்நூலின் பின்பக்கத்தில் சந்திர சேகர்என்ற ஒருவர் ‘யானைக்கு வடகலை நாமம் போடுவதா தென்கலை நாமம் போடுவதா? என்று இந்து மதத்தில் குழப்பம் இருப்பதாக ஏகடியம் பேசியவர்கள் தொழுகையில் விரலை ஆட்டுவதா வேண்டாமா என்பதிலிருந்து ஆரம்பித்து இஸ்லாத்தின் ஒவ்வொரு தலத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டனர்….’ என்று தவ்ஹீதை விமர்சித்தெழுதியதைப் பிரசுரித்துள்ளனர். அந்நூலில் தவ்ஹீதை எதிர்த்தும், ஆதரித்தும் விமரிசனம் என்ற பேரில் சில ஆக்கங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன அவற்றுள் இறுதியாக வரும் ஆக்கத்தில் தவ்ஹீதை மிகக் கடுமையாக விமரிசித்து, அதாவது, ‘சிந்திக்கச் சக்தியற்ற ஒரு சமுதாயத்தைத் திருப்புவது மிகவும் இலகுவானது. பீஜே அதைச் செய்கின்றார். ஆனால் ஈரான் இந்த அனைத்துத் தகுதிகளையும் பெற்று சுதந்திரத்துடன் தலை நிமிர்ந்து நிற்கின்றது…..’ என்று அவ்வாக்கம் தொடர்கின்றது.

இந்நூலுக்கு சகோதரார் ரவூப் ஸெய்ன் இலங்கை வானொலியில் நூல் விமரிசனம் செய்கின்றார் அதில் ‘இந்து மதத்தின் அடிப்படைகளைக் கலந்துதான் இஸ்லாம் வளர்ந்துள்ளது என்ற சந்திரசேகரனின் ஒரு கருத்துக்கு மட்டும் மறுப்புச் சொல்லி விட்டு மற்றையவற்றை விட்டுவிட்டார். இதை கருத்துக்கண்ணோட்டம் என்ற மறு தொடரில் ஹுஸைன் மவ்லான போட்டிருகின்றார். இது எதைப் போலுள்ளது என்றால் ஹஸனுல்பன்னா தாஹா ஹுஸைனின் நூலை விமரிசித்தாராம். பின்னர் தாஹா ஹுஸைன் ஹஸனுல்பன்னாவிடம் ‘இது போன்றொரு விமரிசனதத்தை உலகில் ‘யாராலும் செய்ய முடியாது’ என்றாராம். இதைப் போலத்தான் சகோதரர் ரவூப் ஸெயினின் விமரிசனமும் காணப்படுகின்றது.

கருத்துக்கண்ணோட்டம் என்ற 2வது நூலின் 6ம் பக்கத்தில் வஹாபிஸம் ஒரு சமூக அரசியல் பார்வை என்ற தலைப்பில் தொடர்ந்து இடம் பெறும் விடயங்களாவன, வானொலி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான விமரிசனத்தின் எழுத்து வடிவம் என்ற தலைப்பில் சந்திர சேகரனின் கருத்துக்கள் இடம் பெறுகின்றன அதில்

‘………….. இந்தியாவில் இதுவரை சூபிஸம்தான் வளர்ந்தது என்றும், வஹாபிஸத்தின் வருகை பல பாதாகமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் சகோதரர் ரவூப் ஸெய்ன் எந்த மறுப்பையும் கூறவில்லை. ஆனால் ‘சந்திர சேகரன் தனது கட்டுரையில் இந்து மதத்தின் தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டு இஸ்லாம் வளர்ந்ததாகக் கூறும் கருத்தில் நாம் சிறிதேனும் உடன்பட  முடியாது…..’ எனக் கூறுகின்றார். அப்படியென்றால் மற்றைய இரண்டிலும் தான் உடன்படுவதாக சகோதரர் ரவூப் ஸெய்ன் மறைமுகமாகக் கூறுகின்றார்.

சகோதரர் ரவூப் ஸெய்னின் இக்கட்டுரை இடம் பெற்றுள்ள அப்புத்தகத்தில் ஹுஸைன் மவ்லான பின்வருமாறு எழுதுகின்றார். ‘மேற்படி ஆராயப்பட்ட உணர்வுபூர்வமான வராலற்று நிகழ்வுகளின் அடிப்படையிலே இமாம்களினதும் நல்லடியார்களினதும் ஸியாரத்துக்குச் சென்று அவர்களை நினைவு கூறுகிறோம். அவர்களின் பொருட்டால் அந்த ஆன்மீக உள்ளுணர்வுடன் பிரார்த்தனை புரிகிறோம். இதே அடிப்டையில்தான் முஆவியாவையும், யஸீதையும், இப்னு ஸுஊதையும், முஹம்மதிப்னு அப்துல் வஹாபையும் சபிக்கின்றோம்…’ என்று வசைபாடியுள்ளார். இதற்குப் போய் சகோதரர் ரவூப் ஸெய்ன் ஆதரவளித்துள்ளார். ஸஹாபாக்களை இவ்வாறு பச்சை பச்சையாகத் திட்டுபவனுக்கெல்லாம் அணிந்துரையளிக்கும் உங்களைப் பார்த்து இனிமேலும் நாம் மௌனமாக இருக்கலாமா?????

இந்தக் குப்பைகளெல்லாம் டீஏ, ஜமாஅத்தே இஸ்லாமியிலிருக்கும் பொது மக்களுக்குத் தெரியாது. ஆகவே அவர்கள் இவற்றைப் பார்க்க வேண்டும் இவைகள் உண்மைதானா என்பதை ஆராய வேண்டும். இவ்வாக்கத்தில் காணப்படும் உணர்ச்சி வசமான வார்த்தைப்பிரயோகங்களை வைத்து இதை வாசிக்காமல் விடக் கூடாது. உங்கள் உலமாக்களிடம் சென்று இவற்றை விசாரிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இவை எழுதப்படுகின்றன என்பதை மனதில் கொண்டு சிந்திக்க முன்வாருங்கள். (முற்றும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts