Friday, July 19, 2024

கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது.

கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது.

கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்பது தொடர்பில் இப்பகுதியில் விரிவாக ஆராய்வோம். கண்ணேறுக்கு அரபியில் “العَيْنُ” என்று சொல்வார்கள். நமது சமூகத்தில் கண்ணூறு, கண்படுதல் என்று சொல்கிறார்கள். நன்றாக சாப்பிடும் குழந்தைக்கு வீட்டுக்கு வெளியில் சென்று உணவூட்டமாட்டார்கள். குழந்தை சாப்பிடுவதைப் பார்த்து யாராவது கண்பட்டு விடுவார்கள் என்ற பீதியே இதற்குக் காரணமாகும். புதிய வாகனமொன்றை வீட்டுக்குக் கொண்டு செல்லும் போது அதில் அலங்கோலமாக் கீறி வைத்திருப்பார்கள். வாகனத்தைப் பார்த்து மக்கள் கண்பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணமாகும். புதிய வீடுகளில் கொடும்பாவிகளைத் தொங்க விடும் வழமையும் இந்நம்பிக்கையால் விளைந்ததே. இந்துக் கலாசரத்தால்  பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இலங்கையில் மாத்திரமல்லாமல் மேற்கு நாடுகளிலும் இந்த நம்பிக்கைகள் காணப்படுகின்றன. விஞ்ஞான ரீதியில் இது சாத்தியமாகுமா என்று ஆய்வு செய்யுமளவுக்கு இந்தப் பாதிப்புக்கள் அங்கு செல்வாக்குப் பெற்றுள்ளன. இஸ்லாமிய அடிப்படையில் இது பற்றி ஆராய முன்னர் நடைமுறையில் கண்களால் என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம்.

வேறு பொருளொன்றின் தாக்கம் நம்முள் நுழைவதற்கும், வேறு கண்ணொன்றின் தாக்கம் நம்முள் நுழைவதற்கும் கண் பிரதான ஊடகமாக இருக்கிறது. திருமணத்தை கண்ணை அடிப்படையாக வைத்தே நாம் தீர்மானிக்கிறோம். திருமணம் முடிக்க விரும்பும் ஒருவர் தான் மணக்கப் போகும் மணமகளைப் பார்த்து விட்டு வருமாறும் அதனால் அவ்விருவருக்குமிடையில் அன்பு நிலைபெறுகிறதெனவும்  நபியவர்கள் கூறினார்கள். மணக்கப்போகும் பெண்ணோடு மாதக் கணக்கில் பழகிவிட்டு வரச் சொல்லவில்லை. பார்த்து விட்டு வருமாறே நபியவர்கள் கூறியுள்ளார்கள். சில நிமிடப் பார்வைகளாலும் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஒர் ஆதாரமாகவுள்ளது. ஒரு வீதி விபத்தை கண்ணால் நாம் பார்க்கின்ற போது அது நமதுள்ளத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதை நாம் உணர முடிகிறது அதே விபத்தை நாம் காதால் கேட்போமெனில் கண்ணால் பார்த்தது போன்ற பாதிப்பு நமக்கு ஏற்படுவதில்லை. ஒரு வேலையைச் சொல்லி ஒருவரைப் பணிக்கிறோம் குறித்த வேலை செய்து முடிக்கப்படாமலிருக்கும் போது அந்நபரைப் பார்த்து முறைக்கிறோம் உடனே அங்கு வேலை வேகமாக நடைபெறுகிறது. நமது பார்வையின் அர்த்தம் குறித்த நபருக்குப் புரிந்ததனாலேயே அவர் வேலையை வேகமாய் செய்தார். அதே நேரம் அந்நபரை சாதாரணமாக நாம் பார்ப்போமாயின் அவர் முன்பைப் போல் வேகமாய் இயங்கமாட்டார். நமது பார்வையிலிருந்து அவரை நாம் குற்றம் பிடிக்கவில்லையென்பதை அவர் புரிந்து கொண்டதனால்தான் அவர் அவ்வாறு இயங்கவில்லை. ஆகவே முறைத்த பார்வையால் இங்கே ஒரு பணி வேகமாய் நடைபெறுகிறது. ஒரு பார்வையால் அனைத்தையும் இயங்க வைக்கும் சக்தி கண்ணுக்கிருக்கிறது. சிலரைப் பார்த்து ‘விழுங்கப் போவதைப் போன்று பார்க்கிறாரே’ என்று மக்கள் பேசிக் கொள்வதைக் கேட்கலாம். ஒருவரின் உடலை எவ்வளவு நேரத்துக்கும் பார்த்துக் கொண்டிருக்கலாம் ஆனால் அவரின் கண்களை அதிக நேரம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. கண்ணோடு கண் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் இரு கண்களில் ஒன்று  பணிந்து விடும். நம்மில் பலருக்கு இது போன்ற அனுபங்கள் ஏற்பட்டிருக்கும். இதற்குக் காரணம் என்னவென்று தேடும் போது ஒரு பொருளைப்  பார்ப்பதற்கு அப்பொருளில் வெளிச்சமிருத்தல் வேண்டும். பார்ப்பவர் இருட்டில் இருந்தாலும் பார்க்கப்படும் பொருளுக்கே வெளிச்சம் வேண்டும் பார்ப்பவருக்கு அது அவசியமில்லை என்பதை  விஞ்ஞானம் கூறுகிறது. ஆகவே பொருளில் இருக்கும் வெளிச்சத்தினால் பொருள் கண்களுக்குத் தெரிகிறது. விழித்திரையில் தலை கீழாகத் தோன்றும் பொருளின் விம்பம் மூளைக்குக் கடத்தப்பட்டு அங்கிருந்து தான் அப்பொருளின் சரியான வடிவம் நமக்கு உணர்த்தப்படுகிறது. இது சில நொடிகளில் நிகழும் பரிவர்த்தணைகளாகும். சில பொருட்களை நாம் பார்க்கும் போது வெளிச்சம் அவற்றில் பட்டுத் தெரிக்கின்றது. வெளிச்சம் அவற்றை ஊடறுப்பதில்லை.  ஆனால் கண்ணாடியைப் பார்க்கும் போது வெளிச்சம் அதில் பட்டுத்தெரிப்படைவதுடன் அதை ஊடறுத்தும் செல்கிறது.  வெளிச்சம் ஊடறுப்பதால் கண்ணாடியும் தெரிவதோடு கண்ணாடிக்குள்ளிருப்பதும் தெரிகிறது. வெளிச்சம் கண்ணாடியை ஊடறுக்காமல் தடுக்கப்படுவதால்தான் கண்ணாடியை நாம் பார்க்கும் போது நமது விம்பம் கண்ணாடியில் தெரிகிறது. ஆகவே கண்ணும் வெளிச்சமும் மிக அவசியமானவைகளாகும். இவ்வாறு கண்ணாடியைப் பார்ப்பது போல நாம் ஒரு கண்ணைப் பார்க்கும் போது வெளிச்சம் அக்கண்ணில் பட்டு நமது கண்ணுக்குத் தெரிக்க வேண்டும். கண்ணில் ஒரு வெளிச்சம் பட்டால் அது கண்ணை ஊடறுத்துச் சென்றுதான் திரும்பி வருகிறது. திரும்பி வரும் போது அது சில சிந்தனைகளையும் காவி வருகிறது. அதனால் தான் ஒருவரின் பார்வையில் வைத்தே அவர் என்ன நினைக்கிறார் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. இது விஞ்ஞான ரீதியான விளக்கமாகும்.

பகுத்தறிவுபூர்வமாகவே கண்ணேறு என்பது உண்மையானதுதான் என்பதற்காக நபியவர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பகுத்தறிவுபூர்வமாக அது உண்மையாக இருந்தாலும் வஹீயின் அடிப்படையில்தான் நபியவர்கள் கண்ணேறு உண்மைதான் என்பதைக் கூறினார்கள். நபியவர்கள் சூனியத்தை ஏற்று தாயத்தை மறுத்திருப்பது வஹியின் அடிப்படையில்தான் நபியவர்கள் ஒரு செய்தியை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாகிறது. ஆனால் ஒரு பகுத்தறிவு வாதி தாயத்தையும் மறுப்பான். கண்ணேறையும் மறுப்பான். ஏனெனில் அவனுக்கு பகுத்தறிவே அடிப்படையாகும். ஆனால் நமக்கு வஹியே அடிப்படையாகும். வஹி ஒன்றை மறுத்தால் நாமும் அதை மறுப்போம். வஹி ஒன்றை ஏற்றால் நாமும் அதை ஏற்றுக் கொள்வோம். இதுவே நமது அடிப்படையாகும். ஆகவே நபியவர்கள் தன்னை ஒரு பகுத்தறிவு வாதியாக சமூகத்தில் தனது பிரசாரத்தை முன்வைக்கவில்லை. பகுத்தறிவு ரீதியில் சரியா பிழையா என்ற ஆய்வுகளையெல்லாம் விட்டு விட்டு அல்லாஹ் எதை தனக்குச்சொன்னானோ அவையனைத்தையும் நான் உங்களுக்கு எத்தி வைக்கிறேன். அல்லாஹ் சரியென்றதை நானும் சரிகாண்கிறேன். அல்லாஹ் பிழை கண்டதை நானும் பிழைகாண்கிறேன். என்ற அடிப்டையில் தான் தனது பிரசாரப் பணியை முன்வைத்தார்கள். எனவே பகுத்தறிவுக்கு முரணானவற்றையெல்லாம் நபியவர்கள் எதிர்த்தார்கள் என்று கூறமுடியாது. அல்லாஹ் எதை சொன்னானோ அது பகுத்தறிவு பூர்வமானது என்பதுவே நியாயமானதாகும். நபியவர்கள் ஒரு நபியாகத் தான் கண்ணேறை ஏற்றுக் கொண்டார்கள் ஒரு பகுத்தறிவு வாதியாக இருந்து அதை ஏற்கவில்லை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அன்றைக்கிருந்த பகுத்தறிவாளர்களுக்கு இது பொய்யாக இருந்தாலும் இன்றைக்கு உள்ள நவீன கருவிகள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு கண்ணேறு உண்மைதான் என்பதை விஞ்ஞானம் இன்று ஏற்றுக் கொள்கிறது. ஒரு மனிதன் வெறித்தனமாக ஒன்றைப் பார்க்கும் போது அதே சிந்தனை குறித்த பொருளை ஊடறுத்துச் செல்வதை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது. ஆரம்ப காலங்களில் இவ்வாறு ஊடறுக்கும் என்ற நம்பிக்கையிருக்கவில்லை. ஆகையால் நபியவர்கள் இதை மறுத்திருக்க வேண்டும். ஆனாலும் அல்லாஹ்வின் வஹீ என்பதால் நபியவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அப்படியாயின் நபியவர்கள் ஒரு பகுத்தறிவுவாதியாக இருக்கவில்லை என்பதே அதன் அர்த்தமாகும். விஞ்ஞானக் கணிப்புக்கள் நாளுக்கு நாள் மாறக்கூடியதாகும். எனவே அது இன்றைக்கு ஒன்றை ஏற்றுக்கொள்ளும் நாளைக்கு அதை மறுத்து விடும். எனவே விஞ்ஞானம் எதைச் சொன்னாலும் இஸ்லாம் கண்ணேறு தொடர்பாக என்ன கூறுகிறது என்பது பற்றி நாம் விரிவாக ஆராய்வோம்.

இஸ்லாம் கண்ணேறு தொடர்பாக என்ன கூறுகிறது என்பது பற்றி நாம் விரிவாக ஆராய்வோம்.

காபிர்களின் ஒரு விதமான பார்வை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கீழ்வருமாறு கூறுகிறான்.

 1. وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ  القلم : 51
  (
  முஹம்மதே) அந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமதுபார்வையால் வீழ்த்தப் பார்க்கின்றனர். இவர் பைத்தியக்காரர்என்றும் கூறுகின்றனர்.  (அல்கலம் : 51)

  அஸ்லக என்றால் அரபியில் பார்வையால் ஒருவரை மயக்கம் போட்டு விழச்செய்தல்என்பது கருத்தாகும். அதே சொல்லையே மேலுள்ள வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். எனவே பார்வையினால் சிலரைப் புரட்டிவிடலாம் என்று விளங்கிவிட முடியாது. வஞ்சகத்தோடு, பொறாமையோடு ஒருவரைப் பார்க்கும் போது அவரைநிலை குலையச் செய்யலாம் என்பதுவே அதன் விளக்கமாகும். இந்த அடிப்படையில்தான் மேலுள்ள வசனத்தையும் விளங்கவேண்டும்.

மற்றுமோரிடத்தில் அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்.

 1. قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1) مِنْ شَرِّ مَا خَلَقَ (2) وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (3) وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ (4) وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ (5)
  அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும், பாதுகாப்புத் தேடுகிறேன். என்று கூறுவீராக. (அல்அலக் : 1-5)

மேலுள்ள வசனங்களில் இடம்பெறும் பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் என்ற வாசகத்தின் மூலம் கண்ணேறு என்பது உண்மைதான் என்பது  புலனாகிறது. ஏனென்றால் பொறாமைக்கானின் தீங்கை விட்டும்….. என்று கூறப்பட்டிருந்தால் பொறாமைக்காரனால் நமக்கு ஏதேனும் தீங்குகள் ஏற்படலாமல்லவா அதனால்தான்  அவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு அல்லாஹ் கூறுகிறான் என்று இலகுவாய் விளங்கலாம். ஆனால் ‘பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் என்று அல்லாஹ் கூறியிருப்பதை நாம் நன்கு சிந்திப்போமானால் பொறாமை கொள்ளும் போது என்ன தீங்கு ஏற்படலாம் என்பது பற்றி சற்று ஆழமாய் நாம் சிந்திக்குமிடத்து அது கண்ணேறைத் தவிர வேறெதையும் குறிக்கவில்லை. என்பதை அறிய முடிகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கண்ணேறுதான் அங்கு ஏற்படலாமே தவிர வேறெதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் ஒருவரின் அழகான வீட்டை ஒருவர் பொறாமையாய் பார்க்கின்றார். அல்லது அதைப்பார்த்து ஏங்குகிறார் எனில் அவரின் உடலிலிருந்து வெளியாகும் சில சக்திகள் அவரின் பார்வையால் வெளிப்படுகின்றன. இதன் போது அவரின் பொறாமைப் பார்வையால் அங்கு ஏதேனும் தீங்கு ஏற்படுகின்றது. அதுவே கண்ணேறு என்பதாகும். எனவே கண்ணேறு என்பது உண்மைதான் என்பது இவ்வசனத்திலிருந்தும் தெளிவாகின்றது.

கண்ணுக்கு ஓர் அபரிமிதமான ஆற்றலை அல்லாஹ் வழங்கியுள்ளான். அண்மையில் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தியை அனேகமாகப் பலரும் பார்த்திருப்பர். ஒரு சிறுவன், அவன் சில பொருட்களைப் பார்க்கிறான். அவனின் பார்வையினால் சில பொருட்கள் வலைகின்றன. கண்ணுக்கு அவ்வாறான சக்தியிருக்கிறது. குறித்த சிறுவனின் கண்ணில் காணப்பட்ட அபரிமிதமான சக்தியினால்தான் அவ்வாறு ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்கிறது. எல்லோருக்கும் இவ்வாறான ஆற்றல் கிடையாது குறிப்பிட்ட சிலருக்கு இவ்வாறிருக்க வாய்ப்பிருக்கிறது. சில வகைப் பாம்புகள் உலகில் காணப்படுகின்றன. அவை நம்மைப் பார்த்தாலே போதும் நமது பார்வை போய் விடும் அவை நம்மைத் தீண்டவே தேவையில்லை. ஏனெனில் அவற்றின் பார்வையில் ஒரு விதமான  சக்தியிருக்கிறது என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஆகவே சில படைப்புக்களுக்கு இது போன்ற ஆற்றலை அல்லாஹ் வழங்கியுள்ளான். அவ்வாறு கண்களில் காணப்படுகின்ற சாதாரண சக்தியினால்தான் கண்ணேறும் ஏற்படுகின்றது.

கண்ணேறு பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

 1. صحيح البخاري  – (15  84)
  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَيْنُ حَقٌّ وَنَهَى عَنْ الْوَشْمِ
  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மைதான்என்று கூறினார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.
  அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி)
  ஆதாரம் : புஹாரி

கண்ணேறு என்பது உண்மையக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக முகத்தில் காயமேற்படுத்தல். அடையாளமிடல் போன்றவற்றை இஸ்லாம் தடைசெய்துள்ளது. ஆகவே கண்ணிலிருந்து காத்துக்கொள்வதற்காக இவை போன்று செய்யப்படும் அனைத்து  நடை முறைகளும் கூடாது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

ஸஹீஹ் முஸ்லிமிலும் இது போன்ற ஒரு ஹதீஸ் பின்வருமாறு இடம் பெறுகிறது.

 1. صحيح مسلم – (7 13)
  عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « الْعَيْنُ حَقٌّ وَلَوْ كَانَ شَىْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا ».

கண்ணேறு உண்மையாகும். இறை நிர்ணயத்தை முந்தக் கூடிய ஒன்றிருக்குமானால் அதைக்  கண்ணேறு முந்தியிருக்கும். கழுவித் தருமாறு நீங்கள் கேட்கப்பட்டால் கழுவிக் கொடுங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

மற்றுமொரு ஹதீஸ் கீழ்வருமாறு இடம் பெறுகின்றது.

 1. صحيح البخاري  – (14  382)
  عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ أَمَرَ أَنْ يُسْتَرْقَى مِنْ الْعَيْنِ
  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள்.
  அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
  ஆதாரம் : புஹாரி

  மற்றுமொரு ஹதீஸ் கீழ்வருமாறு இடம் பெறுகின்றது.
 2. صحيح البخاري  – (14  383)
  عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي بَيْتِهَا جَارِيَةً فِي وَجْهِهَا سَفْعَةٌ فَقَالَ اسْتَرْقُوا لَهَا فَإِنَّ بِهَا النَّظْرَةَ

நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறுபட்டிருக்கிறதுஎன்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரழி)
ஆதாரம் : புஹாரி

இஸ்லாம் கூறும் மந்திரித்தல் முறையொன்றுள்ளது. அந்தடிப்படையில் மந்திரித்துப் பார்க்குமாறே நபியவர்கள் ஏவினார்கள்.

இன்னுமொரு ஹதீஸ் கீழ்வருமாறு இடம் பெறுகிறது.

7.صحيح مسلم – (7   18)
عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ وَأَخْبَرَنِى أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ رَخَّصَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- لآلِ حَزْمٍ فِى رُقْيَةِ الْحَيَّةِ وَقَالَ لأَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ « مَا لِى أَرَى أَجْسَامَ بَنِى أَخِى ضَارِعَةً تُصِيبُهُمُ الْحَاجَةُ ». قَالَتْ لاَ وَلَكِنِ الْعَيْنُ تُسْرِعُ إِلَيْهِمْ.
قَالَ « ارْقِيهِمْ ». قَالَتْ فَعَرَضْتُ عَلَيْهِ فَقَالَ « ارْقِيهِمْ ».
பாம்பு கடித்தால் ஓதிப்பார்ப்பதற்கு ஹஸ்ம் குடும்பத்தாருக்கு நபியவர்கள் அனுமதித்தார்கள். எனது சகோதரன் ஜஃபரிப்னு அபீதாலிபுடைய குடும்பத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் உடல் மெமலிந்தவர்களாகவுள்ளார்கள். என்ன அவர்களுக்கு என்றைக்கும் வறுமையாகவுள்ளது?’ என்று அஸ்மா பின்த் உமைஸிடம் நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே அது ஏனென்றால் அவர்களுக்கு அடிக்கடி கண்ணேறு ஏற்படுகிறதுஎன்று அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) கூறினார்கள். அதற்கு அவர்களுக்கு ஓதிப்பார்க்குமாறு நபியவர்கள் அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) அவர்களிடம் கேட்டார்கள். நான் மந்திரிக்கும் முறையை நபியவர்களிடம் எடுத்துக்காட்டினேன். (அதைப்பார்த்த நபியவர்கள்) அவர்களுக்கு (ஜஃபர் குடும்பத்துக்கு) ஓதிப்பார்க்குமாறு என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

இப்னுஹிப்பானிலே மற்றொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகிறது.

 1. صحيح ابن حبان بتحقيق الأرناؤوط – مطابق للمطبوع – (13  469
  عن محمد بن أبي أمامة بن سهل بن حنيف : أنه سمع أباه أبا أمامة يقول : اغتسل أبي سهل بن الأحنف بالخرار فنزع جبة كانت عليه و عامر بن ربيعة ينظر قال : وكان سهل رجلا أبيض حسن الجلد قال : فقال عامر بن ربيعة : ما رأيت كاليوم ولا جلد عذراء فوعك سهل مكانه فاشتد وعكه فأتى رسول الله صلى الله عليه و سلم فأخبره أن سهلا وعك وأنه غير رائح معك يا رسول الله فأتاه رسول الله صلى الله عليه و سلم فأخبره سهل الذي كان من شأن عامر بن ربيعة فقال رسول الله صلى الله عليه و سلم : ( علام يقتل أحدكم أخاه ألا بركت إن العين حق توضأ له ) فتوضأ له عامر بن ربيعة فراح سهل مع رسول الله صلى الله عليه و سلم ليس به بأس
  ஸஹ்லிப்னுல் அஹ்னப் குளிப்பதற்காகச் சென்று ஆடையைக் கழட்டினார். அப்போது ஆமிருப்னு ரபீஆ அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஸஹ்ல் வென்மையானவராகவும், அழகானவராகவும் இருந்தார். ஆவரைப் பார்த்த ஆமிருப்னு ரபீஆ  ‘இதைப் போன்ற அழகான உடம்பை நான் பார்த்ததில்லை.என்று கூறியதும் மயக்கமேற்பட்டு ஸஹ்லிப்னுல் அஹ்னப் விழுந்து விட்டார். மயக்கம் மென்மேலும் அதிகமாகியது…………. ஆமிருப்னு ரபீஆவே இதற்குக் காரணம் என்று நபியவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபியவர்கள் உங்கள் சகோதரரைக் கொலை செய்யப் பார்க்கிறீர்களா? ஆச்சரியமான ஒன்றை உங்கள் சகோதரரிடத்தில் கண்டால் அல்லாஹ் உனக்கு பரகத்துச் செய்வானாக என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா? கண்ணேறு உண்மையாகும். அவருக்கு வுழுச் செய்து அந்த நீரைக் கொடுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். ஆமிருப்னு ரபீஆ ஸஹ்லிப்னுல் அஹ்னபுக்கு வுழுச் செய்து கொடுத்தார். ஸஹ்லிப்னுல் அஹ்னப் நோய் நீங்கியவராக நபியவர்களோடு சென்றார்.
  அறிவிப்பவர் : ஸஹ்லிப்னு ஹனீப்
  ஆதாரம் : இப்னு ஹிப்பான்

  ஆச்சரியமான ஒன்றைக் கண்டால் ஏங்கிவிடக் கூடாது. ஏனெனில் கண்ணுக்கு அல்லாஹ் வித்தியாசமான ஆற்றலைக் கொடுத்துள்ளான். அதனால் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை இஸ்லாம் அன்றைக்கே ஏற்றுக் கொண்டு விட்டது. அப்படியான ஒரு பாதிப்பை ஏற்படுத்தாமல் காத்துக் கொள்ள வேண்டுமாயின் சந்தோச உணர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ‘எனது சகோதரரிடத்தில் காணப்படும் இந்த சிறப்பைப் பார்த்து எனக்குப் பொறாமையில்லை. அல்லாஹ் அவருக்கு பரகத் செய்யட்டும். என்று சொல்ல வேண்டும். ஆனால் சிலர் முதலில் ஏங்கி விடுவர். அதற்குப் பின்னர் தான் தன்னை சுதாகரித்துக் கொண்டு நான் இப்படி சொல்லக் கூடாது…. என்று கூறுவர். எனவே உள்ளத்திலிருக்கும் தீய எண்ணங்கள் இவ்வாறான வேளைகளில் பார்வையினால் வெளிப்படுகின்றன. அதனால்தான் நபியவர்கள் அல்லாஹ் உனக்கு பரகத்துச் செய்வானாக என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாத?’ என்று கூறினார்கள். பின்னர் ஆமிருப்னு ரபீஆவை வுழூச்செய்யுமாறு சொல்லி அந்த நீரை ஸஹ்லிப்னுல் அஹ்னபுக்கு மேல் ஊற்றினார்கள். பின்னர் அவரின் நோய் நீங்கியது. இது மிகபலமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்ட ஹதீஸாகும்.

மேலே நாம் பார்த்த ஹதீஸ்களிலிருந்து நாம் ஓருண்மையை விளங்கலாம். அதாவது அல்லாஹ் எதை வஹீ மூலம் உண்மை என்று சொன்னானோ அதை நபியவர்கள் உண்மை என்று  சொன்னார்கள். இதைப் பற்றி மக்கள் ஏதும் சொல்வார்களோ என்றெல்லாம் நபியவர்கள் நினைக்கவில்லை. நபியவர்கள் கூறியிருப்பவைகள் இன்றுள்ளவர்களுக்கு பகுத்தறிவுக்கு முரண்படுவதாகத் தெரியலாம். அன்றுள்ளவர்களுக்குத்  தெரிந்திருக்கலாம். ஆனால் இன்று விஞ்ஞானம் இமாலய வளர்ச்சியிலிருக்கிறது. ஆரம்ப காலங்களில் விஞ்ஞானம் வெறுமனே சடரீதியான நம்பிக்கையில்தான் வளர்ந்து வந்தது. ஆனால் விஞ்ஞானம் இன்று ஆன்மாவிற்குமுக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. சடத்துக்குத் தாக்கம் இருப்பது போல உயிருக்கும் தாக்கமுள்ளது. என்பதை விஞ்ஞானம் ஏற்றுக் கொண்டு விட்டது.

கம்பால் ஒருவருக்கு அடித்தால் வலிக்கும் என்பது சடரீதியான நம்பிக்கையாகும். இதனால் மாத்திரமே வலிக்கும் என்பதை ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் விஞ்ஞானம் நம்பி வந்தது. இன்றுதான் மனிதனைச் சூழ காந்த அலைகளுள்ளன, இன்னும் பல அலைகளுள்ளன என்பது பற்றி விஞ்ஞானம் ஆய்வு செய்து வருகிறது. கிருமிகளே நோய்க்குக் காரணம் என்ற நம்பிக்கை ஆரம்ப காலங்களில் இருக்கவில்லை. சடரீதியான நம்பிக்கையில் விஞ்ஞானம் தங்கியிருந்ததே இதற்குக் காரணமாகும். நுண்ணுயிர்களை அவதானிக்கும் தொழில் நுட்பம் வந்த பின்பே கிருமிகள் பற்றி விஞ்ஞானம் நம்பத்துவங்கியது. ஆனால் இஸ்லாம் இது பற்றி அன்றைக்கே சொல்லி விட்டது.

صحيح البخاري – (8  373)
إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ ثُمَّ لِيَنْزِعْهُ فَإِنَّ فِي إِحْدَى جَنَاحَيْهِ دَاءً وَالْأُخْرَى شِفَاءً
உங்களில் எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி)
ஆதாரம் : புஹாரி

நபியவர்கள் காலத்து விஞ்ஞான அறிவை வைத்து இதை ஒருவரால் நிச்சயமாகக் கூற முடியாது. வஹியை நம்பும் ஒருவராலேயே இதை அன்றைக்குக் கூறமுடியும். மனித கண்களுக்குப் புலப்படாத பல படைப்புக்கள் இருப்பதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு இன்று விஞ்ஞானம் வளர்ந்து விட்டது.

இஸ்லாம் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட தூய்மையான மார்க்கமாகும். அது சொல்லும் அறிவுரைகள் நேற்றைய எங்கள் அறிவுக்குப் பொருந்தாமலிருந்திருக்கலாம். இன்றைய எங்கள் அறிவுக்குப் பொருந்தாமலிருக்கலாம். நாளைய எங்கள் அறிவுக்குப் பொருந்தாமலிருக்கலாம். ஆனால் இஸ்லாம் அல்லாஹ்விடத்திலிருந்து புனிதமான ஒரு தூதுத்துவமாகும். இதை எங்களில் ஒருவரின் வார்த்தைகள் போல நாம் நினைத்திடக் கூடாது. ஆரம்பத்தில் உயிர் என்ற ஒன்று இருப்பதை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உயிர் இருப்பதாக அன்றைக்கே இஸ்லாம் கூறியது. ஆல்குர்ஆனில் அல்லாஹ் அதைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்.

وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا الإسراء : 85
உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். உயிர் என்பது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள். என்று கூறுவீரா. (அல்இஸ்ரா:85)

اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ فِي مَنَامِهَا فَيُمْسِكُ الَّتِي قَضَى عَلَيْهَا الْمَوْتَ
ஜالزمر : 42ஸ
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். (ஸுமர் : 42)

இதை அன்று விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இன்று பல ஆய்வுகள் மூலம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே உடலியல் ரீதியான தாக்கங்களைப் போல உயிரியல் ரீதியான தாக்கங்களும் உள்ளன என்பது பற்றிய ஆய்வை விஞ்ஞானம் இப்பொழுது செய்து வருகிறது. ஆகவே இவ்வாறான விடயங்களில் நமது நம்பிக்கை எப்படி இருக்க வேண்டுமென்றால் இஸ்லாம் பகுத்தறிவு பூர்வமான மார்க்கம் எங்களது பகுத்தறிவுக்கு ஏற்ற மார்க்கமல்ல. நபியவர்கள் மனோ இச்சைப்படி பேசுபவரல்ல. அவர் வஹீயைத்தான் சொல்வார். எங்களின் அறிவுக்குப் பொருந்தினாலும், பொருந்தாவிட்டாலும் இஸ்லாம் பகுத்தறிவுபூர்வமாகவே எதையும் சொல்லும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே மேலுள்ள தரவுகளிலிருந்து நாம் விளங்க வேண்டிய சாரம் என்னவென்றால் ஒருவர், இன்னொருவரைப் பார்த்துக் கூறும் ஆச்சரியமான வார்த்தை,  இன்னொருவரைப் பார்க்கும் ஆச்சரியமான பார்வை போன்றவை அல்லாஹ் நாடினால் அடுத்தவருக்குத் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதே. கத்ரை முந்தக் கூடிய ஒன்றிருக்குமென்றால் அது கண்ணேறாகத்தான் இருக்க முடியும் என்று நபியவர்கள் சொல்லியிருப்பதும் கண்ணேறு உண்மைதான் என்பதை மென்மேலும் உறுதிப்படுத்துவதாகவேயுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts