Tuesday, October 8, 2024

குடிமக்களின் உயிரை மதித்த உத்தம தலைவர் கலீபா உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு

உஸ்மான் (ரழி) அவர்களுடைய வரலாறானது பல்வேறுபட்ட முன்மாதிரிகளையும், படிப்பினைகளையும் பின்னால் வருபவர்களுக்கு சொல்லித்தருகின்றது. தம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களைப் பகடைக்காய்களாக்கி, வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டிவிட்டு அரியணையைக் கைப்பற்றும் ஆட்சியாளர்களை வரலாற்றில் கண்டுள்ளோம். ஆனால் வீரம், படைப்பலம், மக்கள் ஆதரவு போன்ற அனைத்தும் இருந்தும் தன்னால் அப்பாவி மக்களின் உயிர்கள் போகக் கூடாது என்பதற்காக உஸ்மான் (ரழி) தன் உயிரையே துறந்து, வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தார்கள் என்பதைப் படிக்கும் போது இமைகள பனிக்கின்றன. சுமார் 12 வருடகாலமாக ஆட்சிபுரிந்த உஸ்மான் (ரழி) அவர்கள் நபியவர்களின் புதல்விகளான உம்மு குல்தூம், ருகையா ஆகிய இருவரையும் மணந்ததன் மூலம் இரு ஒளிகளையுடையவர் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளார்கள். உயிரா? மறுமையா? என்ற போராட்டத்தில் மறுமையைத் தெரிவு செய்து அதற்காக தனது உயிரையே விட்டுக் கொடுத்தமைதான் உஸ்மான் (ரழி) அவர்களை சிறப்பித்துக் காட்டுகின்றது.

அபூபக்கர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய காலத்திலேயே உஸ்மான் (ரழி) அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு அந்த சமூகத்தில் எத்தகைய மதிப்பும், மாரியாதையும் காணப்பட்டதோ அதே மாதிரியான கௌரவமும், மரியாதையும்தான் உஸ்மான் (ரழி) அவர்களுக்கும் காணப்பட்டது.

ஒரு முறை அபூபக்கர் (ரழி) அவர்கள் பாதையில் செல்லும் போது உஸ்மான் (ரழி) அவர்கள் நின்று கொண்டிருப்தைக் காண்கிறார்கள். அப்போது அவரைப் பார்த்து ‘உஸ்மானே சத்தியம் எது அசத்தியம் எது என்று உங்களுக்குத் தெரியும். சிலை வணக்கம் பிழையென்பதும் இந்த முஹம்மத் எதன்பக்கம் அழக்கின்றார் என்பதும் உங்களுக்குத் தெரியும்’ என்று கூறுகிறார்கள். அப்போது அவ்வழியே வந்த நபியவர்கள் ‘உஸ்மானே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறியதும் உஸ்மான் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்ற செய்தியை வரலாற்றில் காணமுடிகின்றது. அவரிடம் இஸ்லாத்தைச் சொல்ல எதுவிதமான போராட்டத்தையும் நபியவர்கள் முன்னெடுக்கவில்லை. எனவே சத்தியத்தை மிக இலகுவாகப் புரிந்து கொள்ளும் தன்மையை இயல்பாகவே உஸ்மான் (ரழி) அவர்கள் கொண்டிருந்தார்கள் எனலாம். பொறுமையும், நிதானமும், நலினமும், அமைதியும், இறக்கமும், அடுத்தவர் பற்றிய கவலையும் உஸ்மான் (ரழி) அவர்களிடம் நிறைந்திருந்தன.

உஸ்மான் (ரழி) அவர்களைப் பற்றி நபியவர்கள் சொன்னவை
صحيح مسلم 6362عَنْ عَطَاءٍ وَسُلَيْمَانَ ابْنَىْ يَسَارٍ وَأَبِى سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم- مُضْطَجِعًا فِى بَيْتِى كَاشِفًا عَنْ فَخِذَيْهِ أَوْ سَاقَيْهِ فَاسْتَأْذَنَ أَبُو بَكْرٍ فَأَذِنَ لَهُ وَهُوَ عَلَى تِلْكَ الْحَالِ فَتَحَدَّثَ ثُمَّ اسْتَأْذَنَ عُمَرُ فَأَذِنَ لَهُ وَهُوَ كَذَلِكَ فَتَحَدَّثَ ثُمَّ اسْتَأْذَنَ عُثْمَانُ فَجَلَسَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَسَوَّى ثِيَابَهُ فَدَخَلَ فَتَحَدَّثَ فَلَمَّا خَرَجَ قَالَتْ عَائِشَةُ دَخَلَ أَبُو بَكْرٍ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ ثُمَّ دَخَلَ عُمَرُ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ ثُمَّ دَخَلَ عُثْمَانُ فَجَلَسْتَ وَسَوَّيْتَ ثِيَابَكَ فَقَالَ « أَلاَ أَسْتَحِى مِنْ رَجُلٍ تَسْتَحِى مِنْهُ الْمَلاَئِكَةُ ».

நபியவர்கள் தனது தொடடைப் பகுதி அல்லது கெண்டைக் கால் பகுதி தெரியக் கூடிய வகையில் என் வீட்டில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் வீட்டுள் நுழைய அனுமதி கேட்டார்கள். நபியவர்கள் அதே நிலையில் இருந்தவர்களாக அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவரோடு பேசினார்கள். பின்னர் உமர் (ரழி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். நபியவர்கள் அதே நிலையில் இருந்தவர்களாக அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவரோடு பேசினார்கள். பின்னர் உஸ்மான் (ரழி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். தனது ஆடையைச் சரிசெய்து கொண்டு நபியவர்கள் அமர்ந்தார்கள். அவரோடு பேசினார்கள். மூவரும் சென்ற பின் ஆயிஷா (ரழி) அவர்கள் நபியவர்களிடம் ‘அபூபக்கர் (ரழி) நுழைந்த போது நீங்கள் திடுக்கிடவில்லை. பொருட்படுத்தவில்லை. பின்னர் உமர் (ரழி) நுழைந்த போதும் நீங்கள் திடுக்கிடவில்லை. பொருட்படுத்தவில்லை. அதன் பின்னர் உத்மான் (ரழி) நுழைந்த போது ஆடையைச் சரிசெய்து கொண்டு அமர்ந்தீர்களே’? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ‘மலக்குகள் வெட்கப்படும் ஒரு மனிதரைப் பார்த்து நானும் வெட்கப்படக் கூடாதா?’எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 6362

வெட்க குணம் உஸ்மான் (ரழி) அவர்களிடம் அதிகமாகவுள்ளது அது ஈமானின் அடையாளமாகவுள்ளது என்பதை நபியவர்கள் இந்த செய்தியில் கூறியுள்ளார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்களின் இறையச்சம்
مسند أحمد بن حنبل – 454 عن هانئ مولى عثمان رضي الله عنه قال : كان عثمان رضي الله عنه إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال ان رسول الله صلى الله عليه و سلم قال القبر أول منازل الآخرة فإن ينج منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه قال وقال رسول الله صلى الله عليه و سلم والله ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه
உஸ்மான் (ரழி) அவர்கள் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள். சுவர்க்கம், நரகத்தை நினைத்தா அழுகின்றீர் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் இல்லை என்றார். இன்னதுக்காகவா அழுகின்றீர் எனக் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘கப்ர் மறுமையின் முதற்படியாகும் அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது. நான் எந்த மோசமான காட்சியைக் கண்டாலும் கப்ர் எனக்கு அதை விடக் கடினமாகவே தெரிகிறது’ என நபியவர்கள் கூறினார்கள் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹானி
ஆதாரம்: அஹ்மத் 454

மண்ணறை வாழ்க்கையென்பது வாழ்க்கைப் பயணத்தில் அனைவரும் சந்தித்தாகவேண்டியதொன்றாகும். மிகப்பெரும் செல்வந்தர் ஒருவர் மரணித்தாலும் வெறும் வெள்ளைப் புடவையில் சுற்றப்பட்டுத்தான் அடக்கம் செய்யப்படுவார். கோடிக்கணக்கில் அவருக்கு சொத்துக்கள் இருந்தாலும் ஒரு ரூபாயைக் கூட அவர் கொண்டு செல்வதில்லை. அவர் கைவிரலிலிருக்கும் மோதிரத்தைக் கூட கழற்றி எடுத்து விடுவார்கள். இவற்றையெல்லாம் அவதானிக்கும் போது மனித வாழ்வின் அர்த்தம்தான் என்ன? எதற்காக இந்த வாழ்க்கை? போன்ற வினாக்கள் தோன்றுகின்றன. சந்தோசத்தில் திளைத்துப் போன ஒருவனுக்கு, உறவுகளில் யாருக்காவது மரணம் அடைந்துவிட்டால் மறுகனமே வாழ்க்கை இருண்டு விடுகின்றது. கவலையும், சோகமும் அவனை வாட்டுகின்றது. ஆகவே மரணம் ஒருவரின் வாழ்வில் அபரிமிதமான தாக்கங்களையும், மாற்றங்களையும் சில நொடிகளிலேயே ஏற்படுத்திவிடுகின்றது. எனவேதான் நபியவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளார்கள்.

سنن الترمذي 2307 – عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم أكثروا ذكر هاذم اللذات يعني الموت
‘இன்பங்களைத் தகர்க்கக் கூடியதை அதிகமாக நினைவுகூறுங்கள்’ என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : திர்மிதி 2307

கரடு முரடான உள்ளங்களையும் இலக வைக்கும் தன்மை மரணத்திற்குண்டு. வாழ்வின் யதார்த்தம் புரியாமல் ஆங்காங்கே வந்து செல்லும் சந்தோசங்களை நிரந்தரம் என நம்பி விடக் கூடாது. மரண சிந்தனையை அவ்வப்போது வரவழைத்துக் கொள்வது மறுமையை நினைவுபடுத்தும். அது நம்மை சரியான திசையின் பால் வழிநடாத்திச் செல்லும் எனவேதான் கப்ர்களை தரிசிக்கும்படி இஸ்லாம் பணித்துள்ளது.

سنن أبى داود- 3237 – عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّ فِى زِيَارَتِهَا تَذْكِرَةً.
கப்ர்களைத் தரிசிப்பதை உங்களுக்குத் தடை செய்திருந்தேன். (இப்போது) தரிசியுங்கள். அவற்றைத் தரிசிப்பதில் படிப்பினையிருக்கிறது.
அறிவிப்பவர்: இப்னு அபீ புர்தா
ஆதாரம் : அபூதாவுத் 3237

மக்களெல்லாம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் படுக்கையிலிருந்து எழும்பி நபியவர்கள் கப்ர்களைத் தரிசிக்கச் செல்வார்கள் என்ற ஹதீஸ்களைப் பார்க்கின்றோம்.

ஒருவரை அடக்கம் செய்து விட்டு அவருக்குப் பிராத்தனை புரியுமாறு நபியவர்கள் வேண்டுவார்கள் அதைக் கீழ்வரும் ஹதீஸ் கூறுகின்றது.

سنن أبى داود3223 – عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ فَقَالَ اسْتَغْفِرُوا لأَخِيكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ فَإِنَّهُ الآنَ يُسْأَلُ
ஒரு ஜனாஸாவை அடக்கிய பின்பு நபியவர்கள் அங்கே நிற்பார்கள் பின்னர் ‘உங்களுடைய சகோதரருக்குப் பாவமன்னிப்பைக் கேளுங்கள், அவருக்கு உறுதியைக் வேண்டுங்கள் இப்போது அவர் விசாரிக்கப்படுகின்றார்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் (ரழி)
ஆதாரம் : அபூதாவுத் 3223

இவ்வாறான செய்திகளே உஸ்மான் (ரழி) அவர்களின் அழுகைக்குப் பின்புலமாகவிருந்தன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

உஸ்மான் (ரழி) நபிவயவர்களால் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டவர்கள்

صحيح البخاري 3695 – عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ حَائِطًا وَأَمَرَنِي بِحِفْظِ بَابِ الْحَائِطِ فَجَاءَ رَجُلٌ يَسْتَأْذِنُ فَقَالَ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ فَإِذَا أَبُو بَكْرٍ ثُمَّ جَاءَ آخَرُ يَسْتَأْذِنُ فَقَالَ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ فَإِذَا عُمَرُ ثُمَّ جَاءَ آخَرُ يَسْتَأْذِنُ فَسَكَتَ هُنَيْهَةً ثُمَّ قَالَ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى سَتُصِيبُهُ فَإِذَا عُثْمَانُ بْنُ عَفَّانَ

நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் நுழைந்தார்கள். தோட்டத்தின் வாயிற்கதவைக் காவல் புரியும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒருவர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் நபி(ஸல்) அவர்களிடம் அவருக்காக அனுமதி கேட்க) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (நான் அவரிடம் சொல்லச் சென்ற போது) அம்மனிதர் அபூ பக்ர் அவர்களாக இருந்தார்கள். பிறகு மற்றொருவர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் அனுமதி கேட்க,) ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (நான் அவ்வாறே சொல்லச் சென்ற போது) அந்த மனிதர் உமர் அவர்களாக இருந்தார்கள். பிறகு, இன்னொரு மனிதர் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் கதவைத் திறக்க அனுமதி கேட்ட போது) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு பிறகு, ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; (வருங்காலத்தில்) அவருக்கு நேரவிருக்கும் துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (நான் சென்று கதவைத் திறந்த போது) அவர் உஸ்மான் இப்னு அஃப்பான் அவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா(ரழி)
ஆதாரம் : புஹாரி 3695

உஸ்மான் (ரழி) அவர்கள் சுவனம் வாக்களிக்கப்பட்டவர்களுள் ஒருவர் என்பதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது.உஸ்மான் (ரழி) அவர்களின் சிறப்பையும், அவர்கள் பற்றிய ஒரு முன்னறிவிப்பையும் கீழ்வரும் ஹதீஸ் கூறுகின்றது.

صحيح البخاري 3686 – عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَعِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أُحُدٍ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَضَرَبَهُ بِرِجْلِهِ قَالَ اثْبُتْ أُحُدُ فَمَا عَلَيْكَ إِلَّا نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدَانِ
(ஒருமுறை) அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகியோர் தம்முடனிருக்க, நபி(ஸல்) அவர்கள் உஹுது மலைமீது ஏறினார்கள். அப்போது அது அவர்களுடன் நடுங்கியது. உடனே நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் காலால் அடித்து, ‘உஹுதே! அசையாமல் இரு! உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் தான் உள்ளனர்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரழி)
ஆதாரம் : புஹாரி 3686.

‘உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் தான் உள்ளனர்’ என்று நபியவர்கள் சொன்னதிலிருந்து தாம் கொல்லப்படப் போகிறோம் என்ற செய்தி உஸ்மான் (ரழி) அவர்களுக்கும், உமர் (ரழி) அவர்களுக்கும் தெரிந்து விட்டது. அதே நேரம் தான் கொல்லப்படமாட்டேன். ஆனால் உமரும், உஸ்மானும் கொல்லப்படுவார்கள் என்பது அபூபக்கர் (ரழி) அவர்களுக்குத் தெரிந்து விட்டது.

மேலே பார்த்த ஹதீஸ்களிலிருந்து கீழ்வரும் அம்சங்களை சாரமாக எடுக்கலாம்.
1- உஸ்மான் (ரழி) அவர்களைப் பார்த்து மலக்குமார்கள் வெட்கப்படுகின்றார்கள். இது அவருக்குரிய தனிப்பட்ட சிறப்பைக் காட்டுகின்றது.
2- உஸ்மான் (ரழி) அவர்கள் சுவனம் வாக்களிக்கப்பட்டவர்.
3- உஸ்மான் (ரழி) அவர்கள் சோதனைகளைச் சந்திப்பார்.
4- உஸ்மான் (ரழி) அவர்கள் கொல்லப்படுவார்.

பொதுவாகவே உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலம் சோதனைமயமானது என்பதை நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

مسند أحمد بن حنبل- 8522 أبو حبيبة أنه دخل الدار وعثمان محصور فيها وانه سمع أبا هريرة يستأذن عثمان في الكلام فأذن له فقام فحمد الله وأثنى عليه ثم قال اني سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : انكم تلقون بعدي فتنة واختلافا أو قال اختلافا وفتنة فقال له قائل من الناس فمن لنا يا رسول الله قال عليكم بالأمين وأصحابه وهو يشير إلى عثمان بذلك
எனக்குப் பின்னால் குழப்பங்களையும், முரண்பாடுகளையும் நீங்கள் சந்திப்பீர்கள் என நபியவர்கள் சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் ‘அல்லாஹ்வின் தூதரே அக்காலத்தில் எங்களுக்காக யார் இருப்பார்?’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களைச் சுட்டிக் காட்டி இந்த நம்பிக்கையாளரோடும், அவரின் தோழர்களோடும் சேர்ந்து கொள்ளுங்கள் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
ஆதாரம்: அஹ்மத்8522

مسند أحمد بن حنبل- 24610 عن عائشة قالت …….قال يا عثمان أن الله عز و جل عسى أن يلبسك قميصا فإن أرادك المنافقون على خلعه فلا تخلعه حتى تلقاني يا عثمان إن الله عسى أن يلبسك قميصا فإن أرادك المنافقون على خلعه فلا تخلعه حتى تلقاني ثلاثا فقلت لها يا أم المؤمنين فأين كان هذا عنك قالت نسيته والله فما ذكرته قال فأخبرته معاوية بن أبي سفيان فلم يرض بالذي أخبرته حتى كتب إلى أم المؤمنين أن اكتبي إلي به فكتبت إليه به كتابا
உஸ்மானே அல்லாஹ் உங்களுக்கு ஓர் ஆடையை அணிவிக்கலாம். நயவஞ்சகார்கள் அதைக் கழைய முனைந்தாலும் என்னைச்  சந்திக்கும் வரை அதை நீர் கழையவேண்டாம். என உஸ்மான் (ரழி) அவர்களின் தோளைத் தட்டியவாறு நபியவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : அஹ்மத் 24610

உஸ்மான் (ரழி) அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதை கீழ்வரும் செய்தியும் உறுதி செய்கின்றது.

مسند أحمد بن حنبل5953 – عن بن عمر قال : ذكر رسول الله صلى الله عليه و سلم فتنة فمر رجل فقال يقتل فيها هذا المقنع يومئذ مظلوما قال فنظرت فإذا هو عثمان بن عفان رضي الله تعالى عنه

பின்னால் நடக்கவிருக்கும் குழப்பமொன்றைப் பற்றி நபியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் அவ்விடத்தைக் கடந்து சென்றார். அப்போது நபியவர்கள் அம்மனிதரைப் பார்த்து ‘போhத்திக்கொண்டு செல்லும் இவர் அந்நாளில் அநியாயமாகக் கொல்லப்படுவார்’ என்று கூறினார்கள். (உடனே நான் அவரைப் பார்த்தேன் அவர் உஸ்மான் (ரழி) அவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி)
ஆதாரம் : அஹ்மத் 5953

மேலுள்ள ஹதீஸ்களனைத்தும் உஸ்மான் (ரழி) அவர்களுக்கு ஏற்படவிருந்த நிகழ்வுகளை முன்னறிவிப்புக்களாக எடுத்துக் கூறுகின்றன.

உமர் (ரழி) அவர்களுக்குப் பின்னால் அப்போது உலகில் மிகச் சிறந்த மனிதராகவிருந்து, தனது 70 வயதில் ஆட்சிக்கு வந்த உஸ்மான் (ரழி) அவர்கள், தனக்கு முன்னர் ஆட்சிபுரிந்த அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரைப் போன்றே நீதி, நேர்மைக்கு இலக்கணமாக ஆட்சி செய்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் எப்போது பிரச்சிணை வெடிக்கின்றதென்றால் உஸ்மான் (ரழி) அவர்கள் தன் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியான சிலரை பொறுப்புக்களில் அமர்த்திய போதுதான். அதே வேளை உஸ்மான் (ரழி) ஆட்சியானது இஸ்லாமிய நாகரீகத்தின் பொற்காலங்களிலொன்றாகவிருந்தது. ஆபிரிக்கா, ஐரோப்பாவென்று நாலா பக்கமும் இஸ்லாம் வளர்ச்சி பெற்றிருந்தது. இவ்வளவு விசாலமான தனது ஆட்சியில் தனது குடும்பத்தைச் சேர்ந்த வெறும் நான்கு பேரை மட்டுமே பொறுப்புக்களில் அமர்த்தியிருந்தார்கள் எனும் போது எந்த வகையிலும் இதை, ஓர் அதிகார துஷ்பிரயோகமாக, அல்லது முறைகேடானா செயலாகப் பார்க்க முடியாது. அதே வேளை தன்னால் நியமிக்கப்பட்ட தன் குடும்பத்தைச் சேர்ந்த வலீத் என்பவர் போதையுடன் தொழுகை நடாத்தினார் என்ற செய்தி தனக்கு வந்ததும் அதற்கெதிராக உஸ்மான் (ரழி) அவர்கள் நடவடிக்கை எடுக்காமலும் இருந்ததில்லை. மது அருந்திய அந்நபருக்கு கசையடி கொடுக்கச் சொல்லி, பொறுப்பிலிருந்து அவரை நீக்கியுமுள்ளார்கள். சிலர் கூறவதைப் போல உண்மையிலேயே உஸ்மான் (ரழி) அவர்கள் அநியாயக்காரராக நடந்திருந்தால் இத்தகைய அநியாயக்கரருக்கு அல்லாஹ்வின் தூதர் சுவனம் கிடைப்பதாக வாக்களித்திருக்கமாட்டார்கள். அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோர் மீது ஷியாக்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கட்டுக்கதைகளால்தான் இவ்வாறான தப்பபிப்பிராயங்கள் எழுந்துள்ளன. உஸ்மான் (ரழி) அவர்கள் தன் குடும்பத்தார்களை மற்றவர்களை விடக் கூடுதலாகக் கவனித்தார் எனும் செய்தியை சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு நிரூபிக்க முடியாது.

நபியவர்களைப் பற்றி வரும் செய்திகளைப் பொறுத்த மட்டில் அவற்றின் அறிவிப்பாளர் வரிசைகள் முறைப்படி திறனாய்வு செய்யப்பட்டு, ஆதாரபூர்மானதுதான் என்று உறுதியான பின்பு பின்பற்றப் படவேண்டியதாகும். வரலாற்றைப் பொறுத்தமட்டில் நாம் எதைக் கவனிக்க வேண்டுமென்றால் நபியவர்கள் குறித்த ஒரு நபித்தோழரைப் பற்றிப் பாராட்டி முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள் என்றால் வரலாற்றில் அவரைப் பாராட்டி சில செய்திகள் வந்துள்ளதென்றால் அவற்றின் அறிவிப்பாளர் தொடர்களையெல்லாம் நுணுக்கமாக ஆய்வு செய்யவேண்டிய அவசியமில்லை. நபியவர்கள் இவரைப் பற்றிப் புகழ்ந்து கூறியுள்ளார்கள். எனவே இவர் இந்த சிறப்புக்கு உரியவர்தான் என்றுதான் முடிவு செய்ய வேண்டும். அதே நேரம் ஒரு நபித்தோழர் பற்றி இகழ்ந்து வரலாற்றில் சில செய்திகள் வந்துள்ளதெனில் அதன் அறிவிப்பாளர் தொடர்களை ஆராயவேண்டும். அது உண்மைதான் என்று தெரிந்தால் ஒளிவு, மறைவின்றி அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அவர்; நல்லாவர்தான். ஆனாலும் மனிதர் என்ற அடிப்படையில் இத்தவறைச் செய்துள்ளார் என்று ஏற்கவேண்டும். ஸிப்பீன், ஜமல் யுத்தங்களையும் இவ்வாறுதான் நாம் கவனிக்க வேண்டும். இல்லையென்ன்றால் நல்ல பல ஆட்சியாளர்களைத் தவறாக எடை போடும் நிலைக்குத் தள்ளப்படுவோம். ஏனெனில் உஸ்மான் (ரழி) போன்ற நல்லவர்களைப் பற்றி பல விதமான தவறான செய்திகள் வரலாற்றில் கூறப்பட்டுள்ளன. ஜமல் யுத்தத்தில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எவ்வகையிலும் நம்பமுடியாததும், சாத்தியமற்றதுமாகும். வரலாற்றை அறிவிப்பவர்களில் மிகப் பிரதானமாக மூவர் இடம் பெறுகின்றனர். அவர்களில் ‘வாகிதீ’ என்பவரும் ஒருவராகும். இவர் ஒரு பெரும் பொய்யர். இவர் ஒரு முறை உஹத் யுத்தத்தைப் பற்றிப் பாடம் நடாத்திக் கொண்டிருக்கும் போது அவரது மாணவரில் ஒருவர் ‘என்ன சுருக்கமாகச் சொல்கிறீர்கள் சற்று விரிவாகச் சொல்லுங்கள்’ என்று கூறவும் மறுநாள் 70 பாகங்கள் கொண்ட தொகுப்பை எடுத்துக் கொண்டு வந்து உஹத் யுத்தம் பற்றி பாடம் நடாத்தியதாக வரலாற்றில் காண்கிறோம். 70 பாகங்கள் கொண்ட தொகுப்பை எடுத்துக் கொள்ளும் அளவிற்கு உஹத் யுத்தம் நீண்டதல்ல. எனவே கூடுதலாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவ்வளவு பொய்களைக் அள்ளிக் கொட்டியுள்ளார் என்பது மிகத் தெளிவாகின்றது. ஆகவே இவ்வாறான பொய்யர்களின் அறிவிப்புக்களும் வரலாற்றில் இடம் பெறுகின்றமையால் எவ்வாறு இவற்றை அணுக வேணடும் என்ற மேலே நாம் கூறிய அடிப்படையை அவசியம் நாம் அறிந்திருக்க வேண்டும்.

‘அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) ஆகிய இருவரும் தன் குடும்பத்தில் யாருக்கும் எப்பதவியையும் கொடுக்காத போது ஏன் உஸ்மான் (ரழி) அவர்கள் தன் குடும்பத்திலுள்ளவர்களைப் பதவியில் அமர்த்தினார்கள்’ என்ற கேள்வி உருவாக்கப்பட்டது.  இதைக் கண்ணுற்ற நயவஞ்சகர்கள் தருணம் பார்த்து காய்களை நகர்த்தி நிலைமையைப் பூதாகரிக்கச் செய்தனர். இச் செய்தி தேசம் பூராகவும் பரவுகின்றது. அதிருப்தியுற்ற சிலர் உபைதுல்லாஹிப்னு கிலாப் என்வரிம் சென்று இவ்விடயம் பற்றி உஸ்மான் (ரழி) அவர்களிடம் பேசுமாறு வேண்டுகின்றனர் அந்த செய்தி கீழுள்ளவாறு இடம் பெறுகின்றது.

صحيح البخاري 3696 – عَنْ يُونُسَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ أَخْبَرَهُ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ قَالَا مَا يَمْنَعُكَ أَنْ تُكَلِّمَ عُثْمَانَ لِأَخِيهِ الْوَلِيدِ فَقَدْ أَكْثَرَ النَّاسُ فِيهِ فَقَصَدْتُ لِعُثْمَانَ حَتَّى خَرَجَ إِلَى الصَّلَاةِ قُلْتُ إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً وَهِيَ نَصِيحَةٌ لَكَ قَالَ يَا أَيُّهَا الْمَرْءُ قَالَ مَعْمَرٌ أُرَاهُ قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ فَانْصَرَفْتُ فَرَجَعْتُ إِلَيْهِمْ إِذْ جَاءَ رَسُولُ عُثْمَانَ فَأَتَيْتُهُ فَقَالَ مَا نَصِيحَتُكَ فَقُلْتُ إِنَّ اللَّهَ سُبْحَانَهُ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَقِّ وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ وَكُنْتَ مِمَّنْ اسْتَجَابَ لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهَاجَرْتَ الْهِجْرَتَيْنِ وَصَحِبْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأَيْتَ هَدْيَهُ وَقَدْ أَكْثَرَ النَّاسُ فِي شَأْنِ الْوَلِيدِ قَالَ أَدْرَكْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ لَا وَلَكِنْ خَلَصَ إِلَيَّ مِنْ عِلْمِهِ مَا يَخْلُصُ إِلَى الْعَذْرَاءِ فِي سِتْرِهَا قَالَ أَمَّا بَعْدُ فَإِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَقِّ فَكُنْتُ مِمَّنْ اسْتَجَابَ لِلَّهِ وَلِرَسُولِهِ وَآمَنْتُ بِمَا بُعِثَ بِهِ وَهَاجَرْتُ الْهِجْرَتَيْنِ كَمَا قُلْتَ وَصَحِبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَايَعْتُهُ فَوَاللَّهِ مَا عَصَيْتُهُ وَلَا غَشَشْتُهُ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ ثُمَّ أَبُو بَكْرٍ مِثْلُهُ ثُمَّ عُمَرُ مِثْلُهُ ثُمَّ اسْتُخْلِفْتُ أَفَلَيْسَ لِي مِنْ الْحَقِّ مِثْلُ الَّذِي لَهُمْ قُلْتُ بَلَى قَالَ فَمَا هَذِهِ الْأَحَادِيثُ الَّتِي تَبْلُغُنِي عَنْكُمْ أَمَّا مَا ذَكَرْتَ مِنْ شَأْنِ الْوَلِيدِ فَسَنَأْخُذُ فِيهِ بِالْحَقِّ إِنْ شَاءَ اللَّهُ ثُمَّ دَعَا عَلِيًّا فَأَمَرَهُ أَنْ يَجْلِدَهُ فَجَلَدَهُ ثَمَانِينَ
உபைதுல்லாஹ் இப்னு அதீ கூறுகிறார்.மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத்;(ரஹ்) அவர்களும் என்னிடம், ‘உஸ்மான்(ரலி) அவர்களிடம் நீங்கள் அவர்களின் (தாய்வழிச்) சகோதரர் வலீத் இப்னு உக்பா) பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீத் விஷயத்திலும் மிக அதிகமாகக் குறை கூறுகிறார்களே!’ என்று கேட்டார்கள். எனவே நான் உஸ்மான்(ரலி) தொழுகைக்காகப் புறப்பட்ட நேரத்தில் அவர்களைத் தேடிச் சென்றேன். அவர்களிடம், எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது உங்களுக்கு (நான் கூற விரும்பும்) அறிவுரை’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘ஏ மனிதரே! உம்மிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று கூறினார்கள். உடனே, நான் திரும்பி அவ்விருவரிடம் வந்தேன். அப்போது உஸ்மான்(ரலி) அவர்களுடை தூதுவர் (என்னைத் தேடி) வர, நான் அவர்களிடம் (மீண்டும்) சென்றேன். உஸ்மான்(ரலி), ‘உங்கள் அறிவுரை என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பி அவர்களின் மீது (தன் வேதத்தையும் இறக்கியருளினான். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு பதிலளித்தவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்கள். எனவே, (மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்கும், அதன்பின்னர் மதீனாவுக்குமாக) இரண்டு ஹிஜ்ரத்துகள் மேற்கொண்டீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டு அவர்களின் வழிமுறையைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களோ வலீத் இப்னு உக்பாவைப் பற்றி நிறையக் குறை பேசுகிறார்கள் (நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?)’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்க நான், ‘இல்லை. ஆனால், திரைக்கப்பால் இருக்கும் கன்னிப் பெண்களிடம் (கூட) அல்லாஹ்வின் தூதருடைய கல்வி சென்றடைந்து கொண்டிருக்கும் (போது, அந்த) அளவு (கல்வி) என்னிடமும் வந்து சேர்ந்துள்ளது (குறித்து வியப்பில்லை.)’ என்று பதில் சொன்னேன். அதற்கு உஸ்மான்(ரலி), ‘அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின் கூறுகிறேன். அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தான். அப்போது, அல்லாஹ்வின் அழைப்புக்கும் அல்லாஹ்வின் தூதருடைய அழைப்புக்கும் பதிலளித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். மேலும், அவர்கள் எ(ந்த வேதத்)தைக் கொடுத்தனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக் கொண்டேன். நான் இரண்டு ஹிஜ்ரத்துத்துகளை மேற்கொண்டேன். – நீங்கள் சொன்னதைப் போல் – நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டேன்; அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை மரணிக்கச் செய்யும் வரை நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு அபூ பக்ர் அவர்களிடமும் அதைப் போன்றே (நடந்து கொண்டேன்) பிறகு உமர் அவர்களிடமும் அதைப் போன்றே (நடந்து கொண்டேன்.) பிறகு நான் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டேன். எனவே, அவர்களுக்கிருந்தது போன்ற அதே உரிமை எனக்கில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (உங்களுக்கும் அதே போன்ற உரிமை இருக்கிறது)’ என்று சொன்னேன். அவர்கள், ‘அப்படியென்றால் உங்களைக் குறித்து எனக்கு எட்டுகிற (என்னைக் குறை கூறும்) இந்தப் பேச்சுகளெல்லாம் என்ன? நீங்கள் வலீத் இப்னு உக்பா விஷயமாக சொன்னவற்றில் விரைவில் இறைவன் நாடினால் சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்’ என்று கூறினார்கள். பிறகு அலீ(ரலி) அவர்களை அழைத்து வலீத் இப்னு உக்பாவுக்கு (எதிராக சாட்சிகள் கிடைத்தால் அவருக்கு) கசையடிகள் கொடுக்கும் படி உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) அவர்களும் வலீதுக்கு எண்பது கசையடிகள் அடித்தார்கள்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்)
ஆதாரம் : புஹாரி 3696.

கூபாவாசிகளே உஸ்மான் (ரழி) அவர்களைக் கூடுதலாக விமரிசித்தவர்கள். இஸ்லாமிய வரலாற்றைப் பார்ப்போமாயின் பெரும்பாலான வழிகேடுகளும், பித்அத்களும் கூபாவில்தான் உருவாகியிருக்கிறன. ஹுஸைன் (ரழி) அவர்களை கூபாவுக்கு வருமாறு அழைத்து, அவர் வரும் வழியில் யஸீதுடைய படை அவரோடு யுத்தம் செய்து அவரைக் கொலையும் செய்தது. ஆனால் அவரை அழைத்த கூபா வாசிகள் யாரும் அவருக்கு உதவவில்லை. இதைப் போன்றுதான் ஸஃதிப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்களையும் அவர் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று கூபாவாசிகள் குற்றம் சாட்டினர். இவ்வாறு எதிலும் திருப்தியடையாதவர்களும், எதிலும் குறை காண்பவர்களாகவும் அவர்கள் இருந்தனர். சுருக்கமாகச் சொல்வதாயின் ‘குழப்பங்களின் தாயகம்’ என்று கூபாவுக்குச் சொல்லலாம். இந்தப் பிரதேசத்தில்தான் உஸ்மான் (ரழி) அவர்களால் நியமிக்கப்பட்ட ‘வலீத்’ என்பவர் தொழுவித்தார். மது அருந்துபவரை உஸ்மான் (ரழி) அவர்கள் ஆட்சியில் அமர்த்தவில்லை. அவர்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர் மது அருந்தினார் என்பதுதான் நடைபெற்றதாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனக்கெதிராக வந்த விமரிசனத்தைத் தட்டிக்கழிக்காமல் ஏற்றுக் கொண்டு, முறைப்படி அதற்குத்தக்க பதிலை வழங்கியதும் உஸ்மான் (ரழி) அவர்களின் சிறந்த அணுகுமுறைக்கு நல்லதொரு சான்றாகவுள்ளது. ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நயவஞ்சகர்களினால் பிண்ணப்பட்ட உஸ்மான் (ரழி) அவர்களுக்கெதிரான இந்த சதிவலையில் சில நபித்தோழர்களும் சிக்கினார்கள் என்பதுதான். இந்நபித் தோழர்கள் உஸ்மான் (ரழி) அவர்களுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கவில்லையென்றாலும் நயவஞ்சகர்களினால் கட்டவிழ்த்து விடப்பட்ட உஸ்மான் (ரழி) அவர்கள் மீதான அபாண்டங்களை நம்பினார்கள் எனலாம். இஸ்லாமிய கிலாபத் துண்டாடப்படுவதற்கும், நூற்றுக்கணக்கான உயிர்கள் போவதற்கும் காரணமாகவிருந்தவர்கள் நயவஞ்சகர்களே என்பதை ஜமல் யுத்தம் போன்ற சம்பவங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். இதே காரணிதான் உஸ்மான் (ரழி) அவர்களின் விவகாரத்திலும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. உஸ்மான் (ரழி) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது நபியவர்களோடிருந்த ஒர் உத்தமருக்கா இத்தகைய கோர நிகழ்வுகள் சம்பவித்தன என்ற கவலை உள்ளத்தை வாட்டுகின்றது. உஸ்மான் (ரழி) அவர்கள் முற்றுகை பற்றியும், அந்நேரத்தில் இப்னு உமர் (ரழி) அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள், கிளர்ச்சியாளர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொன்னார்கள் போன்ற அனைத்தையும் கீழ்வரும் செய்தி விவரிக்கின்றது.

உஸ்மான் (ரழி) அவர்கள் முற்றுகை பற்றியும், அந்நேரத்தில் இப்னு உமர் (ரழி) அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள், கிளர்ச்சியாளர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொன்னார்கள் போன்ற அனைத்தையும் கீழ்வரும் செய்தி விவரிக்கின்றது.

صحيح البخاري 3698 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ حَدَّثَنَا عُثْمَانُ هُوَ ابْنُ مَوْهَبٍ قَالَ جَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ مِصْرَ حَجَّ الْبَيْتَ فَرَأَى قَوْمًا جُلُوسًا فَقَالَ مَنْ هَؤُلَاءِ الْقَوْمُ فَقَالُوا هَؤُلَاءِ قُرَيْشٌ قَالَ فَمَنْ الشَّيْخُ فِيهِمْ قَالُوا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ يَا ابْنَ عُمَرَ إِنِّي سَائِلُكَ عَنْ شَيْءٍ فَحَدِّثْنِي هَلْ تَعْلَمُ أَنَّ عُثْمَانَ فَرَّ يَوْمَ أُحُدٍ قَالَ نَعَمْ قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ بَدْرٍ وَلَمْ يَشْهَدْ قَالَ نَعَمْ قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ فَلَمْ يَشْهَدْهَا قَالَ نَعَمْ قَالَ اللَّهُ أَكْبَرُ قَالَ ابْنُ عُمَرَ تَعَالَ أُبَيِّنْ لَكَ أَمَّا فِرَارُهُ يَوْمَ أُحُدٍ فَأَشْهَدُ أَنَّ اللَّهَ عَفَا عَنْهُ وَغَفَرَ لَهُ وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَدْرٍ فَإِنَّهُ كَانَتْ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ مَرِيضَةً فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا وَسَهْمَهُ وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ فَلَوْ كَانَ أَحَدٌ أَعَزَّ بِبَطْنِ مَكَّةَ مِنْ عُثْمَانَ لَبَعَثَهُ مَكَانَهُ فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُثْمَانَ وَكَانَتْ بَيْعَةُ الرِّضْوَانِ بَعْدَ مَا ذَهَبَ عُثْمَانُ إِلَى مَكَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ الْيُمْنَى هَذِهِ يَدُ عُثْمَانَ فَضَرَبَ بِهَا عَلَى يَدِهِ فَقَالَ هَذِهِ لِعُثْمَانَ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ اذْهَبْ بِهَا الْآنَ مَعَكَ

எகிப்து வாசியான ஒருவர் வந்து, (கஅபா எனும்) இறையில்லத்தை ஹஜ் செய்தார் அப்போது ஒரு கூட்டம் அமர்ந்திருப்பதைக் கண்டு, ‘இந்தக் கூட்டத்தார் யார்?’ என்று கேட்டதற்கு மக்கள், ‘இவர்கள் குறைஷிகள் என்று பதில் கூறினார்கள். அப்போது, ‘இவர்களின் முதிர்ந்த அறிஞர் யார்’ என்று அவர் கேட்டதற்கு மக்கள், ‘அப்துல்லாஹ் இப்னு உமர்’ என்று பதில் அளித்தார்கள். உடனே அவர் அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களை நோக்கி, ‘இப்னு உமர் அவர்களே நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப்பற்றிச் சொல்லுங்கள். உஸ்மான்(ரலி) உஹுதுப் போர்க்களத்திலிருந்து வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) ‘ஆம் அறிவேன்’ என்று பதில் அளித்தார்கள். அப்போது அவர் ‘உஸ்மான்(ரலி) பத்ர் போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார். அற்கு இப்னு உமர்(ரலி) ‘ஆம் தெரியும்’ என்று பதில் அளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் அவர், ‘ஹுதைபியாவில் நடந்த பைஅத்துர் ரில்வான் சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க ஆம் தெரியும் என்று பதில் அளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு உஸ்மான்(ரலி) தாம் நினைத்தது போன்றே இவ்வளவு குறைகளுள்ளவர்தாம் என்று தொனிக்கும் படி) அந்த மனிதர், அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன் என்று என்று கூறினார். அப்போது இப்னு உமர்(ரலி), ‘வாரும்! (இவற்றிலெல்லாம் உஸ்மான்(ரலி) ஏன் பங்கு பெறவில்லை என்பதை உனக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரின் பிழையைப் பொறுத்து மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியாக இருக்கிறேன். பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், நபி(ஸல்) அவர்களின் மகள் (ருகய்யா(ரலி)) உஸ்மான்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) அப்போது நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் பத்ர் போரில் பங்கெடுத்த ஒருவருக்குரிய (மறுமைப்) பலனும், (போர்ப் பொருளில்) உங்களுக்கான பங்கும் கிடைக்கும் (நீங்கள் உங்களுடைய மனைவியைக் கவனியுங்கள்) என்றார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை.) பைஅத்துர் ரிள்வான் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம் உஸ்மான்(ரலி) அவர்களையும் விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) அப்படி இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்கள், குறைஷிகளிடம் பேசுவதற்கு தம் தூதராக அவரை) அனுப்பி இருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை.) எனவேதான், நபி(ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும் இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான்(ரலி) மக்காவிற்குள் போனபின்னர்தான் நடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலகக்ரத்தைச் சுட்டிக் காண்பித்து இது உஸ்மானுடைய கை என்று கூறி அதை தம் இடக்கரத்தின் மீது தட்டினார்கள். பிறகு, இப்போது நான் செய்யும் சத்தியப்பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்’ என்றார்கள். என இப்னு உமர்(ரலி) கூறிவிட்டு, (உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், ‘நான் இப்போது சொன்ன பதில்களை நீ எடுத்துச் செல்லலாம்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உத்மான் பின் வஹப்
ஆதாரம் : புஹாரி 3698

இந்தக் குழப்பகாலங்களில் இப்னு (ரழி) அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாகவேயிருந்தன. பிரச்சினைகள் எதிலும் தொடர்பற்றவராகவே அவர்கள் இருந்தர்கள். இது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரிடம் வினவப்பட்ட போது அவர்களளித்த பதிலைக் கீழ்வரும் செய்தி விபரிக்கின்றது.

صحيح البخاري 4513 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَتَاهُ رَجُلَانِ فِي فِتْنَةِ ابْنِ الزُّبَيْرِ فَقَالَا إِنَّ النَّاسَ صَنَعُوا وَأَنْتَ ابْنُ عُمَرَ وَصَاحِبُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا يَمْنَعُكَ أَنْ تَخْرُجَ فَقَالَ يَمْنَعُنِي أَنَّ اللَّهَ حَرَّمَ دَمَ أَخِي فَقَالَا أَلَمْ يَقُلْ اللَّهُ {وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ} فَقَالَ قَاتَلْنَا حَتَّى لَمْ تَكُنْ فِتْنَةٌ وَكَانَ الدِّينُ لِلَّهِ وَأَنْتُمْ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِغَيْرِ اللَّه
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபால் முற்றுகையிடப்பட்ட யுத்தக்) குழப்ப (வருட)த்தில் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து, ‘மக்கள் (அரசியல் காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவுபட்டு) அலைக்கழிக்கப்படுகிறார்கள். தாங்கள் உமர்(ரலி) அவர்களின் புதல்வரும் நபி(ஸல்) அவர்களின் தோழரும் ஆவீர்கள். (நியாயத்திற்காகப் போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது?’ என்று கேட்டனர். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘என் சகோதரனின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே (புறப்படவிடாமல்) என்னைத் தடுக்கிறது’ என்று கூறினார்கள். அதற்கு அவர்களிருவரும் ‘குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்’ என்று (திருக்குர்ஆன் 02:193 வது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘(ஆம்! இறைத்தூதர்(ஸல்) காலத்தில்) குழப்பம் நீங்கும் வரை (பகைவர்களுடன்) நாங்கள் போராடினோம். மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்க உரித்தானதாக ஆனது. ஆனால், (இப்போது) நீங்களோ (அரசியல் காரணங்களுக்காகப்) போராடி குழப்பம் உருவாகுவதையும், மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ் அல்லாதோருக்கு உரித்தானதாக ஆவதையுமே விரும்புகிறீர்கள்!’ என்றார்கள்
அறிவிப்பவர் : நாபிஃ (ரஹ்)
ஆதாரம் : புஹாரி 4513

உஸ்மான் (ரழி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்து போது இப்னு உமர் (ரழி) அவர்கள் அங்கு சென்றதும் உஸ்மான் (ரழி) அவர்கள் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் ‘முகீரா இப்னு அஹ்னஸ் கூறுவது பற்றி நீர் என்ன சொல்கிறீர்’; என்றுஆலோசனை கேட்கிறார்கள். அதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் ‘நீங்கள் ஆட்சியை அவர்களுக்குக் கொடுத்து விட்டால் உங்களை உலகில் அவர்கள் வாழவிடுவார்கள் என்று நினைக்கிறீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள் ‘இல்லை என்னைக் கொலை செய்வார்கள்’ என்றார்கள். மீண்டும் இப்னு உமர் (ரழி) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் ‘ஆட்சியை நீங்கள்அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் உம்மைக் கொலை செய்வதைத் தவிர வேறெதையாயினும் அவர்களால் செய்ய முடியுமா?’ எனக் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். தொடர்ந்தும்  இப்னு உமர் (ரழி) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் ‘அவர்களுக்கு சொர்க்கமும், நரகமும் சொந்தமா?’ எனக் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள் ;இல்லை’ என்றார்கள். அதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் ‘நீங்கள் ஆட்சியை அவர்களுக்கு விட்டுக்கொடுத்தால் இஸ்லாத்தில் அது முதல் ஸுன்னாவாக மாறிவிடும். எனவே அல்லாஹ் உங்களுக்கு அணிவித்த இந்த ஆடையை அல்லாஹ்வை சந்திக்கும் வரை நீங்கள் கழட்ட வேண்டாம் அதுவே நான் உங்களுக்குக் கூறும் அறிவுரை’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உஸ்மான் (ரழி) அவர்கள் தன் உயிர் பிரியும் வரை இதே ஆலோசனையில் உறுதியாக இருந்தார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்து போது சில நபித்தோழர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் சென்று ஹஜ்ஜுக்குச் செல்ல அனுமதி கேட்டார்கள். உஸ்மான் (ரழி) அவர்கள் அவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். அப்போது அந்த நபித்தோழர்கள் ‘நாம்  ஹஜ்ஜுக்குச் சென்று வரும் போது ஆட்சி அவர்களுக்கு மாறிவிட்டால் நாம் என்ன செய்வது?’ என்று கேட்டார்கள் அதற்கவர்கள் ‘கூட்டமைப்போடு இருந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு அந்நபித்தோழர்கள் ‘கூட்மைப்பு அவர்களுக்கு பைஅத் செய்திருந்தால் நாம் என்ன செய்வது?’ என்று கேட்டதும் உஸமான் (ரழி) அவர்கள் ‘அவர்களோடு இருந்து கொள்ளுங்கள்’ என்றார்கள். அப்போது ஹஸன் (ரழி) அவர்கள் அங்கே வந்து ‘உஸ்மானே நான் உங்கள் கையிலிருக்கின்றேன் தாங்கள் சொன்னால் அவர்களோடு போர் செய்யவும் தயாராகவுள்ளேன் என்றார்கள். அப்போது உஸ்மான் (ரழி) அவர்கள் ஹஸன் (ரழி) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் ஏவல் வரும் வரை திரும்பிச் சென்று வீட்டிலிருப்பீராக இரத்தம் ஓட்டுவதற்கு எனக்கு எந்தத் தேவையுமில்லை’ என்றார்கள்.
صحيح البخاري
2778- وَقَالَ عَبْدَانُ أَخْبَرَنِي أَبِي عَنْ شُعْبَةَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ حُوصِرَ أَشْرَفَ عَلَيْهِمْ وَقَالَ أَنْشُدُكُمْ اللَّهَ وَلَا أَنْشُدُ إِلَّا أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الْجَنَّةُ فَحَفَرْتُهَا أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ قَالَ مَنْ جَهَّزَ جَيْشَ الْعُسْرَةِ فَلَهُ الْجَنَّةُ فَجَهَّزْتُهُمْ قَالَ فَصَدَّقُوهُ بِمَا قَالَ وَقَالَ عُمَرُ فِي وَقْفِهِ لَا جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ وَقَدْ يَلِيهِ الْوَاقِفُ وَغَيْرُهُ فَهُوَ وَاسِعٌ لِكُلٍّ
(கலீஃபா) உஸ்மான்(ரலி) (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து), ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். ‘ரூமா’ என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபி(ஸல்) அவர்கள் ‘பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவியால்) தயார்படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்’ என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென எனச் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூ அப்துர்ரஹ்மான்
ஆதாரம் : புஹாரி 2778

வேறு சில அறிவிப்புக்களில் ‘எந்தப் பள்ளியை நான் விரிவுபடுத்த உதவினேனோ அப்பள்ளியில் என்னைத் தொழ விடாமல் இவர்கள் தடுக்கின்றார்கள்’, எந்தக்கிணற்றை வாங்க நான் உதவினேனோ அக்கிணற்றிலிருந்து எனக்குத் தண்ணீர் வருவதை இவர்கள் தடுக்கின்றார்கள்’ என்று உஸ்மான் (ரழி) கூறியதாக வந்துள்ளது.

இவற்றையெல்லாம் அவதானித்த சிலர் கலகக் காரர்களோடு இருக்காமல் சென்றுவிடுகின்றனர். என்றாலும் நபித்தோழர்களுக்குத் தெரியாமல் நயவஞ்கர்கள் ஒன்றிணைந்து உஸ்மான் (ரழி) அவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் உஸ்மான் (ரழி) அவர்கள் அந்தக் கூட்த்துடன் என்ன பேசினார்கள் என்பதைக் கீழ்வரும் செய்தி விவரிக்கின்றது.

‘நீங்கள் எதற்காக என்னைக் கொலை செய்யப் போகின்றீர்கள்?’ எனக் கேட்டு விட்டு ‘திருமணம் முடித்த பின் விபச்சாரம் செய்தவரும், வேண்டுமென்றே ஒரு முஃமினைக் கொலை செய்தவரும், இஸ்லாத்தை ஏற்று, பின்னர் மதம் மாறியவரும்தான் கொல்லப்பட வேண்டும். அறியாமைக் காலத்திலும் நான் விபச்சாரம் செய்யவில்லை. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் நான் விபச்சாரம் செய்யவில்லை. இஸ்லாத்தை ஏற்றபின்பும், ஏற்க முன்பும் நான் யாரையும் கொலை வுமில்லை. நபியவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற பின்பு நான் எப்போதும் மதம் மாறியதுமில்லை. (ஆகவே எதற்காக என்னைக் கொலை செய்யப் போகின்றீர்கள்!!!!)  தான் கொல்லப்படத் தகுதியானவனல்ல என்பதை உஸ்மான் (ரழி) அவர்கள் இப்படியெல்லாம் அவர்களிடம் முன்வைத்துள்ளார்கள். இவ்வளவும் நடந்த பின்பு கலகக்காரர்களில் ஒருவர் வீட்டின் பின் பக்கத்தால் ஏறி வீட்டுக்குள் நுழைந்து, உஸ்மான் (ரழி) அவர்களைக் கொலை செய்வதற்காக வருகிறார். இதைக்கண்ட உஸ்மான் (ரழி) அவர்கள் தனது வாலையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டு அவரை எதிர்க்கப் போகின்றார்கள. இதைக் கண்டு அதிந்து போன அந்நபர் உஸ்மான் (ரழி) அவர்களைப் பார்த்து ‘உஸ்மானே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதைக் கேட்ட உஸ்மான் (ரழி) அவர்கள் அவரை எதிர்க்காமல் அமர்ந்து விடுகிறார்கள். இந்த இக்கட்டான நேரத்தில் பலர் உஸ்மான் (ரழி) அவர்களிடம் வந்து கலகக்காரர்களை எதிர்த்து யுத்தம் செய்ய அனுமதி கோறுகிறார்கள். அப்போதெல்லாம் உஸ்மான் (ரழி) அவர்கள் கூறியது ‘அல்லாஹ் எனக்கு அணிவித்த ஆடையை அவனைச் சந்திக்கும் வரை நான் கலையமாட்டேன்’ என்பதைத்தான். இறுதியில் நயவஞ்சகர்களின் முயற்சியினால் வீட்டின் பின் பக்கத்தால் பலரும் உள்நுழைகின்றனர். அவர்களுல் அபூபக்கர் (ரழி) அவர்களின் மகன் முஹம்மத் என்பவரும் அடங்குவர். இவர் உஸ்மான் (ரழி) அவர்களின் தாடியைப் பிடிக்கின்றார். அப்போது உஸ்மான் (ரழி) அவர்கள் ‘நீ இவ்வாறு செய்வதை உன் தந்தை கண்டால் என்ன செய்வார் என்று உனக்குத் தெரியுமா? இவ்விடத்தில் அவரிருந்தால் இவ்வாறு செய்யமாட்டார்’ என்று கூறுகிறார்கள். இதைக் கேட்டதும் முஹம்மத் பின்வாங்கிவிடுகிறார்.  நயவஞ்சகர்களின் தூண்டலுக்கு இவ்வாறான நல்லவர்களும் இரையாகினர். அதன் பின்னால் வந்த சிலர் உஸ்மான் (ரழி) அவர்களின் கழுத்தை கழுத்தை நசுக்கி வாளால்  வெட்டுகிறார்கள். இவ்வளவு நடந் பின்பும்  உஸ்மான் (ரழி) அவர்கள்  எதுவும் செய்யவில்லை. அவ்வாறே மரணிக்கின்றார்கள். தான் கொல்லப்படும் போது ‘அவர்கள் விடயத்தில் அல்லாஹ் போதுமானவன்’ என்ற வசனத்தையே உஸ்மான் (ரழி) அவர்கள் திருப்பித்திருப்பி ஓதிக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகின்றது.அந்த இரத்தக் கரை படிந்த இல்குர்ஆன் பிரதி இன்றைக்கும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் இரத்தக் கரை படிந்த இக்குர்ஆன் பிரதியையும், பிடுங்கப்பட்ட உஸ்மான் ரழி) அவ்களின் தலை முடியையும் முஆவியா (ரழி) அவர்களிடம் அனுப்பினார்கள். இதுதான் முஆவியா (ரழி) அவர்களைக் கிளர்ந்தெழவைத்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே உஸ்மான் (ரழி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி கேள்விப்படவே நபித்தோழர்களனைவரும் கலங்கிப் போனார்கள். மிகப்பெரிய தவறொன்று நிகழ்ந்துவிட்டதாக உணர்ந்தார்கள். அப்போது ஹுதைபா (ரழி) அவர்கள் ‘யாஅல்லாஹ் உஸ்மானின் கொலையிலிருந்து நான் நிரபராதி என்பதை நீ அறிவாய் அவர்கள் சரியாக அவரைக் கொலை செய்திருந்தாலும் பிழையாகக் கொலை செய்திருந்தாலும் அவர்களுக்கு நீயே பொறுப்பு’ என்று துஆச் செய்தார்கள். உஸ்மான் (ரழி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி அலீ (ரழி) அவர்களுக்கும் கேள்விப்படுகின்றது. அப்போது அவர்கள் அழுதவர்களாக ‘யா அல்லாஹ் உஸ்மானின் கொலையிலிருந்து நான் நிரபராதி’ என்று கூறினார்கள். இவ்வாறு பல நபித்தோழர்கள் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினர். பிற்காலத்தில் ஜமல் யுத்தத்தின் போது அலீ (ரழி) அவர்கள்‘யா அல்லாஹ் உஸ்மானின் கொலையிலிருந்து நான் நிரபராதி. அவர் கொல்லப்பட்ட போது எனது புத்தியே போய்விட்டது. என்னையே நான் வெறுத்தேன். அவ்வேளையில் இவர்கள் என்னிடம் பைஅத் செய்ய வந்தார்கள். ‘மலக்குகள் இவரைப் பார்த்து வெட்கப்படுகின்றார்கள்’ எனறு நபியவர்கள் கூறிய ஒருவரைக் கொலை செய்து விட்டு என்னிடம் இவர்கள் பைஅத் பெற முயற்சிப்பதைப் பார்த்து நான் வெட்கப்படுகின்றேன். என்னை இவர்கள் வற்புறுத்தினர் அதற்காக நான் ஏற்றுக்கொண்டேன் இப்போதும் பயந்தவனாகவே நான் உள்ளேன்’ என்று கண்ணீர் சிந்தியவராகக் கூறினார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்களின் கொலையில் நபித்தோழர்களுக்குத் தொடர்பில்லை என்பதையே இதிலிருந்து நாம் விளங்கவேண்டியுள்ளது. தவறான சில செய்திகள் வந்ததற்காக உஸ்மான் ரழி) அவர்களை  விசாரிக்க வேண்டும் என்றுதான் அவர்கள் அவ்வாறு நடந்தார்களே தவிர அவரைக் கொல்ல வேண்டும் என்பதற்காகவல்ல.

வதந்திகளை தீர விசாரிக்காமல் அப்படியே நம்புவது பல நல்லவர்களை நாம் அவசரமாக இழக்கவே வழி வகுக்கும் என்பதே நான் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வில் பெற வேண்டிய படிப்பினையாகும். அதே நேரம் நான் தூய்மையானவன் என எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டு நம்மை தூயவனாகக் காட்டிக் கொள்ளக் கூடாது அதனால் நமது பதவிகளல்ல உயிரே போனாலும் சரி. என்பதும் இத்தலைவரின் வீர மரணம் தரும் மிகப்பெரும் படிப்பினையாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts