தஹஜ்ஜுத், கியாமுல்லைல், தராவீஹ் வித்ர் போன்ற அனைத்துப் பெயர்களுமே இரவில் தொழப்படும் தொழுகையைக் குறிக்கப் பயன்படும் பெயர்கள். இவைகள் அனைத்தும் ஒரே தொழுகையின் பெயர்களே. ஆனால் நாம் அதனை வழங்கும் முறை வித்தியாசப்பட்டுள்ளது. தூங்கியெழுந்து தொழுதால் தஹஜ்ஜுத் என்கிறோம். ரமழானில் தொழுதால் தராவீஹ் என்கிறோம். இரவுத் தொழுகையை ஒற்றைப்படையாக முடிக்கவேண்டும் என்ற கட்டளை இருப்பதால் இரவுத்தொழுகையை வித்ர் என்றும் ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் குர்ஆனிலும் ஹதீஸிலும் அதிகமாக இரவுத் தொழுகைக்கு கியாமுல்லைல் என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.
தஹஜ்ஜுத் என்ற வார்த்தை பொதுவாக இரவுத் தொழுகைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல் குர்ஆனிலே இவ்வாறு இடம்பெறுகிறது.
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا الإسراء : 79
‘மேலதிகமாக இதன் (குர்ஆன் மூலம் இரவில் தஹஜ்ஜுத் தொழுவீராக. புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பலாம்.” இஸ்ரா:79
அதே போன்று ஹதீஸ்களில் தஹஜ்ஜுத் என்ற வார்த்தை தூங்கிய பின் எழுந்து தொழுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
صحيح البخاري ـ 1136 – عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ مِنْ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ
‘நபியவர்கள் இரவில் தஹஜ்ஜுதிற்காக எழுந்தால் குச்சியைக் கொண்டு பல் துலக்குவார்கள்” என ஹ{தைபா ரலியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி:1136
எனவே தஹஜ்ஜுத் என்ற வார்த்தை இரவுத் தொழுகையைக் குறிக்கத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டோமென்றால் பொதுவாக இரவுத் தொழுகை பிந்திய இரவில் தொழுவதே சிறந்தது.
صحيح مسلم للنيسابوري – 1802 – عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ خَافَ أَنْ لاَ يَقُومَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ أَوَّلَهُ وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ فَإِنَّ صَلاَةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ وَذَلِكَ أَفْضَلُ »
‘இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து தொழமுடியாமல் போகும் என அஞ்சுபவர் அதன் ஆரம்பப் பகுதியில் ஒற்றைப்படையாகத் தொழட்டும். யார் இரவின் கடைசிப் பகுதியில் தொழ ஆர்வங்கொள்கிறாரோ அவர் அதன் கடைசிப் பகுதியிலேயே ஒற்றைப்படையாகத் தொழட்டும் ஏனெனில் இரவின் கடைசிப் பகுதியின் தொழுதல் சாட்சி கூறப்படும் அதுவே சிறந்தது” என நபியவர்கள் கூறினார்கள் ஆதாரம் : முஸ்லிம் 1802
எனவே தூக்கத்தை அஞ்சினாலே தவிர இரவின் கடைசிப் பகுதியே சிறந்தது என்பதை மேற் சொன்ன ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது. அல்லாஹ் அந்தத் தொழுகையை ஆர்வத்தோடு தொழக்கூடிய திடத்தை நம்மனைவருக்கும் தரவேண்டும்.