Tuesday, April 16, 2024

பஹ்ரைன் நிலவரம் ஒரு திறந்த வாசிப்பு (2011)

அரேபிய வளைகுடாவின் முத்து என அழைக்கப்படும் பஹ்ரைன் புரட்சியின் நோக்கம் பின்னணி அதன் உண்மை நிலவரங்கள் பற்றிய தகவல்களை தேடுவதும் எழுதுவதும் மிகச் சிரமமான விடயம். சீயாக்களின் ஊடகச் செய்திகள், மேற்கத்திய ஊடகங்களின் செய்திகளுக்கும் அதை கொஞ்சம் மெருகூட்டி வழிமொழியும் அல் ஜஸீராவின் தகவல்களுக்கு மத்தியிலும் இயக்க உணர்வின் பின்னணியில் பக்க சார்பு செய்திகளையும் நடுநிலையான பார்வையுடன் சாதக பாதகம் பார்க்காமல் செய்திகளை வழங்கும் மத்திய கிழக்கு அரபு ஊடகங்களுக்கு மத்தியிலும் பெப்ரவரி14ம் திகதி தொடங்கி இன்று வரை நீடித்திருக்கும் பியரல் சதுக்கத்தில் ஆரம்பித்த புரட்சியின் உண்மை நிலையை தேர்ந்து தருவது ஒரு கடினமான காரியம். யூடியுபின் க்ளிப்களை வைத்தோ சில பிரபல்ய ஊடகங்களின் தகவல்களை மாத்திரம் வைத்தோ எந்த அவசர முடிவிற்கும் யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்கு பஹ்ரைன் நிலவரம் பெரியதொரு ஆதாரம். கூகுல் ஏத் கூட இந்த ஆர்ப்பட்டத் தூண்டுதல் சக்தியாக செயல்பட்டுள்ளது.என்றாலும் பெப்ரவரி 14ம் திகதியிலிருந்து இன்றுவரை அனைத்து செய்தி ஊடகங்களிலும் இப்புரட்சியை அவதானித்தவர்களுக்கும் பஹ்ரைனின் வரலாற்றுப் பின்னணியை சரியாக அறிந்திவர்களுக்கும் இப்புரட்சியில் இன்று நடப்பதென்ன என்ற முடிவிற்கு ஓரளவு வரலாம்.

அரேபிய வளைகுடாவா?பாரசீக வளைகுடாவா?

அரேபிய வளைகுடாவா?பாரசீக வளைகுடாவா? என்ற பிரச்சனை இன்று வரை சிக்கலான முடிவு காணப்படாத ஒன்றாய் இருப்பதை அவதானிக்கலாம். ஈரானிய செய்திஸ்தாபனங்களும் சீயா சார்பு ஊடகங்களும் இன்னும் பெரும்பாலான மேற்கத்தேய ஊடகங்களும் பாரசீக வளைகுடா என்ற வழக்கை பயன்படுத்தும் அதே நேரம் மத்திய கிழக்கு ஊடகங்களும் மற்றும் அரேபிய ஊடகங்களும் அரேபிய வளைகுடா என்ற வழக்கையே பயன்படுத்தி வருகின்றன.பழங்கால வரைபடங்களில் இருவிதப் பயன்பாட்டையும் காண முடிகிறது. இந்தப் பிரச்சனைக்குப் பின்னால் வளைகுடா மற்றும் அதன் தீவுகளின் நலவுகளில் அதிக கவனம் செலுத்தும் தகைமை யாருக்கு உண்டு என்கின்ற குறைத்து மதிப்பிட முடியாத ஒரு உரிமைப் பிரச்சினை இருப்பதே இதற்குக் காரணம்.ஆனாலும் வளைகுடா பாரசீக என்கின்ற எச்சத்தைக் கொண்டாலும் அரேபிய என்கின்ற எச்சத்தைக் கொண்டாலும் இட அமைவு ரீதியாக அரேபிய தீபகற்பத்தோடு அது கட்டுண்டிருப்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. வளைகுடா கூட்டுறவு அமைப்புடன் பஹ்ரைன் இணைந்ததும் 1780களிலிருந்து ஜுமைலாக் கோத்திரப் பிரிவின் ஒரு பகுதியான ஆலு கலீபாக்களின் ஆட்சி அங்கு நீடித்திருப்பதும் இதை உறுதி செய்கிறது. தேசிய மொழியாக வளைகுடாத் தீவுகளின் முத்தான பஹ்ரைனில் அரபு மொழி இருந்துவருவதும் இதை வலுப்படுத்துகிறது எனலாம். முலர் மற்றும் அப்துல் கைஸ் என்ற அரபு அத்னானியாக் கோத்திரங்கலே பஹ்ரைனின் மூல குடிகள் என்பதும் இதற்கு இன்னும் வலு சேர்க்கிறது.

அன்றைய அவாலும் இன்றைய பஹ்ரைனும்

அரேபிய வளைகுடாக் கடலின் முக்கிய தீவுக் கூட்டங்களாக இருக்கும் ஒரு நிலப்பரப்புக்கு இன்று பஹ்ரைன் என்று வழங்கப்பட்டாலும் ஆரம்பத்தில் ஆதிகால விரிந்த பஹ்ரைனின் ஒரு பகுதியாகவே இது காணப்பட்டது. அரேபியர்களால் அவால் என்ற பிரதேசமாக அன்று அறியப்பட்டதே இன்றைய பஹ்ரைன். அன்று அவால் விரிந்த பஹ்ரைன் என்ற நிலப்பரப்பின் ஒரு நாடுதான். அன்று விரிந்த பஹ்ரைனாக அறியப்பட்டது. வடக்கில் பஸராவையும் தெற்கில் ஓமானையும் எல்லையாகக் கொண்ட அஹ்ஸா, கதீப், கத், ஹஜர் போன்ற இன்றைய ஸஊதியின்  பெரும் கிழக்குப் பிரதேசங்களையும் அதன் கிழக்குக் கரையோரத்தோடு நிலத்தால் இன்றைய அமைவை விட அன்று நெருங்கியிருந்த அவாலும் சேர்ந்ததே அன்றைய பஹ்ரைன். அதாவது ஸஊதியின் இன்றைய கிழக்குமாகாணமும் அன்றைய பஹ்ரைனாக இருந்தது. அவால் என்ற பெயர் அவர்களன் இஸ்லாத்திற்கு முன் வணங்கிய சிலையை மையமாக வைத்து உருவானதாகும். அதே நேரம் இன்றைய பஹ்ரைன் முழுவதற்கும் அந்தப் பெயர் வழங்கப்பட்டதாகச் சொல்ல முடியாது. கிரேக்கர்கள் இந்தத் தீவுக் கூட்டத்தைக் கண்டுபிடிக்க எடுத்த முயற்சியில் இன்றைய பஹ்ரைனில் மிகப்பெரிய தீவாக உள்ள பஹ்ரைன் மாநிலத்திற்கு தாய்லூஸ் என்றும் இன்னொரு மாநிலமான முஹர்ரகிற்கு அராதூஸ் என்றும் வழங்கியுள்ளார்கள்.இன்றுங் கூட முஹர்ரக் மாநில தீவின் முக்கிய நகரம் அராத் என்று அழைக்கப்படுகிறது.

நபிமொழிக் கிரந்தங்களிலும் ஆரம்ப இஸ்லாமிய வரலாற்று நூல்களிலும் பஹ்ரைன் என்ற சொல் விரிந்த பஹ்ரைனிற்கே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். இஸ்லாத்தின் மிக முக்கிய கூட்டுக் கடமையில் ஒன்றான வெள்ளிமேடை பிரசங்கம் மதீனாவிற்குப் பின் இரண்டாவதாக நடத்தப்பட்ட பிரதேசம் பஹ்ரைனின் ஜுவாஸா பிரதேசத்திலே உள்ள அப்துல் கைஸ் கோத்திரத்தினரின் பள்ளிவாயலிலேயே (புகாரி: 4371) இந்தச் செய்தியில் வரும் பஹ்ரைன் பிரதேசத்தின் ஜுவாஸா என்பது ஸஊதியின் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அஹ்ஸா என்ற பெரும் பிரதேசத்தின் ஒரு மிக முக்கியமான கோட்டையைஉ ள்ளடக்கிய கிராமமாகும். அந்தப் பள்ளிவாயலின் அத்திவார அடையாளங்கள் இன்றும் உள்ளன என பல புகைப்படங்கள் சொல்கின்றன. நபியவர்களின் காலத்தில் இந்த பரந்த நிலப்பரப்பில் பாரசீகக் கிஸ்ராவின் காலணித்துவம் ஆட்சி செய்துகொண்டிருந்தது. நபியவர்கள் கிஸராவின் பிரதிநிதியாக அன்றைய பஹ்ரைனில் ஆட்சி பீடம் ஏறியிருந்த மன்னருக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு கடிதம் எழுதியனுப்பினார்கள். அதை அவர் கிஸராவிற்கு அனுப்பி வைத்தபோது அக்கடிதத்தைச் சுருட்டிக் கிழித்து எறிந்தார். இதை கேள்விப்பட்ட நபியவர்கள் அவரையும் அவரது ஆட்சியையும் அல்லாஹ் தகர்ப்பானாகஎனப் பிரார்த்தித்தார்கள்.(புகாரி:64) பின்னர் நபியவர்களோடு பஹ்ரைன் சமாதானம் செய்து கொண்டு ஜிஸ்யா வரி செலுத்தி இஸ்லாத்தை எதிர்க்காமல் இருக்கும் உடன்படிக்கையைக் கடைபிடித்தது. இக்காலப் பகுதியிலேயே அப்துல் கைஸ் கோத்திரத்தினர் இஸ்லாத்தை ஏற்கின்றனர். இங்கெல்லாம் இடம்பெரும் பஹ்ரைன் இன்றைய பஹ்ரைனை விட ஸஊதியின் இன்றைய கிழக்குமாகாணப் பகுதிகளையே மிகையாக ஆழ்வதைக் காணமுடிகிறது.

இன்றைய ஓமானும் அன்றைய விரிந்த பஹ்ரைனின் ஒரு பகுதிதான். ஓமானுக்கு நீங்கள் பிரச்சாரம் செய்யச் சென்றிருந்தால் அவர்கள் உம்மை ஏசியிருக்கவும் மாட்டார்கள். உம்மை அடித்திருக்கவும் மாட்டார்கள்என்று நபியவர்கள் காயப்பட்ட ஒரு நபித்தோழருக்கு சிலாகித்திச் சொன்னார்கள்.(முஸ்லிம்:2544) இதற்கு விளக்க நூல் எழுதிய இமாம் நவவி அவர்கள் ஓமான் பஹ்ரைனின் பிரதேசங்களில் ஒன்றுஎன்று எழுதுகிறார். இவர் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னு பதூதா மற்றும் சில அரபு நாடுகாண் பயணிகளின் நூல்களிலேயே முதன் முதலாக இன்றைய பஹ்ரைனிற்கு மாத்திரம் பஹ்ரைன் என்ற பெயரை உபயோகித்ததைக் காண முடிகிறது.

இஸ்லாத்திற்குப் பின் பஹ்ரைன்

பஹ்ரைன் ஒரு செல்வந்தப் பிரதேசமாகவே அன்று முதல் இன்றுவரை அறியப்படுகிறது. தொழில் வாய்ப்பற்வர்கள் அந்நாட்டில் 4 சதவீதத்திற்கும் குறைவானவர்களாகவே உள்ளனர். நபியவர்களும் தன் தோழர்களிடத்தில் பஹ்ரைனின் வரிப்பணம் வந்தால் இவ்வாறு இவ்வாறெல்லாம் உங்களுக்குத் தருவேன் என்று சொன்ன பல செய்திகளைக் காண முடிகின்றன. பஹ்ரைன் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியான முறையில் இஸ்லாத்தைத் தழுவ ஆரம்பித்து பின் முழுமையடைந்தது. அபூக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியில் நடந்த ஸகாத் மறுப்பு எனும் ரித்தத் இங்கேயும் பரவாலக ஏற்பட்டது. பின்னர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நிலமையை யுத்தத்தால் சீர் நிலைக்குக் கொண்டு வந்தார்கள் என்ற செய்தி நாம் அறிந்ததே. உமையாக்களின் இஸ்லாமிய ஆட்சிக்காலப் பகுதியில் இங்கே மஸ்ஜிதுல் கமீஸ் எனும் பள்ளிவாயல் எழுப்பப்ட்டது. இன்றைய பஹ்ரைனில் இன்றும் அழகுற அந்தப் பள்ளி காட்சி தந்து கொண்டிருக்கிறது. 8ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் அப்பாஸஸயர்களின் இஸ்லாமிய ஆட்சி அந்கே உருவாகிறது. பின்னர் 899 இல் இருந்து 11ம் நூற்றாண்டின் 58கள் வரை கராமிதா எனும் சீயாப் பிரிவினரின் ஆட்சி அங்கே நடந்தது. காராமிதர்களின் ஆட்சியை எதிர்த்து விடுதலை பெற்று மறுபடியும்அப்பாஸிய இஸ்லாமிய ஆட்சியாளரான காஇம் பில்லாஹ் வுடன் முதலில் இணைந்து கொண்ட நாடு இன்றைய பஹ்ரைன். பின்னர் 1330களில் ஹுர்முஸ்களின் ஆட்சிக்கு பஹ்ரைன் வரிசெலுத்தி வந்தது. இக்காலப் பகுதியிலிருந்துதான் வரலாற்று நூல்களில் இன்றைய பஹ்ரைனின் தலை நகரான மனாமா அறியப்படுகிறது. அதே போன்று இந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட இப்னு பதூதா பின்னர் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னுல் முஜாவிர் போன்றவர்களின் குறிப்புக்களில்தான் பஹ்ரைன் என்ற பதப் பிரயோகம் இன்றைய பஹ்ரைனை மாத்திரம் குறிக்கும் வகையில் காணக்கிடைக்கிறது. எனினும் இதனை வரையறுத்துச் சொல்ல முடியாது. 1521 இல் போர்த்துக்கேயர்கள் பஹ்ரைனை ஆக்கிரமித்தார்கள். 1602 இல் இன்றைய பஹ்ரைனை பாரசீக் சீயா சபவிப் பிரிவனர் ஆக்கிரமிக்கும் வரையில் 80 வருடங்கள் போர்த்துக்கேயர்களே ஆட்சி செய்தனர். இடையில் ஓமானியர்களில் சில ஆண்டு ஸ்தீரனமற்ற ஆட்சி வருடங்களைத்தவிர. பின்னர் 1753ம் ஆண்டு நஸ்ர் அல் மத்கூரின் ஆட்சி நடந்தது. இவரின் ஆட்சி 1783வரைத் தொடர்ந்தது.

பஹ்ரைனில் ஆலு கலீபாக்களின் ஆட்சி

1783 இல் அத்னானிய மூல வம்சத்தின் உப கோத்திரமான தஃலபின், உப கோத்திரமான ஜுமைலாவின் வழி வந்த நஜ்திலிருந்து வெளிக் கிழம்பி கத்தரில் ஸபாராவில் வாழ்ந்த ஆலு கலீபா கோத்திரத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர். அன்று தொடங்கி 1999 இல் ஆட்சி ஏற்ற ஹம்த் இப்னு ஈஸா ஆலு கலீபா வரை அவர்களே பரம்பரையாக ஆண்டு வருகின்றனர். இந்த 2 அரை நூற்றாண்டுகளிலும் பல விதப் படையெடுப்புக்கள் மேற்கத்தேய தலையீடுகள் என பல நிகழ்வுகள் உண்டு. இந்த சுருக்கமான தொகுப்பு அதற்கு இடந்தராது. 1975 இலேயே பாராளமன்ற நடைமுறையை அன்றைய மன்னராக இருந்த ஈஸா இப்னு ஸல்மான் கொண்டு வந்தார். அரேபிய வளைகடாவில் முதலில் பெற்றோல் கண்டுபிடிக்கப்பட்ட இடமும் பஹ்ரைன்தான்.

தவ்வாறுல் லுஃலுஆ வில் ஆரம்பித்த புரட்சி ….

வளைகுடா கூட்டுறவு சபையின் ஞாபகார்த்த சதுக்கமான தவ்வாறுல் லுஃலுஆவையே ஆர்ப்பட்ட மையமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்ந்தெடுத்தனர். இது தலைநாகரான மனாமாவில் உள்ளது. இங்கிருந்தே போராட்டம் ஆரம்பித்தது. இப்போராட்டத்தில் சீயாக்கள் அதிகமாகக் காணப்பட்டாலும் ஸுன்னாப் பிரிவினரும் சமமாகவே காணப்பட்டார்கள். நாட்டில் அவர்கள் கருதிய சில மாற்றங்களை வேண்டவே அங்கே அதிகமானவர்கள் கூடியிருந்தனர். இவர்களில் அதிகமானவர்களுக்கு ஆட்சி மாற்றம் பற்றி கோரிக்கைள் இருக்கவில்லை என்பதே உண்மை. திறந்த வாசிப்பின் மூலம் இந்த முடிவையே நாம் பெற முடியும். அங்கே கூடிய சீயா மக்களில் அதிகமானவர்கள் ஈரானினதே அல்லது வேறெந்த நாட்டினதோ தலையீட்டை விரும்பவில்லை என்பதும் இன்னொரு உண்மை. சீயாக்கள் ஈரானின் வருகைக்காகத்தான் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நாட்டின் ஸுன்னாப் பிரிவினரைப் போன்று அதிகமாக இருக்கும் சீயாக்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் அது ஈரானின் வருகைக்காகத்தான் என்று ஒட்டு மொத்த ஆர்ப்பாட்டத்தையும் குறை சொல்வது சரியான பார்வையாகத் தெரியவில்லை. தேசிய ஜனநாயக வஃத்எனும் சீயா சார்பு அமைப்புக் கூட நாம் ஈரான் உற்பட எந்த அந்நியத் தலையீட்டையும் விரும்பவில்லை எனத் தெளிவாகவே அறிக்கைவிட்டது.

ஆனால்

இந்த ஆர்ப்பாட்டத்தை ஈரானி அரசியல் மற்றும் சீயாப் புரட்சியாக மாற்றி அரபுலகில் மூக்கை நுழைக்கும் ஈரானிய அபிலாசைகளுக்குச் சார்பாக திசை திருப்ப வேண்டும் என்ற திட்டம் ஏற்கனவே ஈரானிய அரசின் கண்காணிப்பில் இயங்கும் சில குறுகிய மனப்பான்மை கொண்ட சீயா அமைப்புக்களாலும்  இடது சாரிக் கட்சிகளாலும் தீட்ப்பட்டிருந்தது என்பது பல வகையில் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைப் பல சீயா ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏற்காமல் இருக்கலாம். நிராகரிக்கலாம். ஆனால் அவர்களுக்கே தெரியமால் அவர்கள் நகர்த்தப்படுகிறார்கள் என்பதே மிகப்பெரும் உண்மை.

ஸல்மானிய வைத்தியசாலையில் நடந்தது என்ன?

பஹ்ரைனின் வசதிகள் கூடிய மிகப்பெரிய வைத்தியசாலையே ஸல்மானியா. இங்கே கொண்டுவரப்படும் பஹ்ரைன் பொலிஸாரால் காயப்பட்டவர்களின் வீடியோ காட்சிகளை ஈரானின் ஆலம் செய்திஸ்தாபனமும் ப்ரஸ் டீவியும் உடனுக்குடன் காட்டி பஹ்ரைன் அரசு தரப்புக்கெதிரான சர்வதேச கருத்தை விதைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. அதே போன்று பஹ்ரைன் பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கெதிராக நடந்த தாக்குதல்களை யூடியூபில் உடனுக்குடன் பரவாலாகக் காணமுடிந்தது. இவ்வளவு வேகமாக எவ்வாறு இவைகள் திட்டமிட்டபடி மீடியா மயப்படுத்தப்பட்டன என்பது பஹ்ரைன் அரசுக்கே பெரும் கேள்வியாக இருந்து வந்தது. ஸல்மானிய வைத்தியசாலையின் நிலையையும் வளைகுடாக் கூட்டுறவுப் படைகளின் வருகையையும் காரணங்காட்டி சுகாதார அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார். பெப்ரவரி 14 தொடக்கம் மார்ச் 16 வரைக்கும் ஸல்மானிய வைத்தியசாலையின் நிலை பயங்கரமாக இருந்தது. வைத்திய வசதிக்குப் பெயர்போன இந்த இடம் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே அதை திசை திருப்ப இருந்த குறுகிய மனங்கொண்ட சில சீயா அமைப்புக்களால் மறைமுகமாகக் கைப்பற்றப்பட்டிருந்தது. சீயா வைத்தியர்களும் தாதிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். உடன்படாதவர்கள் உயிருக்குப் பயந்து அல்லது வைத்திய சேவை சீர்குழையக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் மௌனமாக இருந்துள்ளனர் நிலமை மோசமாக மோசமாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதிகமானவர்கள் வைத்தியர்கள் தாதிகள் சிறப்பு வைத்தியப் பகுதியைச் சேர்ந்தவர்கள் காவலர்கள் என அனைவரும் இதற்குத் துணை நின்றுள்ளனர். அதே போன்று இரத்த வங்கியையும் தங்களுக்கு சார்பாக இயங்க வைத்துள்ளனர். அதிகமான சீயாப் பிரிவினர் இவைகளில் வேலை செய்தது இத்திட்டத்தை இளகுவில் சாதிக்க இளகுவாகிப் போனது. ஆலம் செய்திஸ்தாபனத்திற்கு நேரடி செய்திகளை வீடியோக்களாக வழங்க புகைப்படக் கருவியும் வைத்தியசாலையில் புகுத்தப்பட்டிருந்தது. வைத்தியசாலைக்குள் ஹுஸைன் முசைமிஃ மற்றும் ஹபீப் மிக்தாத் போன்ற புரட்சியைத் தூண்டி வழநடத்தியவர்களைத் தவிர வேறு யாரும் அதற்குள் அனுமதிக்கப்ட்டிருக்கவில்லை. இந்த நிகழ்வு நடந்தது அதன் பின் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டடு ஸல்மானிய வைத்தியசாலை சீர் நிலைக்கு கொண்டுவரப்பட்ட போதுதான் சுகாதார அமைச்சர் ராஜினாமா செய்தார். இதைப் பத்திரிகைகள் வேறு வடிவில் சித்தரித்தன.

அமைதியாகப் போராட்டம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பொலிஸாரிற்கு எதிரான வன்முறைகள் அதிகரிகத்த போது குறைந்தது. பொலிஸாரும் அதன் பின் ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இளவரசரின் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்கான அழைப்பின் பின்னரும் மக்கள் ஆட்சிவீழ வேண்டும் என்று தொடர்ந்த சொல்ல ஆரம்பித்ததும் சீயாத் தலைவர்களின் கொடிகளையும் சீயா நம்பிக்கை சார்ந்த பதாதைகளை மக்கள் உயர்த்த ஆரம்பித்ததும் ஆர்ப்பாட்டத்தில் கலந்திருந்த சுன்னாப்பிரிவினர் கலைய ஆரம்பித்தார்கள் மட்டுமல்ல நாட்டின் பல இடங்களில் ஆட்சிக்கு சார்பான சீயாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

ஈரானின் பஹ்ரைன் அரசாங்கத்திற்கு எதிரான சர்வதேச கருத்துப் பரவலாக்கம் தோல்வியுற ஆரம்பித்ததும் உளற ஆரம்பித்துவிட்டனர். ஸஊதி பஹ்ரைனில் தலையிட்டுள்ளது அனுமதிக்க முடியாதது. அதன் நஷ்டங்களை ஸஊதி சுமக்க வேண்டி வரும் என லுப்னானில் ஹிஸ்புல்லாவின் தலையீட்டை மறந்து அலி காமினீ விமரிசித்துள்ளார். இதே கருத்தையே தன் நாட்டில் தனக்கெதிராக நடக்கும் ஆர்ப்பாட்டத்தை மறந்து அஹ்மதி நஜாதி வெளிப்படுத்தியுள்ளார். ஈரானின் வெளி நாட்டமைச்சர் அலி அக்பர் ஸாலிஹ் ‘ஒரு நாளும் ஈரான் ஸஊதியின் தலையீட்டிலே கைகட்டி மௌனமாக இருக்கப் போவதில்லை எனக் கொக்கரித்துள்ளார். ஏன் இவர்கள் இவ்வளவு பதறுகிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. வளைகுடா கூட்டுறவு நாடுகளில் ஒன்று தன் நாட்டின் பாதுகாப்பிற்காக பிற அங்குத்துவ நாடுகளின் உதவியை நாடியுள்ளது அவ்வளவுதான். அப்படியிருக்க ஏன் இந்த கொக்கரிப்பு. இவைகள் அனைத்தும் ஸஊதியின் உதவிப்படையின் வருகையின் பின்னணியையும் தேவையையும் எமக்கும் மறைமுகமாக உணர்த்துகிறது.

லன்டனிலிருந்து வெளியாகும் ‘ஷர்குல் அவ்ஸத்’ சஞ்சிகைக்கு ஸஊதிய உதவிப்படை தலைவர் உஸைமிஃ அளித்த பேட்டியிலே ‘நாம் ஆர்ப்பட்டத்திற்கு எதிராகவோ உற்பிரச்சினைகளுக்காகவோ வரவில்லை. கூட்டுறவு நாடுகளின் அங்கமான பஹ்ரைனில் வெளிநாட்டு தலையீட்டுக்கெதிராகவே வந்துள்ளோம். நேடோ கூட்டுறவுப் படைகளுக்கு அடுத்த நிலையின் பலமான நவீன ரக ஆயதங்களையும் சீரிய இராணுவ வழிகாட்டல்களையும் கொண்டிருக்கிறோம். அல்லாஹ்வின் உதவியால் தேவையற்ற அனுமதியற்ற எந்தத் தலையீட்டையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை’ என்று சொல்லியிருப்பது ஈரான் புரட்சியை திசை திருப்பி அரபுலகில் நுழைய ஏற்கனவே திட்டம் தீட்டியிருந்தது என்பதையும் இதற்கு ஆயத்தமாகவே அரபுலகம் இருந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.இன்றைய பஹ்ரைனின் புரட்சி அவர்களுக்குத் தெரியமாலேயே தவறான திசையில் வழி நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை எமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

ஆனாலும் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் ஈரான் மத்திய கிழக்கு யுத்தத்திற்கு வழிவகுக்குமா? அப்படி வழிவகுத்தால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சாதகங்களுக்காக இதை எப்படி எதிர்கொள்வார்கள்? ..?  ..?எனப் பல கேள்விகளுக்கான பதில்களை சுமந்த நிலையில் எதிர்காலம் எம்மை சந்திக்க இருக்கிறது. யா அல்லாஹ் நீயே துணை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts