Monday, November 11, 2024

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம்

மஸ்ஊத் அப்துர்ரஊப்

எனது முதல் குழந்தையை எனது மனைவி பெற்றெடுக்கும் போது எனக்கு வயது முப்பதைத் தாண்டியிருக்கவில்லை. இரவின் கடைசிப் பகுதி வரைக்கும் அரட்டையடித்துக் கொண்டிருந்த அந்த இரவை நான் மறக்கமாட்டேன். அது வெட்டிப்பேச்சுக்கள் நிறைந்த ஓரிரவாக இருந்தது. மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதிலும் கூடாத செய்திகளை ஏனையவர்கள் மீது சுமத்துவதிலும் மூழ்கிப்போன ஓரிரவாக அது இருந்தது. பெரும்பாலும் அவர்களை சிரிப்பூட்டுவதையும் புறம் பேசுவதையும் நானே பொறுப்பேற்றிருந்தேன். அந்த இரவை நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

ஆம் நான் அனைவரையும் கேலி செய்தேன் எனது நண்பர்கள் வரைக்கும் எவரும் என்னிடமிருந்து தப்பவில்லை. சில நபர்கள் எனது கிண்டல்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள என்னை விலகி நடந்தார்கள்.அந்த இரவில் நான் கண் தெரியாத ஒரு மனிதரைப் பார்த்தேன். அவர் சந்தியிலே தடுமாறித் தடுமாறிச் சென்று கொண்டிருந்தார். அதில் கவனிக்கவேண்டியது என்னவெனில் எனது கால்களை அவருக்கு முன்னே நான் வைத்தேன் உடனே அவர் கீழே விழுந்தார்.  அவர் தனது தலையால் உந்து நோக்கி அவர் என்ன கூறுகிறார் என்பதை அவரே அறியாத நிலையிலிருந்தார். நான் சிரித்தவனாக சந்தை வழியே நடந்தேன். வழமைபோல தாமதமாகவே என் வீட்டுக்கு வந்தேன். என் மனைவி என்னை எதிர்பார்த்தவாறு இருந்ததைக் கண்டேன். அவளோ பார்ப்பதற்கு பரிதாபமான நிலையிலிருந்தாள். கவலை தோய்ந்த குரலில் “ராஷீத் நீங்க எங்கே இருந்தீங்க?” அவள் கேட்டாள். நான் கேலி செய்தவனாக வழக்கம் போல ‘செவ்வாய்க் கிரகத்தில் என் நண்பர்களுடன் நகைச்சுவையில் இருந்தேன்” என்று கூறினேன்.

‘நான் சோர்ந்து போயுள்ளேன். எனது பிரசவ நேரம் சில நொடிகள்தான் என்பது எனக்குத் தெரிகிறது” என்று அவள் கூறினாள் அப்போது அவளின் கன்னத்திலே கண்ணீர்ச் சொட்டுக்கள் வடிந்தன. எனது இரவு நேர வெட்டிப்பேச்சைக் குறைத்து என் மனைவியின் விடயத்திலே நான் கவனம் எடுக்க வேண்டும் என்பது கட்டயாம் என நான் உணர்ந்தேன். குறிப்பாக அவள் தனது ஒன்பதாவது மாதத்திலிருப்பதால் நான் மிக அவதானத்துடன் இருப்பது அவசியம் என எனக்குப் புலப்பட்டது. உடனே என் மனைவியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன். பிரசவ அறைக்குள் நுழைந்தேன். தாங்க முடியாத வேதனைகளால் என் மனைவி நீண்ட நேரம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். பொறுமை இழந்தவனாக நான் அவளின் பிரசவத்தை எதிர்பார்த்திருந்தேன். அவளின் மகப்பேற்றுக்காய் நான் அவசரப்பட்டேன். நீண்ட நேரம் நான் காத்திருந்ததால் எனக்கு சோர்வேற்பட்டது. தவிர்க்கமுடியாது நான் வீடு சென்றேன். என் மனைவியைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களிடம் என் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து எனக்கு நற்செய்தி கூறச்சொல்லியிருந்தேன்.

சில மணிநேரத்துக்குப் பின்னர் ஸாலிம் பிறந்த செய்தியை எனக்கு கூறுவதற்காய் என்னோடு அவர்கள் தொடர்பு கொண்டார்கள். உடனே மருத்துவமனைக்கு நான் விரைந்தேன். அங்கே சென்ற நான் என் மனைவியின் அறையைத்தான் முதலில் அவர்களிடம் கேட்டேன். என் மனைவிக்குப் பொறுப்பான வைத்தியரை நாடுமாறு என்னிடம் அவர்கள் வேண்டிக் கொண்டனர். ‘அவர் எந்த வைத்தியர் என எனக்குச் சொல்லுங்க” என்று உரத்த குரலில் நான் அவர்களிடம் கேட்டேன் ஏனெனில் என் மகன் சாலிமைப் பார்ப்பதற்கு நான் ஆவலாய் இருந்தேன்.

நான் வைத்தியரின் அறைக்குள் நுழைந்தேன் அல்லாஹ்வின் சோதனைகள் பற்றியும் அவனின் ஏற்பாட்டு விதிகளை நல்ல முறையில் பொருந்திக் கொள்வது பற்றியும் என்னிடம் அன்பாய் எடுத்துக் கூறினார். பின்னர் “உனது குழந்தையின் கண்களில் கடுமையான திறை காணப்படுகிறது அதனால் உன் குழந்தை கண் பார்வையிழந்திருப்பது தெரியவந்துள்ளது” என்று அவர் கூறினார். நான் தலை குனிந்தேன். நான் சந்தித்த கடந்த கால நிகழ்வுகளை ஒரு கனம் அலவிப்பார்த்தேன். அப்போது சந்தையிலே ஏலனம் செய்து தொந்தரவுபடுத்தி சிரிப்புக்கு ஆளான அந்த கண்தெரியாத மனிதர் என் நினைவில் தெரிந்தார். அல்லாஹ் மிகத் தூய்மையானவன் அவன் எப்படி நாடினானோ அவ்வாறே உலகம் இயங்குகிறது. சற்று நேரம் நிலைகுலைந்தவனாக நான் நின்றிருந்தேன். என் மனைவியையும் என் குழந்தையையும் ஞாபகப்படுத்தினேன். வைத்தியரின் கருனைத் தன்மைக்காய் அவருக்கு நன்றி கூறிவிட்டு என் மனைவியைப் பார்ப்பதற்காய் நடந்தேன். என் மனைவி கவலைப்படவில்லை அவள் அல்லாஹ்வின் விதிகளை நம்பியவளாகவும் ஏற்பவளாகவும் மனிதர்களை ஏலனம் செய்யக்கூடாதென காலமெல்லாம் எனக்கு உபதேசிப்பவளாகவுமிருந்தாள் ‘புறம்பேசவேண்டாம்” என அடிக்கடி எனக்கு அவள் அறிவுரை கூறுவாள்.

வைத்தியசாலையிலிருந்து தாயும் சேயும் நானும் வெளியேறினோம். உண்மையிலேயே என் குழந்தையிலே அதிகமாக நான் கவனமெடுக்கவில்லை. அவனை வீட்டில் இல்லாதவாறே என் குழந்தையை நான் கணக்கிட்டேன். என் குழந்தை அழுகின்ற போது முன்னறைக்குச் சென்று உறங்குவதற்காக நான் விரண்டோடிவிடுவேன். ஆனால் என் மனைவி குழந்தை ஸாலிம் மீது அதிகம் கவனமெடுப்பவளாக அவனை அதிகமாய் நேசிப்பவளாக இருந்தாள். இருந்தாலும் நான் அவனை வெறுத்திருக்கவில்லை என்றாலும் அவனை என்னால் நேசிக்க முடியவில்லை. ஸாலிம் வளர்ந்தான் தவழ ஆரம்பித்தான் அவனுடைய தவழுகை அபூர்வமாய் இருந்தது. அவனுடைய வயது ஒரு வருடத்தை எட்டியது அவன் நடக்க முயற்சித்தான். அவனைப் பார்த்த போது அவனால் நடக்கவும் முடியாத அங்கவீனம் என்பது தெரியவந்தது. அது என்னுள்ளத்தில் இன்னும் சுமையை அதிகரித்தது.

அவனுக்குப் பின்னால் என் மனைவி உமரையும் காலிதையும் பெற்றெடுத்தாள். வருடங்கள் கழிந்தன ஸாலிமும் பெருத்து ஆளானான். அவனுடைய இரு சகோதரர்களும் அவ்வாறே வளர்ச்சியடைந்தார்கள். அதிகமாக வீட்டிலிருப்பதை நான் விரும்பவில்லை. எந்நேரமும் என் நண்பர்களுடனேயே இருந்தேன். உண்மையில் நான் என் நண்பர்களின் கையில் ஒரு விளையாட்டுப் பொருளைப்போன்றே இருந்தேன். ஆனால் என் மனைவி என்னைத் திருத்தும் முயற்சியில் நம்பிக்கையிழக்கவில்லை. எனக்கு நேர்வழி கிடைப்பதற்காக எப்போதும் அவள் துஆ செய்பவளாக இருந்தாள். எனது மோசமான நடத்தைகளால் அவள் கோபமடையவில்லை. என்றாலும் நான் சாலிமைக் கணக்கெடுக்காது அவனுடைய சகோதரர்கள் மீது கவனமெடுப்பதைப் பார்த்து அவள் அதிகம் கவலையடைந்திருந்தாள்.

ஸாலிமும் வளர்ந்தான் அவனுடன் என் கவலையும் வளர்ந்தது. எனது மனைவி அவனை அங்கவீனர் பாடசாலையொன்றில் சேர்க்குமாறு என்னிடம் வேண்டியபோது நான் அதை மறுக்கவில்லை. வேலை செய்வதும் உறங்குவதும் சாப்பிடுவதும் இரவு நேர அரட்டை என்றும் எனது காலங்கள் கழிந்தன. எனது கெட்ட நாட்கள் பற்றி நான் யோசிக்கவில்லை.

ஒரு வெள்ளிக்கிழமை தினமன்று பகல் நேரம் பதினொரு மணியளவில் நித்திரை விட்டெழுந்தேன் நான் வலீமா ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்ததால் குறித்த நேரத்தைவிட முன்னர் நான் விழித்திருந்ததன் காரணமாக நேரம் மிச்சமாயிருந்தது. ஆடையணிந்து வாசனை பூசி வீட்டிலிருந்து வெளியேறுவதற்காக வீட்டின் வரவேற்பறையைக்கடந்து நான் சென்ற போது ஸாலிமுடைய காட்சி என்னை நிறுத்தியது. ஸாலிம் அழுது கடந்து கொண்டிருந்தான் ஸாலிமுடைய குழந்தைப் பருவத்திலிருந்து கடந்த 10 வருடங்களில் அவன் விடயத்தில் நான்  கவனம் செலுத்தியது இதுவே முதற்தடவையாகும்.

நான் அவன் பக்கம் பார்க்கவில்லை அவனை நான் காணாததுபோல் செல்ல முயற்சித்தேன் அவன் தனது தாயை அழைக்கும் சத்தத்தை நான் கேட்டேன். ஏனெனில் நானும் அவ்வறையிலேயே இருப்பேன் இருந்தும் நான் அவனை அன்பாய் தூக்கியது கூட இல்லை. அவனைப் பார்த்தேன் அவனருகே சென்று ஸாலிம் எதற்காக அழுகிறாய் எனக்கேட்டேன் எனது ஓசையை அவன் கேட்டதும் அழுகையை நிறுத்திவிட்டான் நான் அவனருகே இருப்பதை அவன் உணர்ந்ததும் தனது இரு சிறு கைகளாலும் அவன் எதையோ தேட ஆரம்பித்தான். ‘நீ எதைத் தேடுகிறாய்” என நான் கேட்டேன் அவன் என்னைவிட்டுத் தூரமாக முயற்சிக்கின்றான் என்பது எனக்குத் தெரியவந்தது. ஏனெனில் அப்போது இப்பொழுதா உனக்கு என்னைத் தெரிந்தது சென்ற 10 வருடங்களாக நீ எங்கிருந்தாய்? என்று அவன் பேசுவதுபோன்று இருந்தது. அவனது அறைக்குள் நுழைந்தான் நானும் அவனைப் பின் தொடர்ந்தேன் ஆரம்பத்தில் தனது அழுகைக்கான காரணத்தை என்னிடம் கூற அவன் மறுத்துவிட்டான். அன்பாய் அவனிடம் விசாரித்தேன் ஸாலிம் தன் அழுகையின் காரணத்தைக் கூற ஆரம்பித்தான் பணிவாய் அவன் பேச்சை செவிமடுத்தேன் என்ன காரணம் தெரியுமா? ஸாலிமை பள்ளிக்குக் கூட்டிச் செல்லும் அவனுடைய சகோதரன் உமர் சற்று தாமதமாகிவிட்டான் ஏனெனில் ஜும்ஆ தினமாகவிருந்ததால் முதல் வரிசையில் தனக்கு இடமில்லாது போயிருக்கும் என்று ஸாலிம் பயந்தான். எனவேதான் உமரை அழைத்துள்ளான் தன் தாயை அழைத்துள்ளான். என்றாலும் யாரும் அவனுக்கு பதில் கூறவில்லை எனவே அழுதிருக்கிறான்.

அவனுடைய இரு கண்களுக்குமிடையில் வழிந்தோடும் கண்ணீரைப் பார்த்தேன். எஞ்சிய அவனுடைய வார்த்தைகளைக் கேட்பதற்கு என்னால் முடியவில்லை. எனது கைகளை அவனுடைய வாயில் வைத்து இதற்காகவா ஸாலிம் நீ அழுதாய் என நான் கேட்க அவன் “ஆம்” என்றான். என் நண்பர்களை மறந்தேன் வலீமாவையும் மறந்தேன் ஸாலிம் நீ கவலைப்படாதே இன்று உன்னை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வதென்று உனக்குத் தெரியுமா என அவனிடம் வினவினேன் அவன் ‘உமர் என்னை அழைத்துச் செல்வான் என்றாலும் அவன் எப்போதும் தாமதமாகவே செல்வான்” என்று வருத்தத்துடன் கூறினான். ‘இல்லை நானே உன்னை அழைத்துச் செல்வேன்” எனச் சொன்னதும் சாலிம் திடுக்கிட்டான். அவன் இதை நம்பவில்லைஇ நான் அவனைக் கேலி செய்வதாக நினைத்து என்னிடம் என்னிடம் விளக்கம் கேட்டழுதான். அவன் கண்ணீரைத் துடைத்து அவன் கைகளைப் பற்றி காருக்கு அவனை அழைத்துச் செல்ல முனைந்தேன் ‘பள்ளி பக்கத்தில்தான் இருக்கிறது நான் நடந்தே செல்லவேண்டும்” என்று கூறி அவன் காரில் செல்ல மறுத்தான். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் அவ்வாறே என்னிடம் சொன்னான் நான் கடைசியில் எப்போது பள்ளிக்குள் நுழைந்தேன் என்பதை நான் மறந்துவிட்டேன். என்றாலும் இத்தடவை முதலாவதாக நான் பள்ளிக்குள் நுழையும்போது என்னுள் பயத்தை உணர்கின்றேன். கடந்த பல வருடங்களாய் நான் பள்ளிக்குச் செல்லாததை நினைத்து என்னை நானே நொந்து கொண்டேன். நாடி நரம்புகளிலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் எனக்கோர் உணர்வு ஏற்பட்டது.

பள்ளிவாயல் முழுவதுமாய் சனம் நிறைந்து காணப்பட்டது. என்றாலும் ஸாலிமுக்காய் முதல் வரிசையில் ஓரிடம் இருக்கத்தான் செய்தது இருவரும் ஜும்ஆ பிரசங்கத்தைக் கேட்டோம். அவன் எனக்கருகிலிருந்து தொழுதான் ஆனால் உண்மையில் நான் தான் அவனருகிலிருந்து தொழுதேன். தொழுகை முடிந்ததும் ஸாலிம் என்னிடம் குர்ஆனை எடுத்துத் தருமாறு வேண்டினான் நான் ஆச்சரியப்பட்டேன். ‘கண் தெரியாமல் எவ்வாறு குர்ஆனை ஓதப்போகிறான்”  நான் அவனைக் கணக்கெடுக்காதது போல் இருந்தேன் இருந்தாலும் அவன் உணர்வுகள் பாதிக்கப்படக்கூடாதென்று குர்ஆனை எடுத்துக் கொடுத்தேன். சூரத்துல் கஹ்பை புரட்டித் தருமாறு என்னிடம் அவன் வேண்ட ஒரு முறை பக்கங்களைப் புரட்டினேன் இன்னொருமுறை சூராக்கள் அட்டவனையையும் புரட்டி குறித்த சூராவைத் தேடி எடுத்து அவனிடம் கொடுத்தேன். குர்ஆனை எடுத்து தன் முன்னே வைத்த அவன் தன் கண்கள் மூடிய நிலையில் சூரத்துல் கஹ்பை ஓத ஆரம்பித்தான். யா அல்லாஹ் அவன் அந்த சூராவை முழுமையாகப் பாடமிட்டிருந்தான். நான் வெட்கப்பட்டேன்.

அல்குர்ஆனை எடுத்தேன் அந்த சூராவை மீண்டும் மீண்டும் ஓதினேன். என்னை மன்னித்து எனக்கு நேர்வழிகாட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். என்னால் தாங்க முடியாது குழந்தைகள் போன்று அழ ஆரம்பித்தேன். பள்ளியில் சில மனிதர்கள் ஸ{ன்னத் தொழுது கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து நான் வெட்கமடைந்தேன். என் அழுகையை மறைக்க முயற்சித்தேன் முடியாமல் தேமித் தேமி அழ ஆரம்பித்தேன். அவ்வேளை ஒரு சிறிய கை என்னைத் தேடுவது போன்றும் பின்னர் அது என் கண்ணீரைத் துடைப்பது போன்றும் உணர்ந்தேன். அது யாருமில்லை ஸாலிம்தான். அவனை என் நெஞ்சோடு அனைத்து அவனைப் பார்த்து ‘நீ அல்ல குருடன் உண்மையில் நான்தான் குருடன்” என எனக்குள் நானே கூறிக்கொண்டேன்.

பின்னர் வீட்டுக்கு வந்தோம் என் மனைவி ஸாலிம் மீது பயம் கொண்டவளாய் காணப்பட்டாள். ஸாலிமுடன் நானும் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றிய விடயம் அவளுக்குத் தெரிந்ததும் அவளின் கவலை கண்ணீராய் மாறியது. அன்றைய தினத்திலிருந்து எந்தவொரு ஜமாஅத் தொழுகையையும் பள்ளியில் நிறைவேற்றாமல் நானிருந்ததில்லை.

தீய நண்பர்களை வெறுத்தொதுக்கி பள்ளிவாயலில் நான் சந்தித்த நல்லவர்களுடன் தோழமை கொண்டேன். அவர்களுடன் சேர்ந்து ஈமானின் சுவையை நான் உணர்ந்தேன் மறுமைக்காய் என்னை அழைத்துச் செல்லும் விடயங்களை இனங்கண்டேன். எந்தவொரு வித்ர் தொழுகையும் என்னை விட்டுத்தப்பிப் போகவில்லை. ஒரு மாதத்திலேயே குர்ஆனை பலமுறை முழுமையாய் ஓதி முடித்தேன். நான் மக்களைக் கேலி செய்ததற்காகவும்  புறம் பேசியதற்காகவும் அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும். என்பதற்காய் எனது நாவு முழுவதும் அல்லாஹ்வை திக்ர் செய்வதில் நனைந்திருந்தது. நான் என் குடும்பத்துடன் மிக  நெருக்கமாயுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.

நீண்ட நாட்களாய் என் மனைவியின் கண்களில் குடிகொண்டிருந்த அச்சமும் கவலையும் மறைந்து போயின. எந்நேரமும் என் மகன் ஸாலிமுடைய முகத்தில் புன்னகை வெள்ளமானது. யார் இவற்றைக் காண்பாரோ அவர் இவ்வுலகமே சொந்தமானது போன்ற ஒரு பிரமை சந்தோசத்தால் ஏற்படும். அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்காய் அவனைப் புகழ்ந்தேன்.

ஒரு நாள் என் நல்ல நண்பர்கள் தூரப் பிரதேசமொன்றுக்குச் சென்று அழைப்புப் பணி செய்ய வேண்டும் என்பதற்காய் பயணிக்க முடிவு செய்தார்கள். அந்தப் பயண விடயத்தில் நான் தடுமாற்றத்திலிருந்தேன். அல்லாஹ்விடம் உதவி வேண்டினேன். என் மனைவியிடமும் ஆலோசித்தேன் அனேகமாக அவள் இதற்கினங்கமாட்டாலென்றே நான் நினைத்தேன் ஆனால் நிலைமை தலைகீழாய் மாறியது. அவளோ அதற்குச் சம்மதித்தாள். நான் மிகவும் ஆனந்தமடைந்தேன். என் மனைவி எனக்கு மென்மேலும் உற்சாகமூட்டினாள் அவளிடம் எந்தவொரு ஆலோசனை பெறாமல் தீய விடயங்களுக்காய் நான் பலமுறை பயணம் செய்ததை அவள் ஏற்கனவே கண்டிருக்கின்றாள் ஸாலிமிடம் சென்று நான் பயணம் மேற்கொள்ளும் செய்தியைக் கூறினேன். என்னை வழியனுப்புவதற்காய் என்னிரு கைகளையும் அவன் கைகளால் பற்றினான். மூன்றரை மாதங்களாய் என் வீட்டைவிட்டும் நான் பிரிந்திருந்தேன். இக்காலங்களில் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் நான் என் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டேன். அவர்களுடன் இரக்கப்பட்டேன் எத்தனை நேரம் நான் ஸாலிமுடன் இரக்கப்பட்டுப் பேசியிருப்பேன்? அவன் குரலைக் கேட்பதற்கு எவ்வளவு நான் ஆசைப்பட்டிருப்பேன்! ஏனெனில் அவன் ஒருத்தனே நான் பிரயாணம் செய்ததிலிருந்து என்னுடன் பேசவில்லை. ஏனென்றால் நான் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் ஒன்றில் அவன் மத்ரஸாவிலிருந்தான் அல்லது பள்ளியிலிருந்தான் அவன் மேல் எனக்கிருந்த பாசத்தை என் மனைவியிடம் நான் கூறும் போதெல்லாம் அவள் மிகவும் சந்தோசப்பட்டவளாய் மெய்மறந்திருப்பாள்

கடைசியில் ஒருமுறை நான் அவளுடன் தொலைபேசியில் பேசியபோது வழமை போன்ற அவளின் ஆனந்தச்சிரிப்பை நான் கேட்கவில்லை. அவளின் குரலில் மாற்றம் விளங்கியது. என் ‘ஸலாத்தை ஸாலிமுக்கு எடுத்துரையுங்கள்” என்று அவளிடம் கூறியதும் அதற்கவள் ‘இன்ஷா அல்லாஹ்” என்று சொல்லி அமைதியானாள். இறுதியில் பிரயாணத்தை முடித்து வீட்டுக்கு வந்தேன். கதவைத் தட்டினேன். ஸாலிம்தான் கதவைத் திறக்க வேண்டும் என நான் ஆவலோடிருந்தேன் இருந்தாலும் என் இரு கைகளுக்கிடையில் நான் சுமந்து அனைக்கும் போது வாப்பா என்று சொல்லி அழும் நான்கு வயதையெட்டாத என் மகன் காலிதை நினைக்கும் போது உள்ளம் வலித்தது. வீட்டுக்குள் நான் நுழையும்போது எனதுள்ளம் ஏன் வேதனைப்பட்டது என்பதை நான் அறியேன் ஷைத்தானைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடியவனாய் வீட்டுக்குள் நுழைந்தேன் என் மனைவி என்னை வரவேற்றாள் அவள் முகமோ மாறியிருந்தது என்றாலும் சந்தோஷமடைந்தவள் போல் தன்னை அவள் சுதாகரித்துக் கொள்வது எனக்கு விளங்கியது உனக்கு என்ன நேர்ந்ததென்று அவளிடம் நான் கேட்டபோது ‘ஒன்றுமில்லை” எனப் பதிலளித்தாள்.

திடீரென ஸாலிம் என் நினைவுக்கு வந்ததும் ‘ஸாலிம் எங்கே” என்று நான் அவளிடம் கேட்க தன்னால் பதில் கூறமுடியாமல் தலை குனிந்தால் அவளின் கன்னங்களிலே கண்ணீர்த்துளிகள் விழுந்தன. ‘ஸாலிம்! ஸாலிம் எங்கே” என்று சத்தமிட்டு நான் அவளிடம் கேட்டபோது ‘வாப்பா ஸாலிம் அல்லாஹ்விடமுள்ள சுவனத்துக்குப் போய்விட்டார்” என்ற என் மகன் காலிதின் ஓசையைத்தான் என்னால் கேட்க முடிந்தது. என் மனைவியால் நிலைமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை பொறுக்க முடியாமல் நிலத்தில் விழுமளவுக்கு அழுதாள். அறையிலிருந்து வெளியேறினேன். நான் வருவதற்கு இரு வாரங்களுக்கு முன்பு ஸாலிமுக்குக் காய்ச்சல் ஏற்பட்டு என் மனைவி அவனை வைத்தியசாலைக்கு கொண்டு போயுள்ளாள். அவனுக்கு காய்ச்சல் கடுமையாகி அவள் அவனருகிலிருக்கும் போதே அவன் உயிர் பிரிந்திரிக்கின்றது என்ற செய்தியை நான் அறிந்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts