Saturday, June 22, 2024

மீடியாக்களின் திரித்தல் தணிக்கைகளுக்கு அப்பால் லிபியா நிலவரம் ஓர் அலசல்(2011)

முஸ்லிம் கண்டமான ஆபிரிக்காவின் வட நாடுகளில் தூனிஸ் முதலாக அல்ஜீரியா மொரோக்கோ என ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சிகள் வெடித்ததைத் தொடர்ந்து எகிப்து பஹ்ரைன் யமன் ஈரான் போன்ற நாடுகளிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக களமிரங்கியதை கண்டுகொண்டிருக்கும் இவ்வேளையில் வட ஆபிரிக்க நாடுகிளில் ஒன்றான லிபியாவைப் பற்றியும் அதன் அரசியல் வரலாற்று நிலவரங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

லிபியா என்ற பிரதேசம் இஸ்லாமிய வரலாற்றில் தராப்லிஸ் என்று வழங்கப்பட்டு வந்தது. இன்று தராப்லிஸ்(ட்ரிபொலி) என்பது அதன் தலை நகரிற்கு வழங்கப்படுகிறது. லிபியா என்ற பெயர் ஓர் ஆதிப் பெயராகும். லீபூ என்ற சொல்லிலிருந்து பிறந்தது. லிபியர்கள் என்ற பழமை இனத்தையும் மொழியையும் இது குறிக்கிறது. ஆரம்பத்தில் கிபியிற்கு முன்னர் ஆபிரிக்கா என்பதற்குப் பதிலாக லிபியா என்றே ஆபிரிக்கக் கண்டம் முழுவதும் அழைக்கப்பட்டது. குறிப்பாக வட ஆபிரிக்க நாட்டுப் பகுதிகளைக் குறிக்க இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. ஆபிரிக்கா என்ற பெயர் தூனிஸின் மஹ்தியா என்ற நகரத்திற்கே ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. ஆக்கிரமப்பாளர்கள் அனைவரும் ஒன்றோ எத்தியோப்பா(எரிந்த முகம்) அல்லது லிபியா என்ற பெயர்களையே ஆபிரிக்கக் கண்டத்திற்கு வழங்கி வந்தனர். அதே நேரம் அரேபியர்களிடத்தில் கண்டம் முழுவதையும் குறிக்க எந்தச் சொல் ஆளப்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லாத போதினும் அவர்கள் பிரதேசவாரியாகவே ஆபிரிக்க நாடுகளுக்குப் பெயர் சூட்டியுள்ளனர் என்பது தெளிவு. லிபியா என்ற பெயர் சுருங்கி இன்று தூனிஸிற்கும் எகிப்திற்கும் தசாத் நைஜீரியாவிற்கும் மத்தியிலுள்ள பிரதேசத்திற்கு வழங்கப்படுகிறது.

உமர் ரழியல்லாஹு அன்ஹுவுடைய ஆட்சிக்களாலத்தில் அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுடைய தலைமையில் தராப்லிஸ் (லிபியா) வெற்றிகொள்ளப்பட்டது.ஆபிரிக்காவில் இஸ்லாம் பரவியதில் லிபியர்களின் பங்களிப்பு அதிகமானது. இவ்வாறு பலவிதமான ஆட்சிமாற்றங்களையும் ஆக்கரமிப்புக்களையும் கண்ட லிபியா கடைசியா இத்தாலியின் ஆக்கிரமிப்புக்குள்ளானது.ஸனூஸியப் பாசறையில் வளர்ந்த உமர் முக்தார் என்ற முதிய வயதின் இளந்துடிப்புப் போராட்டமும் உயிர்த்தியாகமும் இவர்களுக்கெதிராகவே நடைபெற்றது. பலவிதமான போராட்டங்கள் ஐரோப்பாவின் சதிவலைகளின் முறியடிப்புகளுக்குப் பின் 1950களில் லிபியா பெயரளவில் சுதந்திரமடைந்தது.

இக்காலப் பகுதியில் மன்னராக இருந்தவர் முஹம்மத் இத்ரீஸ் அஸ்ஸனூஸி இவர் அல்ஜீரியா மூலத்தைச் சேர்ந்தவர்.முஹம்மத் இப்னு அலி அஸ்ஸனூஸி என்ற முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாபின் பிரச்சாரத்தினால் கவரப்பட்ட ஒரு பிரபல்ய மார்க்க அறிஞர்.இவர் தன் இறுதிக்காலப் பகுதியை லிபியாவிலேயே கழித்தார். ஸனூஸயா என்ற இயக்கத்தின் ஸ்தாபகர். இவர் அகீதாவில் தௌஹீதிலே தெளிவுடையவராக இருந்தார். ஆனால் போக்கிலே ஸுபித்துவத்தை வழியாகக் கண்டவர். ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் கடுமையாக ஈடுபட்டார். வட ஆபிரிக்காவில் ஸனூஸிய அமைப்பின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவரது மூன்றாவது தலை முறையில் உருவான போரர்தான் இத்ரீஸ் அஸ்ஸனூஸி. 1969ம் ஆண்டு இவர் நாட்டுக்கு வெளியே சிகிச்சைக்காகச் சென்றிருந்த சமயமே முஅம்மர் அல்கதாபி புரட்சியின் மூலம் இளகுவாக ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.

இத்ரீஸின் ஆட்சியில் நாட்டில் பல துறைகளில் ஸ்தீரனமின்மை காணப்பட்டாலும் இத்ரீஸ் மார்க்க நிலைப்பாடுகளுக்கு மிக நெருங்கியவராக இருந்தார். வட்டி முறையற்ற பொருளாதாரத்தைக் சட்டமாக்கினார். ஆனாலும் அமைச்சரவை அதை குறிப்பிட்ட துறைகளில் மாத்திரமே நடை முறைப்படுத்தியது. லிபிய ஆட்சியை ஸஊதி போன்று மம்லகதுஸ் ஸனூஸியா என்று பெயர் சூட்டுமாறு ஆலோசனை முன்வைக்கப்பட்டும் அதனை மறுத்து விட்டார்.(ஆனால் இந்த ஆலோசனையை முன்வைத்தவர்தான் முஆம்மர் கதாபியின் புரட்சியின் வெற்றியை வரவேற்றவர்களில் முதன்மையானவராக இருந்தார் என்பது தனிவிடயம்) நாட்டு மக்களால் தன் மீது உள்ள சில அதிருப்திகளை உணர்ந்த அவர் மக்களுக்கு அழகான கடிதம் ஒன்றை எழுதினார். இவருக்கெதிராக கொடி தூக்கியவர்கள் எழுப்பிய கோசம்தான் ‘இத்ரீஸல்ல இப்லீஸ்’ ‘இத்ரீஸல்ல இப்லீஸ்’ என்ற வாசகம் அந்த ஒவ்வொரு கனத்திலும் அந்த மன்னர் சொன்ன வார்த்தை ‘யாஅல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக நாட்டில் நிலவிய ஆன்மீக அமைதியைக் கவனிக்காமல் வெறும் பொருளாதார ரீதியான பார்வையால் ஒரு நல்லவரை இழந்தார்கள். அல்லாஹ் அந்த மன்னரின் பிரார்த்தனையை அங்கீகரித்தது போல் ஒரு இப்லீஸ் ஆட்சிபீடம் ஏறினான்.

ஆட்சி பீடம் ஏறிய கதாபி மூலம் ஒரு நல்ல விடிவை மக்கள் எதிர்பார்த்தார்கள். கடாபி மேற்கத்தேயத்தை எதிர்த்தார். அரபுலகில் அந்நியத் தலையீட்டை கடுமையாக எதிர்த்தார். வீரமான உரைகள் நிகழ்த்தினார். பொருளாதார முறைமையில் பல வித மாற்றங்களை நாட்டில் கொண்டு வந்தார். சம்பளம் வாங்கினால் அவன் அடிமை எனவே தொழிலாளர்களல்ல பங்குதாரர்கள் என சம்பள முறைமையை பங்கு முறைமையாக்க திட்டங்களைக் கொண்டு வந்தார். இது போன்று இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். தனது அரசியில் செல்வாக்கையும் எகிப்திய அதிபர் ஜமால் அப்துந் நாஸருடைய தொடர்பையும் பயன்படுத்திப பல நூல்களை தனக்குச் சார்பாக எழுத வைத்தார். அதில் பிரபல்யமான நூலில் ஒன்றுதான் ‘காலித் இப்னு வலீத் தொடக்கம் கதாபி வரைக்கும்’. ஆனால் கடாபி நாட்டில் கொண்டு வந்த மாற்றங்கள் மற்றும் மேற்கு எதிர்ப்பு நிலைப்பாடுகள் அனைத்தும் அவரது இஸ்லாமிய மார்க்கப் பற்றின் விளைவாகவோ நாட்டு மக்கள் மீது கொண்ட ஈர்ப்பின் விளைவாகவோ உருவானதல்ல மாறாக தனது சோஸலிஸ சித்தாந்தத்தின் நகலே அவைகள் என்பதை உலகம் உணர நீண்ட காலம் எடுக்கவில்லை.

ஆனால் இவர் தனது குருட்டுச் சீர் திருத்தங்களை இத்தோடு நிறுத்தவில்லை. மார்க்க மார்க்க அம்சங்களில் தன் விருப்பப்படி விளையாட ஆரம்பித்தார். எதிர்த்தவர்களை சிறைப்பிடித்தார். சித்திரவதை செய்தார். பள்ளிவாயல்களை குண்டு வைத்துத் தகர்த்தார்.

குர்ஆனிலிருந்து குல் என்ற வார்த்தைகளை அகற்ற வேண்டும் என்றார். அது நபியவர்களுக்கு மட்டும் உரியது. இப்பொழுது தேவையில்லை. சொன்னது மாத்திரமல்லாமல் அஸர் தொழுகையின் போது மூன்று ரக்அத்களாக அஸரைத் தொழுலித்து அதில் குல்ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தை குல் என்ற சொல்லை விட்டு ஓதினார். அந்த நேரமே இந்தக் கருத்தையும் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

ஹதீஸ் மார்க்க மூலாதரமல்ல என பகிரங்கமாகவே பேசினார்.
மிஃராஜ் கட்டுக் கதை. குர்ஆனில் மக்காவிலிருந்து பைதுல் மக்திஸ் போவது வரையே இடம்பெற்றுள்ளது. மற்றவைகள் கட்டுக்கதைகள் எனப் பேசினார்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என நபிகளார் பெயரைக் கேட்டவுடன் கூறுதல் இன்னும் எம்மில் மாறாமல் இருக்கம் ஜாஹிலிய இணைவைப்பு என விமரிசித்தார்.

குர்ஆன் பலதாரத் திருமணத்தை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. குர்ஆன் வசனம் தவறாக விளங்கப்படுத்தப்படுகிறது என பகிரங்கமாக உரை நிகழ்த்தினார்.

ஹிஜாப் இஸ்லாம் சொன்னதல்ல திணிக்கப்பட்டது.

பசுமை நூல் என்ற பெயரில் நூலொன்றை எழுதி அதுவே தனது ஆட்சிமுறை என பகிரங்கமாகத் தெரிவித்தார். இது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஹஜ் வணக்க வழிபாடுகளைக் கொச்சைப்படுத்தி சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

டென்மார்க் நபியவர்களுக்கு கேலிச்சித்திரம் வரைந்ததைத் தடை செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பொலிஸாரை ஏவி பலரைச் சுட்டுக் கொண்டார். அந்த நாளியே இந்தப் புரட்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல அடக்குமுறைகள் அநியாயங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்துள்ளனர். முஹம்த் இத்ரீஸ் அஸ்ஸனூஸிக் கெதிரான புரட்சியில் களந்து கொண்ட மக்கள் இதிலும் களந்து கொள்வது ஆச்சரியமல்ல. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது மார்க்க அடையாளங்களின்றிய ஒரு திறந்த சுதந்திரமான ஆட்சியைத்தான் என்பதை அவர்களது நடவடிக்கைகள் தெளிவாகவே காட்டுகின்றன.
எது எவ்வாறிருந்தாலும் மேற்குலகின் தலையீட்டை இதில் அங்கீகரிக்க முடியாது. பொதுமக்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார் என்பதே முதன்மைக் காரணியாக முன்வைக்கப்படுகிறது. மீடியாக்கள் வழியாக இக்கருத்தை மக்கள் மயப்படுத்தவிட்டார்கள். தூனிஸிய எகிப்தியப் புரட்சியோடு இதை ஒப்பிட முடியாது. அங்கே நிராயுதபாணியான மக்களின் புரட்சியே நிகழ்ந்தது. எந்த உடமைக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால் இங்கே போராடுபவர்கள் முதல் நாளே ஆயுதங்களுடன் புரட்சியில் இறங்கிவிட்டனர். நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கும் போது ஒரு நாடு இராணுவ பலத்தைப் பிரயோகிப்பது இயல்பானதே. இதைக் காரணங் காட்டி இவ்வளவு அவசரமாக லிபியாவை 3 வீட்டோ நாடுகள் தாக்க முற்பட்டிருப்பதும் அதற்கு பொதுமக்கள் இறக்கிறார்கள் எனக் காரணங்காட்டுவதும் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையே.
சதாம் ஹுசைன், கடாபி ஆகியோர் தனது சொந்த மக்களை கொன்று குவித்தார்கள். மக்கள் படுகொலை, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு காரணமாக காட்டப்படுகின்றது. இது பல நூற்றாண்டுகளாக, காலனியாதிக்க காலத்தில் இருந்தே கற்பிக்கப்படும் நியாயம். ‘இந்தியாவில் வாழும் இந்துக்கள் பெண்களை உயிரோடு எரிக்கும் காட்டுமிராண்டிகள்.”இந்தியப் பெண்களை காப்பாற்றும் நல்லெண்ணத்துடன்’ தான் பிரித்தானியா இந்தியாவை தனது காலனியாக்கியது. ஐரோப்பாவில் இதனை ‘வெள்ளை மனிதனின் கடமை’ என்று கூறிக் கொள்வார்கள். அதாவது ‘காட்டுமிராண்டிகளான இந்தியர்கள்இ அரேபியர்இ ஆப்பிரிக்கர்களுக்கு நாகரீகம் கற்றுக் கொடுப்பது’ ஐரோப்பியரின் கடமை ஆகுமாம். காலனிய சுரண்டலை நியாயப் படுத்தும் நியாயப் படுத்தும் கதையாடல்கள்இ இன்று லிபியா வரை தொடர்கின்றது. இன்று மேற்குலக மக்களை மட்டுமல்ல, அனைத்து உலக மக்களையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு வசதியாக தொலைத் தொடர்பு ஊடகங்கள் வந்து விட்டன. சி.என்.என்.பி.பி.சி., அல்ஜசீரா எல்லாமே ஏகாதிபத்திய தலையீட்டுக்கு வழி சமைத்துக் கொடுக்கின்றன.

பெங்காசியா நகரம் ஆர்ப்பட்டக்காரர்களின் கரமிருந்து கடாபியின் கையில் வருவதற்கு முன்னர் நேடோ களமிருங்கியதற்கான காரணம். பெங்காசியா பொருளாதாரத் தலைநகர். எண்ணைவளம் அங்கேதான்.அங்கேதான் ஆடு நனைகிறது என எமெரிக்கா அழுகிறது. எல்லாம் நாடகம். கடாபி ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஆர்ப்பட்டம் எந்த இலக்கை நோக்கி நகர்கிறது என்பதே இப்பொழுதுள்ள முக்கிய கேள்வி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts