உழ்ஹிய்யாவில் மாட்டிலோ ஒட்டகத்திலோ 7 நபர்கள் கூட்டுச்சேர்தல் மார்க்கம் அல்ல என்றும் அது பற்றி ஜாபிர் ரழியல்லாஹ் அன்ஹ் அறிவிக்கும் முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஹத்யுக்கு மாத்திரம் உரியது உழ்ஹிய்யாவிற்கு ஆதாரமாகாது என்றும் சிலர் பிரச்சாரம் செய்து வருவது போதிய ஆய்வின்மைக்கான ஓர் எடுத்துக்காட்டாகும். ஜாபிர் ரழியல்லாஹ் அன்ஹ் அறிவிக்கும் அந்த செய்தியே ஆதாரத்திற்கு போதுமானதாயினும் ஹஜ்ஜில் அல்லாமல் உழ்ஹிய்யாவின் பொழுது 7நபர்கள் மாட்டிலும் பத்து நபர்கள் ஒட்டகத்திலும் கூட்டுச் சேரலாம் என்பதற்கு ஆதாரமான இன்னொரு தெளிவான செய்தியைப் பாருங்கள்.
الجامع الصحيح سنن الترمذي – 905 حدثنا الحسين بن حريث وغير واحد قالوا حدثنا الفضل بن موسى عن حسين بن واقد عن علباء بن احمر عن عكرمة عن ابن عباس قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فحضر الأضحى فاشتركنا في البقرة سبعة وفي الجزور عشرة قال أبو عيسى هذا حديث حسن غريب وهو حديث حسين بن واقد
“நாம் நபியவர்களுடன் ஒரு பிரயாணத்திலிருந்தபொழுது உழ்ஹியாத் தினம் வந்தது.மாட்டில் ஏழு நபர்களும் ஒட்டகத்தில் பத்து நபர்களும் பங்கெடுத்தோம்.”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ் அன்ஹ்
ஆதாரம்: திர்மிதீ 905
இந்த ஹதீஸை இமாம் இப்னு குஸைமா
திர்மிதீ
அபுல் ஹஸன் அல் கத்தான்
இப்னுல் முலக்கின்
சவ்கானி
அல்பானி
மற்றும் பல அறிஞர்கள் பலமான ஹதீஸ் எனக் கூறியுள்ளனர்.
இந்த செய்தி ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்டதல்ல இல்லையெனில் அதை தெளிவாகவே இப்னு அப்பாஸ் அவர்கள் ஹஜ் பிரயாணத்தில் இருந்தோம் என்று குறிப்பிட்டிருப்பார்.ஏதோ ஒரு சாதாரணப் பிரயாணம் என்பதால்தான் நாம் ஒரு பிரயாணத்தில் இருந்தோம் என்று கூறுகிறார்.இந்த ஹதீஸை கூட்டு சேர்தலை மறுக்கும் பத்வாவை இலங்கையில் முதலில் பேசிய சகோதரரிடம் எடுத்துக் கூறியபொழுது இந்த ஹதீஸ்; ஹ{தைபியாவில் நடந்ததைத்தான் குறிப்பதாக தெளிவான ஒரு ஆதாரம் முஸ்னத் பஸ்ஸாரில் வருவதாகச் சொன்னார்.ஆனால் அவர் சொன்னது போன்று முஸ்னத் பஸ்ஸாரில் எந்த அறிவிப்பும் கிடையாது.
எனவே இது தனியாகவே உழ்ஹிய்யா பற்றி பேசும் செய்தி என்பது மிகத் தெளிவு. அதனால்தான் இமாம் ஷவ்கானி போன்றவர்கள் இந்த ஹதீஸை உழ்ஹிய்யாவுக்குறியது என்பதைத் தெளிவாகவே குறிப்பிடுகின்றனர்.
பார்க்க: நய்லுல் அவ்தார் 5.161
அலி
ஆயிசா
அனஸ்
இப்னு மஸ்ஊத்
அபு மஸ்ஊத்
ஹுதைபா
ஜாபிர்
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹும் இன்னும் பெரும்பாலான நபித்தோழர்கள் அனைவரும் இதை அனுமதித்தே வந்துள்ளனர். நபித்தோழர்களில் இதற்கு மாற்றமாக யாரும் இருந்ததாக எந்தச் செய்தியும் இல்லை.
எனவே இந்த ஹதீஸ் தெளிவாகவே உழ்ஹிய்யாவில் மாட்டை குர்பானி கொடுப்பவர்கள் 7 நபர்களாக அதில் பங்குகொள்ளலாம் என்று சொல்வதால் குர்பானியில் கூட்டுச் சேர்பவர்கள் தயக்கமின்றி பங்குகொள்ளலாம்.அல்லாஹ் அவனது முகத்தை நாடிச் செய்யும் ஒவ்வொரு அமலையும் ஏற்றுக் கொள்வானாக.