Saturday, May 4, 2024

வித்ரில் குனூத் ஓதலமா?

வித்ரில் குனூத் ஓதலமா?

வித்ரில் குனூத் பற்றி இரு கருத்துக்கள் இருந்து வருகின்றன. வித்ரில் குனூத் இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு மத்தியில் அதை நடைமுறைப்படுத்தும் முறையில் 3 வகையான கருத்துக்கள் உள்ளன.

1.சப்தமிட்டும் கையேந்தியும் பிரார்த்திக்க வேண்டும் என்ற கருத்திலுள்ளவர்கள்

2.மௌனமாக ஓத வேண்டும் என்ற கருத்திலுள்ளவர்கள்.

3. வித்ர் குனூத்தில் ஓதுமாறு வந்த துஆவோடு சுருக்காமல் வேண்டிய துஆக்களைச் சொல்லி குனூத் ஓதலாம் என்ற கருத்திலுள்ளவர்கள்.

என 3 வகையான கருத்துக் கொண்டவர்கள் உள்ளனர். வித்ரில் குனூத் சம்பந்தமான ஹதீஸ்கள் பலமானவைகள் என வைத்துக் கொண்டால் அதில் சப்தமிட்டு ஓதுவதற்கோ கையேந்தி ஓதுவதற்கோ வித்ர் குனூத்தில் ஓதுமாறு வராத பிரார்த்தனைகளை ஓதுவதற்கோ ஆதாரம் இல்லை. ஆனாலும் குனூத் சம்பந்தமாக வருகின்ற ஹதீஸ்களை ஆய்வு செய்தால் அவைகள் அனைத்தும் பலஹீனமானவைகள் என்ற முடிவிற்கே வரமுடியும்.

நபியவர்களின் வித்ர் தொழுகை பற்றிய புகாரி முஸ்லிமில் இடம்பெறும் அழகான அறிவிப்புக்களான ஆயிசா, ஸைத், ஸஃத் இப்னு ஹிசாம் போன்றோரின் எந்த அறிவிப்பிலும் குனூத் பற்றிய எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. நாம் மேற் சொன்னது போன்று சில பலஹீனமான ஹதீஸ்கள்தான் வித்ர் குனூத்திற்கு ஆதாரமாக உள்ளன. வித்ரில் குனூத்திற்கு ஆதாரமாக 6 ஹதீஸ்கள் முன்வைக்கப்படுகின்றன. அவைகளில் 5 ஆதாரங்கள் பலவீனமானவை. அவை எவ்வகையில் பலஹீனமடைகின்றன என்பதை சுருக்குமாக முன்வைக்கிறோம்.

1.முதலாவது ஆதாரம்

3566 حدثنا أحمد بن منيع حدثنا يزيد بن هارون أخبرنا حماد بن سلمة عن هشام بن عمرو الفزاري عن عبد الرحمن بن الحارث بن هشام عن علي بن أبي طالب أن النبي صلى الله عليه وسلم كان يقول في وتره اللهم إني أعوذ برضاك من سخطك وأعوذ بمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك قال هذا حديث حسن غريب من حديث علي لا نعرفه إلا من هذا الوجه من حديث حماد بن سلمة

நபியவர்கள் வித்ரின் இறுதியில் பின்வரும் துஆவை ஓதுவார்கள் அல்லாஹ{ம் இன்னீ அஊது பிரிலாக மின் ஸகதிக வபி முஆபாதிக மின் உகூபதிக வஅஊது பிக மின்க லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக அன்த கமா அஸ்னைத அலா நப்ஸிக

அறிவிப்பவர்: அலீ ரலியல்லாஹ் அன்ஹ் ஆதாரம்: திர்மிதீ 3566

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது. ஆனால் குனூத் பற்றிய எந்தச் செய்தியும் இதில் இல்லை. குனூத் வித்ரில் இறுதியானதுமல்ல. நபியவர்கள் இரவித் தொழுகையில் ஸஜ்தாவில் இதனை ஓதியதாக முஸ்லிமில்-780 இடம்பெறுகிறது. எனவே இறுதிப்பகுதி என்ற வார்த்தை வித்ரின் கடைசி ஸஜ்தாவைத்தான் குறிக்கிறது என்பது தெளிவு.

2.இரண்டாவது ஆதாரம்

السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي -3265- فَقَدْ أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ : مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ بْنِ إِسْحَاقَ الْبَزَّارُ بِبَغْدَادَ مِنْ أَصْلِ سَمَاعِهِ بَخَطِّ أَبِى الْحَسَنِ الدَّارَقُطْنِىِّ أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ : عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ الْفَاكِهِىُّ بِمَكَّةَ حَدَّثَنَا أَبُو يَحْيَى : عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ زَكَرِيَّا بْنِ الْحَارِثِ بْنِ أَبِى مَسَرَّةَ أَخْبَرَنِى أَبِى أَخْبَرَنَا عَبْدُ الْمَجِيدِ يَعْنِى ابْنَ عَبْدِ الْعَزِيزِ بْنَ أَبِى رَوَّادٍ عَنِ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِى عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ أَنَّ بُرَيْدَ بْنَ أَبِى مَرْيَمَ أَخْبَرَهُ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ وَمُحَمَّدَ بْنَ عَلِىٍّ هُوَ ابْنُ الْحَنَفِيَّةِ بِالْخَيْفِ يَقُولاَنِ : كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يَقْنُتُ فِى صَلاَةِ الصُّبْحِ ، وَفِى وِتْرِ اللَّيْلِ بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ :« اللَّهُمَّ اهْدِنِى فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنِى فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنِى فِيمَا تَوَلَّيْتَ ، وَبَارِكْ لِى فِيمَا أَعْطَيْتَ ، وَقِنِى شَرَّ مَا قَضَيْتَ ، إِنَّكَ تَقْضِى وَلاَ يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ ».

நபியவர்கள் பஜ்ருத் தொழுகையுடைய குனூத்திலும் வித்ருடைய குனூத்திலும் அல்லாஹ{ம்மஹ்தினீ பீமன் ஹதைத வ ஆபினீ பீமன் ஆபைத………………….” என்ற துஆவை ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹ் ஆதாரம்: பைஹகீ 3265

பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதுவதற்கும் வித்ர் தொழுகையில் குனூத் ஓதுவதற்கும் இந்த ஆதாரத்தையும் முன்வைப்பார்கள். இதில் இடம் பெறும் அப்துர் ரஹ்மான் இப்னு ஹ{ர்முஸ் என்பவர் யாரென்ற விவரம் அறியப்படாதவர். இவரை நம்பகமானவர் என்று யாரும் குறிப்பிடவில்லை.

قال الحافظ في التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير – (1  486(وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزٍ يَحْتَاجُ إلَى الْكَشَفِ عَنْ حَالِهِ

இவர் யாரென்று ஆய்வு செய்யப்பட வேண்டும்” (தல்கீஸ் 1-486)என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.இந்த வார்த்தையை ஹதீஸ்கலை அறிஞர்கள் விவரம் அறியப்படாதவர்களுக்கு பயன்படுத்துவார்கள். எனவே இந்த ஆதாரம் பலஹீனமானது.

3.மூன்றாவது ஆதாரம்

سنن الدارقطني 1681 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَحْيَى بْنِ عَيَّاشٍ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِىُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا أَبَانُ بْنُ أَبِى عَيَّاشٍ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِىِّ عَنْ عَلْقَمَةَ بْنِ قَيْسٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ بِتُّ مَعَ رَسُولِ اللَّهِ ( لأَنْظُرَ كَيْفَ يَقْنُتُ فِى وِتْرِهِ فَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ ثُمَّ بَعَثْتُ أُمِّى أُمَّ عَبْدٍ فَقُلْتُ بِيتِى مَعَ نِسَائِهِ فَانْظُرِى كَيْفَ يَقْنُتُ فِى وِتْرِهِ فَأَتَتْنِى فَأَخْبَرَتْنِى أَنَّهُ قَنَتَ قَبْلَ الرُّكُوعِ . أَبَانُ مَتْرُوكٌ .

நபியவர்கள் ருகூ செய்ய முன்னர் குனூத் ஓதினார்கள்.அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹ் அன்ஹ். ஆதாரம்: தாரகுத்னீ 1681

இந்த செய்தியைப் பதிவு செய்த இமாம் தாரகுத்னி அவர்களே இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபான் இப்னு அபீ அய்யாஷ் நிராகரிக்கப்பட்டவர் என்று பிற்குறிப்பிட்டுள்ளார். இவர் பலஹீனமானவர் என்பதில் ஹதீஸ்கலை வல்லுனர்களுக்கு மத்தியல் கருத்து முரண்பாடு இல்லை. எனவே இந்தச் செய்தியும் இதன் காரணமாக பலவீனமடைகிறது.

4.நான்காவது ஆதாரம்

المعجم الأوسط لأبو القاسم الطبراني  7885 – حدثنا محمود بن محمد المروزي نا سهل بن العباس الترمذي نا سعيد بن سالم القداح عن عبيد الله بن عمر عن نافع عن بن عمر أن النبي صلى الله عليه و سلم كان يوتر بثلاث ركعات ويجعل القنوت قبل الركوع لم يرو هذا الحديث عن عبيد الله بن عمر إلا سعيد بن سالم

நபியவர்கள் 3 ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள் ருகூஉ செய்ய முன்னர் குனூத் ஓதுவார்கள்அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹ் அன்ஹ். ஆதாரம்: முஃஜமுல் அவ்ஸத் 7885

இந்த அறிவிப்பை உபைதுல்லாஹ் வழியாக ஸஈத் இப்னு ஸாலிமைத் தவிர வேறு யாரும் அறிவிப்புச் செய்யவில்லை என இமாம் தபரானி அவர்கள் ஹதீஸைப் பதிவு செய்து விட்டு பிற்குறிப்பிட்டுள்ளார்கள். அவரின் மனனத்தில் பலஹீனம் இருப்பதே இதற்குக் காரணம். அதே வேளை இந்தச் செய்தியை அவரிடமிருந்து அறிவிக்கும் ஸஹ்ல் இப்னு அப்பாஸ் நிராகரிக்கப்பட்டவர் என இமாம் தாரகுத்னி(2-27) அவர்கள் தனது தொகுப்பில் இவரது இன்னொரு அறிவிப்பை ஆராயும் போது குறிப்பிடுகிறார். இந்த அறிவிப்பாளர் வரிசை பலஹீனமானது என இமாம் இப்னு ஹஜர் (திராயா 1:193)அவர்களும் விமரிசித்துள்ளார்.

5.ஐந்தாவது ஆதாரம்

1699 – أَخْبَرَنَا عَلِىُّ بْنُ مَيْمُونٍ قَالَ حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ عَنْ سُفْيَانَ عَنْ زُبَيْدٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ أَنَّ رَسُولَ اللَّهِ (كَانَ يُوتِرُ بِثَلاَثِ رَكَعَاتٍ كَانَ يَقْرَأُ فِى الأُولَى بِـ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى ) وَفِى الثَّانِيَةِ بِـ ( قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) وَفِى الثَّالِثَةِ بِـ ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) وَيَقْنُتُ قَبْلَ الرُّكُوعِ فَإِذَا فَرَغَ قَالَ عِنْدَ فَرَاغِهِ « سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ » . ثَلاَثَ مَرَّاتٍ يُطِيلُ فِى آخِرِهِنَّ .

நபியவர்கள் 3 ரக்அத்களை வித்ராகத் தொழுவார்கள். அதில் முதலாவது ரக்அத்திலே ஸப்பிஹிஸ்ம அத்தியாயத்iயும் இரண்டாவதில் குல் யா அய்யுஹல் காபிரூனையும் மூன்றாவதில் குல் ஹ{வல்லாஹ் அஹத்  என ஆரம்பிக்கும் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். ருகூவிற்கு முன்னர் குனூத் ஓதுவார்கள்.தொழுகையை முடித்து விட்டால் ஸ{ப்ஹானல் மலிகுல் குத்தூஸ் என்று  முறை கூறுவார்கள் அதில் 3வதை நீட்டிச் சொல்வார்கள்

அறிவிப்பவர்: உபை இப்னு கஅப். ஆதாரம்: இப்னு மாஜஹ் 1182

இந்த ஹதீஸில் இடம் பெறும் ருகூவிற்கு முன் குனூத் ஓதுவார்கள் என்ற வாசகம்” அறிவிப்பாளரின் தவறுதலால் இடம்பெற்றது. இவ்வாறான தவறுகளை ஹதீஸ்கலையில் சாத் : புறநடை என்பார்கள். அறிவிப்பாளர் தவறு எவ்வாறு நடந்துள்ளது என்பதைகொஞ்சம் விரிவாக விளங்கப்படுத்துவது இந்த ஹதீஸின் பலஹீனத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

ஒரு ஆதாரத்தின் நம்பகத் தன்மை அந்தச் செய்தியைப் பதிவு செய்த நூலாசிரியரின் நம்பகத் தன்மையை வைத்தே ஆரம்பிக்கிறது. செய்தியை அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்த ஆசிரியரின் நம்கத் தன்மையில் குறையிருந்தால் அது ஒட்டு மொத்த செய்தியையும் அதன் அறிவிப்பாளர் வரிசையும் புனையப்பட்டதோ என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கும். பதிவு செய்தவர் நம்பகமானவர் என்று நிரூபனமாகிவிட்டால் அவரது ஆசிரியரின் நம்பகத் தன்மையில் அந்த முழுச் செய்தியின் நம்பத்தன்மையும் தங்கியிருக்கும் இவ்வாறே நபித் தோழர்வரை அந்த ஆய்வு நீளும். நம்பகத் தன்மை போன்றுதான் மனன சக்தி பற்றிய ஆய்வின் நிலையும். பின்வரும் விளக்கத்தை வாசிக்கும் போது இதைக் கருத்திற்கொள்ளுங்கள்.

இந்த ஹதீஸை நபியவர்களிடமிருந்து உபை இப்னு கஃப் கேட்கிறார்கள்.அவரிடமிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா பதிவு செய்கிறார்கள். அவரிடமிருந்து ஸஈத் இப்னு அப்திர் ரஹ்மான் பதிவு செய்கிறார். அவரிடமிருந்து பின்வரும் 6 மாணவர்கள் இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள்.

1.தர் இப்னு அப்தில்லாஹ் 2.அஸ்ரா 3. தல்ஹா 4. அதா 5. சுபைத் 6. கதாதா

இவர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்ளபட்ட பலமான அறிவிப்பாளர்கள். ஆனால் இவர்களின் ஆரம்பமாக உள்ள நால்வரின் எந்த அறிவிப்பிலும் ருகூவிற்கு முன் குனூத் ஓதுவார்கள்என்ற வாசகம் இல்லை. அபு தாவுத், நஸாஈ, இப்னு மாஜா இன்னும் பல கிரந்தங்களில் இந்த அறிவுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

5வது மாணவரான சுபைதின் அறிவிப்பு

5வது மாணவரான சுபைதிடமிருந்து இந்த செய்தியை 4 மாணவர்கள் அறிவிக்கின்றனர் 1.அஃமஷ், 2.மிஸ்அர், 3. சுப்யான் , 4.;பித்ர்,

அதில் அஃமஷின் அறிவிப்பில் ருகூவிற்கு முன் குனூத் ஓதுவார்கள்” என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

அதே போன்று சுபைதுடைய 2வது மாணவரான மிஸ்அருடைய அறிவிப்பைப் பதிவு செய்த உமர் இப்னு ஹப்ஸ் சில இடங்களில் ருகூவிற்கு முன் குனூத் ஓதுவார்கள் என்ற வாசகம் இல்லாமல் பெரும்பான்மையான அறிவிப்பைப் பதிவு செய்கிறார்(அவ்ஸத்: 2642). சில இடங்களில் ருகூவிற்கு முன் குனூத் ஓதுவார்கள் என்ற வாசகத்தோடு அறிவிக்கிறார். இந்த  உமர் இப்னு ஹப்ஸ் நம்பகமான அறிவிப்பாளர்களில் ஒருவராக இருந்தாலும் சில வேளைகளில் இவர் தவறியது நிரூபிக்கப்பட்டுள்ளது. அபூதாவுத், இப்னு ஹிப்பான், இப்னு ஹஜர் போன்றோர் இவ்வாறு விமரிசித்துள்ளனர். எனவே இவ்வாறானவர்களின் முரண்பாடுகளின்போது பெரும்பான்மைக்கு ஒத்த அறிவிப்பையே ஏற்க வேண்டும். எனவே சுபைதின் இரண்டாவது மாணவரான மிஸ்அர் அறிவித்த பெரும்பான்மைக்கு ஒத்த அறிவிப்பையே நாம் கணக்கில்கொள்ள வேண்டும். இந்த அறிவிப்பே மிகச் சரியாக இருக்க வாய்ப்புண்டு. காரணம் ஏனைய நால்வருடைய அறிவிப்பிற்கும் சுபைதுடைய அறிவிப்பு இங்கேதான் ஒத்து நிற்கிறது.

சுபைதுடைய 3வது மாணவரான சுப்யானுடைய அறிவிப்பைப் பதிவு செய்த மக்லத் இப்னு யஸீத் பலமான மாணவர்களில் ஒருவராக இருந்தாலும் இமாம் அஹ்மத், இமாம் ஸாஜி, இமாம் இப்னு ஹஜர் போன்றோர் சிலவேளைகளில் இவர் தவறுவிடுவதாக விமரிசித்துள்ளனர். இந்த விமரிசனங்கள் முரண்பாடுகளின்போது கவனத்தில் கொள்ளப்படும் என்பதால் இவரது இந்த அறிவிப்பை நாம் ஏற்க இயலாது.

சுபைதுடைய 4வது மாணவரான பித்ர் இப்னு கலீபா பலமானவராக இருந்தாலும் சுபைதுடைய ஏனைய மாணவர்களின் மிகச் சரியான அறிவிப்பிற்கு முரண்படும் இவரது அறிவிப்பை ஏற்க முடியாது.

எனவே சுருக்கமாகச் சொல்வதென்றால் சுபைதுடைய அறிவிப்புக்களில் ஏனைய நால்வரின்(தர்,அஸ்ரா, தல்ஹா, அதா) அறிவிப்பிற்கு உடன்படும் அறிவுப்புகளே அதிகம். முரண்படும் அறிவிப்புகள் நிராகரிக்கப்பட வேண்டும்.

6வது மாணவரான கதாதாவின் அறிவிப்பு

கதாதாவிடமிருந்து இந்தச் செய்தியை ஸஈத் இப்னு அபீ உரூபா என்ற ஒரு மாணவரே பதிவு செய்கிறார். அவரிடமிருந்து ஈஸா இப்னு யூனுஸ் என்பவர் மாத்திரமே பதிவு செய்கிறார். இவரிடமிருந்து 3 மாணவர்கள் இச் செய்தியைப் பதிவு செய்கின்றனர். அதில் இப்னுல் அக்தஃ என்பவரும் முஸய்யப் இப்னு வாலிஹ் என்பவரும் “ருகூவிற்கு முன் குனூத் ஓதுவார்கள் என்ற வாசகத்தோடு பதிவு செய்துள்ளனர். இப்னுல் அக்தஃ அறியப்படாதவர், முஸய்யப் பலவீனமானவர். ஆனால் மூன்றாவது மாணவரான இஸ்ஹாக் இப்னு ராஹவீஹ் இஸ்லாமிய உலகின் அறிஞர்களில் ஒருவர் ஹாபில் என வருணிக்கப்பட்டவர் பலமான அறிவிப்பாளர். அவர் ருகூவிற்கு முன் குனூத் ஓதுவார்கள் என்ற வாசகமின்றியே இந்த செய்தியை அறிவிக்கிறார். அந்த அறிவிப்பு நஸாஈயில் 1700 இலக்கத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளது(இதற்கு மாற்றமாக ருகூவிற்கு முன் குனூத் ஓதுவார்கள்”  என்ற வாசகத்தோடு இஸ்ஹாகின் அறிவிப்பை இப்னு நஸ்ர் அல் மரூஸி-67 பதிவு செய்துள்ளார்   தொடர்ந்து விளக்கும் போது அதற்கான விளக்கும் கிடைக்கும் இன்சா அல்லாஹ்).

இந்த குனூத் பற்றிய மேலதிக வாசகம் பலஹீனமானது பின்வரும் ஒப்பீடு இன்னும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஹதீஸை நபியவர்களிடமிருந்து உபை இப்னு கஃப் கேட்கிறார்கள்.அவரிடமிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா பதிவு செய்கிறார்கள். அவரிடமிருந்து ஸஈத் இப்னு அப்திர் ரஹ்மான் பதிவு செய்கிறார். அவரிடமிருந்து  6 மாணவர்கள் இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். அவர்களில்  சுபைத், கதாதா ஆகிய இருவரின் அறிவிப்பில்தான் குனூத் பற்றிய செய்தி இடம் பெறுவதனால் அவைகளை ஆய்வுக்குற்படுத்தினோம். அதாவது ஸஈத் இப்னு அப்திர்ரஹ்மானிடமிருந்து நேரடியாக இருவரும் கேட்ட செய்திகளையே இங்கு ஆய்வுக்குற்படுத்தினோம்.

அதே கதாதா இந்தச் செய்தியை அஸ்ரா வழியாகவும் ஸஈத் இப்னு அப்திர்ரஹ்மானிடம் கேட்டதை

யஸீத் இப்னு சுரைங்

அப்துல் அஃலா

முஹம்மத் இப்னு பிஷ்ர்

ஹிசாம்

சுஃபா

போன்ற ஏராளமான மாணவர்கள் அறிவித்துள்ளனர். அவர்களின் எந்த அறிவிப்பிலும் இந்த குனூத் பற்றிய வாசகம் இடம்பெறவில்லை. அதே போன்று அதே சுபைத் இந்தச் செய்தியை தர் இப்னு அப்தில்லாஹ் வழியாகவும் ஸஈத் இப்னு அப்திர்ரஹ்மானிடம் கேட்டதை

சுஃபா

அப்துல் மலிக்

ஜரீர் இப்னு ஹாஸிம்

போன்ற ஏராளமான மாணவர்கள் அறிவித்துள்ளனர். அவர்களின் எந்த அறிவிப்பிலும் இந்த குனூத் பற்றிய வாசகம் இடம்பெறவில்லை.

முடிவாக ருகூவிற்கு முன் குனூத் ஓதுவார்கள் என்ற வாசகம் ஆதாரமற்றது அதன் அறிவுப்புக்கள் பலவீனமானவைகள். அறிவிப்பாளர் தவறுதலால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்கிறது. இதனால்தான் இந்த செய்தியை பல அறிஞர்கள் விமரிசித்துள்ளனர். இந்த பலஹீனத்தை தெளிவுபடுத்திய அறிஞர்களுள் இமாம் நஸாஈ(1408) இமாம் அபூதாவுத்(1-537) மிக முக்கியமானவர்கள்.அதே நேரம் ஒரு வாதத்திற்கு பலமானது என்று வைத்துக் கொண்டாலும் ருகூவிற்குப் பிந்தி கையேந்தி சப்தமிட்டு ஓதுவதற்கு இந்தச் செய்தில் எந்த வாசகமும் இல்லை

6.ஆறாவது ஆதாரம்

سنن الترمذي لمحمد الترمذي – 464 – حدثنا قتيبة حدثنا أبو الأحوص عن أبي إسحق عن بريد بن أبي مريم عن أبي الحوراء  السعدي  قال : قال الحسن بن علي  رضي الله عنهما علمني رسول الله صلى الله عليه و سلم كلمات أقولهن في الوتر : اللهم اهدني فمين هديت وعافني فيمن عافيتن وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني ما قضيت فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت تباركت ربنا وتعاليت

நபியவர்கள்  வித்ரில் ஓத சில வார்த்தைகளை நபியவர்கள் கற்றுத் தந்தார்கள். அல்லுஹ{ம்மஹ்தினீ பீமன் ஹதய்த வ ஆபினீ பீமன் ஆபைத…………”அறிவிப்பவர்: ஹஸன் ரலியல்லாஹ் அன்ஹ். ஆதாரம்: திர்மிதீ 464 இன்னும் பல நூற்கள்

நபியவர்களிடமிருந்து இந்த துஆவை ஹஸன் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள். அவர்களிடமிருந்து மூவர் இந்தச் செய்தியை அறிவிக்கின்றனர்.

1.ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா. ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா அறிவிக்கும் அறிவிப்பு ஆஹாத் வல் மஸானீ 415 என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் இப்னு சபீப் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர்.

2.அப்துல்லாஹ் இப்னு அலீ ஹஸன் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்களின் பேரரான அப்துல்லாஹ் இப்னு அலீ அறிவிக்கும் அறிவிப்பு நஸாஈயில் 1746 பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அறிவப்பாளர் தொடர்பறுந்த அறிவிப்பு. அப்துல்லாஹ் இப்னு அலீ அவர்களின் பாட்டனார் ஹஸன் ரலியல்லாஹ் அன்ஹ் மரணிக்கும்போது அப்துல்லாஹ் இப்னு அலீயின் தந்தையே பருவ வயதடைந்திருக்கவில்லை.(பார்க்க தஹ்தீப்5-325)

3.அபுல் ஹவ்ரா அபுல் ஹவ்ராவிடமிருந்து புரைத் இப்னு அபீ மர்யம் இதனை அறிவிக்கும் செய்தி பல கிரந்தங்களிலே பதிவு செய்யப்பட்டுள்ளது.

புரைத் இப்னு அபீ மர்யம் வழியாக அலா இப்னு ஸாலிஹின் அறிவிப்பு அஹ்மதில் 1725 பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நம்பகமானவராயினும் மனனத்தில் பலவீனமானவர் என புகாரி இமாம் விமரிசித்துள்ளார். இப்னு ஹஜரும் இவரின் பலதவறுகள் நிரூபக்கப்பட்டுள்ளன என விமரிசித்துள்ளார். (பார்க்க: தஹ்தீப் 1-184)

புரைத் இப்னு அபீ மர்யம் வழியாக யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகின் அறிவிப்பு அஹ்மதில் 1718 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நம்பகமானவராயினும் பிறருடன் முரண்பட்டறிவிக்கும் அறிவிப்புகளில் இவரை ஏற்க முடியாது. இமாம் அஹ்மத் இவரது அறிவுப்புகள் குழப்பமுள்ளவை எனவும் இவர் பலஹீனமானவர் என அபூ ஹாதிமும் விமரிசிக்கிறார்கள்.           (பார்க்க: கமால் 7170)

புரைத் இப்னு அபீ மர்யம் வழியாக அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈயின் அறிவிப்பே வித்ரில் குனூத் ஓதுவதற்கு முன்வைக்கப்படும் அறிவிப்புக்களில் பிரபல்யமானவை. ஆனால் இவர் பலமான அறிவிப்பாளராக இருந்தாலும் இவரில் இரண்டு பலவீனங்கள் உள்ளன. இவர் கடைசிக் காலப்பகுதியில் அறிவிப்புக்களில் குழப்ப நிலைக்குள்ளானார். இரண்டாவது தனக்கு யார் சொன்னார் என்ற செய்தியை சொல்லாமல் மயக்கமாக அறிவிப்பார். இவரைப் பற்றிய இந்த விமரிசனங்கள் பிரபல்யமானவை. இவர் குனூத் பற்றிய எல்லா அறிவிப்புகளிலும் மயக்கமாகவே(தத்லீஸ் ) அறிவிப்புச் செய்துள்ளார். என்பதால் இந்த அறிவிப்பளர் வரிசையும் பலவீனமானது.

ஒரு வாதத்திற்கு புரைத் இப்னு அபீ மர்யம் வழியாக அறிவிக்கும் மேற் சொல்லப்பட்ட 3 அறிவிப்புக்களும் பலமானது என்று வைத்துக்கொண்டாலும் பின்வரும் 4காவதாக அமையும் சுஃபா என்ற மனன மலையின் அறிவிப்பிற்கு மேலதிக வாசகங்களால் முரண்படுவதால் அவைகள் புறநடை (சாத் ) ஆன அறிவிப்பாகும்.

புரைத் இப்னு அபீ மர்யம் வழியாக சுஃபாவின் அறிவிப்பு இப்னு குஸைமாவில் 1096ல் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபியவர்களை நீங்கள் எவ்வாறு நினைவ கூறுகிறீர்கள்? என்று நான் ஹஸன் ரலியல்லாஹ் அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர் நபியவர்கள் எமக்கு அல்லாஹ{ம்மஹ்தினீ பீமன் ஹதைத…” என்ற துஆவை ஓதுமாறு கற்றுத் தந்தார்கள்என்று கூறினார்.      அறிவிப்பவர்: அபுல் ஹவ்ரா

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் இப்னு குஸைமா பின்வருமாறு பிற்குறிப்பிடுகிறார்:

صحيح ابن خزيمة لمحمد النيسابوري – (2 152 ولم يذكر القنوت ولا الوتر و شعبة أحفظ من عدد مثل يونس بن أبي إسحاق و أبو إسحاق لا يعلم أسمع هذا الخبر من بريد أو دلسه عنه اللهم إلا أن يكون كما يدعي بعض علمائنا أن كل ما رواه يونس عن من روى عنه أبوه أبو إسحاق هو مما سمعه يونس مع أبيه ممن روى عنه ولو ثبت الخبر عن النبي صلى الله عليه و سلم أنه أمر بالقنوت في الوتر أو قنت في الوتر لم يجز عندي مخالفة خبر النبي ولست أعلمه ثابتاவித்ரில் என்ற வார்த்தையோ குனூத் என்ற வார்த்தையோ சுஃபாவுடைய அறிவிப்பில் இல்லை. யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகை போன்ற பலரின் மனனத்தை விட மிக மனனமுள்ளவர். அபூஇஸ்ஹாக் அஸ்;பீஈ இந்த செய்தியை நேரடியாக புரைதிடமிருந்து கேட்டாரா அல்லது ஆசிரியரைச் சொல்லாமல் மயக்கமாக அறிவிக்கிறார என்றும் அறிய முடியவில்லை. அபு இஸ்ஹாக் அஸ்ஸபீஈயின் ஆசிரியரும் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகின் ஆசிரியரும் ஒரு அறிவிப்பில் ஒன்றாக இருந்தால் அபு இஸ்ஹாக் அஸ்ஸபீஈயி அந்த அறிவிப்பை குறிப்பிட்ட ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டிருக்கிறார். என்று எமது அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். அல்லாஹ்வே சிலவேளைகளில் இந்தக் கூற்று உண்மையாக இருந்தாலே தவிர இந்த செய்தி ஆதாரமாக வாய்ப்பில்லை.நபியவர்கள் வித்ரில் குனூத் ஓதச் சொன்னார்கள். அல்லது ஓதினார்கள் என்று பலமான ஒரு ஹதீஸ் இருந்தால் நபியவர்களின் வழிமுறைக்கு மாற்றமாக நடக்க ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன். நானறிந்த வகையில் அவ்வாறு எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.

இமாம் இப்னு குஸைமா அவர்கள் ஹிஜ்ரி 200களில் வாழ்ந்த மிகப்பெரும் ஹதீஸ்கலை அறிஞர்களில் ஒருவர். இவரின் பிரபல்யமான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றே ஸஹீஹ் இப்னு குஸைமா. இவர் சாபிஈ மத்ஹப் அறிஞர்களில் ஒருவர். அவர் இந்த ஹதீஸை பலமற்றது என்று தெளிவாக தனது நூலில் மேற்கண்டவாறு பதிந்துள்ளார்.

ஆய்வின் சுருக்கம்:

வித்ரில் குனூத் சம்பந்தமான ஹதீஸ்கள் எதுவும் ஆதாரப்பூர்வமானதல்ல. அல்லாஹ{ம்மஹ்தினீ என்றாரம்பிக்கும் பிரார்த்தனையை நபியவர்கள் தனது பேரர் ஹஸனுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். எனவே அதனை நாம் “ரப்பனா ஆதினா பித்துன்யா…” போன்ற பொதுவான பிரார்த்தனைகளில் ஒன்றாக ஓதலாம். அதை வித்ரிலோ அல்லது வித்ருக் குனூத்திலோ ஓதுவது சம்பந்தமான அறிவிப்புகள் அனைத்தும் பலஹீனமானவைகள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts