Monday, May 6, 2024

வித்ரு குனூத் ஹதீஸ் பற்றிய இரண்டாவது விமரிசனம் ஒரு விளக்கம். part.1

வித்ரு குனூத் ஹதீஸ் பற்றிய இரண்டாவது விமரிசனம் ஒரு விளக்கம். part.1

 (இந்த பதில் தொடர் கட்டுரையாகப் பதிவு செய்யப்படும் இன்சா அல்லாஹ்)

மௌலவி அப்துந் நாஸர் அவர்கள் வித்ருக் குனூத் பற்றிய கட்டுரைக்கு எழுதிய மறுப்பிற்கு நாம் வித்ரு குனூத் ஹதீஸ் பற்றிய கட்டுரை விமரிசனம் ஓர் விளக்கம் என்ற தலைப்பில் ஒரு மறுப்பை வெளியிட்டிருந்தோம். அதற்கு மறுப்பாகும் வகையில் மௌலவி அப்துந் நாஸர் அவர்கள் ஒரு விமரிசனக் கட்டுரையை onlinepj தளத்திலே வெளியிட்டுள்ளார். ஆனால் அவரது முதல் மறுப்பையும் தற்பொழுது எழுதியுள்ள மறுப்போடு கலந்து வெளியிட்டுள்ளதால் பலவிதமான தெளிவின்மை அந்தக் கட்டுரையில் காணப்படுகிது. அந்தக் கட்டுரை அவசரத்தில் நிதானமிழந்து எழுதப்பட்டுள்ளது என்பதை நான் வாசிக்கும்போது புரிந்து கொண்டேன். இதனால் கட்டுரைக்கான பதிலை முழுமயாக நாம் பதிவு செய்வது மிகச் சிக்கலானது. அந்தக் கட்டுரையின் ஆரம்ப 20 பாராக்கள் நாம் ஆரம்பமாக எந்தக் கட்டுரைக்கு மறுப்பு எழுதினோமோ அந்தக் கட்டுரையில் இருந்தவைகள் என்பதாலும் அதன் உள்ளடக்கம் ஹதீஸ் பற்றிய பொதுவான அறிமுகத்தோடு சம்பந்தப்பட்டதாக இருப்பதனாலும் அதற்கு பதில் தேவையில்லை. நாம் ஏற்கனவே மறுப்பெழுதிவிட்ட ஆக்கத்தையும் அதற்காக இப்பொழுது அவர் எழுதியுள்ள மறுப்பையும் இடையிடையே கலந்துவிட்டிருப்பதால் கட்டுரை அவரையறியாமலே நேர்மைத் தன்மையை இழந்துள்ளது. உதாரணத்திற்கு இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டுகிறேன். மௌலவி அவர்கள் விமரிசனத்திற்கான பதிலின் ஆரம்பத்திலே பின்வருமாறு எழுதுகிறார்:

ஒரு அறிவிப்பாளர் பற்றி முடிவுக்கு வருவதென்றால் அவரைப்பற்றி அறிஞர்கள் செய்துள்ள எல்லா விமரிசனங்களையும் எடுத்துக்காட்டி அந்த விமரிசனங்களில் முரண்பாடு இருந்தால் அவற்றில் எது சரியானது என்று ஆய்வு செய்து காரண காரியங்களோடு விளக்குவதுதான் ஆய்வு செய்யும் சரியான முறையாகும். மேற்கண்டவாறு விமரிசனம் செய்பவர்கள் இந்த நாணயமான முறையைக் கையாளாமல் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் குறித்து செய்யப்பட்ட விமரிசனங்களில் அவரைக் குறை கூறும் இரண்டு விமரிசனங்களைத் தேடி கண்டு பிடித்து ஆய்வை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டனர்.

இது அவரது முதல் விமரிசனக் கட்டுரையில் இடம் பெற்ற பந்தி. இதைத் தெரியாதவர்கள் இரண்டு விமரிசனங்கள் என்று இங்கு குறிப்பிடப்படும் வார்த்தை நான் கடைசியாக எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட இரண்டு இமாம்களது கூற்றைத்தான் இவர் குறிப்பதாகக் கருத இடமுண்டு. நானும் அவ்வாறுதான் எண்ணினேன். ஆனால் பின்னர்தான் இது முதல் விமரிசனக் கட்டுரையில் இடம் பெற்ற பந்தி என்பதை உணர்ந்தேன்.

இன்னொரு தவறைப் பாருங்கள்:

அவரது முதல் கட்டுரையில் உள்ள ஒரு விடயம் பற்றி  நாம் பின்வருமாறு ஒரு தவறை விமரிசித்திருந்தோம்:-

மௌலவி அப்துந் நாஸர் அவர்கள் யூனுஸை பலப்படுத்திய அறிஞர்கள் பட்டியலிலும் பலஹீனப்படுத்தியவர் பட்டியலிலும் இமாம் அபூ ஹாதிமை சேர்த்துள்ளார். இது கவனக் குறைவால் நேர்ந்ததே. யூனுஸைப் பற்றி உண்மையாளர் என ஒரு இடத்திலும் ஆதாரமற்றவர் என இன்னொரு இடத்திலும் சொல்லியிருந்தால் அவ்வாறு இரு பட்டியலிலும் சேர்ப்பது ஞாயமானது. ஆனால் அவ்வாறு இல்லை.. அபூ ஹாதிம் அவரைப் பற்றிக் கூறியது பின்வருமாறு: உண்மையாளர் ஆனால் இவரை ஆதாரமாகக்கொள்ள முடியாது’           (ஜரஹ் வத் தஃதீல்: 1024)’

ஆனால் அவர் தனது இரண்டாவது மறுப்பிலே நம்பகப்படுத்தியவர் பட்டியலிலிருந்து அபூஹாதிமை நீக்கி முதல் கட்டுரையில் இடம் பெற்ற பட்டியலை இங்கே இடம் பெறச் செய்துள்ளார். அபூ ஹாதிமை நீக்கி முதல் கட்டுரைப் பட்டியலை அவ்வாறே இடம் பெறச் செய்ததின் நோக்கம் என்ன?

இனி கட்டுரையில் நிதானமின்மையால் இடம்பெற்றுள்ள தவறுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம்.

  1. யூனுஸை பலப்படுத்தும் அறிஞர்கள் பட்டியலிலிருந்து இமாம் அபூஹாதிமை சுட்டிக்காட்டாமல் நீக்கிவிட்ட மௌலவி அவர்கள் யூனுஸை இமாம் அபூ ஹாதிம் விமரிசிக்கும் கூற்றிற்கு பதில் சொல்லும் போது இன்னொரு கவனக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதைத்தான் நான் நிதானமின்மை எனச் சொன்னேன். மௌலவி அவர்கள் அபூஹாதிமின் விமரிசனத்தை பின்வருமாறு நிராகரிக்கின்றார்.

யூனுஸ் விஷயத்தில் இமாம் அபூஹாதிமின் விமரிசனம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஏனென்றால் இதற்கு நேர்மாற்றமாக யூனுஸ் நம்பகமாகவர் என்றும் அபூ ஹாதிம்  கூறியுள்ளார்.’ என்று கூறிய மௌலவி அவர்கள் அதற்கு ஆதாரமாக பின்வரும் கூற்றை எடுத்துக் காட்டுகிறார்.

يونس بن أبي إسحاق ثقة ليس به بأس قاله ابن معين (الجرح والتعديل 9  1621) 243
‘யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் நம்பகமானவர். அவரிடம் குறையேதுமில்லை. இதை இப்னு மஈன் கூறியுள்ளார் என்று இமாம் அபூஹாதிம் தனது நூலான ஜரஹ் வத் தஃதீல் என்ற நூலில் கூறியுள்ளார். எனவே ஒரே அறிவிப்பாளரைப் பற்றி இமாம் அபூஹாதிம் முரண்பாடான இரண்டு விமரிசனங்களைக் கூறியுள்ளதால் இரண்டு விமரிசனமுமே ஏற்கத்தக்கதல்ல.

இங்கே மௌலவி அப்துந் நாஸர் அவர்கள் பல தவறான தகவல்களை அவரை அறியாமல் தந்துள்ளார். ஜரஹ் வத் தஃதீல் இமாம் அபூஹாதிமுடைய நூல் என்பது தவறு. அவரது மகன் அப்துர்ரஹ்மான் எழுதிய நூலே அது. அந்த நூலில் இடம்பெறும் அனைத்தும் அவரது மகனுக்கு அறிஞர்கள் வழியாகக் கிடைத்த செய்திகளே. அதில் அவரது தந்தை அபூ ஹாதிம் வழியாகக் கிடைத்த அறிவுப்புக்களும் இடம்பெறும். எனவே இதை இப்னு மஈன் கூறியுள்ளார் என்று இமாம் அபூஹாதிம் …கூறியுள்ளார் என்பது தவறு. அவ்வாறு கூறியது அபூ ஹாதிமின் மகன் அப்துர் ரஹ்மானே. அபூ ஹாதிமல்ல.

அடுத்து யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகைப் பற்றி அபூஹாதிமின் மகனாவது நம்பகமாகனவர் என்று சொன்னதாகவோ அல்லது நம்பகமானவர் என்று ஆதாரங்காட்ட இப்னு மஈயினின் கூற்றை மேற்கோள் காட்டியதாகவோ எந்த செய்தியையும் என்னால் குறிப்பிட்ட நூலில் காண முடியவில்லை.

அதே போன்று இமாம் அபூஹாதிம் முரண்பாடான இரண்டு விமரிசனங்களைக் கூறியுள்ளதால் இரண்டு விமரிசனமுமே ஏற்கத்தக்கதல்ல” என்று அவர் கூறியிருப்பதும் தவறாகும். ஒரு வாதத்திற்கு இமாம் அபூஹாதிம் முரண்பாடான இரு கூற்றுக்களை கூறியுள்ளார்கள் என்று வைத்துக்கொண்டாலும் இரண்டையும் பொறுத்தி ஒன்று முந்தியது இன்னொன்று கடைசியானது என்றோ. அல்லது ஏனைய அறிஞர்களின் விமரிசனங்களோடு ஒரு கருத்து ஒத்துப்போகிறது என்றோ ஒரு முடிவுக்கு வர முற்பட வேண்டுமே தவிர முரண்பட்டதற்காகவே நிராகரிப்பது சரியான முடிவல்ல.

எனவே இமாம் அபூஹாதிமைக் ககையாள்வதில் மௌலவி அப்துந் நாஸர் அவர்கள் நிறையத் தவறுகளை விட்டுள்ளார் என்பது தெளிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts