ஸலபிய்யாக் கொள்கை ஓர் விளக்கம் என்ன?
அஹ்ஸலுஸ்ஸ{ன்னா ஸலபிய்யா தவ்ஹீத் அஹ்லுல் ஹதீஸ் போன்ற வார்த்தைகள் சரியான கொள்கையில் இருப்பவர்களைக் குறிக்கப் பயன்பட்ட அடையாள வார்த்தைப் பிரயோகங்கள். முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே வழிமுறையில் இருக்கும் ஆரம்ப காலப்பகுதியில் இந்த வார்த்தைப் பிரயோகங்களை அவர்கள் இந்த அர்த்தத்தில் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அறிந்திருந்ததெல்லாம் மார்க்கம் இஸ்லாம் அதைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள். என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளும் முறையிலும் நடை முறைப்படுத்தும் முறையிலும் முரண்பாடுகள் தோன்றியதோ அன்று தொடக்கம் தவறிப்போனவர்களை அவர்கள் தவறிய இடத்தை வைத்து கொள்கையை வைத்து எவர் அந்த தவறுக்குக் காரணமாக அமைந்தாரோ அவரை வைத்து அடையாளப்படுத்தும் வழமை ஆரம்பித்தது. இஸ்லாத்தில் தோன்றிய முதல் கொள்கைப் பிரிவு சீயா என அடையாளப்படுத்தப்பட்டது. இரண்டாவது கவாரிஜ் என அடையாளப்படுத்தப்பட்டது.
இன்னொரு விடயம் பொதுவாக ஆரம்ப காலத்தில் அடையாளப்படுத்தப்படும்போது இருந்த வழிகேடுகளை விட பிற்காலத்தில் ஒவ்வொரு பிரிவினரினதும் கொள்கைத் தவறுகள் வளர்ந்து முற்றி வேறு வடிவங்களையெல்லாம் எடுத்திருக்கும் தமக்குள்ளேயே அவர்கள் பலவாறாகப் பிரிந்திருப்பார்கள்.
இப்படி இஸ்லாத்தை விளங்குவதில் தவறுவிட்ட பிரிவினர்களை அடையாளப்படுத்த சில வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டன. அக்கால கட்டங்களில் வழிதவறியவர்கள் குறைவாகவே இருந்தனர். அவர்களை விட உண்மையான முஸ்லிம்களின் ஆதக்கமே அதிகமாக இருந்தது. ஆனால் தொடர்ந்த காலங்களில் தவறிய பிரிவுகள் எண்ணிக்கை அதிகரித்து அவர்களின் ஆதிக்கமும் அதிகரித்தது. இந்தப்பிரிவின் வேர்களை 3 வகையாக நாம் வகுக்கலாம்.
1. இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை புரிந்துகொள்வதில் உருவான சீயா கவாரிஜ் கதரீயா முர்ஜிஆ முஃதஸிலா அஷ்அரீயா மாத்ரூதியா போன்ற ஆரம்பகாலப் பிரிவுகள். இதில் இன்று வரைக்கும் அஷ்அரீயாக்கள் பின்னர் சீயாக்கள் பின்னர் மாத்ரூதியாக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
2. மார்க்க சட்டரீதியான மற்றும் வணக்க வழிபாடுகள் சம்பந்தப்பட்ட சில அறிஞர்களின் முடிவுகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மத்ஹபீயத் பிரிவுகளான சாபிஈ ஹனபீ ஹன்பலீ மாலிகீ லாஹிரீ போன்ற பிரிவுகள். இவைகள் கொள்கை விடயங்களில் அந்த அறிஞர்களை தக்லீத் செய்வது மிக அறிது. சட்ட விடயங்களிலேயே தங்களது தக்லீதைச் சுருக்கிக் கொண்டனர். கொள்கை விடயங்களில் முதல் வகையை சார்ந்து நிற்பார்கள்.
3. 5ம் நூற்றாண்டுகளின் இறுதிப்பகுதியில் தோன்றிய காதிரியா ரிபாஇய்யா நக்சபந்தியா போன்ற சூபிஸப் பிரிவுகள். உளப்பயிற்சியை மையமாகக் கொண்டு ஆரம்பித்த இந்தப் பரிவுகளில் எல்லாம் இறைவனே என்ற இறை நிராகரிப்புகளும் நுழைந்தன.
இன்றுள்ள முஸ்லிம்களில் அதிகமானோர் இந்த 3இலும் களந்தே தமது மார்க்கத்தை அடையாளப்படுத்துகின்றனர். அதாவது கொள்கைளில் அஷ்அரீயாகவும் மத்ஹபில் சாபிஈயாகவும் தரீகாவில் காதிரீயாகவும் இருப்பார். அல்லது அது போன்ற 3 வழிகேடுகளை தமக்குள் இணைத்திருப்பர்.சரி விடயத்திற்கு வருகிறேன். இவ்வாறு வழிதவறிய கொள்கைகள் அதிகமாகியபொழுது உண்மையான முஸ்லிம்களின் எண்ணிக்கையும் ஆதிக்கமும் குறைய ஆரம்பித்தது. முஸ்லிம்கள் என்ற உண்மைப் பெயர் கொண்டவர்கள் இதுதான் இஸ்லாம் என்பதை அறிமுகப்படுத்த வேண்டிய வரலாற்றுத்தேவை இயல்பாக உணரப்பட்டது.
இவ்வடிப்படையில் அஹ்லுஸ்ஸ{ன்னா என்ற வார்த்தை பிரபல்யம் ஆனது. ஆரம்பாலங்களில் ஸ{ன்னா என்ற தலைப்பில் பல நூல்கள் வெளியாகின. இது கொள்கை ரீதியான பித்அத்திற்கு எதிரான பிரயோகமே. இதில் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் மகன் அப்துல்லாஹ்வின் நூலும் ஷைபானியின் நூலும் பிரபல்யமானது. இவ்வகையில் அஹ்லுஸ் ஸ{ன்னா என்ற பிரயோகத்தின் சற்றுப் பின்னர் உருவானதே ஸலபிகள் என்ற சொல்லாடல். இரு வார்த்தையின் நோக்கமும் இஸ்லாமிய கொள்கையை சரியாகப் புரிந்தவர்களை அடையாளப்படுத்துவதுதான்.
ஸலfப என்றால் முன்சென்றவர் முன்சென்றது என்பது அர்த்தம். அல்குர்ஆனில் இக்கருத்தில் இச்சொல் 7 இடங்களில் கையாளப்பட்டுள்ளது. 2:275 4:23 24 5:95 8:38 10:30 69:24 . ஸலப் என்றால் எமக்கு முன் மரணித்தவர்கள் சென்றவர்கள் நல்ல அமல்கள் முற்பணம் போன்ற கருத்துக்களைத் தரும். முன்னோர்களில் கெட்டவர்களை குறிக்க இச்சொல் குர்ஆனிலே 43:56 ஒரு இடத்தில் கையாளப்பட்டுள்ளது. பல ஹதீஸ்களில் முற்பணம் என்ற கருத்திலும் சில ஹதீஸ்களில் நல்ல முன்னோர் என்ற கருத்திலும் பயன்படு;தப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் ஸஹாபாக்களின் அகீதா குர்ஆன் சுன்னாவின்படிதான் இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் எந்த முஸ்லிமிற்கும் இல்லை. மனிதன் என்ற முறையில் தவறான சிந்தகைள் ஒரு சிலருக்கு ஏற்பட்டாலும் குர்ஆன் சுன்னாவில் இருந்து அது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டவுடன் அவைகளை மாற்றிக் கொண்டனர். இவ்வடிப்படையில் ஸஹாபாக்களின் அகீதாவிலே நாம் இருக்கிறோம் என்ற கருத்தைத் தரும் விதமாகவே இது உபயோகப்படுத்தப்பட்டது. இது பிக்ஹ் சட்டப் பிரச்சனைகளில் பயன்படுத்தப்படவில்லை. அவ்வாறு சரியான கொள்கையில் உள்ளவர்களைக் குறிக்க ஸலபி எனப் பயன்படுத்தப்பட்டது. சரியான கொள்கையில் உள்ளவர்களைக் குறிக்க இந்த செற்பிரயோகம் 2ம் நூற்றாண்டின் அரைப்பகுதியளவில்தான் உபயோகத்திற்கு வந்தது.
இன்று தமழுலகில் இந்த வார்த்தை தவ்ஹீத் தவ்ஹீத்வாதிகள் என்ற பிரயோகங்களுக்கு ஒத்தது. ஏனென்றால் அரபு உலகில் குர்ஆன் சுன்னாவை அடிப்படையாக வைத்துச் செய்த கொள்கைப் பிரயோகத்திற்கு ஸலபிக் கொள்கை என்று உபயோகப்படுத்தப்படுத்தப்பட்டது. தமிழுலகில் குர்ஆன் சுன்னாவை அடிப்படையாக வைத்துச் செய்த கொள்கைப் பிரயோகத்திற்கு தவ்ஹீத் பிரச்சாரம் என்று உபயோகப்படுத்தப்பட்டது. இரண்டிலுமே கொள்கை சம்பந்தப்பட்ட விடயங்களே முக்கியப்படுத்தப்பட்டது.
எனவே சரியான கொள்கையின் அடையாளத்திற்கு என்று உபயோகப்படுத்தப்படும் இந்த வார்த்தைகளில் தமிழுலகில் தவ்ஹீத் என்ற பிரயோகம்தான் மிகப்பொருத்தமானது. ஆனால் தவ்ஹீத்கொள்கைக்கு எதிராக சிலர் ஸலபியாவில் அடங்காத இல்லாத கருத்தைக் கொடுத்து தவ்ஹீதிற்கு எதிராக அதைப் பயன்படுத்துவதுதான் ஆச்சரியமாக உள்ளது. எவ்வாறு அஹ்லுஸ்ஸ{ன்னா எனும் பெயரை தவறான கொள்கையுடயோர் பயன்படுத்துகிறார்கள் அது போன்று ஸலபியா என்ற சொல்லையும் தவறான அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். சரியான கொள்கையை அடையாளங்காட்ட வழங்கப்பட்ட வார்த்தைகளை தவறானகொள்கையுடையோர் பயன்படுத்தினால் அது நமக்குரியதுதான் என்று நாம் வாதாட வேண்டிய அவசியம் இல்லை மாறாக நமது கொள்கையை அறிமுகப்படுத்தும் வகையில் அந்தப் பெயர் இருந்தால் போதுமானது. இந்த வகையில்தான் அஹ்லுஸ்ஸ{ன்னா என்ற வார்த்தையை தவறான கொள்கையிலுள்ளோர் பயன்படுத்தும்பொழுது நாம் பெரிதுபடுத்துவதில்லை.
ஆனால் இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் ஸலபிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்வோர் ஸஹாபாக்களை ஒரு மூலாதாரமாகக் கொள்வதற்கு ஸலபியா என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஸஹாபாக்களுக்கு குர்ஆனையும் ஸ{ன்னாவையும் தவிர முஹாஜிரின்களோ அன்ஸாரிகளோ இன்னொரு மூலாதாரமாக இருக்கவில்லை. எனவே அதுதான் எமது கொள்கை என்று சொல்பவர்களே உண்மையில் ஸலபிகள். ஆனால் இன்று துரதிஷ்ட வசமாக இந்த வார்த்தையை தவறாக இவர்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஸஹாபாக்களைப் பின்பற்றவேண்டும் என்றால் என்ன என்பதில் அவர்களுக்கு மத்தியில் குழப்பம் இருக்கிறது. இவர்கள் உண்மையில் ஸலபிகள் அல்ல கலபிகள்.
அலி ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்களைப் பின்பற்றுவோம் என்று சீயாக்கள் கூறியதற்காக அவர்களை அலியை நேசிப்பவர்கள் என்று ஒருபொழுதும் கூறமாட்டோம். அதேபோன்று ஸஹாபாக்களைப் பின்பற்றுவோம் என்று கூறிவிட்டால் அவர்கள்தான் ஸஹாபாக்களை நேசிப்பவர்கள் மற்றவர்கள் தூற்றுபவர்கள் என்று ஆகிவிட மாட்டார்கள். உண்மையில் ஸஹாபாக்களை மதிப்பவர்கள் அவர்களை இஸ்லாத்தின் 3வது மூலாதாரமாக ஆக்காதவர்கள்தான். காரணம் அவர்களிடத்தில் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் 2தான். தவ்ஹீத்வாதிகளிடத்திலும் இரண்டுதான்.
ஸலபிகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் தமிழுலக தக்லீத் ஸலபிகள் தவ்ஹீத் கண்டத்திலிருந்தவர்கள்தான். இன்று தௌஹீத்வாதிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் இது ஒரு வெடிப்பாக உள்ளது நாளை அவர்கள் தனிக்கண்டமாவது நிச்சயம்.